
பூமித்தாயின் மடியில் நாம் அனைவரும் ஒன்று
அன்பு என்றால் என்ன? அன்பை எங்கே தேடலாம்? நாம் வாழ்க்கையின் நிகழ்வுகளில் அன்பிற்கு அர்த்தம் தேடிச்சென்றால் அது அன்னை என்ற சொல்லிலேயே முடிவடைகிறது. ஆம், அன்னையின் மடிதான் ஆறுதலின் இருப்பிடம். அதுபோல், நம் அனைவருக்கும் பொதுவான அன்பின், ஆறுதலின் மடி, பூமித்தாய்தான், அந்த தாய் மண்தான்.

ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு மட்டுமே அன்னை. ஆனால் பூமியோ நம் அனைவருக்கும் அன்னை! பாகுபாடின்றி அனைத்து உயிரினங்களையும் சுமப்பது இந்த தாய்மண்தான். அந்த அன்னையின் மடியில் வாழும் நம் அனைவருக்கும் 2025 ஏப்ரல் 22 ஒரு சிறப்பு நாள் – உலக பூமி தினம்!
நம் கண்முன்னே மாறிவரும் இயற்கை
நாம் இன்று காண்பது என்ன? காலநிலை மாற்றங்கள், காடுமேடுகளின் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை… இதையெல்லாம் தாண்டி, நம் வாழ்க்கையும் கூட செயற்கையானதாக மாறிவிட்டது. ஆதி மனிதன் காட்டில் மரங்கள் மேல் கூடுபோல் வீடு கட்டி வாழ்ந்தான். இன்றோ, வீட்டின் மேல் மாடித்தோட்டம் அமைத்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான்.
எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்கள் என மார்தட்டிக்கொள்ளும் மனிதன், சுத்தமான காற்று, வற்றிடாத தண்ணீர், நோயில்லா வாழ்க்கை என்பதற்கெல்லாம் இன்னும் தீர்வு கண்டுவிடவில்லை. மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மறுபக்கம் பூமியின் வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.
“மனிதனின் பேராசையோ, போதும் என்ற மனமின்றி இயற்கையை அழித்து செயற்கைப் பொருட்களை உருவாக்கத் தொடங்கியது.” – கிறிஸ்டோபர் பிரான்சிஸ், வத்திக்கான்
2025 உலக பூமி தினத்தின் கருப்பொருள்: பூமிக்கு எதிராக பிளாஸ்டிக்
இவ்வாண்டு பூமி தினத்திற்கான தலைப்பாக, “பூமிக்கு எதிராக பிளாஸ்டிக்” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகில் பிளாஸ்டிக் பயன்பாட்டை 2040ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு குறைக்கவேண்டும் என்ற இலக்கோடு இந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசுபாடு கடல் வாழ் உயிரினங்களை மட்டுமல்ல, மனித உடல் நலத்தையும் பாதிக்கிறது.
உலக பூமி தினத்தின் வரலாறு: தெரிந்து கொள்வோம்
ஒவ்வொரு சிறப்பு நாளுக்கும் ஒரு வரலாறு உண்டு. உலக பூமி தினத்தின் தோற்றமும் விதிவிலக்கல்ல.
எப்படித் தொடங்கியது இந்த பூமி தின கொண்டாட்டம்?
1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சாந்தா பார்பரா நகரை ஒட்டிய கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அதே வேளையில், சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்ற ஜான் மெக்கானெல் என்பவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்துவந்தவர். அவர் பூமியின் இயற்கைச் சூழலைக் காக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று வலியுறுத்தினார்.
அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் கருத்து உருவாகியது. 1970ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டுமென கடலோரமாக ஊர்வலம் சென்றனர்.

அந்த புரட்சிப் பேரணிக்குப் பின்னால் இருந்த முக்கிய நபரான ‘கேலார்டு நெல்சன்’ என்பவரின் முயற்சியால், 1970ஆம் ஆண்டு முதல் பல நாடுகள் ஏப்ரல் 22ஆம் தேதியை உலகப் புவி தினமாக கொண்டாடத் துவங்கின. 1990ஆம் ஆண்டிற்குள் 140 நாடுகளுக்கு மேல் இந்த நாளைச் சிறப்பிக்கத் துவங்கின. இன்று 175க்கும் மேற்பட்ட நாடுகள் உலக பூமி நாளை ஏப்ரல் 22 அன்று சிறப்பிக்கின்றன.
நம் பூமியைப் பற்றி அறிவோம்
ஏறக்குறைய 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பூமி, எந்த மனிதனாலும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படவில்லை. மனித குலம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை தன் மடியில் தாங்கிக்கொள்ள எழில் நிறைந்து பிறந்ததுதான் இந்த பூமி.
பூமியின் வியக்கத்தக்க தகவல்கள்:
- பூமியின் 70% பகுதியை நீர் சூழ்ந்துள்ளது
- மொத்த நீரில் 97% கடல்களில் உப்பு நீராக உள்ளது
- பூமியின் 90% தூய்மையான நீர் பனிக்கட்டியில் அடைக்கப்பட்டுள்ளது
சிதைந்து வரும் இயற்கையின் சமநிலை
காடுகளை அழித்து வீடுகளை உருவாக்கி நாகரிகம் வளர்த்த நாம், இன்று மீண்டும் மரங்களை வளர்த்தால்தான் மகிழ்ச்சி நீடிக்கும் என உணரத் தொடங்கி இருக்கிறோம். காடுகள், மலைகள், பாலைவனங்கள், ஆறுகள், சமவெளிகள் என அனைத்தும் தன்னுள் அடக்கி உயிரின வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைத் தருவது நம் பூமி.
ஆனால், அண்மை ஆண்டுகளில் எங்கு பார்த்தாலும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. இதற்குக் காரணங்கள் பல:
- புவி வெப்பமயமாதல்
- சுற்றுச்சூழல் மாசுபாடு
- மக்கள் தொகை பெருக்கம்
- தொழில்மயமாதல்

இன்று நம் பூமி இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும், நம் வாழ்க்கை முறையும்தான் காரணம். அறிவியல் என்ற பெயரிலும், கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம்.
அச்சுறுத்தும் உயிரினங்களின் அழிவு
சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அன்றாடம் கண்ணுக்கு எதிரே பறந்த சிட்டுக்குருவி இனங்கள் இன்று காண்பதற்கு அரிதாகிப் போனது. அதிர்ச்சி தரும் ஒரு உண்மை என்னவென்றால்:
“2050ஆம் ஆண்டிற்குள் ஐம்பது விழுக்காட்டு உயிரினங்கள் பூமியிலிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொள்ளும்”
புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஓர் ஆராய்ச்சியின்போது, “தேனீக்கள் என்று அழிகிறதோ அன்று உலகமும் அழிந்துபோகும்” என்று எச்சரித்தார். அதிகமான பூச்சி கொல்லி உபயோகம், மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீ உள்ளிட்ட பல்வேறு பூச்சி இனங்களை கொல்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஓசோன் படலத்தை சிதைக்கும் நாம்
முன்பெல்லாம் மனிதன் வெளியிடக்கூடிய கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு ஆக்ஸிஜனை கொடுக்கும் வகையில் ஏராளமான மரங்களும் தாவரங்களும் இருந்தன. இவற்றால், ஓர் இயற்கை சமநிலை தொடரப்பட்டு வந்தது.
ஆனால், காலப்போக்கில் பல காரணிகள் இந்த சமநிலையை சிதைத்தன:
- காடுகளை அழித்தல்
- தொழிற்சாலைகளை நிறுவி பெருமளவு கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம்
- செயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்துதல்
- பிளாஸ்டிக் பயன்பாடு
இவை வெளியேற்றும் பசுமை இல்ல வாயுக்கள், பூமியில் இருந்து 15 முதல் 60 கி.மீ. உயரத்தில் உள்ள ஓசோன் படலத்தை தாக்குகின்றன. இந்த ஓசோன் படலம் சூரியனிடம் இருந்து வரக்கூடிய புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி, பூமிக்கு ஒரு பாதுகாப்பு கேடயம் போன்று விளங்குகிறது.
இதனால் ஏற்படும் விளைவுகள்:
- பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு
- தோல் புற்றுநோய் அதிகரிப்பு
- எதிர்ப்பு சக்தி குறைபாடு
- பருவமழை பொய்த்துப் போதல்
- தண்ணீர் பற்றாக்குறை
- உணவுப் பஞ்சம்

நம் எதிர்காலம் நம் கையில்
இயற்கையும், எதிர்காலமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதபடி தொடர்புடையவை. இயற்கையை மாசுபடுத்தி, அதை சிறுக சிறுக சிதைத்தால் நமது எதிர்காலம் உறுதியாக பாதிக்கப்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
குழந்தைகளையும் மதிப்பெண் கல்வியை நோக்கியே வளர்ப்பதால் அவர்களுக்கும், இயற்கையைப் பற்றிய பெரிய ஆர்வமும், அறிவும் ஏற்படவில்லை.
நாம் என்ன செய்யலாம்?
தனிநபர் அளவில்:
- ஒரு மரத்தை நடுங்கள்: வீட்டுத் தோட்டத்திலோ, பொது இடங்களிலோ செடிகளையும் மரங்களையும் நடுவதன் மூலம் பசுமையை அதிகரிக்கலாம்.
- பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்போம்: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிப்பைகள், கண்ணாடி அல்லது எஃகு கொள்கலன்களைப் பயன்படுத்துங்கள்.
- மின்சாரத்தைச் சேமிப்போம்: தேவையில்லாத போது மின் விளக்குகள், கணினிகள் போன்றவற்றை அணைத்து வைப்பதன் மூலம் ஆற்றலைச் சேமிக்கலாம்.
- பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்: தனிநபர் வாகனங்களுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்து, சைக்கிள் அல்லது நடைப்பயணத்தைத் தேர்ந்தெடுங்கள்.
- நீரைச் சேமிப்போம்: குளிக்கும் நேரத்தைக் குறைத்தல், குழாய்களை சரிபார்த்தல் போன்ற எளிய வழிகளில் நீரைச் சேமிக்கலாம்.
சமூக அளவில்:
- விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: உள்ளூர் சமூகத்தில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள்.
- தூய்மைப் பணிகள்: கடற்கரைகள், ஆற்றங்கரைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளுங்கள்.
- மறுசுழற்சி மையங்கள்: உங்கள் பகுதியில் மறுசுழற்சி மையங்களை ஆரம்பித்து, மக்களை மறுசுழற்சியில் ஈடுபட ஊக்குவிக்கலாம்.
அடித்தளக் கருத்து
இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும். ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும். இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது.
“நாம் பூமியை பாரம்பரியமாக பெறவில்லை, வரும் தலைமுறையிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளோம்” என்ற அமெரிக்க பழங்குடியினரின் பழமொழி நம் அனைவருக்கும் ஒரு அறிவுரை.
உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாத உயிரினங்களுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து வரும் பூமியைப் பற்றியும், அதை பாதுகாப்பது தொடர்பாகவும் சிந்திப்பதற்கு நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை. உலக பூமி தினம் அந்த ஒரு நாள்.

நம் தாய் நிலத்தை காப்போம், நம் எதிர்காலத்தை காப்போம். இயற்கையின் மடியில் நிம்மதியாக வாழ, பூமியை காக்கும் செயல்களில் ஈடுபடுவோம். உணர்வோம்! உடனடி செயல்படுவோம்!