
பதினோரு வயதில் திருமணம், பலமுறை பாலியல் வன்கொடுமை, பசி பட்டினியால் வாடிய குடும்பம், சிறை வாழ்க்கை, ஒரு கொள்ளைக்கூட்டத்தின் தலைவி, மக்களவை உறுப்பினர் – இந்த அத்தனை அடையாளங்களுக்கும் சொந்தமானவர் ஒருவரே! அவர்தான் பூலான் தேவி. வாழ்வு எல்லா பக்கங்களிலிருந்தும் தனக்கு வேதனையைக் கொடுத்துக் கொண்டு இருந்தபோதும், அந்த இருளில் தன் வாழ்வுக்கான வெளிச்சக் கீற்றை தானே ஒளிரச் செய்தவர் பண்டிட் ராணி (Bandit Queen) என்றழைக்கப்படும் பூலான் தேவி.

குழந்தைப் பருவமும் கொடுமையான திருமணமும்
1963-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் ஜலான் மாவட்டத்தில் மூலா, தேவி தின் மல்லா என்ற தம்பதியருக்கு நான்காவதாகப் பிறந்த பெண் குழந்தை பூலான் தேவி. மல்லா எனப்படும் படகோட்டி இனத்தைச் சேர்ந்த இவர்கள் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தனர்.
சிறுவயதிலிருந்தே ஆங்காரமான ஒரு முக பாவத்திற்கும் வார்த்தை சூட்டிற்கும் பெயர் போனவர் பூலான். தனது பதினோராவது வயதில், தன் தந்தை வாங்கிய கடனை அடைப்பதற்காக தன்னைவிட மூன்று மடங்கு வயதில் பெரியவரை மணக்க நேர்ந்தார். வாழச் சென்ற இடத்தில் பலமுறை தன் கணவரால் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டு, 11 வயது சிறுமி அறியவொன்னாத பல துயரங்களைச் சுமக்கும்படி ஆனது.
கொள்ளைக் கூட்டத்தில் இணைதல்
பூலானின் வார்த்தை சூட்டைத் தாங்க முடியாத மாமியார் வீட்டினர் அவரை அவர் வீட்டிற்குத் திருப்பி அனுப்பினர். தாய் வீட்டிற்கு வந்தும் வாழ்வு அவ்வளவு இனிமையாக இல்லை. தன் சொந்த உறவினர்களாலேயே தாக்கப்பட்டு மூன்று நாள் சிறைத் தண்டனையை அனுபவித்தார். சிறையில் காவல்துறை அதிகாரிகளின் பாலியல் தொந்தரவு தொடர, சிறையை விட்டு வெளியேறி தன் கணவர் ஊருக்கே சென்றார்.
கணவரின் தொந்தரவுகளும் தாங்க முடியாத நிலையில் 1979 ஆம் ஆண்டு பண்டிட் இன கொள்ளையர்கள் கும்பலால் கடத்தப்பட்ட பூலான் தன் வாழ்வை அவர்களுடனே தொடரும்படி ஆனது. அப்படி ஒரு குழுவால் கடத்தப்பட்டு அக்குழுவின் தலைவர் பாபு குஜ்ஜார் என்பவரால் மூன்று நாள்கள் தொடர் பாலியல் வன்கொடுமையை அனுபவிக்க நேர்ந்த பூலான், மூன்றாம் நாள் இறுதியில் விக்ரம் மல்லா என்ற குழு உறுப்பினரால் மீட்கப்பட்டார்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Rajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாக உயர்வு
பாபு குஜ்ஜாரைக் கொன்றுவிட்டு பண்டிட் குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் விக்ரம் மல்லா. விக்ரமுடன் சேர்ந்து தானும் அக்குழுவில் ஐக்கியமாகத் தொடங்கிய பூலான், துப்பாக்கி சுடுவது முதல் பல உயர் சாதி மக்கள் வீட்டில் கொள்ளை அடிப்பது வரை தன் போக்கையே வேறு விதத்தில் அமைத்துக் கொண்டார். கொள்ளையர்கள் குழுவில் ஒரே ஒரு பெண் என்று அழைக்கப்பட்ட பூலான் ஒவ்வொரு கொள்ளை முடிவிலும் துர்கா கோயிலுக்குச் செல்வதும் கடவுளை வணங்குவதும் வழக்கமாக அமைந்திருந்தது.
பெஹ்மாய் படுகொலை சம்பவம்
1981 பிப்ரவரி 14-ம் தேதி ஒரு திருமண ஊர்வலத்தில் போலீசாக மாறுவேடம் அணிந்து தன்னை பாதித்த ராஜ்புத்களான ஸ்ரீராம் மற்றும் லாலா ராம் இருவரையும் பிடிக்கச் சென்றார் பூலான். கூட்டத்தில் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாததால் அங்கு இருந்த 22 இளைஞர்களையும் சுற்றி வளைத்துச் சுட்டுத் தள்ளினர் பூலான் மற்றும் குழுவினர். பெஹ்மாய் என்ற பகுதியில் நடந்தேறிய இச்சம்பவம் தேசிய அளவில் ஒரு பெரும் பேசுபொருளாக உருப்பெற்றது. அப்போதைய உத்தரப் பிரதேச முதலமைச்சர் வி.பி.சிங் தனது முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும் அளவிற்குப் பரபரப்பானது சூழல்.

சரணடைதல் மற்றும் சிறை வாழ்க்கை
சம்பவத்திற்குப் பின் தலைமறைவான பூலான் மற்றும் குழுவினரை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் பெரும் ஆதரவைத் திரட்டிய அவர் ‘பண்டிட் ராணி’ என்று அழைக்கப்பெற்றார். தேசிய ஊடகங்களால் பூஜிக்கப்பட்ட பூலான்தேவியை இரண்டு வருடங்களாகியும் காவல்துறையால் பிடிக்க முடியவில்லை.
பின்னர் உடல்நலக்குறைவால் தானே சரணடைந்து சிறைக்குச் செல்வதாக பூலான் அறிவித்தார். மேலும் காந்தி மற்றும் கடவுளான துர்கா தேவி, இவர்களின் முன்தான் தனது கைது நிகழ வேண்டும், தனக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது, எட்டு வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்கக் கூடாது, இறுதியாக தன் குடும்பம் தன் கைதைப் பார்க்க வர வேண்டும்… என தான் விதித்த பல நிபந்தனைகளுக்குச் சம்மதம் பெற்றவுடன்தான் சரணடைய ஒப்புக்கொண்டார்.

அவர் கேட்டபடியே சம்பல் நதிக்கரையில் மகாத்மா காந்தி மற்றும் துர்காவின் சாட்சியாக 10,000 மக்கள் பங்குபெற 300 காவல்துறை அதிகாரிகளுடன் நடந்தது பூலானின் கைது. 48 குற்றங்களுக்காகப் பதியப்பட்ட பூலான் தனது சிறைத் தண்டனையின் 11 ஆண்டுகள் முடிந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
அரசியல் பிரவேசம் மற்றும் மக்களவை உறுப்பினராக தேர்வு
அடுத்த சில நாள்களில் முலாயம் சிங் யாதவ் உத்தரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றார். அவரின் அமைச்சரவை அதிரடி முடிவாக பூலானின் மேலிருக்கும் அனைத்து குற்றங்களிலிருந்தும் அவரை விடுவித்தது. பூலான் தேவிக்கு மட்டுமின்றி மக்கள் அனைவருக்கும் இது ஒரு அதிர்ச்சி செய்தியாக இருந்தது.
தன் வாழ்வை அரசியல் பக்கம் நகர்த்த முயன்ற பூலான், உம்மத்து சிங் என்ற காங்கிரஸ் உறுப்பினரை மணந்து கொண்டார். பதினோராவது மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்ட பூலான், தேர்தலில் வென்று மக்களுக்கு தன் சேவையைச் செய்ய ஒரு வாய்ப்பை அமைத்துக் கொண்டார்.
மக்களவை உறுப்பினராக பணி மற்றும் மறைவு
மக்களவை உறுப்பினராகப் பெண்ணுரிமை, குழந்தை திருமணத்திற்குத் தீர்வு, ஏழைகளுக்கான உரிமை முதலிய விஷயங்களுக்காகப் பெரிதும் குரல் கொடுத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் ஏழை சமூகத்தி ற்காகவும் தொடர்ந்து தன் போராட்டங்களை நடத்தி வந்த பூலான் ஒரு தனிச்சிறப்புடைய தலைவராகப் பார்க்கப்பட்டார்.
2001-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி, ஒரு நாள் கூட்டம் முடிந்து வெளியேறிய பூலான் தனது மார்பில் குண்டு பதக்கங்களை ஏந்தி மரணிக்கும்படி ஆனது. எதிர்க்கட்சியினரால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி என்று பூலானின் கொலை வழக்கு முடிவுபெற்றது.

பூலான் தேவியின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
- விடாமுயற்சியின் வெற்றி: பூலான் தேவியின் வாழ்க்கை, எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு முன்னேறலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
- சமூக மாற்றத்திற்கான குரல்: ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக உயர்ந்து, அவர்களின் உரிமைகளுக்காகப் போராடியது பூலானின் வாழ்வின் முக்கிய அம்சம்.
- பெண் அதிகாரமளித்தல்: பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைத் திருமணம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்து, பெண்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.
- மன்னிப்பு மற்றும் மறுவாழ்வு: தனது கடந்த கால தவறுகளை உணர்ந்து, சட்டத்தின் முன் சரணடைந்து, பின்னர் ஒரு சமூக சேவகராக மாறியது பூலானின் வாழ்வின் திருப்புமுனை.
- ஜனநாயகத்தின் வலிமை: ஒரு கொள்ளைக்காரரிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக மாறியது, இந்திய ஜனநாயகத்தின் வலிமையை காட்டுகிறது.
பூலான் தேவியின் வாழ்க்கை ஒரு சிக்கலான, முரண்பாடான கதை. அவரது வாழ்க்கையில் இருந்த இருண்ட பக்கங்களையும், பின்னர் அவர் எடுத்த நேர்மறையான மாற்றங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவரது வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் முக்கிய பாடம் என்னவென்றால், மனிதர்கள் தங்கள் கடந்த கால தவறுகளிலிருந்து மீண்டு, சமூகத்திற்கு நன்மை செய்யும் வகையில் தங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்பதுதான். பூலான் தேவியின் வாழ்க்கை ஒரு சமூக நீதிக்கான போராட்டத்தின் சின்னமாக நிலைத்து நிற்கிறது.