• April 2, 2024

பூலித்தேவனும்! அவரின் இறப்பில் இருக்கும் மர்மங்களும்!

 பூலித்தேவனும்! அவரின் இறப்பில் இருக்கும் மர்மங்களும்!

சுதந்திரமாக சுற்றி திரிந்தவர்களை, அந்த சுதந்திரத்திற்காகவே சுற்றி திரிய வைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். கடலையும் கடந்து சென்று வென்ற தமிழர்களை, கடல்தாண்டி வந்தவர்கள் நம்மை அடிமையாக்கி, அவர்களின் அதிகார பசிக்கு நம்மை இரையாக்கி, நம் அடையாளங்களை மண்ணோடு மண்ணாக்கி நம்மை 200 ஆண்டுகளாக அடக்கி ஆண்டார்கள். “நம் இடத்திற்கு வந்து நம்மை ஆளுவதா! நம் எதிர்ப்பே அவர்களுக்கு எமன்” என்று முதல் போராட்ட குரல் ஒலித்தது தென்னிந்தியாவில் தான்!அன்றும் இன்றும் வட இந்தியத் தலைவர்கள் தான் எளிதில் வான்புகழ் அடைகிறார்கள். இந்தியா முழுவதும் அறிந்து போற்றும் பெருமை அவர்களுக்கு எளிதாக கிடைத்து விடுகிறது. ஏன் உலகம் அறியும் வாய்ப்பும்  அவர்களுக்கு எளிதாகி விடுகிறது. ஆனால் தமிழ்நாட்டு தலைவர்கள் அவர்களுக்கு இணையாக அல்ல,  அவர்களுக்கும் மேலாக அறிவும் ஆற்றலும் பெற்று இருந்தாலும், அவர்களுக்கான அங்கீகாரமும் அவர்களுக்கான அடையாளமும் கிடைப்பது என்பது ஒரு போராட்டமாகவே இருக்கிறது. இதற்கு காரணம், உலக தலைவர்களை காட்டிலும் சிறந்த தலைவர்களும் சிறந்த அறிவாளிகளும் நம் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்பதை நம் தமிழர்களே முதலில் தெரிந்து கொள்வதில்லை. மேலும் செய்தித்தாள்களும் பிறருக்குத் தரும் பெருமையும் விளம்பரத்திலும், ஒரு சில பங்கு மட்டுமே நம் தமிழர்களுக்குத் தருகிறார்கள். அதனால் தான், வடநாடு புகழ்மிக்க தலைவர்கள் நிறைந்த நாடாக இருக்கிறது. தமிழ்நாடு திக்கற்று திகைக்க நேர்கின்றது. இந்த புறக்கணிப்பு என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து தான் வருகிறது. 

இவர்கள் எவ்வளவு புறக்கணித்தாலும், எவ்வளவு பொய் கதைகளை சொன்னாலும், வரலாற்றில் நடந்த சம்பவங்கள் அதற்கு என்றும் சாட்சியாக இருக்காது. ‘சிப்பாய் கலகம்’ என்ற சிந்தனையே இல்லாத நாளில், ‘அறப்போர்’ என்ற வார்த்தையை பிறவாத காலத்தில், பாரத நாட்டின் சொத்தையல்ல, சுதந்திரத்தை, சுயமரியாதையை சூறையாட நினைத்து,  சூழ்ச்சி வலை விரித்த வஞ்சகர்களை எதிர்த்து முதல் குரல் ஒலித்தது நம் தென்னிந்தியாவில், அதுவும் நம் வீரம் விளைந்த தமிழ்நாட்டில்…


இந்திய சுதந்திரப் போரின் முதல் முழக்கத்தை ஒருவன் எழுப்பினான். அவனின் குரல்  தமிழ்நாட்டு கோட்டைகளிலும்,  கொத்தளங்களிலும், மலைகளிலும் காடுகளிலும் பலமாக எதிரொலித்தது. இவன் துவக்கிவைத்த சுதந்திரப்போர், இவன் பலியான பின்னும், மானம் படைத்த இவன் வழிவந்தவர்கள் வழியாக, இவன் மரபினர் வழியாக, வீரத்தமிழர்களின் உள்ளங்களின் இயற்கையாகவே சுதந்திர போரின் நெருப்பை எரியவிட்டு சென்றது.

Poolithevan

இந்திய விடுதலை வரலாற்றில், வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கமிட்டவன். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருத்தப்பட்டவன். தமிழ்நாட்டின் திருநெல்வேலிச்சீமைப் பகுதியில் உள்ள ‘நெற்கட்டான் செவ்வல்’ என்ற இடத்தை ஆண்ட இவன், ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கு எதிராக, தம் வீர வாளை உயர்த்திய முதல்தமிழன் பூலித்தேவன்.

நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?

நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே” 


என்ற நாட்டுப்புறப் பாடலை நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா? இன்னமும் தென்பாண்டிநாட்டுப் பகுதிகளில் பூலித்தேவரின் வீரமும் ஆற்றலும் ஆளுமையும் பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. வாருங்கள் பூலித்தேவரின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் போர் குணத்தையும் பார்ப்போம்!

பூலித்தேவரின் மூதாதையர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் பகுதியிலிருந்து வந்து, சங்கரன்கோயிலின் “ஆவுடையாபுரம்” என்ற பகுதியில் கோட்டையொன்றைக் கட்டி ஆண்டு வந்தனர். குறுநில மன்னர்களுக்கு உரிய அந்தஸ்து அவர்களுக்கு இருந்தது. அந்தப் பரம்பரையின் பத்தாவது வாரிசான பூலித்தேவர், தனது ஆட்சித் தலைமையகத்தை ஆவுடையாபுரத்திலிருந்து நெற்கட்டான் செவ்வலுக்கு மாற்றினார். அங்கு ஒரு பெரிய கோட்டை ஒன்றையும் அவர் கட்டுவித்திருந்தார். 1715-ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவருக்கு, 1726 ஆம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டது. சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி அளிக்கப்பட்டது.

Poolithevar

பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப்பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம், மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற அனைத்துவகையான வீரவிளையாட்டுகளிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.


மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர்.

ஒரு அரசனை மக்களுக்கு பிடிக்கவேண்டும் என்றால், முதலில் அந்த அரசன் வீரனாக இருக்கவேண்டும். பேருக்கு மட்டும் அரசனாக இருந்துவிட்டு, மக்கள் வரிப்பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு ஆள்பவன் அரசன் அல்ல. வீரத்திற்கான விதையாக இருக்கவேண்டும் அவன். பிற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் அவன். அப்படி இருந்தவன் தான் பூலித்தேவன். இவருடைய புகழ் தென் தமிழ்நாடு முழுவதும் பரவுவதற்கும், இவர் வீரத்தை நாட்டு மக்கள் அறியவும் ஒரு போர் காரணமாக இருந்தது. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க, அந்நாட்டிலுள்ள ஆநிரைகளை கவர்ந்துகொண்டு வந்துவிடுவது முதல் படி. அந்த காளைகளை எதிரி ஒருவன் கவரும் போது, அவனோடு போரிட்டு மீண்டும் அந்த காளைகளை, அந்த ஆநிரைகளை தன் நாட்டிற்கு அழைத்து வருபவனே வீரன் ஆவான். அப்படித்தான், சிவகிரி பாளையக்காரரான வரகுணபாண்டியருடன் சண்டையிட்டு, தமது ஆநிரைகளை மீட்டு வந்தார் பூலித்தேவர். அவருடைய புகழ் தென் தமிழ்நாடு முழுவதும் பரவுவதற்கு இதுவே முதலாவது காரணமாக அமைந்தது.


ஆங்கிலேயர்க்கு எதிரான முதல் போரிலே வெற்றிபெற்றவன் பூலித்தேவன்.

வீரம் விளைத்த அரசன் யார் என்று கேட்டால், வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொல்லுவார்கள். அவர்மேல் தவறில்லை. அவனும் வீரம் பொருந்தியவன் தான். ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன்  பிறப்பதற்கு முன்பே பாஞ்சாலங்குறிச்சியை வீரபாண்டிய கட்டபொம்மனின் பாட்டனார் ஆண்டுவந்தார். அவரும் எட்டைய புர பாளையக்காரரும் பிரித்தானியருக்கு பணிந்து கப்பம் செலுத்தினர். ஆனால், கப்பம் கேட்டு வந்தவர்களிடம், “கப்பம் என்ற பேரில் சல்லிக்காசு கூடத் தர முடியாது” என்றும், கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது” என வீர முழக்கமிட்டார்  பூலித்தேவர்.

Pooli thevar

இதன் காரணமாக நெற்கட்டான் செவ்வல் கோட்டை ஆங்கிலேய படைகளின் தாக்குதலுக்கு உள்ளானது. பூலித்தேவரின் விவேகம் மிகுந்த வீரத்தின் முன், ஆங்கிலேய தளபதியின் வீரம் எடுபடவில்லை. அந்தப் போரில் பூலித்தேவரின் தரப்பு வெற்றி பெற்றது. இதன் காரணாமாக, கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலேய படையுடன் போர் செய்து வெற்றி பெற்ற முதல் தமிழர் என்ற பெருமை பூலித்தேவர் வசமானது. இந்திய விடுதலைப் போரின் முதல் வெற்றியும் இதுவே!

பூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். அதனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக, உள்நாட்டு அரசர்களின் கூட்டணியினையும் அவர் அமைத்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே, ஆங்கிலேயர்களுக்கு எதிராக, சுதேச அரசுகளின் கூட்டணி ஒன்றை அமைத்தவர் என்ற பெருமையும் பூலித்தேவருக்குச் சொந்தமானது. அந்தக் கூட்டணியில் கொல்லங்கொண்டான், சேத்தூர், வடகரை, ஊத்துமலை, தலைவன் கோட்டை ஆகிய பாளையங்களும் திருவனந்தபுரம் அரசும் இணைந்து கொண்டன.


ஒரு ஆண்டு அல்ல, இரண்டு ஆண்டு அல்ல. தொடர்ச்சியாக 17 ஆண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பூலித்தேவரின் படை பல போர்களை நடத்தியது. அவை அனைத்திலும் தோல்வியையே கண்ட ஆங்கிலேயர் படை, பின் அவர்களின் இனத்திற்கு உண்டான சூழ்ச்சி வலையை விரித்தது. பூலித்தேவரின் சொந்தத் தமிழ்மக்களைக் கொண்டே அவரைக் கருவறுக்க வேண்டுமெனத் திட்டமிட்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஒருவனைத் தேர்வு செய்தது. அவன் பெயர் முகமது யூசுப்கான். அவனுக்கு மற்றுமொரு பெயரும் இருந்தது. அது ‘மருதநாயகம்’.

Maruthanayagam

ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக பலபோர் பிரிந்த மருதநாயகமும் வீரத்தில் சளைத்தவன் அல்ல. பல போர்முறைகளை கற்று, பல அரசர்களை அழித்து, ஆங்கிலேயர்களை தன் வீரத்தால் வசப்படுத்தியவன் இவன். பூலித்தேவருடன் போராடுவதற்கு அவரை போலவே, சுதேச மக்களைக் கொண்ட படை அமைத்து போரிட்டான் மருதநாயகம். என்றாலும் அவனால் பூலித்தேவரை வெல்ல முடியவில்லை. இதனால் மாற்று வழியை யோசித்த அவன், பூலித்தேவர் ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்படுத்தியிருந்த கூட்டணியை சீர்குலைக்க முற்பட்டான். திருவிதாங்கூர் அரசு அவனது சூழ்ச்சியில் அகப்பட்டு, பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலுக்கு எதிராகத் திரும்பியது. பின் நடுவக்குறிச்சிப் பாளையக்காரருக்கு இலஞ்சம் கொடுத்து தன் வசம் இழுத்துக் கொண்டான் மருதநாயகம். பூலித்தேவரின் படையில் இருந்த பல வீரர்களுக்கும் மருத நாயகம் இலஞ்சம் கொடுத்தான் என்றும் கூறப்படுகின்றது. மேலும், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை போன்ற இடங்களில் இருந்தெல்லாம் ஆட்களைத் திரட்டி, பூலித்தேவருடன் கூட்டணியிலிருந்த அரசுகளைத் தோற்கடித்த மருதநாயகம், இறுதியில் பூலித்தேவரையும் நேரடியாக எதிர்த்தான்.


நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார். ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களைத் திரட்டிப் போரிட்ட மருதநாயகத்திடம், 1761 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி பூலித்தேவர் தோல்வி அடைந்தார். எனினும் அவன் கையில் சிக்காமல் கடலாடிப் பகுதிக்கு தப்பிச் சென்றார் பூலித்தேவர். இதனால் ஆத்திரமடைந்த மருதநாயகம் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வல், பனையூர், வாசுதேவநல்லூர் உட்பட 29 கோட்டைகளை இடித்து தரைமட்டமாக்கி அழித்தான் என வரலாறு கூறுகின்றது.

பின் மருதநாயகம் 1764 ஆம் ஆண்டு உயிரிழந்தான். அதன் பின்னர் பூலித்தேவர் மீண்டும் நெற்கட்டான் செவ்வலுக்கு வந்து ஆட்சி செய்தார். ஆனால், விதி வலியதாயிருந்தது. 1767-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள்  நெற்கட்டான் செவ்வல்பாளையத்தின் மன்னரான பூலித்தேவரைப் பிடிக்கப் பெரும்படையுடன் வந்தனர். 1767-ம் ஆண்டு மே மாதம் டொனல்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், கேப்டன் ஹார்பர் ஆகியோர் வாசுதேவ நல்லூர் கோட்டையைத் தாக்கினார்கள். பெரும்படைத் தாக்குதலை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரிட்டார். ஆங்கிலேயரின் பீரங்கிகளின் தாக்குதலினால் கோட்டை சுவரில் ஒட்டை ஏற்பட்டது. உடனடியாக பூலித்தேவரின் வீரர்கள் களிமண்ணும், வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் பயனளிக்காத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்தனர். ஒரு வாரம் நடந்த இந்த உக்கிரமான போரில் நெற்கட்டான் செவல்கோட்டையை தகர்த்தார்கள் ஆங்கிலேயர்கள். பூலித்தேவனின் மனைவி, மக்கள் உயிருடன் ஆங்கிலேயர்களால் கொளுத்தப்பட்டனர். மாவீரன் பூலித்தேவனை கைது செய்து பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் சங்கரநயினார் திருக்கோயிலில் உள்ள இறைவனை வழிபட அனுமதி கேட்டார் பூலித்தேவர். அதன்படி பூலித்தேவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த இடத்தில நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பூலித்தேவனின் மற்றொரு வரலாறும் ஒன்று உள்ளது. இதை நீங்கள் தெரிந்துகொண்டால் தான், பூலித்தேவனின் இறுதி வாழ்க்கையை புரிந்துகொள்ள முடியும்.

தன்னுடைய இலவாயத்தில், இலஞ்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்றும் மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார். ஒரு வீரனாக மட்டும் இல்லாமல், இறைபக்தியிலும் பூலித்தேவர் சிறந்ததே விளங்கி இருக்கிறார். பாளையத்திலிருந்து வரும் வருமானத்தில், தனது நிர்வாகத்திற்கு போக, மீதி பணத்தில், மக்களுக்கு பயன்படுத்தியம் மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார் பூலித்தேவன். திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கு பூலித்தேவர் திருப்பணி மற்றும் முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டதை செய்துள்ளார். இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.


அதுமட்டும் இல்லாமல், ஒரு பெரிய மாகானின் பிரதான சீடன் பூலித்தேவர் இருந்திருக்கிறார். பூலித்தேவரின் குருவாக விளங்கி அவருக்கு வழிகாட்டியவர் வேலப்ப தேசிகர் எனும் மகான்.  வேலப்ப தேசிகர் பாண்டிய நாட்டில் பல தலங்களை தரிசித்த பின் சங்கரன்கோவில் வந்து சிறிது காலம் வாழ்ந்து வந்தார். இந்தக் காலத்தில்தான் பூலித்தேவன் வேலப்பதேசிகரை அறிந்துகொண்டார். வேலப்பதேசிகர் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரலிங்க சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் சென்று அத்தல இறைவனை வழிபட்டு அக்கோயிலிலே தவம் செய்வார். ஆலயத்திற்கு வந்து வழிபடும் மக்களின் உடலில் ஏற்படும் நோய்களையும், மனதால் உண்டான நோய்களையும் போக்குவார்.

ஒரு முறை பூலித்தேவருக்கு குன்மநோயால் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. வேலப்ப தேசிகர் சுவாமிகள் தன்னுடைய தவவலிமையால் குன்மநோயைப் போக்கினார். இதன்மூலம் அந்த மகானின் மேல் அதிக ஈடுபாடு  ஈடுபாடு கொண்டார் பூலித்தேவர். நான் முன்னரே சொன்னது போல, பூலித்தேவரை கைது செய்து ஆங்கிலேயர்கள் இழுத்து வந்தபோது வேலப்ப தேசிகர் மடம் முன்பு கொண்டு வந்தனர். கோயிலுக்குள் சென்ற பூலித்தேவர் திடீரென்று ஏற்பட்ட புகையால் காணாமல் போகிவிட்டார். இதனால் ஆங்கிலேயரால் பூலித்தேவனை பிடிக்க முடியவில்லை. பூலித்தேவர் யார் கண்ணுக்கும் தென்படாமல் மாயமாக மறைந்து விட்டார்.என்ன நடந்தது அங்கு!

அங்கே ஒரு நிமிடம் நின்று தம்முடைய குருவை நோக்கி மனமுருகி வேண்டியிருக்கிறார் பூலித்தேவர். நான் என்மானத்தோடு வானுலகம் செல்லுவதற்கான வரத்தை எனக்குத் தந்தருளுங்கள் என்று வேண்டினார் பூலித்தேவர். உடனே சூட்சம உடலோடு வெளிவந்த வேலப்ப தேசிகர் தன்னுடைய சீடனுக்கு மட்டுமே காட்சிகொடுத்தார். ‘பூலித்தேவா வா என்னுடன்’ என்று கூறி முன்னால் சென்றார். பின்னால் நடந்தார் பூலித்தேவர். “பூலித்தேவா இனி யார் கண்ணிலும் தெரியமாட்டாய். மானத்தோடு உன் உடலுடன் சொர்க்கம் செல்வாய்” என்று கூறினார் குரு. உடனே தியானத்தில் அமர்ந்தார் பூலித்தேவர். அப்படியே சொர்க்கத்துக்கே சென்று விட்டார் என்கிறது இந்தப் பகுதி மக்களின் வாய்மொழி வரலாறு.

Poolithevan Temple Tamilnadu

மக்களின் வாய்மொழி வரலாற்றுக்கு வலுசேர்க்கும்வகையில் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் பூலித்தேவன் அறை என்று ஒன்று உள்ளது. ‘இதுதான் பூலித்தேவர் காணாமல் போன இடம்’ என்ற அறிவிப்பு பலகையும் அங்கு காணப்படுகிறது. அந்த இடம் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதற்கேற்ப ஆங்கிலேயர்கள் எவ்வளவு தேடியும் பூலித்தேவரை உயிருடன் பிடிக்கமுடியாமல் போயிற்று. இதனால், இனி பிற பாளையக்காரர்கள் தங்களைக் கண்டு பயப்பட மாட்டார்களோ என்று எண்ணிய ஆங்கிலேயர்கள், வேறு ஒரு வீரனைக் களத்து மேட்டில் வைத்து தீயிட்டு கொளுத்தி விட்டு, பூலித்தேவனைக் கொன்று விட்டதாக கூறிவிட்டார்கள் என்றும், மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை இரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

எதுவாகினும்! இவரது இறப்பில் வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம். ஆனால் இவரது வீரத்திலும், நாட்டு பற்றிலும் சந்தேகமே இல்லை!

வரலாற்றில் ராஜராஜசோழனின் பெயர் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம், தஞ்சை பெருவுடையார் கோயிலும், அவனின் மகன் ராஜேந்திர சோழனின் பெயரும் இருக்கும். இது இல்லாமல் அவனின் வரலாறு முற்று பெறாது. அதுபோலவே பூலித்தேவனின் வாழ்க்கையிலும், அவனின் பல வெற்றிக்கும், அவனுக்கு துணையாக ஒருசிலர் இருந்திருக்கிறார்கள். அவர்களையும் நினைவு கூறுவது என்னுடைய பொறுப்பும், அதை தெரிந்துகொள்வது உங்களுக்கு கடமையும் இருக்கிறது.

ஒண்டிவீரன்

பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர். இவருடன் பொட்டி பகடை கருப்பன் பகடை போன்றோறும் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களேயாவர். ஆங்கிலேய படைகளை தனியாக சென்று, அதாவது ஒண்டியாக சென்று எதிரிகளை கொன்றதால் ஒண்டிவீரன் என மக்களால் அழைக்கப்பட்டார் இவர். பூலித்தேவருடன் பல போர்களையும், போர் களங்களையும் கண்டு அதில் வெற்றிகளையும் பெற்றவர்.


Ontiveeran

வெண்ணிக் காலாடி (பெரிய காலாடி)

பூலித்தேவன் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர். பூலித்தேவரை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணினார் கான்சாகிப், இரவில் பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிடலாம் என்று தீர்மானித்து கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்த செய்தியை அறிந்த பெரிய காலாடி சில வீரர்களுடன் சென்று அம்முகாமைத் தாக்கினார். அப்போது எதிரி வீரன் ஒருவன் மறைந்திருந்து தாக்கியதால் வெண்ணிக் காலாடி வயிறு கிழிக்கப்பட்டு, மிகுந்த காயம் அடைந்தாலும், தன் வயிற்றைத் துண்டால் கட்டிக் கொண்டு எதிரிகளுடன் சண்டையிட்டு அவர்களை தோற்கடித்தார். பின் தான் எதிரிகளை தோற்கடித்ததையும், அவர்கள் படையுடன் காட்டில் சென்று பதுங்கியிருப்பதையும் தெரிவிக்க சூறாவளி காற்றைப்போல் தன் குதிரையை செலுத்தி பூலித்தேவரிடம் வந்தடைந்தார். பலத்த காயத்துடன் வந்த வெண்ணிக்காலாடியை பூலித்தேவர் தன் மடியில் கிடத்தி நடந்தவற்றை கேட்டுக்கொண்டிந்த நேரம், செய்தியை கூறிவிட்டு மரணம் அடைந்தார் வெண்ணிக் காலாடி.

Vennikaladi

தன் தளபதி பெரிய காலாடி எதிரிகளுடன் போரிட்டு மரணம் அடைந்த இடத்தில், பிற்காலத்தில் பூலித்தேவர், வீரக்கல் (நடுகல்) ஒன்றை நட்டு வைத்தார். அந்த இடம் இன்றும் இப்பகுதி மக்களால் ‘காலாடி மேடு’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு பூலித்தேவரின் வெற்றியில், பல வீரர்களின் வீரமும் அடங்கி இருக்கிறது.


 ஜாதி மத பேதத்திற்கு அப்பாற்பட்டு, எதிரிகளை களையெடுக்க பூலித்தேவருடன் பல வீரர்கள் அன்று ஒன்று சேர்ந்தார்கள்..! ஆனால் இவீரர்களை இன்று தனி தனி அடையாளங்களாக பிரித்து, அதெற்கென தனி தனி அமைப்பு உருவாகிவிட்டது. இவர்களை குறைசொல்லவும் முடியாது. ஏனென்றால் வரலாற்றில் விடுதலைக்காக போரிட்ட அணைவரையும் இந்த நாடு ஒன்றாகவே பார்க்கவேண்டும். ஒன்றாகவே மதிக்கவேண்டும். 


ஒவ்வொரு தமிழன் மட்டும் அல்ல. ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ள வேண்டியது நம் வீரத்தமிழன் பூலித்தேவனின் வரலாறு!

இதை வீடியோவாக பார்க்க கீழே பாருங்கள்!

Part-01
Part-02