• September 13, 2024

விழித்துக்கொள் தமிழா! எது உண்மையான தமிழ் புத்தாண்டு? ஆராய்ச்சி கட்டுரை

 விழித்துக்கொள் தமிழா! எது உண்மையான தமிழ் புத்தாண்டு? ஆராய்ச்சி கட்டுரை

எந்த ஒரு செயலையும், தெளிவாக, விரிவாக, அறிவாக செய்யும் நம் தமிழர்கள், ஒரு விஷயத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு மேலாக குழம்பியிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை ஒன்றா? அல்லது தை ஒன்றா? என்பதுதான்.

உண்மையில், எது தமிழர்களின், தமிழ் வருடப்பிறப்பு? அதை ஆராய்வதுதான், இந்த கட்டுரையின் நோக்கம். அனைத்தையும், நம் முன்னோர்கள்தான், கண்டுபிடிக்க வேண்டுமா? அப்பொழுது என்றால், நமக்கென்ன வேலை? என்கின்ற, அந்த கேள்வி குறிக்குள் நாம் சிக்கிக் கொண்டதால்தான் சமீப நூறு வருடத்திற்கு முன்பு, தமிழை இந்த உலகறிய செய்த பல தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், இந்த உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்பினார்கள்.

இதுவரை, மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், தமிழர்களின் வருடப்பிறப்பு சித்திரை ஒன்றா? தை ஒன்றா? என்பதை, இங்கு விரிவாக காண்போம்.

சித்திரை 1

இன்றைய காலகட்டம் வரை, நம் தமிழர்கள் அனைவரும், எண்ணிக் கொண்டிருப்பது என்ன? சித்திரை ஒன்றுதான், தமிழ் வருடப்பிறப்பு என்பது. சித்திரை ஒன்று, தமிழ் வருடப் பிறப்பு ஏற்றுக் கொள்பவர்கள் வைக்கும் உதாரணங்கள் என்ன என்பதை நாம் இங்கு பார்க்க வேண்டும்.

சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது என்றும், சூரியன் முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழையும் மாதம் சித்திரை மாதம் என்றும், இலக்கிய ஆதாரங்களாக “சித்திரையே வா, நம் வாழ்வில் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு இருக்கிறது என்றும், சோழர்கள் கால கல்வெட்டிலும், கொங்கு பாண்டியர்களுடைய கல்வெட்டுகளிலும், அறுபது ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்றும், சித்திரையில் புதிதாக பிறக்கும், அந்த வருடப் பிறப்பைதான், தமிழர்கள் காலம் காலமாக கொண்டாடி வருகிறார்கள் என்று, அதை ஆதரிப்பவர்களின் கருத்துக்கள் இருக்கின்றன.

அவ்வளவு ஏன்? இந்த கருத்தை, மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதா அவர்கள், நேரடியாக கூறியிருக்கிறார். இவ்வளவுதான், தமிழ் புத்தாண்டு, சித்திரையில் வரும் என்பதற்காக, அவர்கள் சொன்ன கருத்தும், ஆய்வு மேற்கோள்களும்.

நாம் நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும்! ????

ஒரு ஆங்கிலேயனை பார்த்தாலே, அவன், ஆங்கிலேயன் என்றும், ஜப்பானில் இருக்கும் ஒரு மனிதனின் உருவத்தை பார்த்தாலே, அவர் நம் நாட்டுக்காரர் இல்லை என்றும் தெரிந்துவிடும். அவ்வளவு ஏன்? ஒருவர் பேசும் மொழிய வைத்து, அவருடைய தோற்றத்தை வைத்து, அவர்கள் தமிழர்கள் இல்லை என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும், புரிந்து கொள்ள முடியும்.

அப்படி இருக்கும் பொழுது, தமிழ் வருடப்பிறப்பு என்று சொல்லி விட்டு, சமஸ்கிருத பெயர்களை, வடநாட்டு பெயர்களை, நமக்கு காண்பிக்கும் பொழுது, நமக்கு ஏன் அது புரியவில்லை? அது தமிழ் வருடப்பிறப்பு இல்லை என்று.

இப்பொழுது நீங்கள் பார்க்கும் இந்த அறுபது பெயர்களும், சமஸ்கிருத பெயர்கள். முன்னோர்கள் இதுதான் தமிழ் வருடப்பிறப்பு என்று வைத்திருந்தால், இதில் ஏன் தமிழ் பெயர்கள் ஒன்றுகூட இல்லை.

ஏனென்றால், காலம் காலமாக, இத்தனை வருடமாக, நம் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அவர்களுடைய அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, என நம் முன்னோர்கள், கடந்த சில வருடங்களாக, இதுதான் தமிழ் வருடப்பிறப்பு என்று சொல்லி, சொல்லி நம்மை வளர்த்ததால், நாம் அதற்குள்ளே சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்பொழுது, உண்மையான தமிழ் வருடப்பிறப்பு எது என்கின்ற அந்த கேள்விக்கு, நாம் விசாரிக்க வேண்டாம். ஏனென்றால், ஏற்கனவே தை ஒன்றுதான், தமிழ் வருட பிறப்பாக இருக்கும் என்பதை, பல தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும், பல கருத்துக்களை, முன் வைத்திருக்கிறார்கள். நாம், அதையும், கொஞ்சம், இங்கு, தெரிந்து கொள்ள வேண்டும்.

தை 1

காலத்தைக் கணிப்பதில், தமிழருக்கு நிகராக எவரும் இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், ஒரு நாளை மட்டுமல்ல, ஒரு நிமிடத்தை மட்டுமல்ல, ஒரு வினாடியைக் கூட அணு அணுவாக கணித்திருக்கிறார்கள், நம் தமிழர்கள்.

ஒரு ஆண்டை, ஆறு பருவங்களாகப் பிரித்தார்கள். என்னென்ன தெரியுமா? தமிழ் மாதங்களின் படி வருவோம். தை – மாசியை, இளவேனில் என்றும், பங்குனி – சித்திரையை, முதுவேனில் என்றும், வைகாசி – ஆணியை, கார் என்றும், ஆடி – ஆவணியை, கூதிர் என்றும், புரட்டாசி – ஐப்பசி முன்பனி என்றும், கார்த்திகை – மார்கழியை பின்பனி என்றும், பனிரெண்டு மாதங்களை, ஆறு பருவங்களாக, பிரித்து வைத்திருந்தார்கள்.

இதில், நாம் ஒன்றை, கவனிக்க வேண்டும். சித்திரை மாதத்தில், வெயில், அதிகபட்ச உக்கிரத்தை, அடைந்திருக்கும். அக்னி வெயில், என்று சொல்லப்படும், அதிகபட்ச வெப்பத்தை, சூரியன்அந்த மாதத்தில், கக்கிக் கொண்டிருக்கும். அதனால்தான், அந்த மாதத்தின் பெயரை, முதுவேனில் என்று வைத்திருக்கிறார்கள். அதாவது, அதிகமான வெயிலை, தாங்கக்கூடிய மாதம்.

அதே போல், தை மாதத்தில், வெயில் ஆரம்பிக்கும் மாதம். அது அதிகப்படியான வெப்பம் இருக்காது. அதனால்தான் அதை இளவேனில் என்று அழைத்தார்கள்.

பண்பாட்டு பெருமை கொண்ட மற்ற பல இனத்தவர்கள், தங்களுடைய புதுவருடத்தை, தங்களுடைய புது வாழ்வை, இளவேனது காலத்தில்தான் ஆரம்பித்தார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சுரியர்களும், இன்னும் பல கோடியின மக்கள், தொன்மையான பண்பாட்டை, இன்று வரை பாதுகாக்கும் மக்கள், பின்பற்றும் மக்கள், இளவேனில் காலத்தில்தான், தங்களுடைய புது வருடத்தை கொண்டாடி வருகின்றனர்.இப்படி இருக்கும் பொழுது, பின்னாளில் வந்த ஆரியர்கள், ஒரு ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.

இங்கு நாம் ஒன்றை, தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பழந்தமிழகத்தில், ஆண்டு தொடக்கம் என்பது, தை மாதமாகத்தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு, ஆவணி மாதம்தான், முதல் மாதமாக கருதப்பட்டது. அதன் பிறகு, சித்திரை மாதம்தான், ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. ஆம்.

நம்முடைய பழமொழிகளை, நாம் இங்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்

“தை பிறந்தால், வழி பிறக்கும். தை மாத நெய்மழை”. இவ்வாறான பழமொழிகள், இன்றும் தமிழ் மக்களுடைய மனதில் இருந்து வருகின்றன. வாழையடி, வாழையாக இந்த பழமொழி நமக்குள் ஊறி இருக்கின்றன.

சித்திரை ஒன்று, அதாவது April 14 அன்று, தமிழ்நாட்டில் அந்த நாளை மக்கள் வெகுவாக கொண்டாடவில்லை. அந்த நாளை, ஒரு விடுமுறை நாளாக மட்டும்தான், நாம் கடந்து சென்றிருக்கிறோம்.

ஆனால், தை ஒன்றை கொஞ்சம் நினைத்து பாருங்கள். தமிழ்நாடு முழுக்க தை ஒன்று கொண்டாடப்படுகிறது. ஏனென்றால், அது உழவனுக்கான மாதம், விவசாயிகளுக்கான மாதம், சங்க இலக்கியங்களும், நூல்களும், புலவர்களும், தமிழ் மாதங்களில், இரண்டு மாதத்தைப் பற்றித்தான், அதிகமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒன்று, தை மற்றொன்று மார்கழி.

தை மாதம், எவ்வளவு முக்கியமான மாதம் என்பது, நம்முடைய அனைத்து விவசாயிகளுக்கும், புரிந்திருக்கும். ஆடிப்பட்டம் தேடி, விதைத்து, அதாவது, ஆடியில் விதை நட்டு, அதை, தையில் அறுவடை பார்ப்பார்கள். அந்த அறுவடையைதான், நம் தமிழ் மக்கள், சூரியனுக்கு படைக்கிறார்கள்.

தை முதல் நாள் தான், தமிழ் வருடப் பிறப்பாக இருக்கும் என்பதற்கான, ஒரு சில இலக்கிய பாடல்களை, இங்கு நீங்கள் பார்க்க வேண்டும்.

தை திங்கள், தன்கையும் படியும் – நற்றினை
தை திங்கள், தன்னிக தருணம் – குறுந்தொகை
தைத்திங்கள் தன்கயம் போல் – புறநானூறு
தையல் நீராடி தவம் தலைப்படுவாயோ – கலித்தொகை வழியாக, தை மாதம் எவ்வளவு முக்கியமான மாதம்? எவ்வளவு முதன்மையான மாதம் என்பதை, இங்கு நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

Malaysia நாட்டில் வாழ்கின்ற தமிழ் தை முதல் நாளையே, தங்களது புது வருடமாக கொண்டாடி வருகிறார்கள். விஞ்ஞானி Doctor வ. மாசிலாமணி என்பவர், தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்ற தலைப்பில், ஒரு நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில், கிராமத்து வானியல் முறைப்படி பார்த்தாலும், தைத்திங்கள் மாதம்தான், எல்லா வகையான புத்துணர்ச்சியைத் தருகிறது என்றும், அந்தக் காலக் கணக்கீடு, சரியாக இருக்கிறது என்றும், அதனால்தான், மார்கழி மாதத்தின் கடைசி நாளை, எனவும், சோம்பலும், கழிய வேண்டும் என்பதற்காகத்தான், அதை போகியாக, கொண்டாடி இருக்கிறார்கள் என்று, அவர் தெளிவாக குறிப்பிடுகிறார்.

எப்படி இன்று நாம், டிசம்பர் 31 அன்று, நம் அனைத்து பிரச்சனையும் போக வேண்டும். ஜனவரி ஒன்று, புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அது போல், துன்பங்கள் போக வேண்டும், பழமை போக வேண்டும், சோம்பல் கழிய வேண்டும், என்றெல்லாம் குறிப்பிட்டு, அந்நாளை போகியாக வைத்திருந்து, தை முதல் நாளை, சூரியனுக்கு நன்றி செலுத்தி, பொங்கலாக வைத்து, அதை இருக்கிறார்கள்.

அறிவியல் படியும், நாம் இங்கு ஒன்றை பார்க்க வேண்டும். சூரியன் தென்கோடி சென்று, நின்று, திரும்பி நம்மை எல்லாம் நோக்கும் நாள் தான், உலக உயிர்கள் புத்துணர்ச்சி பெறும் நாள். அந்த நாள் தான், ஜனவரி 14. ஆக, இந்த நாளை, முதல் நாளாகக் கொண்டு துவங்குவதுதான், சரியான வழிமுறையாக இருக்கும்.

அறிவிப்பும் – அவமதிப்பும்

2008 ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த திரு. கருணாநிதி அவர்கள், தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார். காலம் காலமாக தமிழ் மக்கள் நம்பி வந்த சித்திரை ஒன்று தமிழ் வருடப் பிறப்பு இல்லை. தை ஒன்றுதான் தமிழ் வருடப் பிறப்பு என்று அவர் தீர்க்கமாக சொல்வதற்கும், அந்த அரசாணையைப் பிறப்பிப்பதற்குப் பின்னால், அவர் எவ்வாறு உழைத்திருக்க வேண்டும்? எவ்வாறு ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும்?

நாளை ஒரு மனிதர் வந்து கேள்வி கேட்டாலும், அதற்கான ஆதாரத்தை, ஒரு முதலமைச்சராக, ஒரு கலைஞராக, அவரது வெளிப்படுத்த வேண்டும்.

ஆக, இவ்வளவு குறிப்புகள், இவ்வளவு இலக்கிய பாடல்கள், சங்ககால நூல்கள், இதையெல்லாம் தவிர, மறைமலை அடிகளார், தேவநாய பாவனார், பெருஞ்சித்திரனார், பேராசிரியர நமச்சிவாயர், இமு சுப்பிரமணியனார், மு வரதராசனார், இறைக்குருவனார், வ வேம்பையனார், பேராசிரியர் தமிழண்ணல், வெங்காளூர் குணா, கதிர், தமிழ்வாணனார், சின்னப்பத்த திருவிக, பாரதிதாசனார், கா சுப்பிரமணியனார், விசுவநாதர், வேங்கட சாமியார், சோமசுந்தர பாரதியார் என பல புலவர் குழுக்கள், தமிழறிஞர்கள் என ஐநூறுக்கும் அதிகமான தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி, விவாதித்து, ஆரியர்களின் திணிப்பான, சித்திரை வருடப் பிறப்பை விடுவித்து, தை ஒன்றை, தமிழாண்டின் துவக்கம் என்பதை, அவர்கள் முடிவு செய்து அறிவித்ததால்தான், கலைஞர் அவர்கள், தை ஒன்றை, தமிழ் வருடப் பிறப்பாக அறிவித்தார்.

இந்த விஷயம், அரசியலுக்கு அப்பாற்பட்டது. அரசியல் காரணங்களுக்காக, சித்திரை ஒன்றும், தை ஒன்றும், இங்கு விளையாடவில்லை. நமக்கு, எது வரலாறு கூறுகிறதோ, அதைத்தான், அவர், அங்கு கூறியிருந்தார். நடைமுறையும் படுத்தினார்.

ஆனால், நாம், இதை, ஒரு அரசியல் விளையாட்டாக எண்ணி, அதை, புறம் தள்ளிக் கொண்டிருக்கிறோம். உண்மையை உணர்ந்த, எந்த ஒரு தமிழனும், தை ஒன்றைத்தான், வருடப் பிறப்பாக, எண்ணிக் கொண்டிருப்பான்.

ஒரு காம கதை

ஆரியர்களின், இந்த, அறுபதாண்டு பெயர்களை விடுங்கள். அந்த, அறுபது ஆண்டுகள், எப்படி உருவாகி இருக்கின்றன? என்பதற்கு, ஒரு கதை சொல்கிறார்கள். அந்தக் கதை, ஒரு காமக் கதை.

இந்த அறுபதாண்டு சுழற்சி முறையை, உருவாக்கியதே, கடவுள்தான் என்று, அவர்கள் சொல்கிறார்கள். அது, எப்படி தெரியுமா? புராண கதையின் படி, ஒரு காலத்தில், நாரத முனிவரின், காமம் மேலோங்கி, அவர் அலைந்த பொழுது, அவருக்கு, கிருஷ்ண பகவானின் நினைவு வருகிறதாம்.

அவர், நேராக, அவர் முன்பு சென்று, “கிருஷ்ணா, எப்பொழுதும், பெண்களோடு கொஞ்சி, இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு பெண்ணை தந்து, எனது, காம இச்சையை தீர்த்து வைக்க அருள் புரிய வேண்டும்” என்று அவர் வேண்டுகிறார்.

அதற்கு கிருஷ்ண பரமாத்மா, “நாரதரே, எந்த ஒரு பெண்ணின் மனதில், நான் இல்லையோ, அந்தப் பெண்ணை, நீயே அனுபவித்துக்கொள்” என்று அவர், ஆறுதல் மொழி கூறினாராம். உடனே நாரதர், ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பார்க்கிறாராம்.

அனைத்து பெண்கள் மனதிலும், கிருஷ்ணர் மட்டுமே இருக்கிறாராம். இதனால், ஏமாற்றமும், ஏக்கமும் அடைந்த அந்த நாரதர், தனது மானம், வெட்கத்தை எல்லாத்தையும் விட்டுவிட்டு, “கிருஷ்ணா, எல்லா பெண்கள் மனதிலும், நீங்கள்தான் இருக்கிறீர்கள். என்னை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் எனக்கு அருள் புரியுங்கள்” என்று கூற, அதற்கு பரிதாபப்பட்ட கிருஷ்ணனும், நாரதரை ஒரு பெண்ணாக்கி, அவரோடு கலந்து, அறுபது குழந்தைகளைப் பெற்றாராம்.

அந்த அறுபது குழந்தைகள்தான், இன்று பிரபாவ முதல், அட்சய வரையிலான, அறுபது ஆண்டுகள். இதுதான், இந்த அறுபது ஆண்டு பெயர்களுக்கான காரணமும், அந்த அறுபது ஆண்டுகள் உருவான விதமும், இதில் ஒன்றுகூட, தமிழ் பெயரல்ல.

அறிவு – அறிவியல்

அறிவுக்கும், அறிவியலுக்கும், ஒட்டிப் போகாத, இந்த ஆண்டு முறைய, எப்படித் தமிழன் பிடித்திருக்க முடியும். இது ஒருபுறம் இருக்க, இந்த அறுபதாண்டு, வடமொழி பெயர்களுடைய, அந்த அர்த்தத்தை, நாம் பார்க்கும் பொழுது..

இதில் வருகின்ற, இருபத்தி மூன்றாவது ஆண்டான, விரோதி என்ற ஆண்டிற்கு, எதிரி என்று பொருள். முப்பத்தெட்டாவது ஆண்டான, குரோதி என்ற ஆண்டிற்கு, பழிவாங்குபவன் என்று பொருள். முப்பத்தி மூன்றாவது ஆண்டின் பெயரான, விகாரி என்ற பொருளுக்கு, அழகற்றவன் என்று பொருள். அதே போல், ஐம்பத்தி ஐந்தாவது ஆண்டான, தும்மதி என்ற ஆண்டிற்கு, கெட்ட புத்தி என்று பொருள். இப்படிப்பட்ட தவறான எதிர் எண்ணங்களை உருவாக்கக்கூடிய பெயர்களை, தமிழன் எப்படி வைத்திருப்பான்?

ஆக, நாம் நன்றாக யோசிக்க வேண்டிய ஒன்று, எளிதான ஒன்று, ஒன்றே ஒன்றுதான். தை ஒன்றுதான், நம்முடைய வருட பிறப்பாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், அன்றைய நாட்களில், தமிழனுடைய மகிழ்ச்சி பெருகுகிறது. விவசாயம் பெருகுகிறது. மக்கள் மனதில், மகிழ்ச்சி வெள்ளம் பெறுகிறது. காலம் காலமாக, அதை நாம் கொண்டாடி வருகிறோம்.

நம் கொண்டாட்டம்தான், நம்மளுடைய முதல் ஆண்டாக இருந்திருக்கும் நினைவில் வைத்துக் கொண்டு, தமிழருக்கு எதிரான சூழ்ச்சிகளில், நாம் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையை, பாதுகாக்கும் பொருட்டு, நாம் அனைவரும், தை முதல் நாளைதான், தமிழ் வருடமாக கொண்டாட வேண்டும்.

இதைத்தான், பாவேந்தர் பாரதிதாசன், சாட்டையடி பதிவாக, பாடி இருக்கிறார்.

“நித்திரையில் இருக்கும் தமிழா

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”

“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழருக்கு

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

தமிழ் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல, தை முதல் நாளே!

பகுத்தறிவு என்பது கடவுளை மறுப்பது மட்டுமல்ல. பகுத்து அறிவது. ஆக பகுத்தறிந்து தமிழர்கள் உண்மைய புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியலைப் பற்றி எண்ணாமல், நம் தமிழரின் வரலாற்றை மட்டுமே எண்ணி, அந்த நாளை புது வருடமாக இனி கொண்டாடுவோம்.

உங்களுக்கு பல மாற்று கருத்துக்கள் இருக்கலாம். கோபங்கள் இருக்கலாம். அது அனைத்தையும், நீங்கள் கீழே Comment Box-ல் பதிவிடுங்கள்.



3 Comments

  • முன்னால் முதல்வர் கலைஞர் அவர்கள் சரியான முறையில்தான் தமிழ் புத்தாண்டு தை முதல் நாள் என்று….
    சட்டமாக்கினார் என்பது புரிகிறது

  • அருமையான பதிவு தகவல்..நடைமுறையில் உள்ள அறுபது ஆண்டுகள் ஆரியர்களின் திணிப்பு என்பது…

  • What you have given is correct.Agriculture is the basic one for human life .After harvest only he will be happy.The celebration will start.This is the world wide one.This is science.so Thai only is the New year not chithirai.

Comments are closed.