“யார் இந்த உஸ்தாத் அகமது லஹோரி..!” – மன்னர் ஷாஜகான் இவ்வளவு சம்பளம் எதற்காக கொடுத்தார்?
உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹால் பற்றி உங்களிடம் அதிகமான கருத்துக்களை பகிர வேண்டிய அவசியம் இல்லை. காதலர்களின் சின்னமாக திகழும் இந்த தாஜ்மஹால் மற்றும் செங்கோட்டையை வடிவமைத்தவர் தான் இந்த உஸ்தாத் அகமது லஹோரி.
மிகச் சிறப்பான நுணுக்கத்தோடு அழகான முறையில் கட்டிடக்கலையை வெளிப்படுத்திய காரணத்தினால் இவரை செங்கோட்டையை வடிவமைக்க மன்னர் ஷாஜகான் உத்தரவிடுகிறார். இதனை அடுத்து இவர் செங்கோட்டையை கட்டி இருக்கிறார்.
இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களாக திகழக்கூடிய இந்த இரண்டு கட்டிடங்களும் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டிருக்க கூடியது.மேலும் முகலாய மன்னர்களின் கட்டிட திறனை வெளிப்படுத்தக்கூடிய கட்டிடங்கள் என கூறலாம்.
தாஜ்மஹால் கட்டப்பட்ட சமயத்தில் தான் இந்திய தலைநகரான டெல்லியிலும் செங்கோட்டை, ஜம்மா மசூதி உள்ளிட்ட பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் தாஜ்மஹாலை போல இன்னொரு கட்டிடத்தை கட்டி விடக்கூடாது என்பதற்காக அங்கு வேலை செய்த தொழிலாளிகளின் கைகளை வெட்டி விட்டதாக சில கதைகளில் நாம் கேள்விப்பட்டு இருக்கலாம்.
அந்த வகையில் இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் உஸ்தாத் அகமது லஹோரி என்ற கட்டிடக்கலை நிபுணர். இவர்தான் ஷாஜகான் காலத்தில் தலைமை கட்டிட நிபுணராக பணி புரிந்திருக்கிறார். இவரது சொந்த ஊர் பாகிஸ்தானில் இருக்கும் லாகூர்.
இவர் கட்டிடக்கலை மட்டுமல்லாமல் வடிவியல், எண் கணிதம், வானவியல் உள்ளிட்ட கலைகளில் திறமை வாய்ந்தவராக இருந்திருக்கிறார். எனவே தான் ஷாஜகான் இவருக்கு “நாதிர் உல் அஸர்” என்ற பட்டத்தை வழங்கி இருக்கிறார்.
மேலும் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி ஷாஜகான் தாஜ்மஹால் மற்றும் செங்கோட்டையை கட்டுவதற்காக உஸ்தாத் அகமது லஹோரிக்கு சம்பளமாக ரூ 10,000 வழங்கியிருக்கிறார். இது அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய தொகையாகும். இன்றைய ஐடி நிறுவனங்களில் பெரும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக இதை கருதலாம்.
தாஜ்மஹால் கட்டமைப்பில் மிக முக்கிய பங்கு வகித்த காரணத்தினால் செங்கோட்டையை வடிவமைக்கும் பணியையும் ஷாஜகான் இவருக்கே வழங்கினார். அது போலவே டெல்லியில் உள்ள ஜம்மா மசூதிக்கு அடித்தளம் போட்டதும் இவரே. எனினும் அந்த பணியைதொடங்கும் முன்பே இறந்து விட்டார்.
இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் தாஜ்மஹால் மற்றும் செங்கோட்டையை யார் கட்டினார்கள் என்ற விவரம். புதிய தகவல்கள் உங்களுக்கு ஏதேனும் தெரிந்து இருந்தால் அவற்றை எங்கள் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.