• March 29, 2024

ஐராவதேஸ்வரர் கோவிலின் மிக முக்கியமான அமைப்பு

 ஐராவதேஸ்வரர் கோவிலின் மிக முக்கியமான அமைப்பு

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், “கோவில்களின் நகரம்” என்று அறியப்படும், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 2’ம் இராஜராஜனால் (கி.பி.1146-1173) 12’ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காலத்தால் அழியாத சோழர் பெருங்கோவில்களில் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில், பெருவுடையார் கோவில் மற்றும் மேற்கூறிய ஐராவதேஸ்வரர் கோவில் ஆகிய மூன்றும் சேர்ந்து, சோழர்களின் கலாச்சாரத்தையும் கட்டிடக்கலையையும் நம் கண்முன்னே நிறுத்துகின்றன.


2004 முதல், ஐராவதேஸ்வரர் கோயில் யுனெஸ்கோ ( UNESCO ) அமைப்பால் உலகப்பரம்பரிய மிக்க சின்னமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இக்கோவில் மிக சிறிய மற்றும் பெரிய கற்களால் செதுக்கப்பட்ட 40000’த்திற்கு மேலான சிலைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. புராணக்கதைகள் கொண்ட சிற்பங்கள், கையில் வீணையில்லா சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், சாதாரணமாக கோவில்களில் காணப்படாத அன்னபூரணி சிற்பங்கள் என பல வினோதமான சிற்பங்கள் நம்மை அசர வைக்கும் அளவில் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

Airavatesvara Temple

Airavatesvara Temple
Darasuram Temple - UNESCO Heritage Monument

சோழ மன்னர்களிலே முக்கியமான மன்னராக 2’ம் ராஜராஜனால் கட்டப்பட்ட இத்திருத்தலம் அற்புதமான கலைநயம் மிக்க கோவில் ஆகும். இக்கோவிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் தூண்களில் உள்ள சிற்பங்கள், சுவர்களில் உள்ள வடிவங்கள், நாட்டிய முத்திரைகள், தேர் போன்ற வடிவிலமைந்த மண்டபமும் என பல நம்மை திகைப்பில் ஆழ்த்தக்கூடிய அளவிற்கு 2’ம் ராஜராஜனின் கலைப்படைப்பிற்கு ஓர் உதராணமாக இக்கோவில் திகழ்கிறது.


வல்லுநர்களால், “சிற்பிகளின் கனவு” என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நூணுக்கமான சிற்பவேலைப்பட்டால் நிறைந்துள்ளது. இக்கோவில் திராவிட பாணியில் அமைக்கப்பட்ட கோவில். கோவிலில் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறம் அமைக்க பெற்றுள்ளது. நுழைவாயிலில் நந்தியினருகே இருக்கும் படிகளில் இசையொலி எழுப்பும் படிகளாக உள்ளது. இந்த படிகளில் இசையெழுப்பும் போது சரிகமபதநீ என்ற ஒலி கேட்கும்,அதுவே இதன் சிறப்பு. இதுபோன்ற படிக்கற்கள் மதுரை, ராமேஸ்வரம், மற்றும் சிதம்பரத்திலும் உள்ளது.

கோவிலின் மிக முக்கியமான அமைப்பு – வள்ளாவிகள்

சில கோவில் சுற்றுபிரதேசங்களில் பெரும்பாலும் கருவறையினைச் சுற்றியுள்ள தரைதளக் கற்களில் இம்மாதிரியான (மேலே குறிப்பிட்டு உள்ள படத்தினை போன்றது ) வட்ட விளிம்புகள் காணப்படும். இதைப்பற்றி அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் நாம் நம் முன்னோர்கள் வாழ்த்த காலத்தை நோக்கி பின் செல்ல வேண்டும்.

அந்நூற்றாண்டுகளில் மாலை நேரம் நெருங்க நெருங்க வெளிச்சம் நம்மை விட்டு மறைந்து இருள் நம்மை சூழ்ந்துக் கொள்ளும். அப்படி கோவில்களிலும் இல்லங்களிலும் மாலை நேர இருள் நம்மை சூழ்ந்து கொள்ளும் நேரத்தில் வெளிச்சத்திற்காக தீப்பந்தத்தை பயன்படுத்துவர். பரந்த கோவில்களில் அகல் விளக்குகள் பந்தங்கள் ஆகியன கோவிலை சுற்றியும் வாசலிலும், கருவறையிலும் ஏற்றிவைக்கப்படும். அதிகாலை பொழுதில் கோவில் சுற்றுப்பிரதேசத்தை சுற்றிவருதல் எளிதானது. மாலை நேரம் செல்லச்செல்ல இருள் நம்மை சூழ்ந்துக் கொள்ளும் நேரங்களில் கோவிலில் கருவறையைச் சுற்றிலும் ஒளியை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்ட வட்ட வடிவிலான வள்ளாவிகள்.

பெரும்பாலும் வள்ளாவிகள் என்பவை கருவறையின் இடப்புறம் ஆரம்பித்து பின் சுவர் கடந்து ‘ப’ வடிவில் தொடர்ந்து கருவறையின் வலப்புறத்தின் வெளிச்சுவற்றை ஒட்டிய சிற்பங்கள் செய்யும் கற்களினால் செய்யப்பட்ட ஓர் வெளிச்சம் தருவதற்கான ஏற்பாடு ஆகும். வட்ட விளிம்பில் உட்புறத்தில் சிறிதளவு நீர் விட்டு நடுவில் தீப விளக்கு வைத்தால் தீப ஒளியானது நீரில் பட்டு ஒரு தீபம் பல விளக்குகள் போலக் காட்சித் தரும் இதைப்போன்று பல வாள்ளாவிகள் வைக்கும் பட்சத்தில் அலங்கார விளக்குகளை கோவில் சுற்றுபிரேதேசங்களில் அமைத்தாற்ப் போல ஒளிரும்.


உதாரணமாக கோவில்களில் மூலவர் சிலைக்கு பின்னால் பல பட்டை கண்ணாடி எவ்வாறு ஒரு தீபத்தை பல தீபங்களாக பிரதிபலிக்கின்றதோ அதே போன்றே வாள்ளாவிகளும் ஒளிரும். இதை மாலை நேரங்களில் மட்டுமே உணர்வு பூர்வமாக இரசிக்க இயலும். சூரிய சந்திர கிரகணங்களை கணிக்க உதவியது என்றும் கிரகணங்களில் போது வானை நோகாமல் வாள்ளாவியை நோக்குவர் என்றும் செவிவழி செய்தி உண்டு.

இதுபோன்ற வரலாற்று நினைவுகளை அறிந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல் மற்றவர் அறியும் வண்ணம் அதனை பகிர வேண்டும்.

S. Aravindhan Subramaniyan

Mahalakshmi Parthasarathy