முண்டாசு கவி பாரதி –
பெண் விடுதலைக்காக மட்டுமல்லாமல், சுதந்திரத்திற்காகவும் பாடுபட்ட பாரதியின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் இன்றும் பெண்ணியம் பேசும். அந்த வரிகள் பெண்கள் மத்தியில் பிரபலமானதோடு மட்டுமல்லாமல் பாரதியின் கனவை, நினைவாக மாற்றி வருகிறது.
அதற்கு ஏற்றது போல் பெண்கள் பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பாரினில் களம் இறங்க ஆரம்பித்து விட்டார்கள். கற்பு நிலை என சொல்ல வந்தால் அவை இரு கட்சிக்கும் பொது என்ற அருமையான கருத்தை வலியுறுத்திய பாரதி எண்ணற்ற கவிகளை இயற்றி இருக்கிறார்.
இவரது பாடல் வரிகளை ஒவ்வொருவரும் படித்தால் கட்டாயம் அவர்களுக்குள் ஒரு பாரதி பிறப்பான் என்று கூறலாம். அந்த வகையில் பாரதியின் பாடல் வரிகளில் அக்னி குஞ்சொன்றினைக் கண்டேன்.. அதை ஆங்கொரு பொந்தினில் வைத்தேன் என்ற வரிகள் இன்றைய இளைஞர்களுக்கு உபதேசம் செய்யக்கூடிய வரிகள் மட்டுமல்ல.. எதையும் துணிந்து நின்று எதிர்க்கக் கூடிய வீரியத்தை தரக்கூடிய வரிகளாக உள்ளது என கூறலாம்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று தீண்டாமைக்கு சவுக்கடி கொடுத்த பாரதி சமூக ஒற்றுமை பற்றி பல பாடல்களில் கூறியிருக்கிறார். இவர் பாடல் வரிகளில் தொடாத துறைகளை இல்லை என்று கூறும் அளவிற்கு கருத்து நிறைந்து.இதனை ஒவ்வொரு மனிதரும் படித்து உணர்ந்து வாழத்தக்க கூடிய உபதேசங்களை பாடல் வரிகளாக தந்திருக்கிறார்.
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்.. என்ற வரிகள் அன்றே நதிகளை ஒருங்கிணைப்பதின் மூலம் ஏற்படக்கூடிய பயனை உணர்த்தியவன் என்று கூறலாம்.
சிந்து நதியின் மிசை என்ற பாடல் வரிகளை நீங்கள் படித்துப் பார்த்து.. அதை செயல்படுத்த நாம் முற்பட்டால் வளமான இந்தியாவை வல்லரசாக மாற்றி விடலாம். பாரதியின் பாடல் வரிகளில் நாட்டுப்பற்று, தெய்வப்பற்று, தமிழ் பற்று, மானுடப் பற்று என பலவகையான கருத்துக்கள் உடைய கவிதைகள் உள்ளது.
மகாகவியான பாரதி பாட்டுக்கு மட்டுமல்ல, நம் நாட்டிற்கும் மிகப்பெரிய சொத்து இவரை தேசிய கவி என்று அழைப்பதுதான் சிறப்பாக இருக்கும். மக்கள் கவியாக விளங்கிய இவர் இன்று வரை மக்களால் மதிக்கப்படக்கூடிய சிறப்புமிக்க தீர்க்கதரிசி என்று கூறலாம்.
பாரதியின் பாடல் வரிகளை நமது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் புதிய இந்தியாவை படைக்க உதவும் என்பதை உணர்ந்து கொள்வோம்.