• July 27, 2024

யவனர்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கும், தமிழர்களுக்கும் என்ன தொடர்பு..!

 யவனர்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கும், தமிழர்களுக்கும் என்ன தொடர்பு..!

Yavana

சங்க காலத்திலிருந்து யவனர்கள், தமிழர்களோடு வணிகத் தொடர்பு கொண்டு இருந்ததற்கான குறிப்புகள் சங்க கால நூல்களில் அதிகளவு காணப்படுகிறது.

 

இந்த யவனர்கள் கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்தியர், பாரசீகர், அரேபியராக இருக்கலாம். இவர்கள் அனைவரையுமே யவனர் என்று சொல் கொண்டு அழைத்தார்கள். இவர்கள் அனைவருமே வாணிபம் செய்வதற்காக தமிழகத்தை நோக்கி வந்தவர்கள்.

 

இவர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய நாடுகளில் கிடைத்த மிளகு, முத்துக்கள், சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம் போன்ற பொருட்களை வாங்கிச் சென்று இருக்கிறார்கள்.

Yavana
Yavana

அதற்கான ஆதாரங்கள் தொல்பொருள் ஆய்வின் மூலம் நமக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து ரோம் நாட்டவரின் ரெளலடெட்,அரிட்டைன், கூர்முனை மது குடங்கள், சுட்ட மண் பொம்மைகள், ரோம அரசின் பொன், வெள்ளி, செம்பு நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளது.

 

குறிப்பாக இவை அனைத்தும் வைகை நதிக்கரை ஓரங்களில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் 

கல்தேயா நாட்டைச் சேர்ந்த ஊர் எனும் இடத்தில் நடந்த அகழ்வாய்வில் சுமார் கிமு 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டின் தேக்கு உத்திரம் கிடைத்துள்ளது.

 

மேலும் யவனர்களுக்கு மிளகு மிகவும் பிடித்தமான பொருள் என்பதால் அந்த மிளகை “யவனப்பிரியா” என்று  அழைத்திருக்கிறார்கள். மேலும் மிளகினை பெறுவதற்காக கேரளாவில் இருக்கும் முசிறிக்கு வந்து பொன்னை கொடுத்து மிளகை ஏற்றி செல்வார்கள்.

Yavana
Yavana

இதனை அகநானூறு 149 பாடலின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

 

“யாவனர் தந்த வினைமான் நன்கலம் 

பொன்னொடு வந்து கரியொடு பெயரும்

வளம் கெழு முசிறி” .

 

அதுமட்டுமல்லாமல் டாக்டர் பா ராசமாணிக்க அவர்கள் சோழர்கால வரலாறு எனும் நூலில் கரிகால் வளவன் காலத்திலே யவனர்கள் காவிரி ஆறு கலக்கும் இடமான பூம்புகார் வந்து சென்றதாக குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக அவர்கள் வந்து சென்றதற்கு ஆதாரமாக பட்டினப்பாலை பாடல் வரிகள் 216-218,199,207-208 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Yavana
Yavana

மேலும் இந்த யவனரை மரக்கலராயர் என்றும் கூறியிருக்கிறார்கள். இந்த யவனர்கள் மதுரை நகரில் தங்கி வாழ்ந்து இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக யவனர்கள் வாளை கையில் ஏந்தி கொண்டு கோட்டை வாயிலில் காவல் புரிந்து வந்ததை காணும்போது இவர்கள் நிச்சயமாக தங்கி வாழ்ந்திருப்பதை தான் இது உணர்த்துகிறது.

 

மேலும் யவனர்கள் பற்றி நெடுநல்வாடை, அகநானூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் குறிப்புகள் உள்ளது. 

 

இதன் மூலம் யவனர்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே இருந்த வாணிபத் தொடர்பு எத்தகையது, என்பது உங்களுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

 


1 Comment

  • அழகாக புரியும் வண்ணம் இருந்தது தங்களின் தமிழ் நடை . அகநானூறு 149ன் வரிகளில் இன்னும் 2வரிகளையும் சேர்த்து இருக்கலாம். படிக்க படிக்க நேரம் செல்வது தெரியவில்லை அவ்வளவு அழகான தமிழ்.
    நன்றி நண்பா வாழ்த்துக்கள்

Comments are closed.