• September 28, 2022

இந்த மனசெல்லாம் வேற யாருக்கு வரும்!

 இந்த மனசெல்லாம் வேற யாருக்கு வரும்!
Spread the knowledge


தொடர்ந்து பல நல்ல காரியங்களை செய்து வரும் நடிகர் சூர்யா அவர்கள், ஓணம் தினத்தன்று மற்றொரு நல்ல காரியத்தை செய்துள்ளார். தம்முடைய திரைத் துறையினருக்கு மட்டும் நல்லது செய்யாமல், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டு மேற்கொண்டு படிக்க முடியாத சூழலில் இருக்கும் மாணவர்களுக்கும் உதவ முன் வந்துள்ளார். அதன்படி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்!

“ஈதல் இசைபட வாழ்தல்” என்பது தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும் போது அருகில் இருப்பவர்களுக்கு, ஒரு ‘கைப்பிடி அளவேனும்’ இருப்பதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம். கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள் கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் அடிப்படை தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில், மாணவர்களின் கல்விக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டு இருப்பதை உணர முடிகிறது. பொதுமக்கள், திரைத்துறையினர், நோயில் இருந்து மக்களை பாதுகாக்க செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் விற்பனை தொகையில் இருந்து 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம். அதில் பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி கொரோனா பாதித்தவர்களுக்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவத் துறை பணியாளர்கள் மேலும் ஒரு நல்ல சிந்தனையுடன் பணியில் களத்தில் நின்று, பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்கள்2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

5 கோடி ரூபாயில் இரண்டரை கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறு பங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதில் ஒன்றரை கோடி ரூபாயை திரைப்பட தொழிலாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத திரையுலகை சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள் (PRO) திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பயில்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.


“கல்வியே ஆயுதம், கல்வியை கேடயம்” என்கின்ற அடிப்படை கொள்கையோடு இயங்கும் அகரம் பவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/ மாணவிக்கு மட்டும் கல்வி கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் நகல்களை இணைத்து அஞ்சல் மூலமாக அகரம் பவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி உதவித்தொகைக்கான தேர்வு அமையும். www.agaram.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில், இந்த பங்களிப்பு சிறு துளிதான் இருப்பினும், இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புகிறேன். இந்தப் பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியை பாதியில் கைவிடுவதாக அறிவித்திருக்கிறது. இந்த தருணத்தில் பொருளாதார நெருக்கடியால் கல்வியை தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” – இவ்வாறு நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Spread the knowledge

Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator