உங்கள் வாழ்க்கையை மாற்றும் 7 தாரக மந்திரம்! கண்டிப்பாக இதை முயற்சித்து பாருங்கள்!
எடுக்கும் அனைத்து முயற்சிகளும், தோல்வியில்தான் முடிகின்றன என்று, மனம் தளர்ந்து போய் இருக்கிறீர்களா? உண்மையில், அந்த தோல்வியில் காத்திருக்கும் வெற்றி, நமக்கானதுதான்.
தோல்வி
தோல்வி, நமது வெற்றியை மறைத்து வைத்திருக்கும் அட்சய பாத்திரம். தோல்வி, நம் மனோதடத்தை சோதிக்கும் கருவி. தோல்வி, நண்பர்கள் யார்? துரோகிகள் யார்? என காட்டும், காலக்கண்ணாடி. தோல்வி, நமக்கான வாழ்க்கைத் தேடலில், நாம் சரியாக சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளம்.
தோல்வி, நம்பிக்கை என்பதற்கான உரம். விதை வெடிக்கும் போதுதான், மரம் வளரும். அப்படி வளரும் மரம், விண்ணை மட்டுமல்ல, விண்ணைத் தாண்டியும் வளரும். தோல்வி எனும் உறத்தை ஏற்பவன், உயர்கிறான். தோல்வி கண்டு, துவண்டு போகிறவன், வெற்றியை காண தயங்குகிறான்.
தயக்கம்
தோல்வி நம்மை முத்தமிடும் பொழுது, தயக்கம் நம்மை ஆரத் தழுவுகிறது. தயக்கம் உயிரைக் கொல்லும் உயிர்க்கொல்லி அல்ல. நம்மை வளரவிடாமல் அழிக்கும் நச்சுக் கொல்லி. தயக்கம், சிலந்தி வலையைக் கூட, இரும்பு வலையாக்கும். மன வீட்டை கூட கல் கோட்டையாக காட்டும்.
தயக்கம் என்பது தோல்வியின் நண்பன். வீழ்ச்சிக்கு உடன்பிறந்தவன். கூடா நட்பு வாழ்விற்கு வேண்டாம் என்பதற்கு உதாரணமே, இந்த தயக்கமும், அது கொண்ட நட்பும் தான். நம்மை சிதைக்கும் தயக்கத்தை, உடைக்கும் ஒரே சக்தி, நாம் கொண்ட முழு முயற்சி மட்டுமே.
முயற்சி
எந்த ஒரு கடின செயலையும், நமது முயற்சி எளிதாக்குகிறது. நடக்கப் பழகும் பொழுது, விழுந்து எழாத குழந்தை இல்லை. சைக்கிள் கற்றுக் கொள்ளும் பொழுது விழுந்து எழாத, பாலியப் பருவம் இல்லை. தோல்வி கண்ட தேர்வும் உண்டு, துரோகம் செய்த நட்பும் உண்டு, நிராகரித்த வேலையும் உண்டு, அவமதித்த காதலும் உண்டு.
ஆனால், இங்கு அடுத்த அடியில், நிதானித்த குழந்தையும், சைக்கிளை கெட்டியாக பிடித்த பிடிப்பும், தேர்ச்சியில் கொண்ட கவனமும், துரோகத்தைக் கண்டு சிரிக்கையிலும், நிராகரிப்பைத் தாண்டி, முயற்சியைத் தொடர்கையிலும், அவமானத்தைக் கடக்கையில் நாம் பெற்றது, உண்மையான வெற்றி.
சூட்சமம்
இந்த பூமியில் பிறக்கும் பறவை குஞ்சுகள், நன்கு வளர்ந்த பிறகு, தன் இறக்கைகளை விரித்து, ஆகாயம் நோக்கிப் பறக்கின்றன. பிறப்பிலேயே, இறக்கைகள் இருந்தாலும், அது வளர்ச்சியடையும் காலம் வரை பொறுத்திருந்து, தன்னை தயார் படுத்திக் கொள்வதே, அதன் சூட்சமம். இந்த இடைப்பட்ட காலம் அவர்களுக்கு, பயிற்சி காலம்.
எப்போது நாம் வெற்றிக்கு முயற்சிக்கிறோமோ, அன்றெல்லாம் “ஊர்க்குருவி பருந்தாகாது” , “இருக்கிறதை விட்டுட்டு, பறக்கிறதுக்கு ஆசைப்படக்கூடாது” என்று, நம் காதுகள் கேட்க பேசுவார்கள்.
ஊர், குருவி, பருந்தாகாது. ஆனால், அந்த பருந்து வாழும் வானத்தில்தான், குருவியும் பறக்கிறது. பருந்தும், குருவியும், உருவத்தில் மாறுபாடு கொண்டிருக்கலாம். ஆனால், இரண்டும் இருப்பது வானத்தில்.
- வாழ்க்கையின் முக்கிய பாடங்கள்: “ரத்தன் டாடாவின்” பொன்மொழிகள்
- உலகளாவிய டாடா: ரத்தன் டாடாவின் தலைமையில் இந்திய நிறுவனம் சர்வதேச அரங்கில் எப்படி ஜொலித்தது?
- சென்னை உயர்நீதிமன்றம் ஆண்டுதோறும் ஒரு நாள் முழுவதும் மூடப்படுவது ஏன்? அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான காரணம் என்ன?
- “மற்றவர் துன்பம் பார்த்தால் நம் துன்பம் மறையுமா? ஷாவின் வியக்கவைக்கும் கதை!”
- காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம்: நம் முன்னோர்களின் அறிவாற்றலை வெளிப்படுத்துகிறதா?
முயற்சி மட்டுமே நமக்கான முதல் வெற்றி. அந்த முதல் வெற்றியைப் பெற, நம்மை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் முதலில் அறிந்து கொண்டால்தான், இந்த உலகம் நம்மை அறிந்து கொள்ளும். எடுக்கும் அனைத்து முயற்சிகளும், தோல்வியில் முடிகின்றன என்று, மனம் துவளக்கூடாது. உண்மையில், அந்த தோல்வியில் காத்திருக்கும் வெற்றி, நமக்கானதுதான்.
பரந்து விரிந்த இந்த வானம் நமக்கு சொல்வது ஒன்றுதான். உனக்கு எட்டா தூரத்தில் நான் இருந்தாலும், முயற்சி எண்ணும் ஏணியில் ஏறினால், வெற்றி எனும் வானமாக , நான் உனக்கு வசப்படுவேன் என்பதுதான்.
வானம்
வானளவு உயர்ந்த கட்டிடங்கள், வானை முட்டும் கோபுரங்கள், வானை உரசும் மலைகள், வானில் மிதக்கும் விமானங்கள் என, பிரம்மாண்டத்தின் வெற்றி, வானுடனே ஒப்பிடப்படுகின்றன. எனினும், வானம் வெற்றியின் அடையாளமா? என்றால், ஆம், வள்ளுவனையும், வான்புகழ் கொண்ட வள்ளுவன் என்றே, பெருமை அடைய செய்கிறோம். வானம் மட்டுமே லட்சியம் இல்லை, வானம் மட்டுமே எல்லையும் இல்லை. வானைத் தாண்டிய எல்லையும் உண்டு. எல்லையைத் தொடும் லட்சியமும், நம்மிடம் உண்டு. ஏனெனில், வானம் எட்டும் தூரத்தில்தான் உள்ளது.
வெப்பக் காற்றே வான் நோக்கிச் செல்லும், நீர் நிறைந்த காற்று, மேலே செல்ல இயலாமல், கீழே தங்கும். வெடிக்கும் எரிமலையே, விண்ணை முட்டும். இந்த உலகில், வெடித்து சிதறிய எரிமலைகளும் உண்டு, வெடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் எரிமலைகளும் உண்டு.
தனக்கான நேரத்தை, எதிர்பார்த்துக் கொண்டு, பல தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டம் கூட, ஒரு சிறு அடியின் ஆரம்பத்தில்தான் தொடங்கப்படுகிறது. வானை மீறி நிற்கும் மலைகள் கூட நாம் நம்பிக்கையோடு, ஏறி நடக்கையில் அது நம் காலிற்கு கீழேதான் இருக்கும். இதற்கு தேவை முயற்சி என்ற முதல் அடியும், நம்பிக்கை என்ற இறுகிய பிடியும்தான்.
Harry Patter உலகப் புகழ் பெற்ற கதைய, JK Rowling எழுதிய பொழுது, அதை பிரசுரிக்க, அவர் அணுகிய பத்திரிக்கைகள் எல்லாம் அவரையும், அந்தக் கதையையும் நிராகரித்தது. அந்த நிராகரிப்பில் அவர் நின்று விடவில்லை. படைப்பின் மீதான நம்பிக்கை, அவருக்கு முழுவதுமாக இருந்தது. தொடர்ந்து எழுதினார். அந்த எழுத்தும், அந்த எழுத்தின் மீது அவர் கொண்ட நம்பிக்கையும், அவரை உயர்த்தியது. நிராகரித்த பத்திரிகைகள், இன்று அவர் எழுத்துக்காக காத்துக் கிடக்கின்றன.
தனது எழுத்தின் மீது, நம்பிக்கை கொண்டு எழுதியவரைப் பற்றித்தான், நாம் இன்று எழுதிக் கொண்டிருக்கிறோம். நன்றாக எழுதினார் என்பதனால், வெற்றி பெற்றோர் என்ற எண்ணம் கொள்ளாதீர்கள். பலர் நிராகரித்த கதையும், உலகம் அங்கீகரித்த கதையும் ஒன்றுதான். அவரின் வெற்றிக்கு காரணம், அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையும், தன் மனதில் கொண்ட உறுதியுமே, அதுவே நமக்கு இங்கு பாடம்.
சரியான முயற்சியும், தன்னம்பிக்கையும் இருக்கும் பட்சத்தில், வரலாறு படிப்பவனும், வரலாறு படைக்கிறான். வரலாற்றில் படிக்கப்படுகிறான். வெற்றிக்கு தேவை முடிவில்லா முயற்சியும், அதீத தன்னம்பிக்கையும் தான். வாழ்க்கையின் கதவை தோல்வி மூடினால், அதை விடாமுயற்சி எனும் சாவி கொண்டு திறப்பதே உன்னுடைய வெற்றி. இது விவேகானந்தரின் வாக்கு.
தோல்வியை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து பாடம் கற்பவன் முன்னேறுகிறான். அதை ஏற்க தவறுபவன் வெற்றியை விட்டு தள்ளிப் போகிறான். முயற்சி திருவினையாக்கும் என்பது உலகம் போற்றும் நம் வள்ளுவன் தந்த வாக்கு. நமக்கான வெற்றி எனும் இலக்கை நோக்கி பயணிக்க, விடாமுயற்சியும், தன் கடின உழைப்புமே பயணச்சீட்டாகும்.
நேர்த்தி
நேர்த்தியாக உழைப்பவரே இங்கு வெற்றி அடைகிறார்கள். கடின உழைப்பிற்கு பயனில்லை என்ற எண்ணம் கொள்வது சரியல்ல. நேர்த்தியாக உழைப்பவன் வெற்றியிடம் எளிதில் செல்கிறான். கடினமாக உழைத்துக் கொண்டிருப்பவன் வெற்றியை தன்னிடத்தில் வர வைக்கிறான். அந்த கடின உழைப்பு தரும் வெற்றி நிரந்தரமானது.
கடினமாக உழைப்பவனிடம் வந்து சேரும் வெற்றி, அவனை விட்டு எங்கும் செல்லாது. உண்மையில் நேர்த்தியோ, கடினமோ உழைப்பு என்ற ஒன்று நம்மிடம் இருக்கும் வரை, தோல்வி நம்மை என்றும் நெருங்காது. நமக்கான நேரம் வரும் வரை, நம்மை தயார்படுத்திக் கொள்வதே, சாலச் சிறந்தது.
நமது நேரம் நெருங்கையில், வெற்றி என்பது வானமாக இருந்தாலும், அது நம் கை வந்து சேரும். அவ்வாறு, நாம் பெறும் அப்பெரும் வெற்றியை, தாங்கிப் பிடிக்கும் வளமே, நம் தன்னம்பிக்கை.
“வாழ்வில் நான் தனியாக உள்ளேன். எனக்கென யாருமில்லை. எனக்கான போராட்டத்தில் என்னுடன் யாரும் இல்லை” என்ற எண்ணம் கொள்வதை முதலில் தவிர்ப்போம். வெற்றியை நோக்கிய பயணத்தை, ஒருவர் தனியாக தொடங்குகிறார் என்றால், அது வெற்றியுடன் ஆரம்பிக்கப்பட்ட பயணம் என்று அர்த்தம்.
தனிமை
இது ஒரு வரம். உன்னை அறிந்து கொள்ளவும், உன் பலம் புரிந்து கொள்ளவும், கிடைக்கும் சந்தர்ப்பமே தனிமை. இன்றைய தனிமை, நாளைய தலைமைக்கு வழி வகுக்கும். அது சரியான முறையில் கையாளப்பட்டிருந்தால்.
இது, தானே ஒருவரை உணர்ந்து கொள்ள வைக்கிறது. தன்னை உணர்ந்தவரே, இன்றும் பலருக்கும் முன்னுதாரணமாகி வாழ்கின்றனர். தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு, உலகிற்கு அடையாளமானவர்கள் பலர் உண்டு. புத்தரின் தனிமைதான், இந்த உலகிற்கு ஞானம் தந்தது.
தனிமை, நமது மன எண்ணங்களில், எது தேவை? எது தேவை இல்லை? என்று உணர்ந்து கொள்ள உதவும். கோபம் கொண்டவரும், ஏமாற்றம் அடைந்தவரும், கண் கலங்குபவரும், வெற்றியில் திளைப்பவரும், தனிமை எனும் உடை தருகையில், உண்மை உணர்கிறார்கள். அதுவே தனிமையின் மகிமை.
தனிமை தரும் அமைதி அழகானது. தரப்பட்ட தனிமை விட, எடுத்துக்கொள்ளப்பட்ட தனிமையே நமக்கு நன்மை பயக்கும். இனி தனித்து விடப்படும் முன், தனிமையை நாம் எடுத்துக் கொள்வோம். அது நம்மை பதப்படுத்தும். நம்மை தயார்படுத்தும். தனிமையில் தேர்ச்சி கொண்ட ஒருவன், நிச்சயம் வெற்றிக்கு தன்னை தயார் படுத்திக்கொள்கிறான்.
இங்கு நிரந்தரம் என்பது எதுவும் இல்லை. வெற்றி பெற்றவன் தோல்வியை சந்திப்பான், தோல்வி கண்டவன் வெற்றியை வரவேற்க காத்திருப்பான். தோல்வியோ, துரோகமோ, வெற்றியோ, புகழ்ச்சியோ, இன்பமோ, துன்பமோ இங்கு எதுவும் நிரந்தரமில்லை. நிரந்தரம் என்று ஒன்று உள்ளது என்றால், அது நாம் நம் மீது வைத்த நம்பிக்கை மட்டுமே.
நம் மீது நாம் வைத்த நம்பிக்கையும், அது நிறைவேற்ற நாம் எடுக்கும் முயற்சியும் நிரந்தரம் எனில், நம்மை வெல்ல இந்த உலகில் எவருமில்லை. நாம் பெரும் வெற்றியை தடுக்கவும், இங்கு எவருமில்லை.
நெஞ்சுரமும் சிந்தையில் திடமும் கொண்டவனிடம், தோல்வி தோற்று ஓடும். தோற்று ஓடிய தோல்வி, நம்மிடம் நெருங்கும் பொழுது, நாம் வெற்றி எனும் வானில், பயணித்துக் கொண்டிருப்போம்.
வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வோம், மாந்தரை வாழ வைத்து, மாந்தருள் உயர்வாய் வாழ்வோம்.