• May 9, 2024

தமிழர் வாழ்க்கையில் நடக்கும் சடங்கு மற்றும் சம்பிரதாயம்..! புதைந்திருப்பது என்ன? 

 தமிழர் வாழ்க்கையில் நடக்கும் சடங்கு மற்றும் சம்பிரதாயம்..! புதைந்திருப்பது என்ன? 

Rituals

பிறப்பு முதல் இறப்பு வரை தமிழ் சமுதாய மக்களிடையே எண்ணற்ற  சடங்குகளும், சம்பிரதாயங்களும் காலம் காலமாக கடைபிடிக்க ப்பட்டு வருகின்றனர்.


இன்னும் இதனை நேர்மையாக கடைபிடிக்கிறவர்களும், மூடநம்பிக்கை என முத்திரை குத்தி கேலி செய்பவர்களும் இருக்கிறார்கள்.

இதில் பெண்களுக்கு என பல்வேறு சடங்குகள் பிறப்பு முதல் இறப்பு வரை கடைபிடிக்கப் பட்டு வருகிறது. அதில் புதைத்து இருக்கும் உண்மைகளை இனி காணலாம்.


சடங்குகள்  பற்றிய விளக்கம்:

சடங்கு (ritual) என்பது, சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட  சில செயல்முறைகளின் தொகுப்பாகும். மனிதரின் வாழ்வோடு சம்பந்தமான பல சடங்குகள் உள்ளன. அவை பிறப்பு சடங்குகள் , பெயர் சூட்டுதல், காது குத்துதல், பூப்படைதல், திருமணம், வளைகாப்பு, அறுபதாம் கல்யாணம், இறப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய சடங்குகள் நம் தமிழ் மக்களுடைய வாழ்வியலோடு அதிக தொடர்புள்ளவையாக உள்ளது.

இச்சடங்குகள் குடும்பம் தழைக்க, நோயின்றி வாழ, பழி பாவங்களைப் போக்க, துன்ப துயரங்கள் விலக, உறவுகள் நீடிக்க, எதிரிகளைத் தண்டிக்க, இயற்கையை வசப்படுத்த, விஞ்சிய ஆற்றலைப் பெற என்றவாறு பல்வேறு வகை நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை முன்னிட்டுச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.

Rituals
Rituals

நான்கு வகை சடங்குகள்:


1.வாழ்க்கை வட்ட சடங்குகள்.

 2.வளமைச் சடங்குகள், 3.வழிபாட்டுச் சடங்குகள், 4.மந்திரச் சடங்குகள் என நான்காகப் பிரிக்கலாம்.

மேலும் வாழ்க்கை வட்ட சடங்குகளை இரண்டாக பிரிக்கலாம்.


அவை முறையே 

1.மங்கலச் சடங்கு 


2.அமங்கலச் சடங்கு ஆகும்.

மங்கலச் சடங்குகளின் பிரிவுகள்:    

1.சேணை தொட்டு வைத்தல்


2.தொட்டிலிட்டு குழந்தைக்குப் பெயரிடல்

3.உணவூட்டல்


4.வாழ்நாள் வேள்வி

5.காதணி விழா மற்றும் மொட்டை6.எழுத்தறிவித்தல்

7.சிவதீக்கை


8.உபநயனம்

9.பூப்பு புனித நீராட்டு விழா10.திருமண உறுதி

11.பொன்னுருக்கல்

12.திருமுறைத் திருமணம்

13.வளைகாப்பு


அமங்கலச் சடங்குகள்:    

1.இயற்கை அடைதல் 


2.சடல நீராட்டு


3.திருவடிப் பேறு (மோட்ச தீபம்)

4.கல் நிறுவல்

5.ஆண்டுத் திதி


இத்தனை வகை சடங்குகளில் இனி மங்கலச் சடங்குகளில் உள்ள பிரிவுகளைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

மங்கள சடங்குகள்:

1.சேணை தொட்டு வைத்தல்:

குழந்தை பிறந்தவுடன்  அந்த குழந்தைக்கு இனிப்பு கலந்த சர்க்கரை நீரை அல்லது தேனை அந்த குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்க மோதிரத்தில் தொட்டு குழந்தையின் நாக்கில் படுமாறு தருவார்கள். இதுதான் சேனை வைத்தல் என்று பொருள் இவ்வாறு வைப்பதன் மூலம் பெரியவர்களின் நல்ல குணங்கள் அனைத்தும் அந்தக் குழந்தைக்குப் போய் சேரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இதுவரை இருந்து வருகிறது.

2.தொட்டிலிட்டு குழந்தைக்குப் பெயரிடல்:


குழந்தை தாயின் கருவறையில்  பனிக்குடத்தில் எவ்வாறு மிதந்த நிலையில் பத்துமாதம் இருந்ததோ அதே நிலையை அந்தக் குழந்தைக்கு பூமியில் வந்தபிறகும் எந்தவொரு சங்கடமின்றி அது மிதக்கும் நிலையோடு தன் தாயின் கருவறையில் இருப்பது போன்ற உணர்வை குழந்தைக்கு செயற்கையாக தரும் இடம்தான் தொட்டிலில் போடும் சம்பிரதாய சடங்கு. 

குழந்தைக்கு எந்தவொரு சங்கடமின்றி இன்றும் தொடர்கதையாய் நடக்கிறது. நம்புவதற்கு உங்கள் மனம் தயங்குகிறதா? நினைத்துப் பாருங்கள் இன்று ஸ்டெம்செல் என்று சொல்லப்படக்கூடிய தொப்புள் கொடியை சேகரிக்க கூடிய பழக்கம் யார் மூலம் தோன்றியது?   தொட்டிலில் குழந்தையை போடும் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெள்ளி தாயத்தில் அடைத்து  இடுப்பில் கட்டி  போடுவார்கள். குழந்தைக்கு தீராத நோய் ஏற்படும் போது அந்த தொப்புள் கொடியின் ஒரு பகுதியை எடுத்து சிறிது பொடித்து தேனில் கலந்து கொடுத்து காத்த மருத்துவம் எங்கிருந்து பிறந்தது? நம் தமிழ் இனத்திடம் இருந்து தான்.

Rituals
Rituals

 அதுமட்டுமின்றி தொப்புள் கொடியின் சிறு பகுதியை பெற்று கருத்தரிக்காதவர்கள் வாழைப்பழத்தில் வைத்து விழுங்கிவிட்டால் அதன் பிறகு அவர்கள் கருவுற்று மகப்பேறு அடைவர் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது. நவீன சமூகத்தில் அறிவியல் வளர்ந்துள்ள நிலையில் தொப்புள் கொடியில் ஸ்டெம் செல் ஆய்வினை மேற்கொண்டு உயிரணுக்களை உருவாக்க முடியும் என அன்றே உணர்த்தியவன் தமிழன்.


தாயின் வாசம் தூங்கும்போதும் வீசவேண்டும் என்பதற்காக இப்படி ஒரு சடங்கு சம்பிரதாயம். தொட்டில் இட்ட பின் பெயர் சூட்டுதல் நிகழ்வு நடைபெறும்.தங்களின் குலதெய்வ பெயரோ அல்லது தாத்தா, தாத்தாவின் தாத்தா பெயரை சூட்டுவது இன்று வரை வழக்கமாக உள்ளது.இது போன்று நிறைய விஷயங்களை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

3.உணவூட்டல்:

குழந்தை பிறந்த 6 மாதங்கள் கழித்து பல் முளைக்கும் சமயத்தில் உணவு ஊட்டுதல் எனப்படும் அன்னபிரசன்னம்  சடங்கானது நிகழ்த்தப்படும். இதில் வீடுகளில் உற்றார் உறவினர் கூடி மிகவும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடுவார்கள். இந்த சமயத்தில் குழந்தைக்கு அன்னம், பருப்பு, நெய் போன்ற உணவுகளை உறவுகள் அனைத்தும் ஊட்டி மகிழ்ந்து வாழ்த்தும். நம் கலாச்சாரத்தில் மட்டும்தான் இதுபோன்ற சம்பிரதாயங்கள் உள்ளது.


4.வாழ்நாள் வேள்வி:

குழந்தை பிறந்து ஓராண்டு கடந்து விட்டால் அந்த குழந்தை தீர்க்காயுளுடன் மிகவும் நல்ல முறையில் வளர வேண்டும் என்பதற்காக கடவுளை வேண்டி வேள்வி செய்வார்கள்.  இந்நிகழ்வு பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் இவ்விருவரின் உற்றார், உறவினர் அனைவரும் நிகழ்வில் கலந்துகொண்டு குழந்தை யை ஆசிர்வாதம் செய்து சிறப்பிப்பார்கள்.மேலும் நீண்ட ஆயுளும், நிறைவான அறிவையும் பெற பிரார்த்தணை செய்து கொள்வார்கள்.

Rituals
Rituals

5.காதணி விழா மற்றும் மொட்டை:

கர்ணவேதம் என அழைக்கப்படும் காது குத்தானது குழந்தை பிறந்த ஓராண்டில் அல்லது குழந்தை பிறந்த 21 ஆம் நாளில் குழந்தையின் இரண்டு காதுகளிலும் தோடு போட  காது குத்தபடும். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ எனும் குறளைப் போல ஒரு மனிதனிடம் இருக்கும் செல்வங்களில் மிகவும் போற்றத்தக்கது அவனின் கேட்டல் திறன் தான். ஒருவன் தன் வாழ்நாளில் ஞானிகளின் வாய்ச்சொல்லைக் கேட்டு நடந்தால் அவனின் வாழ்க்கை பொன் போல மின்னும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.


சூடாகரணம் எனும் வழக்கம்

குழந்தை பிறந்த சில மாதங்களில், குழந்தையின் தலைமுடி முதன்முதலில் நீக்கப்படுகின்றது.பிறந்த குழந்தைக்கு உடலில் உள்ள அழுக்குகளை நீக்க தினமும் குளிக்க வைக்கிறோம் .அது போல் குழந்தையின் மயிர்க்கால்களில் நச்சுக்கள் சேர்ந்து இருக்கும் இந்த நச்சுக்களை அகற்ற தான் மொட்டை போடுதல் சடங்கு நடைபெற்று வருகிறது.தாய், தந்தையர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று மடியில் அமர்த்திக் கொண்டு குழந்தையின் தலைமுடியை நீக்குவர். தூய்மையான வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.


6.எழுத்தறிவித்தல்:

கல்வி ஆரம்பம் (வித்யாரம்பம்)   

குழந்தை மழலைமொழி பேசத் தொடங்கியவுடன் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தையின் பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதி பயில்விப்பார்கள். பிறகு அடிப்படையான எழுத்துகளையும், எண்களையும் கற்றுத் தருவார்கள். குழந்தை பாடசாலையில் சேர்ந்து முறையான கல்வியைக் கற்க துவங்குவதற்கு முன்னர் அதற்கு அடிப்படையான கல்வியை வீட்டிலே கற்றுத் தர வேண்டும் என்பதை இச்சடங்கை விஜயதசமி யில் செய்வது மிகச்சிறந்த ஓன்றாகும்.


7.சிவதீக்கை

 மற்றும் 8.உபநயனம்:

குழந்தை வளர்ந்து பாலகப் பருவம் எய்தியவுடன், அவனை/அவளை பாடசாலையில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த குழந்தை முறையான கல்வியைக் கற்க தொடங்கும். முறையான கல்வியை துவங்கும் போது ஒரு மனிதன் இரண்டாவது முறையாகப் பிறக்கின்றான் என சொல்லப்படுகின்றது. கல்வி கற்றுத்தரும் ஆசான் அவனுக்கு தாய் ,தந்தை ஆகின்றார். ஆரம்பகாலங்களில் உபநயனம் என்பது ஆண் குழந்தைகளுக்கு யஜ்ஞோபவிதம் எனும் பூணூல் அணிந்து முறையான குரு குல கல்வியில் ஈடுபடுதல் ஆகும். இந்த சடங்கின் மூலம் அந்த குழந்தைக்கு கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் உணர்த்தப்படுகின்றது. 


9.பூப்புனித நீராட்டு விழா:

ஆரம்பகாலங்களில் ஆண்களும், பெண்களும் பருவமடைந்தவுடன் ‘கேஷாந்தம்’ அல்லது ’ரிதுசுத்தி’ எனப்படும் சடங்கு மேற்கொள்ளப்பட்டன. பருவ வயதை (பெரும்பாலும் 16 வயதை) அடைந்த ஆணின் சிகையும் முகத்திலுள்ள முடிகளும் மழிக்கப்படும். பிறகு நீராடி விட்டு, பாரம்பரிய உடை அணிந்துகொள்ளும் வழக்கம் இருந்தது.ஆனால் தற்போது இந்த சடங்கு ஆண்களுக்காக மேற்கொள்ளப்படுவது மிக அரிதாகி அழிந்து விட்டது. ஆயினும் பெண்களுக்கு மிகவும் பெரிதாகவும் ஆடம்பரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

சிறுமியாக இருப்பவள் குமரியாக மாறும்  பருவ வயதை அடையும் பெண்ணை தூய்மை படுத்துவது பூப்புனித விழாவின் விளக்கம் ஆகும். ஒரு பெண்ணின் முதல் மாதவிடாய் நாளில் தான் அவள் பருவ நிலைக்கு மாறுகிறாள் என்பது நமது முன்னோர்கள் நமக்கு கற்பித்த பண்பாடு ஆகும். சுமங்கலிப் பெண்கள் ஒன்றிணைந்து பூப்புனித பெண்ணை மஞ்சள் நீரில் நீராட்டுவது இதன் முக்கிய அம்சம் ஆகும். மேலும் தாய்மாமன் பச்சை ஓலைகளால் கட்டும் குச்சுக்குள் அந்த பெண் 16 நாட்கள் இருக்க வேண்டும் அப்படி இருப்பதினால் எதிர்காலத்தில் அவள் ஓர் குழந்தையை தாங்கும் அளவிற்கு அவளுக்கு சத்தான ஆகாரங்கள் குறிப்பாக பச்சை முட்டை யுடன், நல்லெண்ணெய் கலந்து தருவது உழுந்து களி, இடித்த அரிசி புட்டு, வெல்லம், பொட்டுக்கடலை ஆகிய உணவுகளை கொடுத்து அவளையும் கர்ப்ப பையையும் வலிமை படுத்துவது இதன் நோக்கமாகும்.

 மேலும் இவ்விழா நடத்துவதின் முக்கிய நோக்கம் எங்கள் வீட்டில் இல்லற வாழ்க்கைக்கு தகுதியடைந்த பெண் இருக்கிறாள் என ஊர் மக்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துவது இந்த விழாவின்  சிறப்பாகும்.


உதிர போக்கினை பார்த்து பெண் பிள்ளைகள் பயந்து கொள்ள கூடாது என்பதற்காக தான் சிவப்பு நிறத்தை தரும் மருதாணி யை கைகள் மற்றும் பாதத்தில் வைக்கும் ஓரு சடங்கு இன்னும் உள்ளது. மேலும் மருத்துவ ரீதியான குணங்களான உடலை குளிர்ச்சி கேச வளர்ச்சி யை இது ஊக்குவிக்கும்.

10.திருமண உறுதி:

பெண்ணுக்கு ஆணையும், ஆணுக்கு, பெண்ணையும் பிடிக்கும் பட்சத்தில் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதித்து திருமணத்திற்கு நாள் குறிப்பது நிச்சயதார்த்தம் ஆகும். வீட்டு வாசலில் முகூர்த்த கால் நட்டு வீட்டின் பூஜை அறையில் முகூர்த்த அரிசி அள்ளிப்போட்டு மண்டபத்திற்கு குடும்பத்துடன் புறப்படுவார்கள். 


இவ்வாறு செய்வதினால் திருமணத்தில் எந்தவொரு தடங்களும் வராது என்பது நம்பிக்கை ஆகும்.  திருமணத்திற்கு முந்தைய நாள் மாப்பிள்ளை அழைப்பு முதல் சாந்தி முகூர்த்தம் வரை பல சடங்குகள் அடங்கும்.

11.பொன்னுருக்கல்:

மணமாகும் பெண்ணுக்கு தாலி செய்வதற்காக நல்ல நேரம் பார்த்து தங்கத்தை உருக்கும் நிகழ்வே பொன்னுருக்கல் என்று அழைக்கப்படும். இதனை தங்க நகை செய்யும் ஆசாரி பெண்ணின் வீட்டிற்கு வந்ததும் மாப்பிள்ளை குடும்பமும், பெண்ணின் குடும்பமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக இறைவனை வேண்டிக்தங்கத்தை உருக்கி அதில் மாங்கல்யம் செய்வார்கள்.  

12.திருமுறைத் திருமணம்:

திருமணத்திற்கு முந்தைய நாள் மாப்பிள்ளை அழைப்பு முதல் சாந்தி முகூர்த்தம் வரை பல சடங்குகள் அடங்கும். மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்த பின் பெண் வீட்டார்கள் மேள தாளத்துடன் வாண வேடிக்கையுடன் சுமங்கலி பெண்கள் ஆரத்தி எடுத்து மணமகனை மண்டபத்திற்குள் அழைத்து செல்வார்கள்.

Rituals
Rituals

அதன் பின் காப்புகாட்டுதல் தொடங்கும்.இது கல்யாண காரியம் நிறைவேறும் வரை எந்தவொரு தீங்கும் மணமக்களை நெருங்க விடாமல் தடுக்கவே காப்புக்கட்டப் படுகிறது. நவதானிய பூஜை சுமங்கலி பெண்களால் சிறிய மண் சட்டிகளில் நவதானியங்களை செலுத்தி வழிபாடு  செய்வதினால் நவதானியங்கள் போல மணமக்களின் திருமண வாழ்க்கையும் வளர வேண்டும் என்பது இந்த சடங்கின் பொருள் ஆகும்.

இதன் பின் கன்னிகாதானம் தாலி கட்டுதல் நடக்கும். பின் அம்மி மிதித்தல்,அருந்ததிப் பார்த்தல் சடங்கு நடைபெறும்.

13.வளைகாப்பு:

திருமணமாகிய பெண்ணின் கர்ப்பகாலத்தில் எழாவது மாதத்தில் வளைகாப்புச் சடங்கு நடத்தப்படுவது தமிழர்கள் வழக்கம் ஆகும். பெண் வீட்டார்கள் தங்களது உறவினர்களுடன் பலவிதமான உணவுகளை சமைத்து மாப்பிள்ளை வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். 

பெண்ணிற்கு கண்ணாடி வளையல்கள் அனுவித்து அவரை தங்களது வீட்டிற்க்கு அழைத்து செல்வார்கள். குழந்தை பெற்றெடுப்பது என்பது ஒருவகையில் மறு பிறவியாகும். கருவுற்ற பெண்ணிற்கும் பிறக்கபோகும் குழந்தைக்கும் எந்தவொரு கெடுதலும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக வளைகாப்புச் சடங்கு நடத்தப்படுகிறது.

இத்தோடு குழந்தைக்கு ஏழாவது மாதத்தில் இருந்து கேட்கும் திறன் தாயின் கருவறையிலேயே ஏற்பட்டுவிடுகிறது. எனவே அந்த குழந்தைக்கு மங்களமான இசை நல்ல சப்தங்களை கேட்பதற்காக தான் கையில் கண்ணாடி வளையல்களை அடுக்கி இதில் எழும் சத்தத்தை குழந்தை கேட்க வளைகாப்பு நடத்திகிறோம்.

காலம் மாறி வருகிறது கலாச்சாரம் அழிந்து வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும். இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் நமது சடங்கு மற்றும் சம்பரதாயங்களில் ஓளிந்திருக்கு உண்மை கள்.இனியாவது மூடநம்பிக்கை என்று அவற்றிக்கு சாயம் பூசாமல் பின்பற்றுவோம். தமிழர் கலாச்சரத்தை நிலை நாட்டுவோம்.