கொங்கோ குடியரசின் கிவு பிராந்தியத்தில் ஒரு அதிசயம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள மலைப்பகுதிகளில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத் தாதுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்பு தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு குக்கிராமத்தில் தொடங்கிய இந்த தங்க வேட்டை, இப்போது ஆயிரக்கணக்கான மக்களை அந்தப் பகுதிக்கு ஈர்த்துள்ளது.

ஆபிரிக்காவின் இரண்டாவது பெரிய நாடு
2,344,858 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன், மெக்சிகோவை விட பெரிய நிலப்பரப்பைக் கொண்ட கொங்கோ, ஆபிரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக விளங்குகிறது. ஆனால் இவ்வளவு பெரிய நிலப்பரப்பையும், இயற்கை வளங்களையும் கொண்டிருந்தும், 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் மிக வறிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது வேதனையான உண்மை.
எபோலாவின் பிறப்பிடம்
கொங்கோவின் சோகம் வறுமையோடு மட்டும் நின்றுவிடவில்லை. உலகின் மிக ஆபத்தான நோய்களில் ஒன்றான எபோலா வைரஸ் முதன்முதலில் 1976ஆம் ஆண்டு கொங்கோ நதிக்கரையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் இந்த கொடிய நோய்க்கு கொங்கோ எபோலா வைரஸ் என்ற பெயரும் வந்தது. 1976 முதல் இன்று வரை 11 முறை இந்த நோய் கொங்கோவை தாக்கியுள்ளது.
கலிபோர்னியா தங்க வேட்டையின் நினைவுகள்
இந்த புதிய தங்க கண்டுபிடிப்பு, 1848ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த புகழ்பெற்ற தங்க வேட்டையை நினைவூட்டுகிறது. அப்போது பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கம் தேடி கலிபோர்னியாவுக்கு புலம்பெயர்ந்தனர். இதேபோல இப்போது கொங்கோவின் கிவு பிராந்தியத்திலும் மக்கள் திரண்டு வருகின்றனர்.
அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
அரசாங்கம் இந்த நிலையின் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது அந்தப் பகுதிக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இராணுவமும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் கொங்கோவின் கிழக்குப் பகுதியில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இயற்கை வளங்கள் நிறைந்த இந்த நாடு, சரியான நிர்வாகமும் திட்டமிடலும் இல்லாததால் வறுமையிலும், நோய்களிலும் சிக்கித் தவிக்கிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தங்க வளம், கொங்கோவின் எதிர்காலத்தை மாற்றியமைக்குமா அல்லது மேலும் பிரச்சினைகளை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.