• October 7, 2024

சேரர்கள் உருவாக்கிய உலகில் தலைச்சிறந்த போர் ஆயுதங்கள்!

 சேரர்கள் உருவாக்கிய உலகில் தலைச்சிறந்த போர் ஆயுதங்கள்!

இன்று ஒரு நாட்டின் வலிமை என்பது, அந்நாட்டில் இருக்கும் ஆயுதத்தை பொறுத்தே இருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மீது அமெரிக்க அணுகுண்டு வீசியதில் இருந்து, இன்று வரை சக்திவாய்ந்த, வல்லரசு நாடாக அமெரிக்க இருக்கிறது. இந்த நிகழ்காலத்தில் மட்டும் அல்ல, இறந்தகாலத்தில் கூட, பல இறப்புக்கு காரணமாக இருந்த ஆயுதங்களை வைத்திருந்த நாட்டையே அப்போது பலம்பொருந்திய நாடாக வரலாறும் சொல்கிறது. ஆக,

ஒரு நாட்டின் பலம் என்பதும், ஒரு இனத்தின் பலம் என்பதும், அவர்களின் வீரத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆயுதத்தை பொறுத்தே இருக்கிறது.

ஆயுதம்

ஆயுதம் – ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அச்சத்தை உருவாக்க உருவான ஒன்று. பயம் என்கிற உணர்வை மனிதன் என்று உணர்ந்தானோ, அன்றே அந்த பயத்தில் இருந்து தன்னை பாதுகாக்க ஆயுதத்தை உருவாக்க ஆரம்பித்துவிட்டான். கற்கால மனிதனும், தற்கால மனிதனும் தன் வீரத்தை நிரூபிக்க, தன் பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க கையில் எடுத்த ஒன்று தான் ஆயுதம்! இன்று ஆயுதம் பலவைகைப்படுகிறது. சிறு ஊசியில் தொடங்கி, அணுகுண்டு வரை அது நீள்கிறது. ஆனால் கற்காலமனிதன் முதல் ஆயுதமே கல் தான்..!

தமிழகத்தின் கற்காலம் என்பது சுமார் 15.1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்.. நீங்கள் இப்பொழுது பார்க்கும் இந்த கற்களின் வயது சுமார் 15 லட்சம் ஆண்டுகள்.

புரூஸ்புட் என்ற நிலவியல் ஆய்வாளர் 1863ல் சென்னையில் பல்லாவரம் அருகே சில கற்கருவிகளைக் கண்டெடுத்து, இவை கற்கால மக்களின் ஆயுதங்கள் என்று கருத்து தெரிவித்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் அதன் பிறகு  நடத்தபல அகழ்வாய்வுகளின் பல கல்லாயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, வட ஆர்க்காடு என 30 க்கும் மேற்பட்ட இடங்களில் பல கல்லாலான கைக்கோடரிகள், உளிகள், கத்திகள் மற்றும் சிறிய கற்கருவிகள் கண்டறியப்பட்டன. இதைவைத்து பார்த்த அவர்கள் தமிழகத்தில் கல்லாயுதங்கள் செய்யும் தொழிற்பட்டறைகளும், வாழ்விடங்களும் இருந்தமைகான ஆதாரங்களை வெளிகொண்டுவந்தனர். இந்த ஆயுதங்கள் அனைத்தும் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை…

வரலாற்றில் சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்களின் அறிவையும், ஆற்றலையும் பற்றி பேசிக்கொண்டிருக்கும் நாம், ஒரு கல்லை ஆயுதமாக மாற்ற, அதற்கென தொழிற்பட்டறைகளையே கற்கால தமிழர்கள் வைத்திருந்தனர் என்பதை அறியும்போதே ஒரு மிரட்சி உடம்பிற்குள்ளே பாய்கிறது.

எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் உடைய காலத்தையே வரலாற்றுக் காலம் என்பார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதேசமயத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலமும் இருந்திருக்கிறது. எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றி படிமங்கள், புதைபொருள்கள், எலும்புகள் ஆகியவற்றின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். அக்காலத்தையே வரலாற்றுக்கு முந்தைய காலம் என்கிறார்கள். இவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை நான்கு பிரிவுகளாக பிரிக்கின்றனர். கி.மு.10000 ஆண்டுகள் முந்தியவை பழைய கற்காலம் எனவும், கி.மு.10000 – கி.மு.4000 ஆண்டுகளை புதிய கற்காலம் எனவும், கி.மு.3000 – கி.மு.1500 ஆண்டுகளை செம்பு கற்காலம்  எனவும், கி.மு.1500 – கி.மு.600 ஆண்டுகளை இரும்பு காலம் எனவும் அழைத்தார்கள்.

இதில் கற்காலம் என்பது கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது. இதில் இந்த  பதிவில் நாம் பயணிக்கப்போவது, கி.மு.1500 – கி.மு.600 ஆண்டுகள் கொண்ட இரும்பு காலத்தில்!

இரும்பு காலம்

கால ஓட்டத்தில் மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு காலகட்டம் தான் இரும்புக் காலம். இக்காலகட்டத்தில் தான்  இரும்புக் கருவிகள் மற்றும் ஆயுதங்களின் பயன்பாடு முன்னணியில் இருந்தது.

எப்பொழுது பலம் கொண்ட ஆயுதம் கண்டுபிடித்தானோ, எப்பொழுது அதை தயாரிக்க ஆரம்பித்தானோ, அப்பொழுதே ஒருவனை ஒருவன் அடிமைப்படுத்த ஆரம்பித்துவிட்டது மனிதஇனம்.

ஆக அன்றும் இன்றும் எவரிடம் பலம்பொருந்திய ஆயுதம் இருக்கிறதோ, அவர்களே இந்த உலகத்தை ஆள நினைத்தார்கள் மற்றும் நினைக்கிறார்கள். தமிழகத்தில் இரும்புக்காலம் என்பதை வரலாற்றில் கி.மு.500 தொடங்கி கி.பி.300 வரைக்குமான சற்றேறக்குறைய 800 ஆண்டுகள் என தொல்லியலாலர்களும், சங்க காலம் என்று இலக்கிய திறனாய்வாளர்களும் கணக்கிட்டுள்ளனர். இக்கால கட்டத்தின் வரலாற்றினை அறிய மூன்று வெவ்வேறு சான்றுகள் ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கிறார்கள்.

  1. தொல்லியல் பொருட்கள்
  2. செம்மொழி இலக்கியங்கள் . இதில் குறிப்பாக எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்
  3. பழந்தமிழ் கல்வெட்டுகள். இந்த கல்வெட்டுடன் இதுவரை மண்ணிற்கு அடியில் கிடைத்த பானையோட்டு எழுத்துக் கீறல்களும் கணக்கில் வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு இந்த இரும்புக்காலத்தின் வழிவழியாக வந்த நம் தமிழ் இனம், காலஓட்டத்தில் கல்வி, கருத்தியல், தொழில்நுட்பம் ஆகிய மூன்றிலும் தேர்ச்சிபெற்றவர்களாக திகழ ஆரம்பிக்கிறார்கள்.

அந்த காலகட்டத்தில் தான், பாண்டியர்கள் தோன்றி, பின் சேர சோழர்கள் தென்னிந்தியாவை ஆட்சி செய்கிறார்கள். தமிழர்களில் பெருமையை உலகம் முழுவதும் சென்றடைய வைத்தவர்கள் இந்த சேர சோழ பாண்டியர்கள் தான்!

சேரர்கள் என்ன செய்தார்கள்!

உங்களுக்கு ஒரு கேள்வி இப்பொழுது எழலாம்.. “சோழர்களும், பாண்டியர்களும் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பல செய்திருக்கிறார்கள். ஆனால் சேரர்கள் என்ன செய்தார்கள்” என்கிற உங்கள் கேள்விக்கான பதில் தமிழகத்தில் மட்டும் அல்ல, உலகெங்கும் பரவி கிடக்கிறது. சேரர்கள் உருவாக்கிய ஆயுதங்கள் தான், வரலாற்றில் பல மன்னர்களை வெற்றி பெறசெய்திருக்கிறது. பல வரலாற்று சின்னங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது என்று தெரிந்தால், நீங்கள் ஆச்சரியத்தின் உயரத்திற்கே சென்றி விடுவீர்கள். ஆம், தமிழர்களாகிய சேரர்கள் உருவாக்கிய உறுதியான இரும்பு போர்வாள்கள் தான், அன்று உலகில் மிகச்சிறந்த மற்றும் தலைசிறந்த போர்வாள்கள்!

சங்ககால தமிழர்கள், வாள் வீச்சிலும் அதன் உற்பத்தியிலும் உலக புகழ்பெற்று உயர்ந்து இருந்தார்கள் என்பது இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் சொல்கின்றன. இரும்பை விட கடிமையான, அதிலும் போரின்போது அணியும் கவசத்தை துளைத்து கொண்டு செல்லும், ஒரு தனிப்பட்ட தனிமனால் செய்யப்பட்ட அரிய வாள்கள் நம்நாட்டில் இருந்துள்ளன. உலகில் அதிச்சிறந்த வாளாக கருதப்படும் வூட்ஸ் எஃகு வாள், கிமு 300 – 500 காலகட்டத்தில் தமிழர்களால், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட உருக்கு வாள் ஆகும்.

Wootz Steel எனப்படும் உலையில் உருக்கப்பட்டு தயாரிக்கப்படும் இவ்வகை எக்கு இரும்புகள்(Crucible Steel) கார்பன் அளவை மிக அதிகமாக கொண்டிருக்கும். இவ்வாள்களை உயர்வெப்ப உலையில் வைத்து தயாரிக்கும் முறை, தமிழகத்தின் அப்போதைய சேர மன்னர்களிடம் இருந்திருக்கிறது.  சொல்லப்போனால் உலகிலேயே அவர்களிடம் மட்டும்தான் இருந்திருக்கிறது. மூன்று உற்பத்தி கட்டங்களைத்  தாண்டிய இவை மிக உறுதியானவை. அதே நேரம் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை. நேர்த்தியான வடிவமைப்புடன், கைப்பிடிகள் மிக அழகான வேலைப்பாடுகள் கொண்டதால்,  பண்டைய காலத்தில் இதன் மதிப்பு அதிகமாக இருந்திருக்கிறது.

பண்டைய தமிழர்கள் கடல்தாண்டிய வாணிகம் செய்ததில் சிறந்து விளங்கினார்கள் என்கிறது வரலாறு. இது தமிழர்கள் வெளிநாடுகளுக்கு, மிளகு,  கிராம்பு போன்ற உணவுப்பொருட்களை, சந்தானம், அகில், மயில்தோகை, யானைத்தந்தம் போன்ற மணமூட்டிகளையும் அனுப்பியதாக வரலாற்றுக்குறிப்புகள் சொல்கின்றனர். இதே குறிப்புகளில் உணவையே, மணமூட்டிகளையும் தாண்டி, உலகில் தலைசிறந்த போர்வாள்களையும் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். பண்டைய தமிழ்நாடு, இன்றைய தமிழ்நாட்டின் எல்லைகள் போல் இல்லாமல், கேரளா, தெலுங்கானா, கர்நாடக, இலங்கை பகுதிகளை உள்ளடக்கியே இருந்திருக்கிறது. இந்த நிலப்பகுதிகளில் பெரும்பாலும் தமிழர்களே இருந்திருந்தார்கள்.

தமிழகத்தில் கொடுமணல் என்ற பகுதியிலும், தெலுங்கானாவின் கோல்கொண்டா, கர்நாடகா மற்றும் இலங்கையிலும் தயாரிக்கப்பட்டு நம் வீரம் நிறைந்த, உலகில் மிக உறுதியான போர்வாட்களும், இரும்பு தாதுக்களும்,  சீனா, ஆப்பிரிக்க மற்றும் மத்திய தரைகடல் நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்பட்டிருக்கிறது. உலகில் இதுவரை அறியப்பட்ட இரும்புகளில், மிகவும் மேன்மையானது தென்னிந்திய உருக்கு இரும்புகளே என்கிறது உலக கனிமவியல் தொல் ஆராய்ச்சி. இதற்கு காரணமும், சாட்சிகளும் இருக்கிறது.

பெயரில் இருக்கும் தமிழ் வரலாறு

இன்று Wootz Steel என்று அழைக்கப்படும் இந்த பெயரின் வரலாற்று பெயர் உருக்கு. இந்த Wootz Steel ஒரு சிறந்த உலோக கலவையால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. தமிழ் மொழியில் உலோகக் கலவைக்கான  வேர் சொல்லே உருக்கு என்பதே. இந்த பெயரே காலஓட்டத்தில் உச்ச, உச, உக்கு என மாறி, இன்று Wootz எஃகு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்துவி எஃகு, ஹிந்துவானி எஃகு, தெலிங் எஃகு மற்றும் சேரிக் இரும்பு போன்ற பல்வேறு பெயர்களால் இது பண்டைய உலகில் அறியப்பட்டது.

[insta-gallery id=”1″]

அதிக அளவில் கப்பல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட உருக்கு வாள்கள் அன்றைய காலகடத்தில் நடந்த பெர்சியா, இரான், ஐரோப்பிய போர்களில் முக்கிய இடம் வகித்தன. அரபு மொழியில் Jawab-E-hind என அந்த கத்திகளில் பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு “உலகிற்கு இந்தியாவின் பதில்” என பொருள்.  இந்த உருக்கு வாள்களை இறக்குமதி செய்து, அந்த வாளையும் குத்துவாளையும் வைத்திருப்பதை அவர்கள் பெருமிதமாக கருதினார்கள். டச்சுக்காரர்கள் இந்த கத்தியை இந்துவாணி (Hindwani) என்ற அழைத்தார்கள். இன்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஏன் அவர்கள் இந்தியா, இந்துவாணி என்று சொல்கிறார்கள், ஏன் சேர மன்னனின் பெயரையே, ஒரு குறிப்பில் இனத்தின் பெயரையோ வைக்கவில்லை என்று! தமிழகத்தில் இருந்து அவர்கள் இறக்குமதி செய்தாலும், அதை அவர்கள் இந்திய வாளாகத்தான் பார்த்தார்கள். இப்பொது கூட, நீங்கள் சென்னையில் இருந்து ஒரு பார்சலை வெளிநாட்ற்கு அனுப்பினால், அதை பெற்றவர்கள் இந்தியாவில் இருந்து வந்தது என்றே சொல்லுவார்கள். இது காலம் காலமாக இருக்கும் ஒரு பொது பண்பு.

வரலாற்றை விரிவாக பார்க்குமுன் இந்த உருக்குவாளில் எந்த மாதிரியான கலவையை தமிழன் மேற்கொண்டு உருவாக்கினான் என்பதையும் தெரிந்துகொள்வது நம் கடமை. இதை கொஞ்சம் வேதியியல் பெயரிலே குறிப்பிட்டு, விரிவாக சொல்கிறேன்.

உருக்கு (steel) என்பது இரும்பை முக்கிய பாகமாகக் கொண்ட ஒரு கலப்புலோகமாகும். இதில் இரும்புடன்  0.2% முதல் 2.1% எடையில் சிறிதளவு கரிமமும் கலந்திருக்கும். கரிமத்தின் அளவைப் பொறுத்து இதன் தரம் மாறுபடும். இதில் பொதுவாக மாங்கனீசு, நிக்கல், வனேடியம் போன்ற கனிமங்கள் கலக்கப்படுகின்றன. உருக்கின் தரம், வலு, நெகிழ்வுத்தன்மை, இழுவு தன்மை ஆகியவை இதனுடன் சேர்க்கப்படும் உலோகத்தைப் பொறுத்து மாறுபடும். இதனுடன் சேர்க்கப்படும் கரிமத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க இதன் வலு அதிகமாகும், ஆனால் நெகிழ்வுத்தன்மை குறையும். இதனுடன் சேர்க்கப்படும் கலப்பு உலோகங்களின் தன்மையைப் பொறுத்து உருக்கின் அடர்த்தி மாறுபடுகிறது. குறைந்தது பதினோரு விழுக்காடு குரோமியமும், சிறிதளவு நிக்கல் மற்றும் கரியும் கலந்து தயாரிக்கப்பட்டால் உருக்கில் துரு வராமல் இருக்கும் . உருக்குடன் குரோமியம் சேர்ப்பதால் துரு பிடித்தலும் அரிமானம் உண்டாவதும் தடுக்கப்படுகிறது.

இப்பொது நான் சொன்ன கலவையும், அதன் அளவு முறைகளையும் இன்றைய அறிவியல் முறை ஆராய்ந்து சொன்ன தகவல். ஆனால் இந்த கலவை முறை அப்போதைய பெருங்கற்காலப் பண்பாட்டில் இருந்த நம் தமிழனுக்கு எப்படி துல்லியமாக தெரிந்தது என்பதும், அதை எப்படி கண்டுபிடித்து, வழக்கத்திற்கு கொண்டுவந்து புழக்கத்திற்கு கொண்டுசென்றான் என்பதும் வரலாற்றால் இன்றுவரை கண்டறியப்படாத ஒன்று!

இந்த பதிவு பாகம் 1 தான் இந்த உருக்கு இரும்பு மற்றும், உருக்கு வாள், எப்படி உலகப்புகழ் பெற்றது என்பதும், வரலாற்றில் யார்யாரிடம் இந்த வாள்கள் இருந்தது என்பதையும் பாகம் 2 ல் பார்க்கலாம்!

இந்த பதிவை வீடியோவாக பார்க்க!

Watch full video in YouTube and Don’t forget to Subscribe