• December 6, 2024

தன்னம்பிக்கையே வெற்றியின் முதல் படி!

 தன்னம்பிக்கையே வெற்றியின் முதல் படி!

ஒரு அரசன் தனது நாட்டில் ஒரு சுவாரஸ்யமான போட்டியை அறிவித்தான். கோட்டைக் கதவை வெறும் கைகளால் திறக்க வேண்டும் என்பதே அந்த போட்டி. வெற்றி பெறுபவருக்கு நாட்டின் ஒரு பகுதி பரிசாக வழங்கப்படும். ஆனால் தோல்வி அடைந்தால், அவரது கைகள் வெட்டப்படும் என்ற கடும் தண்டனையும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைக் கேட்ட மக்கள் அச்சத்தில் உறைந்தனர். பெரும் பரிசை நினைத்து ஆசைப்பட்டாலும், தோல்வியின் விளைவை நினைத்து நடுங்கினர். யாருமே போட்டியில் பங்கேற்க முன்வரவில்லை.

ஆனால் ஒரே ஒரு துணிச்சலான இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தான். மக்கள் அவனை எச்சரித்தனர், “ஏன் வீண் துணிச்சல்? தோற்றால் உன் கைகளை இழப்பாய். உன் எதிர்காலம் என்னவாகும்?” என்று கேட்டனர்.

அதற்கு அந்த இளைஞன் புன்னகையுடன், “வென்றால் நான் அரசனாகிறேன், தோற்றால் கைகள் மட்டுமே போகும். உயிர் போகவில்லையே!” என்று தைரியமாக பதிலளித்தான்.

அவன் கோட்டைக் கதவை நோக்கி நடந்தான். தன் முழு பலத்தையும் திரட்டி கதவைத் தள்ளினான். என்ன ஆச்சரியம்! கதவு எளிதாகத் திறந்தது. ஏனெனில் கதவு ஏற்கனவே திறந்துதான் இருந்தது. தாழ்ப்பாள் போடப்படவில்லை!

இந்த கதை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன?

பல மனிதர்கள் வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கிறார்கள். முயற்சி செய்யும் முன்பே தோல்வி பயம் அவர்களை ஆட்கொள்கிறது. “தோற்று விடுவோமோ”, “எதையாவது இழந்து விடுவோமோ” என்ற எண்ணமே அவர்களை முடக்கி விடுகிறது.

நாம் அனைவரும் அறிந்த முயல்-ஆமை கதையில், முயலின் தோல்விக்கு காரணம் அதன் திறமையின்மை அல்ல, மாறாக அதன் அலட்சியமும் முயற்சியின்மையுமே!

வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையின் அங்கம். தோல்வி பயத்தால் முயற்சியையே கைவிடுவது மிகப்பெரிய தவறு. தன்னம்பிக்கையுடன் முயற்சித்தால், நினைத்ததை விட எளிதாக வெற்றி கிடைக்கலாம். ஆகவே, பயத்தை விட முயற்சியின் மதிப்பு பெரிது என்பதை உணர்ந்து செயல்படுவோம்!