• September 21, 2024

அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத திருக்குறள்கள்!

 அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத திருக்குறள்கள்!

இந்த உலகத்திற்கு தேவையான அனைத்து நீதிகளையும் பொதுவாக எழுதியதால் தான், இன்றுவரை உலக பொதுமறையாக இருக்கிறது திருவள்ளுவரின் திருக்குறள். இவரின் 133 அதிகாரத்தில், கொடுங்கோன்மை என்னும் அதிகாரம், ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை கேள்விக்கேட்டும் அதிகாரம் கொண்ட ஒரு அதிகாரம். ஒரு அரசன், ஒரு அரசு, ஒரு அரசியாவதி எப்படி இருக்கவேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு  முன்பே சொல்லிவிட்டு சென்ற ஒரு தீர்க்கதரிசி திருவள்ளுவர்.

56-ம் அதிகாரத்தில் இருக்கும் கொடுங்கோன்மை அதிகாரத்தில் இருக்கும் குறள்களை தெரிந்துகொள்ளுங்கள்.

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து (குறள்-551)

விளக்கம்:
ஒருவனின் மேல் இருக்கும் பகையால், அவனை கொலைசெய்வதை காட்டிலும் கொடூரமானது, மிக கொடியது எது தெரியுமா? குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு, அவர்களைத் துன்புறுத்தி, அந்த துன்பத்தில் மக்களை அழவைத்து தவறான வழியில் ஆளும் அரசாகும் என்கிறார் வள்ளுவர். கொலைகாரனை விட, பொருளுக்காக மக்களை துன்புறுத்தும் அரசன் கொடூரமானவன்.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (குறள்-552)

விளக்கம்:
ஆட்சியில் இருக்கும் அரசனோ அல்லது அரசியல்வாதியோ இவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, பொதுமக்களின் பொருட்களை பறிப்பது என்பது, கையில் வேல்வைத்து மக்களை மிரட்டி வழிபரிசெய்யும் கொள்ளைக்காரனின் செயலை போன்றது.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும் (குறள்-553)

விளக்கம்:
நாட்டில் நாள்தோறும் நடைபெறும் நன்மை தீமைகளை ஆராயாமால், அதுவும் முக்கியமாக தனது அரசால் விளையும் நன்மை தீமைகளை ஆராயாமால், ஆட்சிசெய்யும் அரசு விரைவில் கவிழ்ந்துபோகும் அல்லது அந்த அரசால் நாடே  சீர்குலைந்து போய்விடும்.

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு (குறள்-554)

விளக்கம்:
ஒரு அரசன் எதைப்பற்றியும் ஆராயாமல் கொடுமையான ஆட்சியை அதாவது கொடுங்கோல் ஆட்சியை செய்தால், அந்நாட்டில் பொருளையும், அந்நாட்டில் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள்-555)

விளக்கம்:
ஒரு அரசனின் தவறான ஆட்சியை கண்டு, அவனின் கொடுமைகளை கண்டு, அதனால் துன்பப்பட்டு,   பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர், அந்த ஆட்சியையும், அந்த அரசனையும் அழிக்கும் படைக்கருவியாகும்.

மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி (குறள்-556)

விளக்கம்:
ஒரு அரசனுடைய புகழ் நிலைபெற்று நிற்கவேண்டும் என்றால், அந்த அரசன் நீதிநெறி தவறாமல், நேர்மையான முறையில் ஆட்சி செய்யவேண்டும். இல்லையென்றால், அந்த அரசும், அந்த அரசரும் புகழ் பெறாமல், வரலாற்றில் இடம்பெறாமல், சரிந்து போவார்கள்.

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு (குறள்-557)

விளக்கம்:
மழையில்லாமல் இருந்தால் இந்த உலகத்திற்கு எப்படி துன்பங்களும், துயரங்களும் ஏற்படுமோ, அதேபோல் ஒரு அரசன் தன்னுடைய குடிமக்கள் மீது இரக்கம் இல்லாமல் இருந்தால், அந்த குடிமக்கள் அத்தகைய துன்பத்தை அனுபவிப்பார்கள்.

இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின் (குறள்-558)

விளக்கம்:
ஒரு நாட்டில் இருக்கும் குடிமக்கள் வறுமையின்றி வாழ்ந்தால்கூட, அந்த நாட்டை ஆளும் அரசன், தவறான பாதையில் கொடுங்கோல் ஆட்சி செய்தால், ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும், பணக்காரனாய் வாழ்வது தான்  மிக கொடுமையானதும், மிக துன்பமானதும்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல் (குறள்-559)

விளக்கம்:
ஒரு அரசன் முறை தவறிச் செயல்பட்டால், நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப்போகும். அதனால் இயற்கை தரும் மழையைத் தேக்கி வைக்கமுடியாது. இதனால், மழைநீரும் வீணாகும், அந்நாட்டில் வளமும் வீணாகும்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் (குறள்-560)

விளக்கம்:
ஓர் அரசனோ அல்லது அரசோ அந்நாட்டை முறைப்படி காக்கத் தவறினால், அந்த நாட்டிற்கு  ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது. அதிலும் முக்கியமான தொழில்கள் அனைத்தும் தேய்ந்து விடும் அதாவது காணாமல் போய்விடும்.

இந்த வீடியோவாக பார்க்க:

Watch full video in YouTube and Don’t forget to Subscribe