• May 10, 2024

1991-ம் ஆண்டு பெங்களுரில் இருந்து தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். அன்று நடந்தது என்ன? ஏன் அப்படி விரட்டப்பட்டனர்?

 1991-ம் ஆண்டு பெங்களுரில் இருந்து தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். அன்று நடந்தது என்ன? ஏன் அப்படி விரட்டப்பட்டனர்?

கர்நாடக வாழ் தமிழர்களின் மனதில் நீங்காத வடுவாக அமைந்த கொடூரமான இனவாத படுகொலைகளும் கற்பழிப்புகளும் நிகழ்ந்த நிகழ்வுகள் தான் 1991 Anti-Tamil violence in Karnataka 1991 தமிழர்க்கு எதிரான கன்னட வன்முறை என அழைக்கப்படுகிறது.


பத்தாம் நூற்றாண்டு முதல் தமிழர்கள் கர்நாடகாவில் குடியேறத் தொடங்கினர். பல்வேறு காலகட்டங்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் கர்நாடகாவில் குடியேறினர் கோலார் தங்கவயலை வளப்படுத்தியது முழுக்கவும் தமிழர்களே.

கர்நாடகாவின் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சியில் தமிழர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், பிஜி தீவுகள், தென்னாபிரிக்கா போல கர்நாடகாவிலும் தமிழர்கள் அந்த மண்ணின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்கள்.


1991 டிசம்பர் 12-ல், காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பான 205 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பொழுது, அதற்கு முன்பே இத்தீர்ப்பினை எதிர்நோக்கி கன்னட அமைப்புகள் பலவும் மிகத் தெளிவாக கலவரங்களுக்கு திட்டமிட்டு ஆயுதங்களோடு தயாராக இருந்தனர்.

தீர்ப்பு வெளியானவுடன் விடுதலை இந்தியாவில் இதற்கு முன் நடந்திராத வகையில் கர்நாடக அரசே தன் மாநிலத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட மொழி சிறுபான்மையினருக்கு எதிராக, தமிழர்களுக்கு எதிரான முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. மொழி சிறுபான்மையினருக்கு எதிராக அரசே இந்த படுபாதக செயலை செய்தவுடன் வட இந்தியாவில் உள்ள ஒரு சில ஊடகங்கள் அதை கண்டித்தன.

டெல்லியில் இருந்து பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய கர்நாடக முதல்வர் பங்காரப்பா “என்ன இது கன்னடர்களுக்கு என்ன ஆயிற்று ஏன் பெங்களூர் இவ்வளவு அமைதியாக இருக்கிறது?” என வெளிப்படையாக தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை தொடங்கி வைத்தார்.

பட உரிமம் : அவுட்லுக் இதழ்

பங்காரப்பா, ‘‘நான் ஜெயிலுக்கு போனாலும் போவேன். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மாட்டேன்’’ என்று விமான நிலையத்திலேயே கூறிய வார்த்தைகள் அடுத்த சில நாட்களில் இந்திய ஒருமைப்பாட்டின் மீதான வன்முறைகளை எழுதின.


கன்னட காவல்துறை கைகட்டி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. வட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சலுவாலியா அமைப்பும் இன்ன பிற அமைப்புகளும் பயங்கரமான ஆயுதங்களோடு தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளை சுற்றி வளைத்து தாக்கின.

பட உரிமம் : தி பெங்களூர் மிரர்

பல ஆண்டு கால தமிழர்கள் மீதான வன்மம் திட்டமிட்டு வெளிப்படுத்தப்பட்டது. கர்நாடக அரசு இதை மறுத்தாலும், அமெரிக்க நியூயார்க் டைம்ஸ் ஊடகவியலாளர்களும் கர்நாடகத்திற்கு நேரில் வந்து பார்த்து தமிழர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டதை எழுதியது.

பட உரிமம் : நியூயார்க் டைம்ஸ்

கலவரங்கள் ஓய்ந்த பிறகு, டிசம்பரில் அமெரிக்க நியூயார்க் டைம்ஸ் இதழ், கால ஆய்வு செய்து ஜனவரி 5,1992-ல் எழுதிய கட்டுரை. இதிலும் உயிரிழப்பு எண்ணிக்கை அரசாங்கத்தின் தகவல்களையே எழுதினர். ஆனால் இது திட்டமிட்டு தமிழர்கள் மீதான இலக்கு வைத்த கலவரம் என்பதை வெளிப்படுத்தியது.


பட உரிமை : பிபிசி தமிழ்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகிய அண்டை வீட்டுக்காரர்களே தமிழர்களின் வீடுகளில் புகுந்து தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதை மிகுந்த அதிர்ச்சியுடனும் வேதனையுடனும் கலவரங்களுக்குப் பின்னால் அமைக்கப்பட்ட வெங்கடேஷ் ஆணையத்திடம் தமிழர்கள் சாட்சியம் அளித்தனர்.

தமிழர்கள் வாழக்கூடிய ஓக்லிபுரம், ஸ்ரீராமபுரம், இராமச்சந்திரா நகர், பிரகாஷ்நகர், மாங்கடி ரோடு, சிவாஜி நகர், சாந்தி நகர், அல்சூர், இராமமூர்த்தி நகர், கோரமங்கலா, வண்ணாரப்பேட்டை பெரியார் நகர், இராஜாஜி நகர் பகுதிகளிலும், கர்நாடகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ் சங்கங்கள் தேடித்தேடி அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. தெற்கு கர்நாடகாவில் எங்கெல்லாம் தமிழர்கள் இருந்தார்களோ அங்கெல்லாம் தாக்குதல் நடந்தது.


தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் கன்னட காவல்துறையிடம் உடனே புகார் அளித்தும் லாரிகள் எரிந்து முடியும் வரை காத்திருந்து 4 மணி நேரம் கழித்துதான் கர்நாடக தீயணைப்பு வாகனங்கள் அங்கே வந்தன.

(2016-ம் ஆண்டில் காவிரி பிரச்சனையில் மீண்டும் KPN டிராவல்ஸ்-ன் 270 பேருந்துகள் எரிக்கப்பட்ட பொழுதும், இதே புகாரை தான் KPN டிராவல் ஏஜென்சி மேலாளர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது)

பெங்களூருவில் எரித்து சாம்பலாக்கப்பட்ட 21 தமிழ்நாடு அரசு பேருந்துகளின் முன்பு கர்நாடக காவல்துறை நின்று கொண்டிருக்கும் காட்சி.


பட உரிமம்: இந்தியா டுடே

ராமமூர்த்தி நகர், ராமச்சந்திரன் நகர் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். (ஆனால் பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றது அரசு)

பல நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் தமிழர்களின் அடையாளமான மஞ்சள் கயிறு தாலியை வீசிவிட்டு கர்நாடக பெண்கள் கழுத்தில் அணியும் கருப்பு கயிறு அணிந்து கொண்டனர், தங்கள் மானத்தை காக்கவும் உயிர் தப்பிக்கவும்.


காவல்துறையினரே பல இடங்களில் தமிழர்கள் பொருட்களை கொள்ளையடித்துச் சென்று தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றனர்.

பெங்களூரில் கட்டுமானத் தொழிலாளர்களான தமிழர்களை தேடித்தேடி அடித்து நொறுக்கியது கன்னட காவல்துறை. பிபிசியின் வட இந்திய நிருபர் புகைப்படம் எடுத்தது.பட உரிமை : பிபிசி செய்தி முகமை

(இதில் தாக்கப்பட்ட தமிழ் கூலித் தொழிலாளர்களையும் அந்த மூன்று காவல்துறையினரையும் அடையாளம் காண முடியவில்லை என்று பின்னர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் அறிவித்தது கர்நாடக காவல்துறை)

கலவரம் தொடங்கிய உடனே நக்கீரன் நிருபர் குழு கர்நாடகாவிற்கு பறந்தது. உயிரை பணயம் வைத்து கலவரத்தின் கோர முகங்களை கண்டு அவர்கள் எழுதிய கட்டுரை இது. தினத்தந்தி நாளிதழின் அலுவலகம் முதற்கொண்டு அடித்து நொறுக்கப்பட்டது.


கர்நாடக காவல்துறை கலவரங்களை முன்னின்று நடத்தி தமிழ்நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த லாரியில் உள்ள உதிரி பாகங்களை கூட கழட்டுவதாகவும் கலவரக்காரர்களை தடுக்க கூட நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் வட இந்திய ஊடகங்களில் செய்தி வெளியானதும் மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக கண்டித்ததால் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் துணை இராணுவத்தை அனுப்பினார்.

தினத்தந்தி அலுவலகம் எரிக்கப்பட்ட பொழுது கர்நாடக காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கன்னட அபிமானி இதழாசிரியர் கேள்வி எழுப்பியதால் கன்னட அமைப்புகள் அந்த பத்திரிக்கையின் மீதும் தாக்குதல் நடத்தின.வடக்கு கர்நாடகாவில் இருந்து கலவரங்களை ஏற்படுத்துவதற்கும் தமிழ் பெண்களை கற்பழிக்கும் திட்டமிட்டு ஆட்களை அழைத்து வந்ததை கேள்விப்பட்டு தமிழர்களுக்கு எதிராக எப்பொழுதுமே காழ்ணர்ச்சியுடன் நடந்து கொள்ளும் சுப்பிரமணியே சாமியே அப்போது அதிர்ச்சி அடைந்தார்.

உண்மை நிலையை அறிய கர்நாடகாவிற்கு செல்ல முயன்ற போது கர்நாடக அரசு அனுமதி மறுத்துவிட்டது கலவரங்கள் முடிந்த பின் அங்கு சென்றார். ஐந்து நாட்களுக்குப் பின் தமிழ்நாட்டிற்கு வந்து நக்கீரன் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தபோது தமிழ்நாடு கர்நாடகா அரசுகளை கடுமையாக சாடினார்.

தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட கலவரங்களை கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு மந்திரியே தலைமை தாங்கி நடத்தினார் — சு.சுவாமி

(நக்கீரன் இதழிடம் அவரது பேட்டி (5.1.1992)

“பெங்களூர் சென்று பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகள் அனைத்தையும் பார்த்தேன். தமிழர்கள் வாழ்ந்த குடிசைப்பகுதிகள் அனைத்தும் நாசமாக்கப்பட்டிருந்தன. பங்காரப்பாவின் மந்திரி சபையில் இருக்கும் ஒரு மந்திரியே வன்முறையை தலைமை ஏற்று நடத்துகிறார்.

அனைத்து வன்முறைக்கும் பங்காரப்பாவே முழுப் பொறுப்பு. அந்த வன்முறையிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறி விட்டார் ஜெயலலிதா. அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க மறந்து விட்டார்.


ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது டில்லியில் அதே போல்தான் தமிழர்கள் மீது கலவரத்தைக் கட்டவிழ்த்து விடத்திட்டமிட்டனர். ஆனால் அதை அப்போது ஆட்சியில் இருந்த நாங்கள் தடுத்து விட்டோம். அது போன்ற நடவடிக்கையை ஜெயலலிதா எடுக்கத் தவறிவிட்டார்.

அதிமுகவின் 11 எம்.பி.க்களும் நினைத்திருந்தால் இந்த நேரத்தில் நரசிம்மராவை நம் வழிக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் ஜெயலலிதா அதைச் செய்யவில்லை.


சமூகத்தின் காவலர் என்று டாக்டர் பட்டம் வாங்கிவிட்டால் மட்டும் போதாது. தமிழ் மக்களைக் காத்திட கொஞ்சமாவது அக்கறை வேண்டும். நடவடிக்கை வேண்டும்”


கலவரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட கர்நாடகா அரசியல்வாதிகளின் ஆதரவு பெற்ற நீதிபதி.வெங்கடேஷ் ஆணையம் விசாரணை தொடங்கும் பொழுதே விசாரணை அறிக்கையை எழுதி முடித்து விட்டது.

  • 17 பேர் மட்டுமே இறந்ததாக உண்மையை மூடி மறைத்தது. உண்மையான பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்தது. அப்பொழுது காணாமல் போன நூற்றுக்கணக்கான தமிழர்கள் பிறகு கண்டுபிடிக்கப்படவே இல்லை. அத்தனை பேரும் கொலை செய்யப்பட்டதால் அவர்கள் கணக்கில் வரவில்லை.
  • கற்பழித்துக் கொல்லப்பட்ட தமிழ் பெண்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைத்துக் காட்டியது வெங்கடேஷ் ஆணையம்.
  • நிராயுதபாணியாக தாக்கப்பட்ட தமிழர்கள் மீதே பாய்ந்தது வெங்கடேஷ் ஆணையம். தமிழர்கள் கர்நாடகாவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் அந்த வேற்றின ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது.
  • உண்மையில் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கர்நாடகா அரசு அங்கு வாழும் தமிழர்கள் பலரும் அதாவது பல நூற்றாண்டுகளாக வாழ்கின்ற தமிழர்கள் கூலி வேலை செய்வதாகத்தான் பதிவு செய்திருந்தது.
  • 500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கருதப்பட்ட நிலையில் 300 கோடி தான் தமிழர்களின் பொருளாதார இழப்பு என்றது ஆணையம்.
  • சட்ட நடவடிக்கைகள் இழப்பீட்டு நடவடிக்கைகள் எதுவுமே பரிந்துரைக்கப்படாமல் கர்நாடகா அரசியல்வாதிகளால் எழுதிக் கொடுக்கப்பட்ட அறிக்கையை அவர்களிடமே ஒப்படைத்தது வெங்கடேஷ் ஆணையம்.

இந்தியாவே அதிர்ந்த இந்த கலவர விவகாரத்தில் உண்மையில் உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் ஆணையம் ஒருவர்மீதும் குற்றம் சாட்டவில்லை. நிர்வாக அமைப்பு முறையில் ஏற்பட்ட தோல்வி என்று பரிந்துரைத்தது. கர்நாடகாவில் வேற்று இனத்தவர் செல்வாக்கும் ஆதிக்கமும் செலுத்துவதால் கன்னடர்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்ச்சியே கலவரத்திற்குக் காரணம்.

வேற்று இனத்தவர் ஆதிக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று வெங்கடேஷ் ஆணையம் பரிந்துரைத்தது. இழப்பீடு பற்றி அது வாயே திறக்கவில்லை. பின்னர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டுதான் இழப்பீட்டிற்கான ஆணையை 15.04.1999 அன்று பெற்றனர். அரசின் கணக்குப்படி ஏற்பட்ட 300 கோடி இழப்பிற்கும் மிகக் குறைவான இழப்பீடே கிடைத்தது.


இந்தியர் அனைவரும் எனது சகோதரர்கள் என்று பள்ளிக் கூடங்களில் படிப்பதெல்லாம் எந்த அர்த்தத்தில் என்று யாருக்கும் தெரிவதில்லை.

நன்றி : குமரேசன் (R.Kumaresan)