• May 10, 2024

வைகை நாகரிகத்தின் பிரதிபலிப்பு தான் கீழடி..! – வரலாறு பகிரும் உண்மை..

 வைகை நாகரிகத்தின் பிரதிபலிப்பு தான் கீழடி..! – வரலாறு பகிரும் உண்மை..

Keeladi

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி கிராமம் மதுரையிலிருந்து தென்கிழக்கு 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


இங்கு தனியாருக்கு சொந்தமான தோப்பு ஒன்றில் 2014 ஆம் ஆண்டு முதல் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவானது அகழ்வாய்வை மேற்கொண்டது.

இந்த அகழ்வாராய்ச்சியில் வரலாற்றை புரட்டிப் போடக்கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறிப்பாக செங்கல் கட்ட சுவர், உறை கிணறு, வடிகால்கள் உள்ளிட்ட தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டது.


Keeladi
Keeladi

இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு வரை மூன்று கட்ட அகழ்வாய்வுகள் நடந்த பிறகு மத்திய அரசு அந்தப் பகுதியை கை விட்டு விட்டது. பின்னர் தமிழக தொல்லியல் துறையைச் சார்ந்த நிபுணர்கள் அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் இங்கு இருந்த உறை கிணறுகள், சுடுமண், குழாய்கள், நீர் வடிகட்டிகள், சாலை, தொட்டிகள் போன்றவற்றை ஆய்வு செய்தது.

இந்த ஆய்வில் அங்கிருந்த மக்கள் தங்கத்தை அதிக அளவு பயன்படுத்துவது தெரிய வந்ததோடு, அதற்கு சான்றாக தங்கத்தோடு, வளையம், தொங்கட்டான், மணிகள் தகடு, ஊசி உள்ளிட்ட அனைத்தும் கிடைத்தது.

இதுவரை பண்டைய மனிதர்களின் ஈமக்காடுகளை அதிகளவு ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், மனிதன் வாழ்ந்த பெரும் பகுதியா இந்த பகுதி தற்போது சேதம் ஆகாமல் தமிழகத்தில் கிடைத்த இடம் தான் கீழடி.

எனவே தமிழக வரலாற்றின் முக்கிய தளமாக இந்த கீழடியை நாம் கூறலாம். ஏறத்தாழ 2600 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இவர்களை கங்கை நதிக்கரையில் வாழ்ந்த மக்களோடு ஒப்பிடும்போது, அங்கு வாழ்ந்த மக்களோடு இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டு இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளது.


அதில் குறிப்பாக கருப்பு நிற பானைகள் மற்றும் பெண்களுக்கான ஆபரண மணிகளும், குஜராத் மாநிலத்தில் கிடைக்கும் சூது பவள மணிகளும் இங்கு கிடைத்திருப்பதை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் குதிரையின் எலும்பு இந்தப் பகுதியில் கிடைத்ததின் காரணத்தால் தமிழர்கள் குதிரையை சங்க காலத்தில் இருந்தே பயன்படுத்தி இருக்கலாம் என்பதற்கான வலுவான ஆதாரமாக இது உள்ளது.

இது வரை இந்த பகுதியில் நடந்த அகழ்வாய்வில் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு அவற்றிலிருந்து தங்க அணிகலன்கள், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பொருட்கள், விலங்குகளின் சுடுமண் பொம்மைகள், கண்ணாடி மணிகள், மை தீட்டும் கோல், செம்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள், இரும்பு ஆணிகள் உட்பட்ட 84 பொருட்கள் கிடைக்கப்பெற்றது. இந்த பொருட்கள் அனைத்தும் அங்கிருக்கும் அருங்காட்சியகத்தில் பார்வையிட வைக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு நான்கு குழிகள் தோண்டப்பட்ட நிலையில் 35 சென்டிமீட்டர் ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவையால் பூசப்பட்ட தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தளத்தில்  சிவப்பு நிற பானை ஓடுகள் பரவலாக கொட்டப்பட்டு தரை தளத்திற்கு வலுவூட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே கிடைத்த துளையிடப்பட்ட பானை ஓடுகள், வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், அழகிய வேலைபாடுடன் இருக்கும் பானை ஓடுகள், இவற்றில் மீன், ஏணி உள்ளிட்ட குறியீடுகளை நீங்கள் பார்க்கலாம். இந்த பானைகள் சிலவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்களில் குவிரன் எனும் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.


எனவே இந்த கீழடி நாகரிகம் கங்கை சமவெளி மக்களோடு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பில் இருந்திருக்கிறார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் கீழடி நாகரீகத்தை வைகை ஆற்று நாகரீகத்தின் பிரதிபலிப்பாக நாம் கூறலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.