• December 6, 2024

பார்வையற்றவரின் வெற்றிக் கதை: நம்பிக்கையின் வெற்றி

 பார்வையற்றவரின் வெற்றிக் கதை: நம்பிக்கையின் வெற்றி

பார்வையற்ற ஒருவர் வீதியின் நடை பாதையில் துண்டை விரித்து ஒரு டப்பாவை வைத்து அமர்ந்திருந்தார். “கண்பார்வையற்ற எனக்கு காசு தாருங்கள்” என யாரோ எழுதித் தந்த அட்டை அவர் முன்னே இருந்தது. பலர் அவ்வழியே சென்றாலும், சிலரிடமிருந்து மட்டுமே சில்லரைகள் விழுந்தன. அவரது அன்றாட வாழ்விற்கு அது போதவில்லை.

அவ்வழியே வந்த ஒருவர் அந்த அட்டையில் உள்ளதை பார்த்தார். அதை நீக்கினார். வேறு ஓர் அட்டையை எடுத்து ஏதோ எழுதி அவர் அருகே வைத்துவிட்டு துண்டில் உள்ள டப்பாவில் சில பத்து ரூபாய் நோட்டுக்கள் போட்டுச் சென்றார்.

அதன் பின்னர் அவ்வழியே சென்றவர்கள் அட்டையில் எழுதியுள்ளவற்றை படித்ததும் ரூபாய் நோட்டுகள், காசுகளை தர்மமாக்கினர். மாலையில் அவர் காசுகள் நோட்டுகள் மிக அதிக அளவில் இருப்பதை உணர்ந்து மிக மகிழ்ந்தார் பார்வையற்றவர்.

மறு நாள் புதிய அட்டையை எழுதியவர் வருவதை ஓசை மூலம் அறிந்த அப் பார்வை அற்றவர் அவரிடம் என்ன எழுதினீர் எனக் கேட்க, “நீங்கள் காணும் அருமையான இந்த இனிய நாளைக் காண என்னால் இயலவில்லை. உங்கள் சிறு உதவி எனது உயிர் காக்கும். உங்கள் உதவிற்கு நன்றி.” இதைத்தான் எழுதினேன் என்றார் எழுதியவர்.

இதைப் படித்த ஒவ்வொருவருக்கும் ஓர் உந்துதல் ஏற்படும். குறையில்லாத உடல் தந்த இறைவனுக்கு இப்பார்வையற்றவருக்கு உதவுதல் மூலம் நன்றி கூறுவோம் என்ற எண்ணம் மேலோங்கும். காசுகள், நோட்டுகள் குவிந்ததன் காரணம் அறிந்த பார்வையற்றவரின் மனம் குளிர்ந்தது.