• May 10, 2024

தேவதாசிகளா? தேவரடியார்களா? யார் இவர்கள்? பதறவைக்கும் உண்மைகள்

 தேவதாசிகளா? தேவரடியார்களா? யார் இவர்கள்? பதறவைக்கும் உண்மைகள்

தமிழ்நாட்டில் பொதுவாக ஒரு கெட்டவார்த்தை உள்ளது. அதுதான் அனைவரையும் திட்ட பயன்படுத்தும் பிரதானமான வார்த்தை. நான் இதை சொன்ன உடனே உங்களுக்கு அந்த வார்த்தை என்னவென்று தெரிந்திருக்கும். ஆனால் இந்த வார்த்தையின் பூர்வீகம் என்னவென்று தெரிந்துகொள்வதற்க்கு நாம், ஒரு 2000 ஆண்டுகள் பின் செல்ல வேண்டும். தமிழ்நாட்டின் பக்தி மற்றும் ஆன்மீக செழுமைக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு பிரிவினரைக் குறிக்கும் “தேவரடியார்” என்ற சொல் எப்படி காலப்போக்கில் கேட்டவார்த்தையாக மாறியது என்ற, வரலாறைதான் நாம் இப்போது பார்க்கபோகிறோம்.


மௌரியப் பேரரசு

தேவரடியார் முறையைப் பற்றி பார்ப்பதற்க்கு முன்பு, நாம் மௌரியர் காலத்தில் இருந்த கணிகையர் முறையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். வட இந்தியாவில் மௌரியப் பேரரசு ஆட்சிகாலத்தில் ‘கணிகையர் முறை’ என்ற பெண்களை பாலியலுக்கு பயன்படுத்தும் முறை இருந்தது. இந்தியாவுக்கு வருகை தந்த கிரேக்க தூதரான மெகஸ்தனிஸ் எழுதிய ‘இண்டிகா’ என்ற புத்தகத்தில் மௌரிய பேரரசாப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதில் அவர் மௌரியர் ஆட்சிக்கு உட்பட்ட ‘வைசாலி’ என்ற நகரத்தில் பெண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைகளை அரசே எடுத்து வளர்க்கும் அந்த குழந்தை வளர்ந்த பிறகு பொது சொத்தாக கருதப்படும். அவள் உடல் மீது அனைவருக்கும் அதிகாரம் உண்டு என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் பெண்கள் பிறப்பால் பாலியல் தொழிலுக்கு ஆட்படுத்தப்பட்டனர் என்ற முதல் குறிப்பு இதிலிருந்துதான் கிடைத்தது.


கணிகையர் முறை

மௌரிய பேரரசை உருவாக்கிய சந்திரகுப்த மௌரியரின் நண்பரான ‘கெளடில்யர்’ தான் எழுதிய மௌரிய பேரரசின் அரசியலமைப்புச் சட்டமான ‘அர்த்தசாஸ்திரத்தில்’ ஒரு முழு அத்தியாயத்திலும் கணிகையரை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் அரசரின் உத்தரவுடன் வரும் ஆனுடன் இணங்காத கணிகைக்கு, ஆயிரம் கசையடிகள் தண்டனை அல்லது 5000 பணம் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். கணிகையர்கள் ரூபாஜிவா எனவும் அழைக்கப்பட்டனர். இந்த கனிகையரைக் கண்கானிப்பதர்காகவே பல அரசு அதிகாரிகளை அரசு நியமித்தது. அவர்கள் ‘கனிகா எச்சகர்கள்’ என அழைக்கப்பட்டனர்.

மௌரியர் பேரரசால் உருவாக்கப்பட்ட இந்த கணிகையர் முறை என்பது ஒரு பாலியல் சுரண்டைலாக இருந்தது மட்டுமல்லாமல் ஒரு பொருளாதார சுரண்டைலாகவும் பார்க்கப்பட்டது. கணிகையர் பெண்களுக்கு வயது முதிர்ந்த பிறகு கூட அவர்களை கணிகையர் முறையிலிருந்து விடுவிக்க மாட்டார்கள். அவர்கள் அரசனுக்கு தேவையான அடுப்படி மாதிரியான இடங்களில் கடுமையான வேலையை செய்ய வேண்டும் என்றும் அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த கணிகையர் அடுப்படியில் வேலை செய்ய விருப்பமில்லாமல் கணிகையர் முறையில் இருந்து வெளியேற நினைத்தால் அவர்கள் அந்த உழைப்புக்கு ஈடான தொகையை செலுத்திவிட்டு கணிகையர் முறையில் இருந்து வெளியேறலாம் என்றும் அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்பாபாலிகை

புத்த மதத்தை தொற்றுவித்த புத்தர் கடைசியாக விருந்து சாப்பிட்டது மௌரிய பேரரசர் பிந்துசாரருக்கு மிக நெருக்கமான பாலியல் தொழிலாளியான அம்பாபாலிகையின் வீட்டில்தான் என்று புத்த மத வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அம்பாபாலிகையிடம் புத்தர் நீங்கள் புத்த சமயத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்று கேட்ட போது அம்பாபாலிகை ஒரு மாந்தோப்பை எழுதி வைத்ததாக யுவான் சுவாங் பயண குறிப்புகளிலும், புத்தமத வரலாற்று நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின் வந்த காலகட்டங்களில் கணிகையர் முறையில் இருந்த பெண்கள் அந்த முறையில் இருந்து விலகி புத்த மதத்திற்கு மாறினார்கள். புத்த மடாலயங்களில் தங்க வைக்கப்பட்டு நடனத்தின் மூலமும் போதனைகளின் மூலமும் புத்த மதத்தை பரப்பினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிபி 1225ல் சாயுகுவா என்ற சீன பயணி தன்னுடைய குறிப்புகளில் குஜராத்தில் 4000க்கும் மேற்பட்ட புத்த மடாலயங்கள் இருந்தன என்றும், அந்த மடாலயங்களில் மொத்தமாக நடனத்திலும் இசையிலும் சிறந்த 20000 பெண்கள் இருந்தார்கள் என குறிப்பிட்டிருந்தார்.



முதன் முதலில் பெண்களை மத பரப்புணர்களாக பயன்படுத்தி மதத்தை வளர்த்த ஒரே மதம் புத்த மதம் என்று கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் வைதீக சமயங்களின் எழுச்சியால் புத்த மடாலயங்கள் சைவ வைணவ கோவில்களாக மாற்றப்பட்டன. இதனால் புத்த சமய கோவில்களில் தலைமுறை தலைமுறையாக மதப் பரப்புனார்களாக இருந்த பெண்கள் அந்த கோவில்களிலேயே இருக்கட்டும் என்று அப்போது இருந்த அரசர்கள் அவர்களை அனுமதித்தனர். பின்னர் அவர்கள் இறைவனுக்கு தொண்டு செய்வதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டாதல் இவர்கள் தேவரடியார்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் மிக மரியாதையாக பார்க்கப்பட்டார்கள்.

தேவரடியாரின் ஆட்டக்கலை

கோவில் திருப்பணிகள் செய்வதிலும் இசை, நடணம் போன்ற கலைகளிலும் கைதேர்ந்தவர்களாகவும் இருந்தனர். தேவரடியாருக்கு கோவில் கருவறைக்குள் செல்லக்கூடிய அளவிற்கு உரிமை பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் இருந்தது. தேவரடியாரின் ஆட்டக்கலையின் பெயர் சதிர் என அழைக்கப்படுகிறது. இதில் இருந்துதான் பரத நாட்டியம் என்ற நடன கலை தோன்றியது. ஒவ்வொரு தேவரடியாரின் கால்களிலும் பச்சை குத்தப்பட்டிருக்கும். சைவ சமயத்தை சேர்ந்தவராக இருந்தால் சூலமும், வைணவ சமயத்தை சேர்ந்தவராக இருந்தால் சக்கரமும் இருக்கும்.

Image from Yaathisai Movie
Image from Yaathisai Movie

பல்லவர்கள், சோழர்கள் காலத்தில் தேவரடியாருக்கு அரசர் முன்னால் ஆட அனுமதி இல்லை. அப்படி ஆடினால் அவருடைய தேவரடியார் பட்டம் பறிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. தேவரடியார் பற்றிய செய்திகள் காணப்படக்கூடிய முதல் கல்வெட்டு பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மானின் காஞ்சிபுரம் கல்வெட்டு. அதில்


இத்தலிக்கு தட்டழிவு இவரைக் கொண்டு
கொட்டுவான் அமுதராயன் நாயாற்றுக் கனி
இவனுக்கும் மாடவர் மகன் மாத சர்மனுக்
கும் இருவர்க்கும் உதகப் பூர்வம் செய்து
இரண்டு கோற்று கொடுத்தோம்

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் தங்கி அங்கேயே தெய்வ தொண்டு ஆற்றி வந்த தேவரடியார் பெண்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது.


பெருநங்கை பொன்னாடி அதிமானி மாதேவி குமரடி
மாணிக்கத் தேவி, திகைமணி குணத்துங்கி
மணிசுத்தி சிந்தடி குமரடி நங்காடை
அனியா தித்தி முத்தி அவ்வடி விஞ்சடி பாதடி
குலக்கோடி அவ்வடி நங்கள் முதியக்கள் சீதேவி

என தேவரடியார்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல்லவர்கள், சோழர்கள் கால கல்வெட்டுகளில் தேவரடியார்கள் திருமணம் செய்தாதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன.

சைவ சமயக்குறவர்களில் ஒருவரான சுந்தரர் பல்லவ காலத்தை சேர்ந்தவர், இவர் திருமணம் செய்த பரவையார் என்ற பெண் ஒரு தேவரடியார் என்று சேக்கிழார் கூறுகிறார். சோழர்கள் காலத்தில் தேவரடியார்கள் திருமணம் செய்துகொண்டார்கள் என்பதற்க்கு சான்றாக கிபி 1049ம் ஆண்டு வெட்டப்பட்ட திருவெற்றியூர் கல்வெட்டில் சதுரன் சதுரி என்றும் ஒரு தேவரடியார் நாகன் பெருங்காடான் மனைவி என்ற தகவல் காணப்படுகிறது.


மேலும் தஞ்சை மாவட்டத்தில் 3 ம் குலோத்துங்கசோழன் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டில் தஞ்சை மாவட்டம் அச்சுத மங்களத்தில் உள்ள கோவிலில் பணிபுரிந்த தேவரடியார் திருமணம் செய்துகொண்டார் என உள்ளது. அதேபோல் ராஜ ராஜ சோழனின் 4 மனைவிகளில் ஒருவரான பஞ்சவன் மாதேவி ஒரு தேவரடியார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திரசோழன் பஞ்சவன் மாதேவி தன் வளர்ப்பு தாய் என்பதால் பஞ்சவன் மாதேவி சரம் என்ற பெயரில் ஒரு பள்ளிப்படை கோவிலை எழுப்பினார் என்று கூறப்படுகிறது.

குந்தவை

திருமணம் ஆன தேவரடியார்களை ருத்ரகண்ணிகைகள் என்றும் திருமணம் ஆகாதவர்கள் பதிவிலியர் என்றும் அழைக்கப்பட்டனர். சோழர் காலத்தில் இந்த தேவரடியார் முறை தவறானதாக நடத்தப்படவில்லை என்பதற்க்கு சான்றாக ராஜாராஜசோழன் கல்வெட்டுகளில் இந்த தேவரடியார் பெண்கள் புத்த சமயத்தால் கைவிடப்பட்டவர்கள் என்றும் அவர்கள் கடவுளுக்கு தொண்டற்றுவதற்காக 7ஆண்டுகள் பயிற்ச்சி அளிக்கப்பட்டவர்கள் என்றும் அதே போல் தேவரடியார் முறையில் அரசகுல பெண்கள், பிராமண பெண்கள் இருந்தார்கள் என்றும், நன்றாக கல்வி கற்ற பெண்கள் இருந்தார்கள் என்றும் சொத்து கொண்ட பெண்கள் இருந்தார்கள் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதில் ஒரு பெண்ணின் பெயர் அறிவாட்டி என்றும், மற்றொரு பெண்ணின் பெயர் மதுரவாசகி என்றும், அந்தனப்பொண்ணு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி ஆகியவை அரச குல தேவரடியார்களின் பெயர்கலாகும். குந்தவை என்பது ராஜ ராஜ சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் ராஜராஜன்.

பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், ராஜராஜன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம். தஞ்சை பெரியகோவிலில் உள்ள கல்வெட்டில் தேவரடியார்களுக்கு 100 கலம் நெல் சம்பளமாக தரப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனின் படை தளபதியாக இருந்த பாண்டிய வல்லவராயன் என்பவர் தனது ஒட்டுமொத்த குடும்ப பெண்களையும் ஸ்ரீ வல்லம் கோவிலுக்கு தானமாகக் கொடுத்தார் என சொல்லப்பட்டுள்ளது .அதேபோல் கோழிக்கோடு அரசாரன குலசேகர ஆழ்வார் தனது மகள் நீலாதேவியை ஸ்ரீரங்கம் கோவில் இறை தொண்டு செய்வதற்காக தானமாக கொடுத்தார் என கூறப்படுகிறது.



Image from Yaathisai Movie
Image from Yaathisai Movie

ஒரு திருமணம் நடந்தால் அந்த திருமணத்திற்கு தேவரடியார் வருவது மிக சிறப்பான ஒன்றாக பார்க்கப்பட்டது. பார்வதியே அந்த திருமணத்திற்கு வந்ததாக கருதினார்கள். சோழர்கள் காலத்தில் தேவரடியார்கள் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தார்கள். அதுமட்டுமின்றி சமூகத்திற்கும் நிறைய தொண்டுகள் செய்தனர். விண்ணமங்கலம் என்ற கிராமத்தில் நீர்தேக்கம் ஆண்டுதோறும் ஆழப்படுத்தப்பட்டு விவசாய நிலங்களுக்குள் ஏரி நீர் சென்று நிலங்களை சேதப்படுத்தியது. அப்போது அந்த ஊரை சேர்ந்த மங்கையர்கரசி, என்னாயிரம் பிள்ளை என்ற இரு தேவரடியார்கள் தன் சொந்த செலவில் நிலங்களை சீரமைத்து கொடுத்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு தேவரடியார் இறந்துவிட்டால் அவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்படும். மேலும் அம்மனுக்கு சாட்டப்பட்ட போர்வையால் அவரது உடல் மூடப்பட்டு மரியாதை செய்யப்படும். கோவிலில் 3 வேலையும் பூஜை நடக்காது. கோவில் மடத்தில் எரியும் நெருப்பை கொண்டு வந்துதான் அவரின் உடலை எரிப்பார்கள். இப்படிப்பட்ட மதிக்கத்தக்க, அனைவராலும் போற்றத்தக்க வகையில் இருந்த தேவரடியார்கள் பின்னாளில் தேவதாசிகள் என்ற இழிவான நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.


சங்க இலக்கியங்களில் பரத்தையர்

தேவதாசிகளைப் பற்றிய ஆங்கில மற்றும் இந்திய ஆய்வுக் கட்டூரைகள் அதிக அளவில் உள்ளன. அதில் பெரும்பாலான ஆய்வு கட்டூரைகள் மற்றும் புத்தகங்களில் சிந்து சமவெளி காலகட்டத்திலேயே தேவதாசி முறை தோன்றியது என்றும், மொகஞ்சதாரோவில் ஒரு நடனமாடும் பென்சிலை கிடைத்துள்ளது என்றும் இந்த பெண்கள்தான் பின்னாளில் தேவதாசி முறையை உருவாக்கினார்கள் என்றும் பல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அதேபோல் சங்க இலக்கியங்களில் பரத்தையர் என்ற பெண்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளது என்றும், அவர்கள் திருமணம் ஆகாமல் பல ஆண்களுடன் வாழ்ந்தார்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். சங்க காலத்தில் இருந்த பரத்தையர்கள் பின்வந்த காலங்களில் தேவதாசிகளாக மாறினார்கள் என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த இரு கண்ணோட்டங்களும் வரலாற்று ரீதியாக மிக தவறான ஆனாதிக்க கண்ணோட்டங்கள் என்றுதான் நாம் பார்க்க வேண்டும்.



மொகஞ்சதாரவில் கிடைத்தது ஒரு நடனமாடும் பெண் சிலைதான். அந்த பெண்கள் ஆண்களுக்கு நிகராக இடுப்பில் கை வைத்து கம்பீரமாக நிற்பது போன்று இருக்கும். அதை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது நம்முடைய தவறுதான். சிந்து சமவெளி காலகட்டத்தில் பெண்கள் எவ்வளவு தைரியம் மிக்கவர்களாக இருந்தார்கள் ஆண்களுக்கு நிகராணவர்களாக இருந்தார்கள் என்பது பற்றியும் நடன கலைஞர்களுக்கு சமூகத்தில் அளிக்கப்பட்ட மரியாதையை பற்றியும் தான் அந்த சிலை குறிப்பிடுகிறது.

அதேபோல் சங்க இலக்கியங்களில் உள்ள பரத்தையார் பெண்கள் தான் தேவதாசி முறையை உருவாக்கினார்கள் என்பதும் தவறான கூற்றுதான் என்பதற்கு பரத்தையர் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சங்க காலத்தில் பரத்தையரை இல்பரத்தை, சேரிப்பரத்தை, காதல்பரத்தை என 3 வகையாக பிரித்தனர்.

இல்பரத்தை என்றால் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு ஆனுடன் அவன் மனைவி போலவே சேர்ந்து வாழக்கூடிய பெண்ணை குறிக்கும். சேரிப்பரத்தை என்றால் ஒரு ஆணிடம் மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த ஆண்களுடன் சேர்ந்து வாழக்கூடிய பெண்ணை குறிக்கும். காதல் பரத்தை என்றால் தனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டும் தனக்கு பிடித்த ஆணிடம் இருந்துவிட்டு பிரிந்து செல்வதைக் குறிக்கும். “பரத்னத” என்ற சொல் முதன் முதலில் தொல்காப்பியத்தில்தான் இடம் பெறுகிறது

பரத்தையின் அகற்சியின் பிரிந்தோள் குறுகி
மாயப்பரத்தை உள்ளிய வழியும்
பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே


இவ்வாறு பரத்தை என்ற சொல் தொல்காப்பியத்தில் 9இடங்களில் இடம் பெற்றுள்ளது. பரத்தையர் பற்றிய வரையறையை காணும்போது திருமணம் மற்றும் கற்பு ஆகிய கட்டுப்பாடின்றி ஒருவரையோ அல்லது பலரையோ நாடுகின்ற பெண் என்று கூறலாம். தலைவி வாழும் இல்லத்திற்கு அருகேயே பரத்தை பெண்ணை தலைவன் கொண்டு வந்து வைத்திருந்ததும் உண்டு. இவ்வாறு இல்லத்திற்கு அருகேயே பரத்தையரை வைத்து இன்பம் கண்டதை

இருமருப்பு எருமை ஈன்றணிக் காரன்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரான்


என்ற குறுந்தொகை பாடல் காட்டுகிறது. தலைவனின் இல்லத்திலிருந்து பரத்தையர் தள்ளியும் இருந்துள்ளனர்.அவர்களை நாடிச் செல்லுதலை தொல்காகாப்பியத்தில் தொல்காப்பியர் பரத்தையின் அகற்சி என்று குறிப்பிடுவதால் பரத்தையர் வாழும் இடங்கள் வேறு ஊர் ஆயினும் தலைவன் தேடி செல்வான் என குறிக்கிறது.


தலைவன் தன் ஊரில் உள்ள பரத்தையரை இன்பம் நுகர்ந்த பின் புது பரத்தையரை நாடி வேறு ஊருக்கு சென்ற சூழலும் இருந்துள்ளது. இந்திர விழாவின் போது ஊர் தலைவர் பரத்தையர் அனைவரையும் வரவழைத்து ஆடல் பாடல் நடத்துவது பண்டைய வழக்கம். என்பதை

இந்திர விழாவிற் புவி என்ன
புன்தலைப் பேடை வரிநிழல் அகவும்
இவ்வூர் மங்கையர்த் தொழுத்தினி
எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின்தேரே

என்று ஐங்குறுநூற்று பாடல் கூறுகிறது. இவ்வாறு எல்லாம் பண்டைய இலக்கியங்களில் பரத்தையை பற்றி குறிப்பிட பட்டுள்ளது.


இந்த பரத்தையர்தான் பின்னாளில் தேவதைசிகளாக மாறினார்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால் பரத்தையர் என்பவரை பற்றி சங்க கால நூல்கள் தவறாக குறிப்பிடவில்லை. பரத்தையர்களுக்கு அரசு எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் சட்டத்திட்டங்களையும் விதிக்கவில்லை. மேலும் அவர்கள் பணத்திற்காகவோ அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலோ பாலியல் தொழிலுக்கு ஆட்படுத்த படவில்லை. அவர்கள் சுய சிந்தனையோடு தனித்து தன்னுடைய வாழ்க்கையை வாழத்தொடங்கினர்.

ஆதிக்க சமூகம்

குறிப்பாக ஆண்களை பணத்திற்காக சாராத பெண்களாகதான் பரத்தையர் இருந்தனர். ஆனால் தேவதாசி முறை என்பது ஆதிக்க சமூகம் மற்றும் மதம் ஆகியவற்றால் பெண்கள் வற்புறுத்தப்பாட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதும், ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தேவதாசி முறைக்கு ஆட்படுத்தப்படுவதுமாகும். தேவதாசி முறை ராஜராஜ சோழன் காலத்திதான் கொண்டுவரப்பட்டது என்று சில ஆரிய வந்தேறிகள் அவர்மேல் ஆதாரபூர்வமாற்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர். இதற்கு அவர்கள் ராஜராஜ சோழன் கால கல்வெட்டில் 400 தலிச்சரிப்பெண்டுகள் வேறு வேறு இடங்களில் இருந்து வரவைக்கப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர். இது முழுக்க முழுக்க ஆதாரமற்ற கூற்று.

சோழர்கள் மற்றும் பல்லவர்கள் காலத்தில் தேவரடியார் பெண்கள் எவ்வளவு உன்னதமானவர்களாக இருந்தார்கள் என்றும், அவர்கள் இந்த சமுதாயத்தில் எந்த அளவிற்கு மரியாதயாக நடத்தப்பட்டனர் என்றும் பார்த்தோம். மேலும் சோழர்கள் காலத்திலும், பல்லவர்கள் காலத்திலும் பெண்கள் பாலியல் தொழிலுக்கு ஆட்படுத்தப்படவில்லை என்று வெஸ்லி என்ற ஐரோப்பிய ஆய்வாளர் அவரின் முனைவர் பட்ட ஆய்வில் தென்னிந்திய கோவில் பெண்கள் என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தேவதாசி என்ற சொல் தமிழகத்தில் எந்த ஒரு காப்பியங்களிலும், எந்த ஒரு இலக்கியங்களிலும், ஆவணங்களிலும், கல்வெட்டுகளிலும் கிடையாது. முதன்முதலில் தேவதாசி என்ற சொல் கர்நாடகாவின் அலனஹள்ளி என்ற இடத்தில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னட கல்வெட்டில் இருந்துதான் கிடைத்தது.

தேவதாசி முறை

தமிழகத்தில் விஜய நகர பேரரசு வருகையால்தான் தேவதாசி முறை தோன்றியது. தேவரடியார்கள் கட்டாயப்படுத்தப்பட்டு தேவதாசிகளாக மாற்றப்பட்டனர். விஜய நகர பேரரசு காலகட்டத்தில் பெண்கள் சிறு வயதிலேயே அந்தப்புற பெண்களாக வளர்க்கப்பட்டனர். அவர்களுக்கு பொட்டுக்கட்டிவிடும் வழக்கம் இருந்தது பொட்டு கட்டுதல் என்றால் ஒரு பெண் பருவ வயதை அடைந்தவுடன் அந்த பெண் இறைவனின் மனைவியாக்கப்படுகிறாள்.ஒரு தாலியை எடுத்து பூசாரி அந்த பெண்ணின் கழுத்தில் கட்ட்டுவார். அதன்பின்னர் இருவரும் உடலுறவு கொள்வார்கள் அப்போது அந்த பெண் அந்த பூசாரியை இறைவனாக நினைத்துக்கொள்வாள்.


பின்னர் அந்த பெண் போது உடமையாக்கப்பட்டு பாலியளுக்கு பயன்படுத்தப்பாடுகிறாள். இத்தனை அட்டூழியங்களும், தமிழ் மன்னர்களுக்கு பின்னால் வந்த பிற மொழி பேச கூடிய மன்னர்கள் காலத்தில்தான் நடந்தது. இந்த நிலையில் கோவில்களில் உள்ள தேவரடியார்கள் விரட்டியடிக்கப்பட்டும், அவர்களின் சொத்துக்கள் சுரண்டப்பட்டும், சிலர் வாழுகட்டாயமாக பொட்டு கட்டி விடப்பட்டும், பாலியலுக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

விஜய நகர பேரரசு காலகட்டத்தில் தேவதாசி பெண்கள் நடனமாடியும் மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள், ஜமீன்கள், ஆகியோரின் அந்தப்புற பெண்களாகவும் ,இருந்துவந்தனர். ஒரு செல்வந்தன் எத்தனை தேவதாசிகளோடு தொடர்பு வைத்திருக்கிறானோ அதை பொறுத்தே அவனுடைய செல்வாக்கு மதிப்பிடப்பட்டது. இவ்வாறு தலைத்தோங்கி இருந்த தேவதாசி முறை இஸ்லாமியர்களின் வருகையால் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது. இஸ்லாமியர்களின் எழுச்சியால்தான் தேவதாசி முறை அழிவை சந்தித்தது என்று குமாரக்கம்பன்னா காலத்திய சாசனம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதின் கில்ஜி தென் தமிழ்நாட்டு கோவில்களில் நடனப்பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை விரும்பவில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Image from Yaathisai Movie
Image from Yaathisai Movie

தேவதாசி முறையை ஒழிப்பதாற்காக அலாவூதின் கில்ஜி தேவதாசிகளுக்கு வழுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது.14ம் நூற்றாண்டில் தென் இந்தியா மீது படையெடுத்து வந்த மாளிக்காப்பூர் பனையகைதிகளாக தேவதாசிகளை அழைத்து சென்றார் என்றும் 15 ம் நூற்றாண்டில் விஜயநகர அரசரை ஃபேரோஷா தோற்கடித்து 2000 பெண்களை அழிக்க வற்புறுத்தினார் என்றும் சாசனங்கள் குறிப்பிடுகின்றன.


இஸ்லாமியர்களின் ஆட்சியில் குறைந்தபட்ச உணவு பாதுகாப்பு மற்றும் உதவி தொகை கூட தேவதாசிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் தேவதாசிகளுக்குளேயே பிரிவினை தோன்றியதாகவும் இதனால் அவர்களுக்கு உள்ளேயே சில குழப்பங்கள் உருவானதாகவும் சொல்லப்படுகிறது இந்த தகராறு ஒரு கட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் வரை கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது நீர்பந்தத்தினால் தேவதாசிகளாக ஆக்கப்பட்டும் தொன்று தொட்டு குல தொழிலாக தேவதாசி முறையை செய்தும் வந்த தேவதாசி பெண்கள் வறுமை காரணமாக பாலியல் தொழிலாளிகளாக அரசவையை விட்டு வெளியேறி பொதுமக்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபடவேண்டிய அவலம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் மக்களால் இழிவாக பார்க்கப்பட்டனர். இதனால் சமூகத்தில் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்ற குரல் எழ தொடங்கியது.

ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்தப்போது இந்திய கோவில்களில் தேவதாசி முறை இருப்பதையும, பெண்கள் பாலியலுக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் 1886ம் ஆண்டு ஜோ ஜான் பட்லர் என்ற ஆய்வாளர் வெளி உலகிற்கு கொண்டு வந்தார். இந்தநிலையில் இந்தியாவில் பாலியல் நோய்கள் பரவ ஆரம்பித்தது.

நிறைய ஆங்கிலேயர்கள் பாலியல் நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் மருத்துவமனை ஒன்றை கட்டினார்கள். இந்தியாவின் மத விவகாரங்களில் தலையிடமாட்டோம் என்று விக்டோரியா மகாராணி வாக்குகொடுத்ததால் தேவதாசி முறையை ஒழிக்க ஆங்கிலேயர் அரசு முன்வரவில்லை. பாலியல் தொழிலாளிகளாக தேவதாசிகள் நடத்தப்படுவது அதிகரிக்கவே அதை ஒழிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் வீதி வீதியாக கூட்டங்கள் நடத்தியும் பத்திரிக்கைகள் மூலமாக துண்டு பிரசுரங்கள் வெளியிட்டும் தேவதாசி முறையை ஒழிக்க பாடுப்பட்டார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் – புரட்சி மங்கை முத்துலட்சுமி அம்மையார்


இந்தகாலகட்டத்தில் தேவதாசி முறை ஒழிப்பு குறித்து பெரியாரின் கருத்துகளால் கவரப்பட்ட இரண்டு பெண்கள் பெரியாரின் போராட்டங்களோடு தங்களை இணைத்துக்கொண்டு தேவதாசி ஒழிப்பு முறைக்கு எதிரான குரல் கொடுத்தனார்.

அவர்களில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஒருவர் இந்தியாவில் முதல் முதலில் சட்ட மன்றத்திற்கு சென்ற புரட்சி மங்கை முத்துலட்சுமி அம்மையார் ஆகியோர்.
முத்துலட்சுமி அம்மையாரும் ராமாமிர்தம் அம்மையாரும் தேவதாசி மரபு வழி வந்தவர்கள் என்றாலும் அந்த குலத்திற்கு எதிராக வலுவாக குரல் கொடுத்தார்கள். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சமூக கட்டுப்பாடு என்ற பெயரில் தேவதாசிகளின்மேல் சமூகம் செலுத்தும் ஆதிக்கத்தை அழித்து எறிவதே தனது வாழ்நாள் லட்சியம் என வாழத்தோடங்கினார். மேலும் தேவதாசி முறைக்கு எதிராக தாசிகளின் மோசவலை என்ற புத்தகத்தை எழுதினார்.

1919 ஆண்டு சுதந்திர போராட்ட கருத்துகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பிரச்சரத்தை பேற்கொண்டு வந்த காந்தியாடிகள் தேவதாசிகள் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுத்தார். இதனால் ஈரக்கப்பட்ட ராமமிர்தம் அம்மையார் காங்கிரசில் சேர்ந்து காந்தியடிகளுடன் போராடத் தொடங்கினார்.

1922ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமை தீர்மானத்தை ஆய்விற்கு எடுத்து கொள்ள மறுப்பதாக தந்தை பெரியார் தலைமையில் காங்கிரசில் இருந்து தொண்டர்கள் வெளியேறினார்கள். அவர்களில் ராமாமிர்தம் அம்மையாரும் தன்னை பெரியாருடன் இணைத்துக்கொண்டு சுய மரியாதை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.


இதன் பின்னணியில் சுய மரியாதை திருமணம் விதவை மறுமணம், சாதி மறுப்பு திருமணம், தேவதாசிமுறை ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு பெண் உரிமை என சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய பொது கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார்.

1925ம் ஆண்டு இன்றைய மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் மாயபுரத்தில் மாநாடு ஒன்றினை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நடத்தினார். அந்த மாநாட்டில் பெரியார், திரு வி க ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள் மேலும் ராமாமிர்தம் அம்மையார் தேவதாசிகளைப் பற்றி 1936 ம் ஆண்டு தாசிகளின் மோசவலை என்ற புத்தகத்தை எழுதினார். யாருக்கும் பயப்படாமல் தனது கருத்துக்களை அழுத்தமாக பேசும் தைரியம் கொண்டவர் ராமாமிர்தம் அம்மையார்.


தேவதாசிகள் ஒழிப்பு பற்றிய உறையாடலை தொடங்கினால் முத்துலட்சுமி அம்மையாரின் பங்களிப்பைப் பற்றி கூறாமல் இருக்க முடியாது. அவரைப்பற்றி கூறும் முன் அவருடைய காலகட்டத்தில் இருந்த அரசியல் சூழ்நிலையைப் பற்றி பேசியே ஆகவேண்டும்.

சட்டமன்றத்தில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த காலம் அது. 1920ம் ஆண்டு வரை பெண்கள் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உரிமை கிடையாது. பெண்களும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடலாம் என்று 1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சூழலில்தான் நீதிக்கட்சி ஆட்சி கட்டிலில் ஏரியது.

முத்துலட்சுமி அம்மையார்

முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவிலேயே முதன்முதலில் சென்னை மாகான சட்ட மன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற துணை தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டர். பின்னர் அவர் தேவதாசி தடுப்பு சட்டத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். அதற்க்கு அப்போது பார்ப்பனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்தியமூர்த்தி ஐயர் என்ற வைதீக பார்ப்பனர் முத்துலட்சுமி அம்மையாருக்கு எதிராக கடுமையாக வாதிட்டார். கோவில் புனிதம் கெட்டுவிடும் மரபுகள் மீறப்படக்கூடாது என்றெல்லாம் வாதங்களை முன்வைத்தார்.


மேலும் அவர் தேவதாசிகள் புனிதமானவர்கள் என்றும்,அவர்கள் கடவுளுக்கு சேவை செய்ய பிறந்தவர்கள் அவர்கள் அடுத்த பிறவியில் சொர்க்கத்தில் பிறப்பார்கள் என்றும் கூறினார்.இதற்கு பதில் கூறிய முத்துலட்சுமி அம்மையார் தேவதாசிகள் சொர்க்கத்திற்கு செல்வதாக இருந்தால் இனிமேல் சத்தியமூர்த்தி அவர்கள் தங்கள் வீட்டு பெண்களை தேவதாசிகளாக்கி அவர்கள் அடுத்த பிறவியில் சொர்க்கத்திற்கு செல்ல வழி செய்யலாமே என்றார்.சத்தியமூர்த்தி வாயடைத்து போனார். பின்னர் 1947 ம் ஆண்டு தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில்

என்னதான் தேவதாசி முறை சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டிருந்தாலும் சட்ட விரோதமாக இந்தியாவின் சில இடங்களில் தேவதாசி முறை நடந்துகொண்டு இருக்கிறது என்பதற்கான தகவல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவிலில் 800ஆண்டுகள் பழமையான தேவதாசி பாரம்பரிய முறை நடந்துவந்ததாகவும், பின்னர் அந்த கோவிலின் கடைசி தேவதாசியான சஷிமணி 19 மார்ச் 2015ல் உயிரிழந்ததால், அந்த 800 வருட பழமையான தேவதாசி முறை முடிவுக்கு வந்ததாக கூறுகின்றனர்.


மேலும் சஷிமணி 7 வயதிலிருந்தே பூரி ஜெகந்நாதர் கோவிலில் தேவதாசியாக இருந்ததாக கோவில் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் அந்த கோவில் நிர்வாகிகள் பூரி ஜெகந்நாதர் கோவிலில் உள்ள தேவதாசிகள், இங்குள்ள சமூகத்தினரால் மிகவும் மதிக்கப்பட்டனர் என்றும் அவர்கள் மற்ற இடங்களில் உள்ளவர்களால் இழிவாக பார்க்கப்படவில்லை என்றும், அவர்கள் யாராலும் இழிவாகவும் நடத்தப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், தேவதாசி முறையை போன்று இன்றளவும் சிறுமிகளை கோவிலுக்கு நேர்ந்துவிட்டு, ‘பொது சொத்து’ போல அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு பல புகார்கள் வந்தன.

திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகையை நடைமுறை குறித்து, கடந்த 2003-ஆம் ஆண்டு குழந்தைகள் உரிமை மேம்பாட்டு மையம் மற்றும் பெண் கல்வி மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டது. அப்போது, இந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக மாவட்ட காவல் துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிறுமிகளை மாதம்மா கோவிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், ஆந்திர எல்லையில் அமைந்துள்ள இரண்டு அல்லது மூன்று கோவில்களில் இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அச்சிறுமிகள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் அல்ல எனவும், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிறுமிகளே இந்த வழக்கத்திற்கு தள்ளப்படுவதாகவும், அவர்கள் பூப்பெய்திய பிறகு ’பெண் கடவுளின் பாதுகாப்பில் விடுவதாக கூறி கோவிலுக்கு நேர்ந்து விடப்படுவதாக கூறப்படுகிறது. இதன்பின், அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.


கர்நாடக மாநிலம் ஹரப்பனல்லி வட்டத்தில் உத்தரங்கமல அடிவிமல நகரி என்ற பகுதியில் உள்ள துர்க்கை கோவிலில் இன்றும் தேவதாசி முறை நடந்து வருகிறது. இது குறித்து பல முறை அரசுக்குத் தெரியப் படுத்தியும் இது கலாச்சார பழக்கம்; இது திருவிழா அன்று மாத்திரம் நடக்கும் விழாவாகும் இதனால் யாரும் பாதிக்கபடவில்லை என கோவில் நிர்வாகம் கூறியது. இதுபோன்று இந்தியா முழுவதும் இந்த தேவதாசி முறை சட்ட விரோதமாக நடைபெற்றுதான் வருகிறது.

கலைக்காகவும், இறை தொண்டிற்காகவும் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து பண்டைய தமிழ் சமூகத்தினரால் தெய்வத்திற்கு நிகராக மதிப்புடன் பார்க்கப்பட்ட தேவரடியார் பெண்கள், தமிழ் மன்னர்களுக்கு பின்னால் வந்த, விஜய நகர பேரரசு காலத்தில் தேவதாசிகள் என்ற இழிவான நிலைக்கும் வன்கொடுமைக்கும் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டனர்.

இதை ஒழிக்க முறையான சட்டம் இயற்றப்பட்டாலும் இன்றளவும் இந்த தேவதாசி முறை தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட இந்தியா போன்ற இடங்களில் உள்ள படிப்பறிவு இல்லாத, பகுத்தறிவு இல்லாத ஒரு சில கிராமங்களில் வழக்கத்தில் இருந்து வருகிறது என்பது வேதனைக்கு உரிய, மறுக்க முடியாத உண்மையாகும்.


“கற்பை பொதுவில் வைப்போம்” என எட்டையபுரத்தானுக்கு எட்டிய மகா சிந்தனையெல்லாம் அப்பொதும், இப்பொதும் எவருக்கும் எட்டவில்லை. ஆண்களின் கற்பு டேக் இட் ஈசி பாலிசியாகவே இருந்திருக்கிறது. இந்த பரத்தமை செயலுக்காக ஜாதி மதம் இனம் மற்றும் கடவுளின் பெயரால் பரத்தையர்கள் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறார்.

Article by: Keerthivasan