இந்திய பாரம்பரியத்தின் பெருமையை உலகளவில் உயர்த்திப் பிடித்திருக்கிறது ஒரு நெல்லூர் மாடு. பிரேசிலில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.40 கோடி மதிப்பிற்கு விற்பனையாகி, உலகின் மிக விலையுயர்ந்த கால்நடைக்கான புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. 53 மாத வயதுடைய இந்த நெல்லூர் இன மாடு, பிரேசிலின் மினாஸ் கிரைஸ் பகுதியில் நடைபெற்ற ஏலத்தில் இந்த சாதனையை படைத்தது. ‘வியடினா 19’ என அழைக்கப்படும் இந்த மாடு, 1,101 கிலோ எடையுடன், சாதாரண நெல்லூர் மாட்டை விட இரு மடங்கு பருமனுடன் காணப்படுகிறது.

வெற்றி வேந்தன் வியடினா!
‘சாம்பியன் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற சர்வதேச கால்நடை அழகுப் போட்டியில் ‘மிஸ் சவுத் அமெரிக்கா’ பட்டத்தை வென்றுள்ளது வியடினா 19. இதன் வெள்ளி நிறத்தில் ஜொலிக்கும் மெருகேற்றப்பட்ட தோற்றம், கம்பீரமான திமில் அமைப்பு, சிறந்த மரபணு பண்புகள், வலிமையான தசை அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக திகழ்கின்றன. போட்டியின் நடுவர்கள் இந்த மாட்டின் அபூர்வ பண்புகளால் வியப்படைந்துள்ளனர்.

பிரேசிலில் இந்திய மாடுகளின் பெருமை!
இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள நெல்லூர் பகுதியில் தோன்றிய இந்த இனம், வெப்பமண்டல காலநிலைக்கு மிகவும் ஏற்றது. 19ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக இந்தியாவிலிருந்து பிரேசிலுக்கு அறிமுகமான இந்த இனம், தற்போது உலகின் மிகப்பெரிய நெல்லூர் மாட்டு மந்தையை கொண்ட நாடாக பிரேசில் திகழ்கிறது. பிரேசில் கால்நடைகளில் 80 சதவீதம் செபு இனத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. மொத்தம் 23 கோடி மாடுகள் உள்ளதாக அமெரிக்க வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

நெல்லூர் மாடுகளின் சிறப்புகள்!
ஆந்திராவின் ஓங்கோல் பகுதியில் தோன்றிய நெல்லூர் மாடுகள் அதிக வெப்பத்தை தாங்கும் திறன், குறைந்த பராமரிப்பில் அதிக உற்பத்தி, வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி, சிறந்த இனப்பெருக்க திறன் மற்றும் நல்ல இறைச்சி தரம் போன்ற பல சிறப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த பண்புகளே இவற்றின் மதிப்பை உலகளவில் உயர்த்தியுள்ளது.

இந்திய கால்நடை வளர்ப்பின் எதிர்காலம்!
வியடினா 19-ன் சாதனை விலை, உலக கால்நடை சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் இந்திய கால்நடை வகைகளுக்கு அதிக கேள்வி, பாரம்பரிய இன மாடுகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம், கால்நடை ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கான வாய்ப்புகள் என பல முன்னேற்றங்களை இது ஏற்படுத்தியுள்ளது. நெல்லூர் மாடுகளின் இந்த வெற்றி, இந்திய கால்நடை வளர்ப்பு துறையின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கிறது.
