• March 29, 2024

ராணுவ மரியாதையின் போது ஏன் வானத்தை நோக்கி சுடுகிறார்கள் தெரியுமா?

 ராணுவ மரியாதையின் போது ஏன் வானத்தை நோக்கி சுடுகிறார்கள் தெரியுமா?

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் தகுதி உள்ளவர்களாக முன்னாள் மற்றும் தற்போதைய குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர் என ஒரு குறிப்பிட்ட உயர் பதவி வகித்தவர்களுக்கு மட்டுமே முன்பு இருந்தது. பின்னர் இதுகுறித்த முடிவை மாநில அரசும் எடுக்கலாம் என்று தீர்மானித்தனர்.


இறந்துபோனவர் நம் சமூகத்துக்கு எந்த அளவுக்கு பங்காற்றி இருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து தான், மாநில அரசின் ஒப்புதலுடன் அரசு மரியாதை உறுதி செய்யப்படும்.

அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என இதில் ஏதாவதொரு துறையில் மிகப்பெரிய பங்களிப்பையும் சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தவர் இறந்துபோகிறார் எனில் அவரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய மாநில அரசு முடிவெடுக்கும்.


கேபினட் அமைச்சர்களுடன் கூடி விவாதித்த பிறகு முதலமைச்சர் இந்த முடிவை எடுப்பார்.

பிறகு, அந்த நபர் இறந்த தினம் ‘மாநிலத் துக்க தினம்’ என்று அறிவிக்கப்படும்.

அது உறுதி செய்யப்பட்டதும் மாநிலத்திலுள்ள உயர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்கும்.

அது முடிந்ததும் இறந்தவருக்கான அரசு மரியாதைப் பணிகள் முடுக்கிவிடப்படும்.


போர் முடிந்து சொந்த நாட்டுக்கு கடல் வழியாகத் திரும்ப வந்ததும், ‘இனி யாரையும் தாக்குகிற எண்ணம் இல்லை’ என்பதைத் தெரிவிக்கும் விதமாக, துப்பாக்கியில் இருக்கிற அனைத்து ரவைகளையும் கடற்கரையை நோக்கி சுட்டுவிடும் சடங்கை கடற்படையினர் செய்து வந்திருக்கிறார்கள்.

அதுபோலவே, அந்தக் காலகட்டத்தில் பயணம் செய்வதற்கான முதன்மையான வழி கடல் மார்க்கம்தான். ஆகவே, வேறுநாட்டினர் கடல்வழியாக இறங்கி இன்னொரு நாட்டுக்குள் நுழையும்போது தங்களுடைய துப்பாக்கிகளில் குண்டுகள் ஏதும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக வானம் பார்த்து குண்டுகளை முழங்கிவிட்டு, நாட்டுக்குள் நுழைவார்கள்.

பிரிட்டிஷ் மக்கள் கொண்டுவந்த பழக்கம் இது.

தங்களுடைய ஆதிக்கத்தில் நிறைய நாடுகளை அவர்கள் வைத்திருந்ததால் இதற்கான தேவையும் அவர்களுக்கு இருந்தது.


பிறகு, தலைவர்களின் இறப்புக்கு இந்தத் துப்பாக்கிச் சுடுதலை ஒரு மரியாதையாகச் செய்து வந்திருக்கிறார்கள.

ஆங்கிலேய கடற்படையின் நீண்டநாள் பாரம்பரியமாகிப்போன இது 17-ம் நூற்றாண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு, ராணுவ மரியாதையில் ஒரு பங்காக, ஒரு மரபாகி நிலைத்துவிட்டது.


இந்தியாவை அவர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில், இறந்தவர்களின் தகுதியைப் பொறுத்து முழங்கப்படும் குண்டுகளின் எண்ணிக்கை மாறுபட்டது.

இறந்தவர் நாட்டின் அரசர் என்றால் 101 குண்டுகள் என்பதில் இருந்து கவர்னர் என்றால் ஒன்பது குண்டுகள் வரை முழங்க வேண்டுமென, அவர்கள் வரையறை செய்திருந்தார்கள்.

அதற்குப் பிறகு, இந்தியா ஆட்சிக்கு வந்ததும், இந்த வேறுபாடுகள் களைந்து, இருபத்தியோரு குண்டுகள் என்பது நிலையாகிவிட்டது.


பின்னர், இது சர்வதேச முறையாக மாறியது.

இறுதிச் சடங்கில் அரசு மரியாதையின்போது சுடப்படுகின்ற இந்தக் குண்டுகள், சோடியம் நைட்ரேட் என்கிற பவுடரால் தயாரிக்கப்படுபவை.


‘குண்டுகள் முழங்குதல்’ என்பது இறுதிச் சடங்குகளில் மட்டுமின்றி குடியரசுத் தலைவர் பதவியேற்பு, வெளிநாட்டு அதிபரை நம் நாட்டுக்கு வரவேற்கும்போது, குடியரசு தினம் என இப்படியான அரசு விழாக்களிலும் இந்தப் பழக்கம் இருக்கிறது.

முக்கியமாக, துப்பாக்கியில் சுட்டு முடித்ததும் அதில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கீழே விழுந்த குண்டுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற கட்டாயமும் உண்டு.



ராணுவ மரியாதையில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு காரியத்துக்குப் பின்னாலும் இதுபோன்ற பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.