
karupasami
நம் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியமான பகுதியில் ஒரு வித்தியாசமான வழக்கம் இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள சில கிராமங்களில் வீட்டு வேலை செய்வதற்கோ, மாடு மேய்ப்பதற்கோ ஆட்களை அமர்த்தினால், அவர்கள் சித்திரை மாதம், ஒரு குறிப்பிட்ட நாளில்,வேலையை விட்டு சொல்லிக் கொள்ளாமலேயே நின்று கொள்ளலாம். அதற்கு ‘சித்திரை விடுதி’ என்று பெயர். அதாவது சித்திரை அன்றை, ஒருவன் தன்னைத்தானே விடுதலை செய்து கொள்ளலாம். இப்படி ஒரு எழுதப்படாத சட்டம், மக்கள் வரலாறாக, அதே சமயம் கோயில் சார்ந்ததாகவும் இருக்கிறது.
அந்த பகுதி எது தெரியுமா?
இருங்குன்றம், ஓங்கிருங்குன்றம், மாலிருங்குன்றம், திருமாலிருஞ்சோலை, திருமால்குன்றம், இருஞ்சோலைமலை, சிம்மாத்திரி, கேசவாத்திரி, இடபமலை, விடைமலை என்று வரலாற்றில் அழைக்கப்பெற்ற இன்றைய அழகர் கோயில். அந்த ஒரு குறிப்பிட்ட நாள் எது தெரியுமா? அழகர் ஆற்றில் இறங்கும் நாள்.
தமிழக கோயில் வரலாற்றில் வேறு எங்கும் இல்லாத பல விஷயங்கள் நம் மதுரை கள்ளழகர் கோயில் இருக்கிறது.

இந்தியா முழுக்க ஐப்பசியில் தீபாவளி என்றால்,மதுரை மக்களுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அது தான் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். பத்து நாட்களுக்கு மேலாக மதுரை மட்டும் இல்லாமல், உலகத்தின் பல பகுதியில் இருந்து தமிழர்கள் மற்றும் சுற்றுலா வாசிகள் கலந்து கொண்டு கோலாகலமாக கொண்டாடும் அந்த திருவிழாவின் முக்கிய கதாநாயகனாக இருக்கும் கள்ளழகரை சுற்றி பல கேள்விகள் இருக்கின்றன. பல வரலாறும் இருக்கின்றன.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowஅதிலும் குறிப்பாக சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படும் இங்கு இருக்கும் 18ம் படி கருப்புசாமி.
யார் இந்த 18ம் படி கருப்பு? அழகர் கோயிலின் ராஜகோபுர கதவு நிரந்தரமாக அடைக்கப்பட்டு இருப்பதன் காரணம் என்ன? ஆண்டு ஒருமுறை மட்டும் ஏன் கதவை திறக்கிறார்கள்? அப்படி திறக்கும் போது சக்கரத்தாழ்வார் மட்டும் ஏன் செல்கிறார்? இதற்கு பின்னால் இருக்கும் தத்துவம் என்ன? பெருந்தெய்வமான அழகரை, எப்படி சிறுதெய்வமான கருப்புசாமி காவல் காப்பதை எப்படி மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்?
இப்படி பல கேள்விகளுக்கான பதில் தான் இந்த பதிவு!
முதலில் கருப்புசாமிக்கு சொல்லப்படும் நாட்டார் கதையை தெரிந்துகொள்வோம்.

அழகர் மலையில் இருக்கும் அழகர் உற்சவ சிலையை எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஏனென்றால் அந்த சிலையானது அபரஞ்சி தங்கத்தினால் உருவானது. எத்தனை முறை பார்த்து வணங்கினாலும் மறுபடியும், மறுபடியும் பார்த்து வணங்க வைக்கும் அபூர்வமான சிலை அது.
இந்த உலகத்தில் இவருடைய அழகுக்கு நிகரான உற்சவ மூர்த்திகள் இல்லை என்றே சொல்லலாம். அவ்வளவு அழகான அந்த சிலையை, அதை சிலையின், அந்த சக்தியை அங்கு தரிசிக்க வந்த ஒரு மலையாள மன்னன், இந்த பாண்டிய நாட்டில் இருந்து தன் தேசத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று ஒரு முடிவெடுத்தான்.
ஆனால் அழகரோ ஒரு கோட்டையில் இருப்பது போல, அங்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தார். நாடு திரும்பிய அந்த மன்னன், அழகரை கவர்ந்து வர 18 மந்திரவாதிகளிடம் அந்த வேலையை ஒப்படைத்தான்.
பதினெட்டு மந்திரவாதிகளும், தன் மன்னனுடைய கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை புறப்பட்டார்கள். அந்த 18 பேருக்கும் காவலாக மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும், வெள்ளை குதிரை மீதேறி அவர்கள் முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே இவர்கள் அழகர்மலைக்கு வந்தார்கள்.
அழகர் மலையை அடைந்த அந்த காவல் தெய்வம், அழகரின் அழகில் தன்னையே மறந்து மயங்கி நின்றது. அதே சமயத்தில் 18 மந்திரவாதிகளும் அழகரின் சக்தியை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் இறங்கினார்கள்.

யார் கண்ணுக்கும் தெரியாமல் இருக்கு ஒரு வித மந்திர மையைப் பயன்படுத்தினார்கள். அந்த மையைக் கண்களின் இமைகளில் பூசிக்கொண்டால், அவர்கள் உருவம் மறைந்துவிடும். அப்படித் தந்திரமாக மறைந்திருந்து, அழகரின் உருவத்தில் இருந்த சக்தியை திருட முயன்றார்கள்.
இவர்களுடைய திட்டத்தை முறியடிக்க அழகரே, கோயில் பட்டர் ஒருவரின் கனவில் தோன்றி மந்திரவாதிகள் குறித்து எச்சரித்து கொடுத்திருக்கிறார். கண்விழித்த பட்டரோ, மந்திரவாதிகளைப் பிடிக்க ஒரு காரியத்தை செய்ய முடிவெடுத்தார். மறுநாள் காலை இறைவனுக்கு வைத்து படைக்கும் பொங்கலில் அளவுக்கு அதிகமாக மிளகு சேர்த்து ஆலயம் முழுவதும் அங்கே வைத்தார்.பொங்கலின் வாசனையால் ஈர்க்கப்பட்ட மந்திரவாதிகள், அதை எடுத்து சாப்பிட்டார்கள்.
அடுத்த கணம், அதிகமாகச் சேர்க்கப்பட்டிருந்த மிளகினால் உண்டான காரம் தாங்காமல் கண்ணீர் விட்டு அவர்கள் அழ, பிறகு கண் இமைகளில் இருந்த மை அழிய, அவர்களின் மாய சக்தி மறைய, அவர்களின் உருவமும் வெளிப்பட, உடனே, அங்கிருந்த காவலர்கள், அவர்களைப் பிடித்துக் கொன்று விடுகிறார்கள். பிறகு அவர்கள் ஒவ்வொருவரையும் களிமண்ணால் படிகள் செய்து ,படிக்கு ஒருவராக பதினெட்டு படிகளிலும், அந்த பதினெட்டு பேரையும் புதைத்தார்கள்.
அவர்களோடு துணையாக வந்திருந்த கருப்பசாமி எனும் தெய்வம்
அழகரின் அழகில் மயங்கியதால், நான் இந்தக் கோபுர வாசலில் இருந்து கோவிலை காவல் காக்கிறேன்’ என சொல்ல, அதன் அடிப்படையில் கருப்பசாமியை அவர்கள் விட, அதன் பின்னர் கருப்பசாமி அந்த கதவிலேயே இருந்து காவல் காத்து வருகிறார். அதற்கு கூலியாக அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள், பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இது தான் 18ம் படி கருப்பு சாமி பற்றி சொல்லப்படும் நாட்டார் கதை.
இன்று பல மக்களுக்கு குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் இருந்து, காத்து வரும் 18ஆம் படி கருப்புசாமி பற்றிய இந்த நாட்டார் தெய்வ கதை, கண்டிப்பாக உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
பதினெட்டாம்படி கருப்பு பற்றியும் கள்ளழகரை பற்றியும், கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்பே தொ பரமசிவம் அவர்கள் செய்த ஆய்வு பல உண்மைகளையும் பல வரலாற்று நிகழ்வுகளையும் வெளியுலகத்திற்கு கொண்டு வந்தது. அவருடைய ஆராய்ச்சியின் அடிப்படையில்…
இக்கோயிலில் திருட வந்த 18 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல. எனவே தான் அவர்கள் கதையில் “மலையாள நாட்டவர்கள்” என்றும், “அயோத்தி நாட்டவர்கள்” என கோயில் கதைப்பாடலிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதேபோல் வந்தவர்கள் படையெடுத்து வரவில்லை. சிறிய எண்ணிக்கையில் அதாவது 18 பேரும் தந்திரமாக கோவிலுக்குள் நுழைந்த காரணத்தால், அவர்கள் திருட வந்ததாக கருதப்பட்டுள்ளது.

பிறகு 18 பேரையும் தந்திரமாக பிடித்திருக்கிறார்கள். கோயிலுக்கு வெளியே மக்கள் பெருங்கூட்டமாக இருந்து அவர்களை மடக்கிப் பிடித்திருக்க வேண்டும். எனவே, தப்பிக்கும் முயற்சிக்கோ சண்டையிடுவதற்கோ அவர்களுக்கு வாய்ப்பில்லாது போயிருக்க வேண்டும். அதே போல் இறைவனின் “சக்தி”யை திருட வந்ததாக கதையில் சொல்லப்படும் செய்தி உண்மையில்லை.
உண்மையான காரணம் என்னவென்றால், அழகர்கோயிலில் கொப்பரை கொப்பரையாக தங்கம் இருந்திருக்கிறது. ‘அரங்கன் சொத்து, அழகர் அங்கவடிவுக்கும் காணாது’ என்ற ஒரு சொலவடை உண்டு. அந்த அளவுக்கு அழகருக்கு ஆபரணங்கள் இருந்திருக்கிறது. அதை கேள்விப்பட்டே அவர்கள் வந்திருக்கிறார்கள்.
இக்கோயிலில் 2 1/2 அடி உயரத்தில் அபரஞ்சி எனும் அரிய தங்கத்தாலான திருமால் சிலையொன்று “ஏறுதிருவுடையாள்” என்ற பெயரோடு இன்றும் உள்ளது. மேலும் இந்த சிலையை திருடும் எண்ணத்திலும் அவர்கள் வந்திருக்க வேண்டும். ஆக, இந்த மொத்த திருட்டையும் மக்களோ அல்லது மக்கள் நம்பும் கருப்புசாமியோ தடுத்திருக்க வேண்டும்.
அதனால் தான் இன்றளவும் திருவிழாவுக்காக அழகர் வெளியே செல்லும்போது பதினெட்டாம்படிக் கருப்பனிடம், அவர் என்னென்ன நகைகள் அணிந்து செல்கிறார் என்று பட்டியல் வாசித்துக் காண்பித்தும் , அதே போல மீண்டும் திரும்பி வரும் போது அதே நகைகள் வந்திருக்கின்றனவா என்பதையும் உறுதிசெய்தே உள்ளே செல்ல வேண்டும். இன்றும், ஆலயம் மூடியதும் சாவியைப் பதினெட்டாம்படிக் கருப்பின் சந்நிதியில் கொண்டு வந்து வைக்கும் வழக்கம் இருக்கிறது.
பொதுவாக தமிழகத்தில் கருப்புசாமி இல்லாத கிராமங்களே இருக்காது. தமிழ் மக்களோடு அவ்வளவு நெருக்கமான காவல் தெய்வமாக, ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரிலும் இருக்கும் கருப்பு சாமி, பொதுவாக தலையில் பெரிய தலைப்பாகையோடு, நின்ற கோலத்தில் இருப்பார். அதே போல் நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, ஓங்கிய ஒரு கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை மற்றும் , முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை அணிந்துகொண்டு காட்சி தருவார்.

இவ்வாறாக இருக்கும் கருப்பு சாமிக்கும், அழகர் கோயில் கருப்புசாமிக்கும் என்ன வித்தியாசம் என்றால், இங்கு இருக்கும் கருப்புக்கு உருவம் கிடையாது. இங்கு இருக்கும் மிகப்பெரிய கோபுர கதவே கருப்புசாமியாக மக்கள் வழிபடுகிறார்கள்.
இந்த கோபுர கதவை பற்றி ஆராயும் போது, கிபி 1608-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த கதவு அடைக்கப்படவில்லை. அதாவது இன்று முழுமையாக அடைக்கப்பட்டு இருக்கும் 18ம்படி கருப்பு இருக்கும் இந்த கதவு மக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. தெய்வமும் அதன் வழியே சென்று இருக்கிறது. இந்த காலகட்டத்தில் 18ம் படிவாசல் என்ற தொடர் எங்குமே பதிவு செய்யப்படவில்லை. ஆனால் 100 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு வீட்டு பட்டய நகல் ஓலையில் “பதினெட்டாம்படி வாசல்” என்ற தொடர் காணப்படுகிறது. மேலும் இந்த சமயத்தில் தான் மதுரையின் அரசியல் தலைமை பலவீனமாக இருந்தது.
நாயக்க மன்னரான விசயரங்க சொக்கநாதன் ஆட்சிக்காலத்திலோ அல்லது அவர் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த அவருடைய மனைவியான மீனாட்சியின் ஆட்சிக்காலத்திலோ தான் 18ம் படி கருப்பு சாமியின் இந்த உண்மை நிகழ்வு நடந்திருக்க வேண்டும்.
சரி கோயில் கதவை ஏன் மூடி இருக்க வேண்டும் என்று ஆராயும் போது, அழகர் கோயிலில் திருட வந்த 18 பேரை பிடித்து வெட்டி, கோபுரத்தின் வாசல்படிக்கு கீழே புதைத்ததால் அந்த வாசல் தீட்டுப்பட்டதாக அப்போது அறிவித்தார்கள். இவ்வாறு தீட்டுப்பட்ட வாசல் வழியாக தெய்வம் செல்வது என்பது ஐதீகத்தின் படி முறையில்லை. ஆகவே தெய்வமே செல்லாத அந்த வழியில் மக்களும் செல்வதற்கு பயப்பட்டார்கள். ஆக யாருமே பயன்படுத்தாத காரணத்தால் அந்த கோயில் தலைவாசலை மூடிவிட்டார்கள்.
அதற்கு பதிலாக புதிய பாதையை உருவாக்கினார்கள். அதுதான் இன்று வரை பயன்பாட்டில் இருக்கும், வடக்கு கோவில் கோட்டை மதில் சுவரை உடைத்து உருவாக்கிய, வண்டி வாசல் என்ற பாதை.
நிரந்தரமாக மூடப்பட்ட அந்த கதவில் இருந்து கருப்பு சாமி கதையின் படி, கதவாகவே இருந்து அன்று முதல் இன்று வரை 18ம் படி கருப்பு சாமியாக இருந்து அவர் அழகரையும், மக்களையும் காத்துவருகிறார்.
இயற்கையாக இல்லாமல், கொடூரமாக இறந்தவர்களின் இறப்பு, மற்றும் அவர்களின் ஆவி பற்றிய பயம் மக்களிடையே இருந்ததால், கருப்புசாமி அந்த ஆவிகளிடம் இருந்தும், தீய சக்தியிடம் இருந்தும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் அந்த கதவையே மக்கள் கருப்புசாமியாக நிலை நிறுத்திவிட்டார்கள்.
மூடிய கதவுகளுக்கு சந்தனம், குங்குமம், கற்பூரம் உள்ளிட்டவை பூசி, பூ, மாலை ஆகியவற்றால் அலங்கரித்து இன்று வரை பூஜை செய்து வருகிறார்கள். அதுமட்டும் அல்ல, தினமும் நூபுர கங்கையில் இருந்து அழகருக்குக் கொண்டு வரப்படும் தீர்த்தத்தைக் கருப்பனின் சந்நிதியில் வைத்து, அது தூய்மையாகக் கொண்டுவரப்பட்டது என்று பிரமாணம் செய்தபின்னே உள்ளே கொண்டு செல்கிறார்கள்.
இவ்வாறு கருப்பனிடம் செய்யும் இந்த பிரமாணம், நீதி தேவன் சந்நிதியில் செய்யும் பிரமாணத்துக்கு இணையானதாக மக்கள் நம்புகிறார்கள்.
இன்று வரை வழக்குகள் பல தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது. தன்மீது நியாயம் இல்லாதவர்கள், பிறரை ஏமாற்றி லாபம் அடைய முயற்சி செய்பவர்கள். பதினெட்டாம்படி கருப்பு கோவிலில் என்றும் பொய் சொல்ல முடியாது. அதைப்போல நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவர் பக்கம் பதினெட்டாம்படி கருப்பசாமி துணையாக நின்று வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் பல வழக்குகள் அங்கு தீர்க்கப்பட்டு வருகிறது.
நீண்ட நாட்களாக நியாயம் கிடைக்காதவர்கள், நம்பிக்கை துரோகத்தால் பொருளாதாரத்தை இழந்தவர்கள் தன் மீது நியாயம் இருந்தால் மட்டும் பதினெட்டாம்படி கருப்பனை வேண்டி தனக்கு துணையாக அவரை அழைக்கலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
ஆக கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.

அதேபோல், எப்பொழுதுமே மூடப்பட்டே இருக்கும் இந்த கதவு, வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். மற்றப்படி வேண்டுதல், நேர்த்திக்கடன் எல்லாமே அந்த பூட்டிய கதவுக்கு தான். கதவு இடுக்கின்வழியே ஆலயத்தின் உள்ளே பார்ப்பவர்களின் பார்வை, கருப்பசாமியால் பறிக்கப்படுமென்பது இங்கு உலவும் ஒரு நம்பிக்கை.
சரி அந்த ஒரு நாள் மட்டும் ஏன் திறக்கிறார்கள். அவ்வாறு திறக்கும் போது அந்த வழியே யார் செல்லலாம் என்று பார்க்கும் போது, அழகரின் பல்லக்கு கூட இந்த வழியாக செல்லாது. ஆனால் அழகரின் போர்க் கருவியான சக்கரத்தாழ்வார் மட்டும் இவ்வாசல் வழியாக வந்து செல்கிறார். சக்கரத்தாழ்வாருக்காக மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை அவ்வாசல் திறக்கப்படுகிறது.
சக்கரத்தாழ்வார் மட்டும் அவ்வழியே வந்து செல்வதன் காரணத்தை பற்றி ஆராயும் போது, ஏற்கனவே இறந்தவர்களின் ஆவி அங்கு இருக்கும் என்ற பயத்தில் தான் கருப்புசாமி காப்பதாக மக்கள் நம்புகிறார்கள். அவரை போலவே திருமாலின் போர்க்கருவியான சக்கரத்தாழ்வாரும் இறந்தவர்களின் ஆவி பற்றிய அச்சத்தினையும், பகையினையும் வென்று அவ்வழியே செல்ல முடியும் என்பதற்காக அவர் மட்டும் அவ்வழியே செல்கிறார். ஆக இந்த நிகழ்வு அழகர் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, பெருதெய்வமாக இருக்கும் அழகரை, சிறுதெய்வமான கருப்புசாமி எப்படி காவல் காக்க முடியும் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. மும்மூர்த்திகளில் காக்கும் தெய்வமாக இருக்கும் திருமலை எப்படி ஒரு சிறுதெய்வம் காக்க முடியும்? அதை எப்படி மக்களும், திருமலை வணக்கும் குழுவும் ஏற்றுக்கொண்டார்கள் என்று ஆராயும் போது, கருப்புசாமியே திருமால் தான் என்கிறார்கள்.

அதாவது கிருஷ்ணனை – வாசுதேவ கிருஷ்ணன் என்று அழைப்பார்கள். தமிழில் கரிய நிறமுடையவன் அதாவது காரிக்கண்ணன் என்று சொல்வார்கள். காரி என்றால் கருப்பு. கருப்பு நிறமுடைய மாட்டினை, ஆயர்கள் காரி என்று பெயர் வைத்து அழைப்பார்கள்.
“திருவடியும் கண்ணும் திருவாயும் செய்ய கரியவன்” என இளங்கோவடிகளும், “கண்ணன் என்னும் கருந்தெய்வம்” என ஆண்டாளும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆக கருப்பு நிறத்தை, அழகு நிறைந்த நிறமாகவே தமிழர்கள் கருதினார்கள்.
மேலும் “அண்ணன்மார்சாமி கதை” என்கிற கதைப்பாடல் வழியாக திருமால் கடல் கடைந்த போது, கருப்பசாமி பிறந்ததாக கூறி, கருப்பசாமியின் பிறப்பை திருமாலோடு தொடர்புப்படுத்தினார்கள்.
மேலும் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் இங்கு பார்க்கவேண்டும். மதுரை வட்டாரத்தில் காணப்படும் கருப்பசாமி சிலைகள் பெரும்பாலும், தென்கலை வைணவ திருநாமத்துடன், வைணவ சார்பு உடையது போல தான் இருக்கும்.
அதாவது அவர்களுடைய காக்கும் கடவுளின் காரி வழிபாடு என்று சொல்லப்படும், வாசுதேவ கிருஷ்ண வழிபாடும், நம் மண்ணின் காவல் தெய்வ வழிபாடும் ஒன்றாகிவிட்டது.
இதனால் தான், திருடர்கள் உடல் புதைக்கப்பட்ட கோபுரவாசலில் இருக்கும் தீய ஆவிகளை விரட்டவும், மக்களின் அச்சத்தை நீக்கவும் ஒரு சிறுதெய்வத்தை வைக்கவேண்டும் என்று முடிவெடுக்கும் போது, கருப்புசாமியை தேர்வு செய்திருக்கிறார்கள். இதை அப்போது இருந்த உயர்சாதி பிராமணர்களும் ஏற்றுக்கொள்ள கூடிய சூழ்நிலை இருந்தது.
சொத்துடைமை நிறுவனமான அழகர்கோயில், அதன் பெருந்தெய்வமான அழகரின் படைத்தளபதியாக, சிறுதெய்வமான கருப்பசாமியை நிலை நிறுத்தியதன் பின்னால் உள்ள செய்திகள், சமய இயக்கங்கள் தங்களை காத்துக்கொள்ள, எவ்வகையில் சமூகத்தோடு ஒத்துப்போகின்றன என்பதையே இது காட்டுகிறது.
ஆக இவ்வளவு வரலாறும், ஆன்மீக அரசியலும் இருந்தாலும், இன்றும் அந்த மண்ணில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக, ஒன்றாக சாதி மத பேதம் இன்றி வாழ்வதற்கு 18ம் படி கருப்புசாமியும் ஒரு காரணமாக இருக்கிறார்.
யாரெல்லாம் மதுரையில் இருக்கும் இந்த கருப்புசாமி கோயிலுக்கு இதுவரை சென்று இருக்கிறீர்கள் என்பதை கீழே கமெண்ட் box-ல் சொல்லுங்கள்!