• October 12, 2024

விந்தணுவை சிற்பமாக செதுக்கிய தமிழன்

 விந்தணுவை சிற்பமாக செதுக்கிய தமிழன்

ஆன்மீகமும் – அறிவியலும் ஒன்றோடொன்று சந்திக்கும் பொது, ஒன்று மிகப்பெரிய கேள்விக்கு பதில் கிடைக்கும். அல்லது பதிலாக இருந்த ஒன்று மிகப்பெரிய கேள்வியாக உருமாறும்.

குழந்தையை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்ன தமிழன், அந்த குழந்தை எப்படி உருவாகிறது, அந்த குழந்தை கருவறையில் எப்படி இருக்கும் என்பதையும் சொல்லிவைத்தவிட்டு தான் சென்றிருக்கிறான். இந்த விஷயத்தை நாம் பார்க்கும் போதும், அதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள படிக்கும் போதும், பிரமிப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன். எனக்கு தெரிந்ததை, நான் சேகரித்ததை உங்களிடம் பகிர்கிறேன்!

சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில், அரியத்துறையில் என்னும் ஊரில் அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் ஒன்று உள்ளது. பல வரலாறுகளையும், இதிகாசங்களையும் தன்னுள் வைத்துள்ள இந்த கோயில், மஹாபாரத காலகட்டத்தில் முனிவர்களால் உருவாக்கப்பட்டது என்றும், மூலவர் சிலை கிட்டத்தட்ட 6000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், சுமார் 1000 முதல் 1500 வருடங்களுக்கு முன்புதான் இது கோயிலாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது. வரமூர்த்தீஸ்வரர் கோவில் சிவ பெருமானின் பஞ்ச பிரம்ம ஸ்தலங்களில் ஒன்றாகும்.

இந்த கோவிலின் கருவறைக்கு வெளியே உள்ள மண்டபத்தின் மேற்பகுதியில் பாம்பு, மீன், பல்லி, சந்திரன் மற்றும் சூரியனின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். இதை பார்க்கும் போது சந்திரன் மற்றும் சூரியனை நோக்கி இந்த நாகம் செல்வது போல இருக்கும்.

ஆன்மீக முறைப்படி இது சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை குறிக்கிறது என்றும், சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷம் எனக் கூறும் தோஷங்களின் பரிகாரத்தை குறிக்கிறது என்றும் சொல்கிறார்கள். இது ஆன்மீகம் தரும் பதில்.
சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய சங்ககால தமிழன், ஒரு சிலையில் பல கதைகளையும், எதையும் நேரடியாக சொல்லாமல், மறைமுக குறிகளாகவே பெரும்பாலும் சொல்லி சென்றுள்ளான்.

அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் நான் பதிவிட்ட மூன்று பதிவுகள் இருக்கின்றன. அதை லிங்க் ஆகா தருகிறான் தெரிந்துகொள்ளுங்கள். இப்படி ஆன்மீகத்திலும், அறிவியலையும் மறைமுகமாக திணித்திருக்கும் தமிழன் இதில் மட்டும் எப்படி சொல்லாமல் இருந்திருப்பான்.

கொஞ்சம் காலத்தை பின்னாடி செலுத்துவோம். பிரிட்டிஷ் மக்கள் இந்தியாவை ஆண்ட போது, இந்தியாவை பாம்பு மந்திரவாதிகளின் நிலம் என்றார்கள். காரணம் இங்கு இருக்கும் ஆன்மிகத்தில் பாம்பு, பாம்பை ஒரு மறுபிறப்பின் அடையாளமாக பார்ப்பது, பாம்பிற்கு சிறு சிறு கோயில்கள் மற்றும் பாம்பை வைத்து விளையாடும் பாம்பாட்டிகள், என இந்த பெயரை அவர்கள் வைத்தார்கள்.

‘எதை கண்டு மனிதன் பயந்தானோ, அதையே இறைவனாக வணங்க ஆரம்பித்தான்’ என்கிறது சில புத்தகங்கள்.

varamoortheeswarar temple

இந்த இரண்டு படங்களும் அதே கோயிலில் அருகருகே வடிவமைக்கப்பட்ட சிற்பங்களாகும். முதல் படத்தில், சந்திரனை ஒரு பாம்பு நெருங்கிகிறது. அதை அரை சந்திரனாக இருப்பதால் இது ஒரு சந்திர கிரகணத்தை குறிக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். இதில் வரும் பாம்பு இன்று நவகிரகங்களில் வணங்கப்படும் ராகு மற்றும் கேதுவை குறிப்பதாவே வைத்துக்கொள்வோம்.

இந்து சாஸ்திர படி, ராகு சந்திரனை விழுங்குவதையே சந்திரகிரகணம் என்கிறது. அதற்கு அருகில் மற்றொரு பாம்பு ஒரு தவளையை சாப்பிடுவது போல இருக்கிறது. இதை ஒரு சிலர் தவளை என்கிறார்கள். ஒரு சிலர் சிவனை வழிபடுவது போல இருக்கிறது என்கிறார்கள். இந்த இரண்டு செயல்களும் சந்திரகிரகணம் மற்றும் நாகதோஷம் என்பதை குறிப்பதாக ஜோதிடமும், ஆன்மீகம் சொல்கிறது. அதற்கு அருகில் பொறிக்கப்பட்டுள்ள சிற்பம் சொல்லும் கதை தான் ஆன்மீகத்தோடு அறிவியல் கலந்த சிற்பமாக இருக்கிறது.

varamoortheeswarar temple

இந்த படத்தை பாருங்கள். இது சூரிய கிரகணத்தை குறிப்பதாக சொல்கிறார்கள். மேலும் அந்த மீன் சிற்பம் சர்ப்பதோஷத்தை குறிப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த 2 சிற்பங்களில் தான் அறிவியலும் – ஆன்மீகமும் இருக்கிறது.

முதலில் ஆன்மீகம் சொல்வதை பார்ப்போம்: “நெடுநாட்களாகத் திருமணம் தடைபட்டு வருகிறதா, திருமணம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையா, சர்ப்பதோஷம் ஆக இருக்கும், போய் பரிகாரம் செஞ்சா எல்லாம் சரியாகிவிடும்”, என்று ஜோதிடர்கள் சொல்வதுண்டு. “திருமணம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையா” என்கிற இந்த ஒரு வரி தான் ஆன்மீகத்தையும் – அறிவியலையும் முடிச்சிபோடுகிறது. இந்த சிற்பத்தில் இருப்பது மீனும் அல்ல, பாம்பும் அல்ல, அது சூரியனும் அல்ல, பின் அது என்ன?

பாம்பாக இருப்பது ஆணின் விந்தணுவாகவும், சூரியனாக இருப்பது பெண்ணின் கருவாகவும் இருக்கவேண்டும். இந்த இரண்டு சிற்பங்களையும் பாருங்கள் . சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு வடிக்கப்பட்ட ஒன்று. இந்த இரண்டையும் வடித்தது ஒரு சிற்பியாக இருக்கலாம் அல்லது வெவ்வேறு சிற்பியாக இருக்கலாம். அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஒரு வேளை ஒரே சிற்பியாக இருக்கும்பட்சத்தில், கண்டிப்பாக இதில் ஏதோ ஒன்றை நமக்கு மறைமுகமாக சொல்கிறார்கள் என்று தான் பொருள்.

varamoortheeswarar temple

சந்திரனை நெருங்கும் பாம்பின் உருவத்திற்கும், சூரியனை நெருங்கும் பாம்பின் உருவத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. நிலவை நெருங்கும் பாம்பை போல, சூரியனை நெருங்கும் பாம்புக்கு முகம் கூர்மையாக இல்லை. அது விந்தணு போல தான் இருக்கிறது. இது விந்தணுவாக இருக்கும் பட்சத்தில் அது நோக்கி செல்வது சூரியனாக இருக்க முடியாது. கருவாக தான் இருக்கமுடியும்.

அடுத்து இரண்டு மீன்கள் ஒன்றை ஒன்று பார்ப்பது போல இருப்பது. நீங்கள் பார்ப்பது இரண்டு மீன்கள் இல்லை. இதில் ஒன்று மீன் மற்றொன்று ஒரு பானை போன்றது. தலைகீழாக திருப்பப்பட்ட ஒரு பானை.

varamoortheeswarar temple

இதில் இருக்கும் மீனின் முகத்திற்கு முன்பே அது ஏதோ ஒன்றை தாங்கி செல்வது போல இருக்கிறது. அது விதையும், கருவையும் ஒன்றாகிய உயிராக இருக்க வேண்டும். அந்த உயிரை மீன் தாங்கி சென்று ஒரு பானையில் வைக்கிறது. அது பானை என்பது கருவறையை குறிக்கிறது.

ஆக இந்த சிற்ப அமைப்பு ஜோதிட சித்தாந்தத்தில் வரும் சர்ப்பதோஷமாக இருக்கும் பட்சத்தில், இந்த சிற்பம் மறைமுகமாக குழந்தை பிறப்பின் ரகசியத்தையே குறிப்பதாக இருக்கவேண்டும். இதில் இருக்கும்மீன் சிற்பம் கூட, ஒரு வகையில் குழந்தை பிறப்பையே குறிக்கிறது. மச்சமுனி என்னும் ஒரு சித்தர் இருந்தார். இவர் மீனில் இருந்து பிறந்ததாக வரலாறு கூறுகிறது. இவருடையா அடையாளமாக மீனே இருக்கிறது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் மச்சமுனி சித்தரை வழிபட சொல்வதும் உண்டு. ஆக மீனும் குழந்தை பிறப்பையே சொல்கிறது.

அடுத்து இந்த சிற்பத்தில் இருக்கும் பானை. சங்ககாலத்தில் இறந்தவர்களை பானையில் உட்கார வைத்து, மண்ணில் புதைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். உடலில் இருந்து உயிர் இறந்தாலும், ஆத்மா இறப்பதில்லை என்றும், ஆத்மாவிற்கு அழிவில்லை என்றும், அவை நட்சத்திரங்களாக வானில் இருக்கிறார்கள் என்றும், இறந்துபோனவர்களின் ஆன்மா மீண்டும் இந்த பானையில் வரும்என்கிறா ஒரு நம்பிக்கை நம்மிடையே இருப்பதுண்டு. இந்த மீனானது அந்த ஆத்மாவை ஒரு உயிராக மாற்றி, அதை கருவறை என்னும் பானையில் வைப்பதாக இந்த சிற்பம் இருக்கிறது.

ஆக, இந்த சிற்பம் ஒரு கருத்தரித்தல் முறையை தான் மறைமுகமாக சொல்கிறது என்றால், அதை எப்படி 1000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுப்பிடித்திருக்க முடியும். 18ம் நூற்றாண்டில் தான் ஒரு பெண்ணுக்கு கருத்தரித்தல் என்பது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிவியல் கண்டறிந்தது.

நுண்ணூக்கியை வைத்து இன்று கண்டறியப்பட்டதை எப்படி தமிழன் அன்று சிலையாக வடித்திருந்தான் என்பது அறிவியலையும் ஆச்சரியப்படவைக்கும் மிகப்பெரிய கேள்வியே. இந்த கோயிலில் உள்ள இந்த சிற்பத்தின் கருத்து ஒரு யூகம் தானே அன்றி இதுதான் என்பதில்லை. இந்த விளக்கம் எந்த நம்மிக்கையையும் புண்படுத்த அல்ல.

இன்றைய அறிவியலால் இன்று கண்டறியப்பட்ட எவ்வளவோ காரியங்களை சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள தமிழன் இந்த சிலையிலும் ஏதாவது குறிப்பிட்டிருக்கலாம் என்பதே யூகம். இது மட்டும் அல்ல குண்டடம் வடுகநாத சுவாமி கோயிலில் கருவறையில் இருக்கும் குழந்தையில் பல்வேறு நிலைகளை சிற்பமாக வடித்துள்ளனர். இக்கோவிலுக்கு, குழந்தை வரம் வேண்டுபவர்கள் வணப்படவேண்டிய கோயில். அதேபோல் சிறுகரும்பூரில் உள்ள சுந்தர காமாட்சி கோயில் சோழர் காலத்து கோவிலாகும். இந்த கோயிலில் ஒரு இடத்தில கருவறையில் இருக்கும் குழந்தையில் சிற்பம் ஒன்று இருக்கிறது.

இன்று ஸ்கேன் செய்து கருவறையில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போல இருக்கும் இந்த சிலை வடித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிறது.

குழந்தை வரத்திற்கு பெயர்பெற்று கோயில்கள் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் இதுபோல ஏதாவதொன்று அதிசய சிலைகளும், சிற்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதை ஆன்மீகமாக நினைத்தாலும், அறிவியலாக நினைத்தாலும் இது இருப்பது நம் தமிழ்நாட்டில் என்பதில் என்றும் பெருமை கொள்வோம்.

இதுபோல உங்கள் ஊரிலும் அதிசய சிற்பங்களும், சிலைகளும் இருந்தாலும் அதை Comment Box-ல் பதிவிடுங்கள்.



1 Comment

  • சிறப்பான மிக விரிவான தமிழனின் அற்புதபடைப்பு

Comments are closed.