• July 27, 2024

உங்களை மிரளவைக்கும் உலகின் முதல் சிவன் கோயில் ரகசியங்கள்!

 உங்களை மிரளவைக்கும் உலகின் முதல் சிவன் கோயில் ரகசியங்கள்!

நம் தமிழ்நாட்டின் மீது முகலாய மன்னர்கள், மற்றும் ஆங்கிலேயர்கள் என அந்நிய நாட்டவர் வேறு வேறு காலகட்டங்களில் படையெடுத்து வந்துள்ளனர். அந்த படையெடுப்பின்போது அவர்கள் நமது பழம்பெரும் கோயில்களையும், அரண்மனைகளையும் சேதப்படுத்தியும், தமிழ்நாட்டின் உள்ள நிறைய செல்வங்களையும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இப்படி நம் வளங்களை எல்லாம் சூறையாடியவர்களால், அதே தமிழகத்தில் உள்ள விலைமதிக்க முடியாத “ஒரு சிலையை” மட்டும் அவர்களால் கொள்ளையடிக்கவே முடியவில்லை. குறிப்பாக முகலாய பேரரசரான அலவுதின் கில்ஜிகூட அந்த சிலையை கொள்ளையடிக்க முயன்று அதில் தோல்வியடைந்தார் என சொல்லப்படுகிறது.

மேலும் அந்த சிலையை திருடினால் ‘அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும்’ என்று நம் முன்னோர்களால் சொல்லப்படுகிறது. இவ்வாறு யாராலும் கொள்ளையடிக்க முடியாத பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை அந்த சிலை உள்ளது. அதுதான் உலகின் முதல் நடராஜர் சிலை என்று சொல்லப்படுகிறது. இந்த நடராஜர் சிலை தமிழகத்தில் உள்ள ஒரு பழம்பெரும் கோயிலில்தான் உள்ளது. அந்த கோயில்தான் உலகின் முதல் சிவன் கோவில் என்று சொல்லப்படும் திரு உத்திரகோசமங்கை மங்கள நாதர் கோயில்.

இந்த கோயில் ஏராளமான வரலாற்று சிறப்புகளையும், அதிசயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. எனவே அந்த கோயிலை பற்றி இப்போது பார்ப்போம்.

எங்கு உள்ளது?

உத்திரகோசமங்கை கோயில் ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோ மீட்டர் தொலைவிலும் ராமநாதபுரத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலும், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த கோயில்தான் உலகில் தோன்றிய முதல் சிவன் கோவில் என்றும், சிவனின் சொந்த ஊர் என்றும் சொல்லப்படுகிறது.

பெயர் காரணம்

உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்றால் பார்வதி தேவியை குறிக்கும். சிவன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் ரகசியத்தையும் அதன் பொருளையும் பார்வதி தேவியிடம் கூறியது இந்த இடத்தில்தான் என்பதால் இந்த இடத்திற்கு உத்திரகோசமங்கை என்ற பெயர் வந்தது என சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் ஒரு இலந்தை மரம் உள்ளது. இந்த மரத்தடியிலேதான் சிவன் சுயம்பு லிங்கமாக தோன்றினார் என சொல்லப்படுகிறது. இந்த மரம் 3000 ஆண்டு பழமையானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கனித்துள்ளனர். இந்த கோயிலில் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய 3 கிரகங்கள் மட்டும்தான் உள்ளன. ஆக நவ கிரக வழிபாடு அறியப்படாத காலத்திற்கு முன்பே தோன்றிய கோயில் இது என்று சிலர் கூறுகின்றனர்.

இந்த கோயிலின் பழமையை குறிக்கும் விதமாக “மண் தோன்றியதற்கு முன்பே மங்கை தோன்றியது” என்ற பழமொழி இப்பகுதியில் வழக்கில் இருந்து வருகிறது. மேலும் இந்த கோயில் ‘ராமாயான காலத்திற்கும் முந்தையது’ என்றும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலில்தான் ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடந்தது என சொல்லப்படுகிறது. அதற்கு சான்றாக கோவில் கல்வெட்டுகளில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

ராவணன்-மண்டோதரி திருமணம்

ஒருமுறை மண்டோதரி உலகின் மிக சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். மண்டோதரியின் தவத்தை ஏற்ற சிவன் மண்டோதரிக்கு வரத்தை அளிப்பதற்காக தான் பூமிக்கு வருவதாக உத்திரகோசமங்கையில் இருக்கும் 1000 முனிவர்களிடம் கூறினார். அவ்வாறு நான் பூமிக்கு வரும்போது உத்திரகோசமங்கையில் உள்ள குளத்தில் அக்கினி உருவாகும், அப்போது அந்த இடம் சற்று வெப்பம் அடையும். அப்படி வெப்பம் அடையும்பொழுது நீங்கள் வேத ஆகமங்கள் தீயில் ஏரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சிவன் பூமிக்கு வரும் பொழுது, உத்திரகோச மங்கையின் குளத்தில் அக்கினி தோன்றியது. அந்த இடம் வெப்பமாக மாறியது வேத ஆகமங்கள் தீயில் எரியும் தருவாயில் இருந்தது. அது எரிந்துவிடும் என்ற அச்சத்தில், சிவன் வந்து கேட்டால் என்ன சொல்வது என்ற பயத்தில் அந்த 1000 முனிவர்களில் 999 பேர் அந்த அக்கினி குளத்தில் குதித்து இறந்தனர். ஒருவர் மட்டும் தைரியமாக இருந்து வேத ஆகமங்களை காப்பாற்றினார். அவர்தான் மாணிக்க வாசகர்.

சிவன் பூமிக்கு வந்ததும், மண்டோதரியின் தவத்திற்கு இணங்க இந்த உலகிலேயே சிறந்த சிவ பக்தனான ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் செய்து வைத்தார். இவர்களின் இந்த திருமணம் உத்திரகோசமங்கை கோவிலில்தான் நடந்தது. இந்த மங்களகரமான காரியம் நடந்ததில் இருந்துதான் இங்குள்ள சிவனுக்கு மங்கள நாதர் என்ற பெயர் வந்தது என சொல்லப்படுகிறது. மேலும் திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலில் வந்து வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

வேத ஆகமங்களை காப்பாற்றிய மாணிக்க வாசகருக்கு சிவன் அருள் வழங்கி தன்னைப் போலவே லிங்க வடிவம் தந்து கெளரவித்தார். இன்றைக்கும் இந்த கோவிலில் மாணிக்கவாசகர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். மேலும் தீயில் விழுந்த 999 முனிவர்களையும் உயிர் பெற செய்து அவர்கள் முன் காட்சி தந்தார். இதனால் சிவனுக்கு “காட்சி கொடுத்த நாயகன்” என்ற பெயரும் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்த ஆயிரம் முனிவர்களை குறிக்கும் விதமாக, இங்கு ஒரு சகஸ்ர லிங்கம் உள்ளது. மாணிக்க வாசகர் திருவாசகத்தில் 38 இடங்களில் இந்த கோவிலை பற்றி புகழ்ந்து பாடியுள்ளார்.

“அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே,” “வெறிவாய் அறுகால் உழுகின்ற பூம் பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே,” “பக்தரெலாம் பார் மேல் சிவபுரம் போல் கொண்டாடும் உத்தரகோச மங்கையுர்,” எனப்பலவாறு புகழ்ந்துபாடுகிறார்.

மேலும் கீர்த்தி திருவகவல் என்னும் திருவாசக பகுதியில், உத்தரகோச மங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும்” என்று வருந்தொடர், ஆயிரம் முனிவர்களுக்கும் இறைவன் தன் வடிவம் காட்டிக் காட்சி தந்த வரலாற்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு நீத்தல் விண்ணப்பம், திருப்பொன்னூசல், திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி முதலிய பகுதிகளிலும் இந்த கோவில் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. கோவிலின் பிரகாரச் சுவரில் திருவாசகப் பகுதிகளான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டு உள்ளன.

இந்த கோவில் பற்றி திரு. வ. த. சுப்பிரமணியம் பிள்ளை 1901ம் ஆண்டு ‘சுமங்களேஸ்வரி பிள்ளை தமிழ்’ என்ற நூலை எழுதினார். இது மறுபதிப்பு செய்யப்பட்டு 1956 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்த கோவிலில் வேத வியாசர், காக புஜண்டர், வாணாசுரன், மயன், அருணகிரி நாதர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் இங்குள்ள ஈசனை வணங்கி அருளை பெற்றார்கள் என சொல்லப்படுகிறது. குறிப்பாக காக பூஜண்ட முனிவருக்கு கௌதம முனிவரின் சாபம் இந்த கோவிலில்தான் நீங்கியது என சொல்லப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் 60,000 சிவனடியார்கள் ஞானம் பெற்றனர் என சொல்லப்படுகிறது.

பல பெயர்கள் – ஆதி சிதம்பரம்

பழங்காலத்தில் இந்த கோவில் சிவபுரம், தட்சிண கைலாயம், சதுர்வேதி மங்களம், இலவந்திகைப்பள்ளி, பத்ரிகா கேஷத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பத்ரி சயன சத்திரம், ஆதி சிதம்பரம், என்றெல்லாம் அழைக்கப்பட்டது. என்று கோவில் கல்வெட்டுகள் , ஓலை சுவடிகள் சங்ககால தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை எல்லாம் வைத்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமைப்பு

இந்த கோவில் அமைப்பை பொறுத்தவரை கோவிலின் நுழைவாயிலில் உள்ள கோபுரம் 7 அடுக்குகள் கொண்டது. கோவிலின் ராஜ கோபுரத்தின் மேல் சர்வேஸ்வரர் சிலை காணப்படுகிறது. கோவில் வாசலில் விநாயகரும், முருகனும் இடம் மாறி உள்ளனர்.

இந்த கோவிலை தவிர வேறு எந்த கோவிலிலும், இப்படி இடம் மாறி இருந்ததில்லை. அதேபோல் முருகனின் வாகனமான மயிலுக்கு பதிலாக முருகனின் வாகனமாக யானை உள்ளது.

இந்திரன் தனது ஐராவதம் என்று சொல்லக்கூடிய வெள்ளை யானையை முருகனுக்கு அளித்தான் என்று ஆதி சிதம்பர மகாத்மியம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கோவிலில் மொத்தம் 11 விநாயகர் சிலைகள் உள்ளது. மற்றும் எல்லா சிவ ஆலயங்களிலும் உள்ளவாறு நந்தியும் இந்த கோவிலில் உள்ளது மங்கள நாதர் சன்னிதி, மங்களேஸ்வரி சன்னிதி, நடராஜர் சன்னிதி, சுயம்புலிங்க சன்னிதி போன்றவை தனித்தனி கருவறையில் இருக்கின்றன. தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பன தனித்தனியே காணப்படுகிறது.

கோவிலின் உள் வாயிலை தாண்டி பெரிய மண்டபத்தை அடைந்தால் முதல் தூணில் குவிந்த கைகளுடன் சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்து ராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாக காட்சி அளிக்கின்றனர். இங்கு மொத்தமாக 9 தீர்த்த கிணறுகள் உள்ளன.

யாழி சிலை

கோவிலின் உட்பிரகாரத்திற்கு செல்லும் வழியில் கல்லில் சேதுக்கப்பட்ட யாழி உள்ளது. அதன் வாயில் பந்து போன்ற உருண்டை கல் உள்ளது. அதனை நாம் கையால் நகர்த்த முடியுமே தவிர வாயில் இருந்து வெளியே எடுக்க முடியாது.

இந்த கோவிலில் அக்கினி தீர்த்தம் உள்ளது. இது தவிர கோவிலுக்கு வெளியில் பிரம்ம தீர்த்தம், மொய்யார்தடம் பொய்கை தீர்த்தம், சீதன தீர்த்தம், மங்கள தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், முதலான தீர்த்தங்கள் இந்த கோவிலில் உள்ளன. மேலும் இங்குள்ள குளத்தில் வாழும் மீன்கள் கடல் மீன்கள் என்று சொல்லப்படுகிறது.

மேலும் திருவிளையாடல் புராணத்தில் வலை வீசி மீன் பிடிக்கும் காட்சி இந்த கோவிலில்தான் நடைபெற்றது என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்கு அருகில் பழமை வாய்ந்த வாராஹி கோவில் உள்ளது.

அதிசய மரகதத்தால் ஆன சிவபெருமான்

இந்த ஆலயத்தில் வேறு எங்கும் இல்லாத நவ ரத்தினங்களில் ஒன்றான மரகதத்தால் ஆன சிவ பெருமானின் பிரபஞ்ச நடன வடிவத்தில் நடராஜர் சிலை உள்ளது. இந்த மரகத நடராஜர் ஆதி சிதம்பரர் என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு சிறு அதிர்வுகூட மரகத நடராஜர் சிலையை சேதப்படுத்தும் என்று நம்பப்படுவதால் பூஜை வழிபாடுகளின்போது மேள வாத்தியங்கள் வாசிக்கப்படுவதில்லை. மேலும் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசி மூடப்பட்ட நிலையிலேயே நடராஜர் சிலை இருக்கும்.

வருடத்தில் ஒரு நாள் அதாவது ஜனவரி தொடக்கத்தில் வரும் ஆருத்ரா தரிசனத்திற்கு முந்தைய நாளான திருவாதிரை திருவிழா அன்று சந்தனம் அகற்றப்பட்டு பொதுமக்களுக்கு காண்பிக்கப்படுகிறது. மேலும் ஆருத்ரா தரிசனம் இங்குதான் முதன் முதலில் கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

சிலர் இந்த நடராஜர் சன்னதியை ரத்தின சபை என்றும் கூறுகின்றனர். மேலும் இந்த மரகத நடராஜரின் மேல் பூசப்பட்டிருக்கும் சந்தனத்தை எடுத்து வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட குணமடையும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த சிலைதான் உலகின் முதல் நடராஜர் சிலை என்றும் சொல்லப்படுகிறது. மேலும் சிவன் இங்கு நடனமாடியபிறகுதான் சிதம்பரத்தில் ஆடினார் என்றும் சொல்லப்படுகிறது.

மரகத நடராஜர் சிலை எப்படி உருவானது?

ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்ற பகுதியில், மரைக்காயர் என்ற மீனவர் தனது வறுமை நீங்க மங்கள நாதரை தினமும் வழிபட்டு வந்தார். ஒரு நாள் அவர் கடலில் மீன் பிடிக்கும்போது சூராவளி காற்று அடித்து அவருடைய படகு திசை மாறி போனது. அப்படியே வெகு தூரம் சென்ற பிறகு ஒரு பாசி அடித்த பாறையின் மேல் மோதி நின்றுவிட்டது. அந்த பாறை அப்படியே சரிந்து படகின் உள்ளே விழுந்துவிட்டது.

சூறாவளி காற்றும் நின்றுவிட்டது. அதிர்ச்சியில் இருந்து மீண்ட மரைக்காயர் கரைக்கு திரும்பி வர பார்த்தால் அந்த இடத்தில் இருந்து திக்கும் திசையும் தெரியவில்லை. மங்கள நாதரை நினைத்து படகை செலுத்தி மிகவும் கஷ்டப்பட்டு பலநாள் கடலில் திரிந்து அலைந்து ஒரு வழியாக தனது ஊரான மண்டபத்திற்கு வந்தடைந்தார்.

கடலுக்குப் போன இவர் திரும்பிவர வில்லை என்று பலநாட்கள் கவலையோடு காத்திருந்த குடும்பத்திற்கு அப்போது தான் நிம்மதி கிடைத்தது. படகில் கொண்டுவந்த பாசியடித்த கற்களை என்னவென்று தெரியாமல் தனது வீட்டு படிக்கல்லாக போட்டு வைத்தார் மரைக்காயர். அந்த கல்லின் மேல் நடந்து நடந்து நாளைடைவில் அந்த கல்லின் மேல் ஒட்டி இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சூரிய வெளிச்சத்தில் பளபளவென மின்னியது.

இது வறுமையில் வாடிய தனக்கு ஈசன் மங்கள நாதர் கொடுத்த பரிசு என்று நினைத்த மரைக்காயர் அந்த மின்னும் பச்சை பாறையை அரசருக்கு அன்பளிப்பாக தந்தால் தனது வறுமை நீங்கும் என்ற எண்ணத்தில் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். நடந்த அனைத்தையும் கூறி தன் வீட்டில் ஒரு பெரிய பச்சை கல் உள்ளது என்று அரசரிடம் சொன்னார்.

அரண்மனை பணி ஆட்கள் பச்சை பாறையை வீட்டில் இருந்து எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள். கற்களைப் பற்றி விவரம் உள்ள ஒருவர் பச்சைப் பாறையை சோதித்து பார்த்தார். சோதித்தவர் ஆச்சரியத்துடன் “இது விலைமதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல், உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது” என்று சொன்னார். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சைப் பாறைக்கு உரிய பொற்காசுகளை அளித்து வழி அனுப்பினார்.

இவ்வளவு அருமையான கல்லிலிருந்து ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை. இந்த வேலைக்கு உகந்த சிற்பியைப் பல இடங்களில் தேடிக் கடைசியில் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தர் இரத்தின சபாபதியைப் பற்றிய விவரம் கிடைத்தது. அவரை அனுப்பி வைக்கும்படி அரசர் ஓலை அனுப்பினார். சிற்பியும் வந்து சேர்ந்தார்.

அவ்வளவு பெரிய மரகத கல்லை பார்த்த உடன் ஆச்சரியத்தில் மயங்கியே விழுந்துவிட்டார், “என்னால் மரகத நடராஜர் வடிக்க இயலாது மன்னா” என்று கூறிவிட்டு இலங்கைக்கே திரும்பி சென்றார். மன்னன் மன வருத்தத்துடன் திருஉத்திரகோசமங்கை மங்கள நாதர் சன்னதி முன் நின்று பிரத்தனை செய்துக் கொண்டிருந்தார். அப்போது நான் மரகத நடராஜரை வடித்து தருகிறேன் என்று சித்தர் சண்முக வடிவேலர் கூறினார்.

மன்னனின் கவலையும் நீங்கியது. மரகத நடராஜரை வடிக்கும் முழு பொறுப்பையும் சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். அந்த பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் “ராஜ கோலத்தில்” மிகவும் நுணுக்கமாக மரகத நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர். இவ்வாறுதான் மரகத நடராஜர் சிலை உருவானது என சொல்லப்படுகிறது.

பஞ்சலோக நடராஜர்

இந்த கோவிலில் வீதி உலா செலவதற்கும், தினம்தோறும் நடைபெறும் அபிஷேகங்களுக்காகவும், பஞ்ச லோகத்தால் ஆன மற்றொரு நடராஜர் சிலையும் இந்த கோவிலில் உள்ளது.

இந்த நடராஜர் சிலை மிகவும் வித்தியாசமானது வலது புரம் ஆண்களின் நடன அசைவை போலவும், இடது புரம் பெண்கள் ஆடும் நளினமான நடன அசைவு முறை போலவும் இந்த சிலை அமைந்துள்ளது. இந்த நடராஜர் சிலையையும் கோவில் கல்வெட்டு குறிப்புகளையும் வைத்து பார்க்கும் போது இந்த பஞ்சலோக நடராஜர் சிலையும் மிகவும் தொன்மையானது என்று கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

மேலும் இந்த கோவிலில் தமிழ் மாதமான சித்திரையில் திரு கல்யாண வைபவம், வைகாசியில் பத்து நூல் சிவ உத்சவம், ஐப்பசியில் அண்ணாபிஷேகம், மார்கழியில் நடைபெறும் திருவாதிரை திருவிழா, மாசியில் சிவ ராத்திரி ஆகியவை இந்த கோவிலில் நடைபெறும் விழாக்கள் ஆகும்.

தாழம்பூ வைத்து பூஜை

மேலும் சிவன் கோவில்களிலேயே இங்கு மட்டும்தான் சிவனுக்கு தாழம்பூ வைத்து பூஜை செய்யப்படுகிறது. ஒருமுறை பிரம்மனுக்கும், விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது சிவன் ஒரு சுடராக அவர்கள் முன் தோன்றி “எனது மூலத்தை யார் கண்டுபிடிக்கிறீர்களோ, அவரே உங்களில் பெரியவர்” என்று கூறினார்.

உடனே பிரம்மன் அன்னபறவை உருவம் எடுத்து சுடரின் உச்சியை பார்க்க வானத்தில் பறந்தார். அதேபோல் விஷ்ணுவும் வராஹ அவதாரம் எடுத்து சுடரின் தலத்தை தேடினார். விஷ்ணு அதில் தோல்வி அடைந்து தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மன் உச்சத்தை கண்டுபிடித்தாக தாழம்பூ சாட்சியுடன் போய் கூறினார் அதற்கு தண்டனையாக பிரம்மனுக்கு பூமியில் கோவில்கள் இருக்க கூடாது என்றும், சிவ வழிபாட்டிப்போது தாழம்பூ பயன்படுத்த கூடாது என்றும் சபித்துவிட்டார். பிறகு இந்த உத்திரகோசமங்கை கோவிலில்தான் பிரம்மனுக்கு சாப விமோசனம் கிடைத்தது என்று சொல்லப்படுகிறது அதன் சாட்சியாகதான் இங்கு மட்டும் சிவனுக்கு தாழம்பூ வைத்து பூஜை செய்ய படுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் வந்து வழிபாட்டால் பாவம், புண்ணியம் பார்க்காமல் அனைவருக்கும் மறுபிறவி அளிக்கும் புண்ணிய தளம் இது என்று மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில் கூறியுள்ளார்.

மேலும் உத்திர கோசமங்கை கோவிலுக்கு பாண்டியர்கள் பெரிய அளவில் திருப்பணிகளை செய்துள்ளனர். மேலும் பாண்டியர்களின் ஆட்சி சிறப்பாக இருந்தபோது இந்த உத்திரகோசமங்கை பாண்டியர்களின் தலைநகராகவும் சிறிது காலம் இருந்தது.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்த கோவில் ஆதி சைவர்களிடம் இருந்தது. பிறகு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றுவரை இந்த கோவில் ராமநாதபுர சேதுபதி ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது.

இவ்வாறு பல அதிசயங்களையும், அற்புதங்களையும், மிக நீண்ட வரலாற்றையும், கொண்ட உத்திரகோசமங்கை கோவில் பல்லாயிரம் ஆண்டுகளாக முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என பல படையெடுப்புகளை தாண்டி இன்றுவரை செழித்தோங்கி இருந்து வருகிறது.

திருவாரூரில் பிறந்தால் முக்தி,
காசியில் இறந்தால் முக்தி.
அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள்.


இங்கே உத்திரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி.

இப்படிப்பட்ட இந்த உத்திரகோசமங்கை கோவில் நாம் நம் வாழ்வில் கட்டாயம் ஒருமுறையாவது சென்று தரிசிக்கக்கூடிய ஆலயங்களில் ஒன்றாகும்.

வீடியோவாக பார்க்க..