Deep Talks Tamil

இறந்து போன பிபின் இராவத் அவர்களின் பதவி எப்பேற்பட்டது தெரியுமா ??

இந்தியாவின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைமை படைத்தலைவர் பிபின் இராவத் இன்று குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் பிபின் இராவத், அவரது மனைவியுடன் சேர்த்து 13 பேர் உயிர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிபின் இராவத்-ன் இறப்பு இந்திய ராணுவத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட MI 17 உலங்கு ஹெலிகாப்டரில், குன்னூரில் அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெல்லிங்டனில் இருக்கும் ராணுவ பணியாளர் பயிற்சிக் கல்லூரிக்கு செல்லும் வழியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

Bipin Rawat Chief of Defence Staff (CDS).jpg

பாதுகாப்பு படைகளின் தலைமை படைத்தலைவராக 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று பிபின் பதவியேற்றார். இப்பதவிக்கு பிபின் வரும்முன் முப்படை தளபதிகள் குழுவுக்கு ஒருங்கிணைந்த ஒரு தலைவர் இருந்ததே இல்லை.

ராணுவத்தில் நான்கு நட்சத்திர தகுதிகள் பெற்ற ஒருவரே பாதுகாப்பு படைகளின் தலைமையாக நியமிக்கப்படுவார். அப்படி நியமிக்கப்படும் படைத்தலைவர் பாதுகாப்பு சார்ந்த துறைக்கான தலைவராகவும் செயல்படுவார்.

முப்படைகளின் ஆயுத கொள்முதல், பயிற்சிபெறும் உத்திகள், முக்கிய கூட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு படைகளின் தலைமை படைத்தலைவர் ஆலோசனைகளை வழங்குவார். அதுமட்டுமின்றி ஆயுத கொள்முதல் குழு மற்றும் பாதுகாப்பு திட்டமிடல் குழுவின் உறுப்பினராகவும் இந்த தலைமை படைத்தலைவர் செயல்படுவார்.

இருப்பினும் முப்படைகளின் தலைவருக்கு பாதுகாப்பு படைகளின் தலைமை படைத்தலைவர் நேரடியாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அரசாங்கம் கூறும் ஆலோசனைகளை கேட்டு அந்த அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வைப்பதே தலைமைப் படைத் தலைவரின் தலையாய பணியாகும்.

இப்பேர்பட்ட முக்கிய பொறுப்பில் இருந்து வந்த ஜெனரல் பிபின் இராவத் அவர்களின் இறப்பு ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்து நடந்து முடிந்த சில நிமிடங்களில் பிபின் உயிரோடு இருக்கிறார் எனவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் செய்திகள் வெளியாகின. பின்னர் சிகிச்சை பலனின்றி பிபின் உயிரிழந்துள்ளார்.

இவரின் இறப்பிற்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நாட்டு மக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிபின் இராவத் மற்றும் அவரது மனைவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு deep talks தமிழ் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Exit mobile version