நம் உடலின் ஆரோக்கியத்தை அறிய நகங்கள் ஒரு கண்ணாடி போன்றவை. நகங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட பெரிய உடல்நலப் பிரச்னைகளை வெளிப்படுத்தக்கூடும். அப்படி என்ன சொல்கிறது நம் நகங்கள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
நமது தோலின் நீட்சியாக இருக்கும் நகங்கள் கெரடின் எனும் புரதத்தால் ஆனவை. இந்த கெரடின் புரதமே நமது விரல்களின் நுனியை பாதுகாக்கிறது. நகங்களின் அடிப்பகுதியில் பிறை நிலவு போன்ற பகுதி லுனுலா எனப்படுகிறது. இங்கிருந்துதான் புதிய நகச் செல்கள் உருவாகின்றன.

நகங்களில் தோன்றும் வெள்ளைக் கோடுகள் – அறிகுறிகள்
நகங்களில் தோன்றும் வெள்ளைக் கோடுகள் லுகோனிசியா என அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக விட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாடு, நகங்களில் ஏற்படும் சிறு காயங்கள், சொரியாசிஸ் போன்ற சருமநோய்கள், கன உலோகங்களின் நச்சுத்தன்மை, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்.
நகங்களின் நிற மாற்றங்கள் சொல்லும் உடல்நல குறிப்புகள்
உடலில் ஆக்சிஜன் குறைபாடு இருந்தால் நகங்கள் நீல நிறமாக மாறும். இது தீவிர இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். முழுவதும் வெள்ளை நிற நகங்கள் இரத்தத்தில் புரதக் குறைபாடு இருப்பதை குறிக்கிறது. இது சிறுநீரக நோய் அல்லது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். நகங்களில் கருப்பு கோடுகள் காயம் காரணமாக தோன்றலாம். ஆனால் சில நேரங்களில் தோல் புற்றுநோயின் (சப்புன்குயல் மெலனோமா) ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.
பூஞ்சை தொற்றும் நகங்களும்
கால் நகங்களில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் காணப்பட்டால், அது பூஞ்சை தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம். தொற்று நீண்ட நாட்கள் இருந்தால், அதை குணப்படுத்துவது கடினமாக இருக்கும்.
நகங்களின் வடிவம் காட்டும் உடல்நலக் குறிப்புகள்
மெல்லிய நகங்கள் ரத்த சோகை, இரும்புச்சத்து குறைபாடு அல்லது கோலியாக் நோயின் அறிகுறியாக இருக்கலாம். நகங்களில் சிறு குழிகள் தோன்றுவது கோய்லோனிசியா எனப்படும். இது ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
உடல் ஆரோக்கியத்தின் கண்ணாடி
நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் தீங்கற்றவை என்றாலும், நிரந்தர மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். நம் உடலின் ஆரோக்கியத்தை கண்காணிக்க நகங்கள் ஒரு சிறந்த குறிகாட்டியாக செயல்படுகின்றன. உங்கள் நகங்களில் ஏதேனும் மாற்றங்களை கவனித்தால், அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.