• March 18, 2024

தவறாக புரிந்து கொள்ளபட்ட தமிழ் பழமொழி இது. உண்மை அர்த்தம் என்ன தெரியுமா?

 தவறாக புரிந்து கொள்ளபட்ட தமிழ் பழமொழி இது. உண்மை அர்த்தம் என்ன தெரியுமா?


தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் – என்ற பழமொழிக்கு ‘தாயின் திறமையை விட மகளின் திறமை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்’ – என்ற தவறான பொருள்படவே புரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இப்பழமொழி விவசாயம் தொடர்பான ஆழ்ந்த சூத்திரம் குறித்த ஒன்று என்பது நம்மில் பலர் அறியாதது!



தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் – என்ற பழமொழியில்… 
தாய் – என்ற சொல் வாழையையும், 
பிள்ளை – என்ற சொல் தென்னையையும் குறிக்கும்.

நன்கு வளர்ச்சியடைந்த வாழை மரத்தை ‘தாய் மரம்’ என்றும், அதனைச்சுற்றி சிறிதாக முளைத்து வளர்பவற்றை ‘கன்று’ எனவும் அழைப்பது வழமை! அதேபோல் தென்னையின் கன்றுக்கு ‘தென்னம்பிள்ளை’ என்று பெயர்.

வாழைத் தோப்பில் மரங்களை நடவு செய்யும் போது இரண்டு மரங்களுக்கிடையில் 8 அடி இருக்க வேண்டும் என்பதையும் , தென்னை மரங்களுக்கிடையில் 16 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்பதையே – இப்பழமொழி வெளிப்படுத்துகிறது.

Images from Google

‘எட்டடி வாழை, பத்தடி பனை, பதினாறடி தென்னை’ – என்ற வழக்கும்,


‘ எட்டடி – வாழை கமுகு
ஈரடி – கரும்பு கத்தரி
பதினாறடி – பிள்ளை’ – என்ற வழக்கும் இதைப் போன்ற ஒத்த விதிமுறைகள் குறித்து விவசாயிகளிடை வழங்கப்படுவது ! (கமுகு = பாக்கு மரம்) .

மேற்குறிப்பிட்டபடி இடைவெளி இருந்தால் தான் மரங்களின் வேர்கள் வளர்ச்சி சீராக இருக்கும். மரங்கள் வளர்ந்த பின், மரங்களின் இலைகள் பக்கத்து மரங்களின் இலைகளைத் தொடாது, போதுமான சூரிய ஒளி நிலத்தில் விழுந்து சரியான விளைச்சலைத் தரும்!

இதே கருத்தை வேறு விதமாக.,


“தென்னைக்கு தேரோட,
வாழைக்கு வண்டியோட,
கரும்புக்கு ஏரோட,
நெல்லுக்கு நண்டோட…” – என்றும் சொல்வதுண்டு!