• April 7, 2024

அன்பே! நீ மாறிவிடு

 அன்பே! நீ மாறிவிடு

அன்பே!


நீ காற்றாய் மாறிடு!
எனைத் தொட்டுத் தழுவி கிறக்கிடு!
தலை கோதி வருடி மயக்கிடு!
சுவாசக் காற்றில் கலந்து எந்தன்
மூச்சாய் மாறி வாழ்ந்திடு!

அன்பே!


நீ நீராய் மாறிடு!
மழைத் துளியாய் முத்தமிடு!
இடி மின்னி முழங்கிப் பொழிந்திடு!
அதிரடி அன்பில் நனையவிட்டு
மேனி நடுங்கச் செய்திடு!

அன்பே!

நீ நெருப்பாய் மாறிடு!
காதல் நெய்யில் நனைத்திடு!
மோக நெருப்பில் கொளுத்திடு!
செந்நீரும் வற்றிப் போகுமளவுக்கு
தாகத்தில் என்னைத் தவிக்கவிடு!

அன்பே!


நீ நிலமாய் மாறிடு!
எங்கிருந்தாலும் ஏந்திடு!
சலிப்பின்றி வளங்களை ஈந்திடு!
தாயைப் போல என்னைத் தாங்கி
எனக்கே எனக்காய் வாழ்ந்திடு!

அன்பே!

நீ வானாய் மாறிடு!
எனைக் கற்பனைத் தேரில் ஏற்றிடு!
உன் பரந்தவெளியில் உலவ விடு!
நட்சத்திரம் பறித்து கிரீடம் சூட்டி
நிலவுத் தொட்டிலில் தாலாட்டிடு!


அன்பே!

நீ எனக்காக மாறிடு!
என்னில் வந்து சேர்ந்திடு!


இதயம் இரண்டறக் கலந்திடு!
ஓசைகள் ஒழிந்து நிசப்தமாகும்
உன்மத்த நிலையை உணர்த்திடு!

S. Aravindhan Subramaniyan

கவிப்பார்வை

Writer