
kotravai history
’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’யான, தமிழினத்தின் தொன்மையான தெய்வம் கொற்றவை. வாளொடு முன் தோன்றிய மூத்தகுடியின் போர் தெய்வமாகவும், வீரத்தையும் வெற்றியையும் தமிழர்களுக்கு அருளாக வழங்கிய கொற்றவையை இன்று மறந்தே போய்விட்டோம் நாம்.
தமிழர்கள் மறந்து போன கொற்றவையைப் பற்றி அறிந்துகொள்வோம்.
வரலாற்றுக்கு முந்தைய தொல்குடி சமூகத்திற்கு இயற்கை அவ்வளவு எளிதில் வசப்பட்டுவிடவில்லை. அவர்கள் தங்கள் ஒவ்வொரு நாளையும் போராடியே வென்றனர். ஒருவேளை உணவைக் கூட வேட்டையாடி மற்றொரு உயிரை வென்று, கொன்றால் தான் உண்டு. இல்லையேல், பட்டினி தான். ஒவ்வொரு நாளையும் திகிலுடனும், எப்போது எந்த மிருகம் எப்படி வந்து தாக்கும். எந்த பூச்சி எப்படிக் கடிக்கும் என்ற அச்சத்துடன் தான் வாழ்ந்தனர்.
இயற்கையானது ஆரம்பத்தில் விளங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு மிகப்பெரும் புதிராகவும், அச்சத்தைக் கொடுக்கக் கூடியதாகவுமே இருந்தது அவனுக்கு. எந்த அச்சம் அவனைப் பயமுறுத்தியதோ, அதை வெற்றிகொள்ள அந்த அச்சத்தையே கடவுளாகக் கொண்டு வழிபடத் தொடங்கினான். அதன் விளைவாக அச்சம் தரும் அந்த இயற்கையின் ஆற்றலை “சூர்” என்றும் “அணங்கு” என்றும் குறிப்பிட்டு வணங்கினான். அணங்கு என்றால் “துன்பம் தருவது” என்று பொருள். சூர் என்னும் சொல்லுக்கு “அச்சம்” என்பது பொருள். ஆதியில் சூரும், அணங்கும் உருவமற்றவையாகவே கருதப்பட்டன. பின்னர் அவை உருவம் உடையதாகவும், பால் பேதமற்றதாகவும் வழிபடப்பட்டது.
உருவம் மற்றும் பாலின வேறுபாடு அறியா நிலையில் சொல்லப்பட்ட சூரும், அணங்கும் காலப்போக்கில் தாய்த் தெய்வங்களாகக் கற்பிக்கப்பட்டன. சூர் என்பது சூர்மகள், சூரர மகளிர் என்றும் வழங்கப்பட்டது. சூரர மகள் என்னும் சொல்லுக்கு அச்சம் தரும் தெய்வப் பெண் என்பது பொருளாகும். அணங்கு என்பது அர மகளிர், ஆரர மகளிர், ஆரணங்கு என்றும் வழங்கப்பட்டது. ஆரணங்கு என்றால், மிக்க துன்பத்தைத் தருபவள் என்று பொருள்.
அணங்குடைச் சிலம்பு, அணங்குடைச் சாரல், அணங்குடை நெடுங்கோடு, அணங்குடை நெடுவரை, சூருடைச் சிலம்பு, சூர் உறை வெற்பு, அணங்குடை முந்நீர், சூருடை நனந்தலைச் சுனை, நிறை சுனை உறையும் சூர்மகள் முதலான தமிழிலக்கிய சொல்லாட்சிகள் மலை, மலைச்சாரல், நீர்ச்சுனை, நீர்நிலை முதலான இயற்கைப் பகுதிகளில் சூரும், அணங்கும் குடிகொண்டிருந்தன என்று சங்ககால மக்களின் நம்பிக்கைகளை பதிவு செய்துள்ளன. சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள சூர், அணங்கு பின்பு உருவான சமூகநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டு பலவகை நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டுச் சடங்குகளாகப் பரிணாமம் பெற்றன.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Rajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
மலை, மலையுச்சி, மலைச்சாரல் மற்றும் நீர்ச் சுனைகளில் வசிப்பதாக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சூரும், அணங்கும் குறிஞ்சி நிலத்திலிருந்து இறங்கி முல்லை நிலமாகிய காடுகளில் இடம் பெயர்ந்தபோது ‘ஓங்குபுகழ் கானமர் செல்வி’ என்றும் ‘காடுறை கடவுள்’ என்றும் அழைக்கப்பட்டு பின்னர், ‘பெருங்காட்டுக் கொற்றி’ என்றும் அதன் பின்னர் ‘கொற்றவை’ என்றும் பெயர் மாற்றம் பெற்றது. பிறகு கொற்றவை என்ற பெயரே நிலைத்துவிட்டது.
கொற்றவை
சங்க இலக்கியங்களில் பழையோள், கொற்றி, துணங்கை, காடுகிழவி, காடு கிழாள் மற்றும் மலைமகள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவது கொற்றவையே ஆகும்.
கொற்றம் என்றால் வெற்றி என்று பொருள். அவ்வை என்றால், அம்மை என்று பொருள். கொற்றவை என்றால் வெற்றியை அருளும் தாய் என்று பொருள் கொள்ளலாம். ஆதியில் ஐவகைத் திணைகளில் முதல் திணையாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய தாய் தெய்வமாகவும், பின்னர் முல்லை நிலத்திற்குரிய தாய் தெய்வமாகவும் கொற்றவை வழிபடப்பட்டாள். பிறகு, பாலை நிலத்திற்குரிய தாய்த் தெய்வமாகவே கொற்றவை அடையாளப்படுத்தப்படுகிறாள்.
பாலை
வீரத்தையும் காதலையும் முதன்மையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள், தொல் தமிழர்கள். அத்தகைய பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வியலை நிலங்களை அடிப்படையாக வைத்துப் பிரித்தனர். அவ்வகையில் தமிழ் நிலம் ஐந்நிலமாகப் பிரிக்கப் பட்டது. அவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவாகும். அவற்றுள் குறிஞ்சிக்குரிய கடவுளாக முருகனும் முல்லைக்குரிய கடவுளாகத் திருமாலும் மருதத்திற்குரிய கடவுளாக இந்திரனும் நெய்தலுக்குரிய கடவுளாக வருணனும் குறிக்கப்படுகின்றனர். இத்தகைய அமைப்பு முறையில் ‘கொற்றவை’ பாலை நிலத்திற்குரிய கடவுளாகச் சுட்டப்படுகிறாள்.
பாலை நில மக்களான மறவர்கள் மற்றும் எயினர்கள் கொற்றவையைத் தெய்வமெனப் போற்றி வழிபட்டனர். பாலை நிலத்துக்கு மட்டும் தான் அவள் கடவுளா? இல்லை… போருக்குச் செல்லும் வீரர்கள் மற்றும் வேட்டையாடச் செல்லும் வேட்டையாடிகள் என்று வெற்றியை வேண்டுபவர்கள் அனைவருக்கும் அவள் கடவுளாக விளங்கினாள். பாலை நிலம் மட்டுமல்லாமல், ஐம்பெரும் நிலங்களிலும் தாய் தெய்வமாக வழிபடப்பட்டவள் கொற்றவை.
பாலை நில மக்களுக்கு மறவர் என்று பெயர், போர் வீரர்களுக்கும் மறவர்கள் என்று தான் பெயர். தற்காலத்தில் மறவர்கள் என்பது தனி சாதியாகிவிட்டது. இந்தக் கட்டுரையில் மறவர்கள் என்று குறிப்பிடப்படுவது பாலை நில மக்களை என்பதை நினைவில் கொள்க.
கடலில் வாழும் தெய்வம் கடல்கெழு செல்வி, காட்டில் உரையும் தெய்வம் கானமர் செல்வி, பழையோள், பாய்கலைப் பாவை, காடு கிழாள் என்று பல்வேறு பெயர்களில் பெண் தெய்வங்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. இந்தப் பல்வேறு பெயர்களில் எல்லாம் வணங்கப்பட்டவள், காக்கும் தெய்வமான கொற்றவையே.
கொற்றவையைத் தெய்வமாகக் கொண்ட பாலை திணைக்கென்று தனி நிலமில்லை. குறிஞ்சியும் முல்லையும் தம் இயல்பான நிலையை கதிரவனின் வெக்கை மிகுதியால் இழந்து உருவான இடமே பாலை. பாலை நிலத்தில் வாழ்ந்த பழந்தமிழர்கள் வேட்டையாடுதலையே முதன்மையான தொழிலாகக் கொண்டவர்கள். தாங்கள் போருக்கும் ஆநிரைகளைக் கவருவதற்கும் செல்லும் போது வெற்றிபெற வேண்டி கொற்றவையை வழிபட்டே புறப்பட்டனர்.
மழை வளம் இல்லாத பாலை நிலப் பகுதியில் வாழும் மறவர்கள் வில்லையேந்திப் பகைவரை எதிர்த்துப் போருக்குச் செல்லும்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவள் கொற்றவை. அதற்குக் கைமாறாக, வீரத்தன்மைக்கு அடையாளமான அவிப்பலியை எதிர்பார்ப்பவள். அவிப்பலி என்றால் உயிரைப் பலியாகக் கொடுத்தல் என்பது பொருள். கொற்றவை நெற்றிக்கண்னை உடையவள், விண்ணோரால் போற்றப்படுபவள், குற்றம் இல்லாத சிறப்புக் கொண்ட வான நாட்டினை உடையவள் என்றும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் போற்றியுள்ளார்.
அவிப்பலி
கொற்றவைக்கு அவிப்பலி கொடுக்காவிட்டால் ஏற்படக் கூடிய நிலையைப் பற்றியும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறியுள்ளார். உயிர்ப்பலி கொடுக்காவிட்டால், மறவரின் மன்றங்கள் பாழ்படும், வழிப்பறி வாய்ப்பு இல்லாமல் மறவர் சினம் குறைந்து செருக்கு அடங்குவர், கொற்றவை மறவரின் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள், கள் குடித்து மகிழ்ந்து வாழும் வாழ்வு கிடைக்காது. மறவறின் தொழிலும், இயல்பும் வாழ்வும் பாழ்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு பாழ்படும் நிலை என்று பெயர்.
தமிழ் இலக்கணமான புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை கொற்றவை நிலை. அதாவது, போருக்குச் செல்லும் வேந்தன் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவதற்குக் கொற்றவையின் அருள் வேண்டும் என்று வெண்டிக் கொள்வது கொற்றவை நிலை ஆகும். இத்துடன் போருக்குச் செல்லும் வீரர்களது போர்த்திறம் குறித்தும் இத்துறையில் கூறப்படுகிறது. அதனால், கொற்றவை போர்க்கடவுளாகவே பழந்தமிழரால் வணங்கப்பட்டாள்.
கண்ணகி
சங்க இலக்கியங்கள் மூலம் கொற்றவை குறித்த குறிப்புகள் ஒருசில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன. காலத்தால் சங்க இலக்கியங்களுக்கு பிற்பட்டதாகக் கருத்தப்படக்கூடிய பரிபாடலில் கொற்றவை என்றும், கலித்தொகையில் பெருங்காட்டுக் கொற்றி என்றும் கொற்றவை குறிப்பிடப்படுகிறாள்.
காடு, மலையருவி, நீர்ச்சுனை போன்ற இயற்கைச் சூழல் மிகுந்த பகுதிகளை உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்த கொற்றவைக்கு சக்கரவாளக் கோட்டத்தில் ஐயை என்று அழைக்கப்படும் கொற்றவை கோவில் இருந்ததாகவும், அக்கோவிலில் யாரும் அறியாத வண்ணம் கவுந்தியடிகளும், கோவலனும், கண்ணகியும் ஒரு ஓரமாக இளைப்பாறியதாக இளங்கோவடிகள் தமது காப்பியத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழின் முதல் காப்பியமாகப் போற்றப்படும் சிலப்பதிகாரத்தின் இரண்டாவது காண்டமாகிய மதுரைக் காண்டத்தின் வேட்டுவவரி பாடல்களின் மூலம் தான் கொற்றவைக் கோலம் பற்றியும், வழிபாடு பற்றியும், போற்றுதல் பற்றியும் பல்வேறு அறிய தகவல்களை நாம் பெறமுடிகிறது.
பழந்தமிழ் சமூகம் வணங்கிய கொற்றவையின் உருவம் பற்றி தமிழிலக்கியங்களில் நமக்குக் கிடைக்கும் முதல் சான்றாக சிலப்பதிகாரம் விளங்குகிறது. சிலப்பதிகாரத்தின் வேட்டுவவரி பாடல்கள் மூலமாகத்தான் இளங்கோவடிகள் கொற்றவையின் திருக்கோலத்தை நம் மனக்கண்முன் கொண்டுவந்து காட்சிப்படுத்துகிறார்.
ஆநிரை கவர்தல்
ஆறலைக் கள்வர்கள் எனப்படும் எயினர்கள் வணங்கும் கடவுளாகக் கொற்றவை வேட்டுவவரியில் சித்திரிக்கப் பெற்றுள்ளாள். எயினர்கள் மறக்குணம் வாய்ந்தவராகவும், அவர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டதாகவும் ஆநிரை கவர்ந்து வந்தபின் தம்மைக் கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டுவவரி விவரிக்கிறது. ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையப்பொருளாகும்.
கலையமர் செல்வி, அணங்கு, கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சூலி, நீலி, ஐயை, கண்ணுதல் பாகம் ஆளுடையாள், திங்கள் வாழ்சடையாள், திருவமாற் கிளையாள், பாய்கலைப் பாவை முதலான பெயர்களில் கொற்றவையைக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள். செல்வி, ஐயை, அணங்கு முதலான பெயர்களில் கொற்றவையைக் குறிப்பிடும் வேட்டுவவரி பழந்தமிழர்களின் குறிஞ்சி, முல்லைநிலச் சமூகத்தின் தாய்த்தெய்வமே இக்கொற்றவை என்பதனையும் தவறாமல் பதிவு செய்கின்றது.
கொற்றவையின் உருவம்
தொல்குடிக் குமரி ஒருத்திக்கு கொற்றவைக் கோலம் புனையப்படுவதை இளங்கோவடிகள் பின்வருமாறு கூறுகிறார்.
தொல்குடியைச் சார்ந்த அக்கன்னிக்கு நெடிய கூந்தலைச் சடைமுடியாகக் கட்டி, அம்முடியைச் சுற்றிலும் பாம்புக் குட்டியின் உருவம் போன்று செய்த பொன்கயிற்றினால் கட்டினர். காட்டுப் பன்றியின் வளைந்த பற்களைக் கொண்டு அக்குமரியின் சடைமுடிமேல் பிறைநிலவு தோன்றும்படி செய்தனர். வலிமை பொருந்திய கொடிய வரிப்புலியின் பற்களைக் கொண்டு கோர்வையாக்கி, அவளது கழுத்தில் தாலியாகக் கட்டினர். வரிகளும், புள்ளிகளும் பொருந்திய புலித்தோலை அவளுக்கு ஆடையாக உடுத்தினர். வன்மையான வில் ஒன்றினை அவள் கையிலே கொடுத்தனர். இவ்வாறு கோலம் புனையப்பட்ட அக்குமரியை முருக்கிய கொம்பினை உடைய கலைமானின் மேல் ஏற்றி அமரச் செய்து கிளி, மயில், காட்டுக்கோழி, மதனப் பாவை, கழங்குக்காய் முதலான காணிக்கைகளை அவள் கையில் கொடுத்து உலாவரச் செய்தனர்.

இளங்கோவடிகள் கூறும் கொற்றவையின் உருவம் இதுதான்.
உலா வரும் கொற்றவையைப் பின் தொடர்ந்து மனம் வீசும் சந்தனம், அவரை, துவரை, மலர்கள் ஆகியவற்றைத் தாங்கியபடி மறப் பெண்கள் பின்னே சென்றனர். அவர்களைத் தொடர்ந்து வழிபறிக்குங்கால் கொட்டும் பறையும், சூறைகொள்ளுங்கால் ஊதும் சின்னமும், கொம்பும், புல்லாங்குழலும் பெருமை பொருந்திய மணியும் இசைத்து வலம் வந்தனர். அதற்குப் பிறகு கொற்றவையைப் பலியிடும் பலிபீடத்தைத் தொழுது, கொற்றவையைக் கைகூப்பி வணங்கினர். கொற்றவையைப் பாலை நில மக்கள் இவ்வாறு தான் போற்றி வழிபட்டனர்.
கலப்பு
பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாட்டில் ஆரியர்களின் வைதீகச் சடங்கு மற்றும் கோட்பாடு கலப்பதற்கு முன்பு இருந்த கொற்றவையின் கோலத்தையும், வழிபாட்டு முறைகளையும் இளங்கோவடிகள் படம்பிடித்துக் கூறுகிறார். கொற்றவை திருக்கோலம் புனையப்பெற்ற பெண்ணை கன்னியாகக் காட்டுகிறார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் பாபிலோனியா, சுமேரியா, கிரேக்கம் மற்றும் எகிப்து போன்ற பல நாடுகளில் தாய்த்தெய்வத்தை தாயாகவும், என்றும் அழியாக் கன்னியாகவும் உருவகப்படுத்தி வணங்கியுள்ளனர் என்பதற்கு பல்வேறு சான்றுகள் காணக்கிடைக்கிறது. பழந்தமிழர்களின் இத்தொன்மையான வழிபாட்டு முறையையே கன்னி பூசையாக ஆரியர்களின் வேத நூல்கள் உள்வாங்கிக் கொண்டன. இவ்வழிபாட்டின் எச்சமாகவே தற்போதைய கன்னி பூசை வழிபாடு உருவாகியிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கலைமான்
கொற்றவையின் ஊர்தி கலைமான் என்கிற குறிப்பு சிலப்பதிகாரத்தின் வேட்டுவவரியில் காணக்கிடைக்கிறது. சங்கம் மருவிய காலத்திற்கு பிறகு சமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் தான் அருளிய கோளாறு திருப்பதிகத்தில் கொற்றவையின் வாகனமாக கலைமான் இருந்துள்ளதை, ‘கலையதூர்தி’ என்று தன் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இளங்கோவடிகள் காலம் தொட்டு திருஞான சம்பந்தர் காலம் வரை கொற்றவையின் ஊர்தியாக கலைமான் இருந்துள்ளதையும் அதன் பிறகான காலத்தில் தான் கொற்றவை ஊர்தி வழக்கிழந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது.
தமிழகத்தில் உள்ள பல நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களில் இன்றைக்கு துர்க்கையாக நாம் வழிபாடும் தாய்த்தெய்வம் ஆரியர்களால் மடைமாற்றம் செய்யப்பட்ட கொற்றவையேயாகும்.

புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் பாடப்பட்ட பெரும்பாணாற்றுப் படையில், சூரனைக் கொன்றவளும், முருகனைப் பெற்ற வயிற்றினை உடையவளும், பேய்களாடும் துணங்கைக் கூத்தையும், அழகையும் கொண்ட தாய்த் தெய்வமாக கொற்றவையைக் குறிப்பிடுகிறார். பெரும்பாணாற்றுப் படை, காலத்தால் திருமுருகாற்றுப்படைக்கு முந்தைய நூலாக திகழக்கூடியது.
‘கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி’ என்னும் பாடலில் இடம்பெறும் ‘சேஎய் பயந்தமா அம் செல்வி’ என்ற சொற்றோடர் கொற்றவையயைக் குறிப்பதாகும்.
பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக இடம்பெறுகிற திருமுருகாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவனாக விளங்குகிற குறிஞ்சி நிலத் தலைவன் முருகப்பெருமானின் தாயாகக் கொற்றவையைக் குறிப்பிடுகிறார் புலவர் நக்கீரர்.
திருமுருகாற்றுப்படையில் தமிழ்க்கடவுள் முருகன் யாருடைய மகன் என்பதைக் குறிப்பிடுகிறபோது நக்கீரர் மூன்று சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறார். அவை பழையோள், கொற்றவை, மலைமகள் என்பவன. மூன்று பெயர்களும் மூன்று வெவ்வேறு காலக்கட்டத்தில் நிலவிய தொல்குடி சமூகத்தின் கொற்றவையைப் பற்றிய அடையாளங்களைக் கூறுகிறது.
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோள் குழவி!
இப்பாடலில் புலவர் நக்கீரர் குறிப்பிடுகிற மூன்று பெயர்களில் இறுதியாக வருகிற பழையோள் என்பது குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பழந்தமிழ் வேட்டைச் சமூக மக்களின் தாய்த் தெய்வமாகவும், அடுத்து இடம்பெற்றுள்ள கொற்றவை முல்லை நிலத்தின் தொல் குடிகளான வேட்டை மற்றும் மேய்ச்சலை முதன்மைத் தொழிலாகக் கொண்ட தொல் குடிகளின் தாய்த் தெய்வமாகவும், அதற்கடுத்து இடம்பெற்றுள்ள மலைமகள் நிலவுடைமைச் சமூக மக்களையும் மற்றும் ஆரியர்களின் வைதீகக் கோட்பாட்டையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்ட கலப்புத் தாய்த் தெய்வமாக காட்சியளிக்கிறாள்.
இப்பாடலில் வருகிற ‘வெற்றி வெல்போர்க் கொற்றவை’ என்ற சொற்றொடரின் பொருள் கொற்றவை போரில் வெற்றியைத் தருபவள் என்றும் ‘பழையோள்’ என்பது பழந்தமிழர்களின் தாய்த்தெய்வ வழிபாட்டில் கொற்றவையே மிகவும் தொன்மையான தாய்த்தெய்வம் என்பதும் இதன்மூலம் உறுதியாகிறது.
முருகப்பெருமானின் தாய் தான் கொற்றவை என திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுவதால், கொற்றவை முதலில் குறிஞ்சி மற்றும் முல்லை நிலத்திற்குரிய தாய்த்தெய்வமாகவும், அதன்பின், காலப்போக்கில் பாலைத் திணைக்குரிய தாய்த்தெய்வமாகவும் மாற்றம் பெற்றிருக்கிறாள் என்பதை மிகத்தெளிவாக அறியமுடிகிறது.
ஆதிக்கம்
மருதம் மற்றும் நெய்தல் நிலவுடைமைச் சமூகத்தில் தோன்றிய பேரரரசின் காலங்களில் தான் ஆரியர்களின் பெருந்தெய்வ வழிபாடு தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் துர்க்கை மற்றும் காளி போன்ற பெருந்தெய்வங்கள் தமிழர்களுக்கு அறிமுகமாகின்றன. போரில் வெற்றி வேண்டி வழிபடுகிற தொல்குடிகளின் தாய்த்தெய்வமான கொற்றவையும், ஆரியர்களின் போருக்குரிய தெய்வமாக விளங்குகிற காளியும் ஒரு புள்ளியில் இணைக்கப்படுகின்றனர். அதுவரை தனித்த தொன்மையான அடையாளங்களோடு காட்சியளித்த கொற்றவை மெல்ல மெல்ல ஆரியர்களின் சமசுகிருத மடைமாற்றத்திற்கு உட்பட்டு இன்று துர்கையாகவும், காளியாகவும் காட்சியளிக்கிறாள்.
வடமொழியில் துர்க்கம் என்றால் கோட்டை என்று பொருள். கோட்டையைக் காவல் காக்கும் தெய்வத்தை துர்கை என்று வடநாடுகளில் அழைத்தனர். அதுவே இன்று ஆரிய மதத்தின் தாக்கத்தால் தமிழகத்தில் வழிபடப்பட்ட கொற்றவை துர்கை என்று அழைக்கப்படுகிறது.

சாளுக்கியம், கேரளம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கலிங்கம், மேற்கு வங்கம், இந்தோனேசியா என்று தென் ஆசியா முழுவதும் வெற்றி பெற்ற, சோழர்களின் காவல் தெய்வம் நிசம்ப சூதனி. நிசம்ப சூதனியை வணங்கி, அவளுக்குப் பலியிட்ட பிறகே சோழர்கள் தம் போர்களைத் தொடங்கினர். தமிழர்களின் போர்த் தெய்வம் கொற்றவையின் மறுவடிவமே நிசம்பசூதனி என்பது குறிப்பிடப்படுகிறது.
நிசம்பசூதனி
சாளுக்கியம், கேரளம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கலிங்கம், மேற்கு வங்கம், இந்தோனேசியா என்று தென் ஆசியா முழுவதும் வெற்றி பெற்ற, சோழர்களின் காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் வடிபடப்பட்டவள் நிசம்ப சூதனி. நிசம்ப சூதனியை வணங்கி, அவளுக்குப் பலியிட்ட பிறகே சோழர்கள் தம் போர்களைத் தொடங்கினர். தமிழர்களின் போர்த் தெய்வம் கொற்றவையின் மறுவடிவமே நிசம்பசூதனி என்பது குறிப்பிடப்படுகிறது.
வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற சோழ மன்னர்களில் கோப்பரகேசரி வர்மன் என்றும் கங்கை கொண்டான் என்றும் கடாரம் கொண்டான் என்றும் புகழப்படுகிற இராசேந்திரன் தனது ஆட்சிக்காலத்தில் காஞ்சியில் ‘கருக்கினிலமர்ந்தாள்’ என்னும் பெயரில் கொற்றவைக்கு கோவில் கட்டினான்.
கடந்த 2004-ம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட ஒரு சுடுமண் பானை ஓட்டின் மீது மானும், பறவையும், நெற்கதிரும் மற்றும் தாய்த்தெய்வமும் பொறிக்கப்பட்ட பானை ஓடொன்று கிடைத்தது. அப்பானை ஓட்டிலிருக்கும் தாய்த்தெய்வம் கொற்றவையென்றும், அத்தாய்த்தெய்வம் வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய தொல்குடிகளின் நகர்வைப் பிரதிபலிப்பதாக உள்ளதென்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது சற்றேறக்குறைய மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது.
சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறையின் முன்னோனாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவன் புலவுச்சோறு தந்து அயிரை (கொற்றவை) தெய்வத்தை வழிபட்டான் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. அயிரை ( கொற்றவை) வீற்றிருந்த இடம் என்பதாலேயே இம்மலை அயிரை மலை என வழங்கப்படுகிறது. சேர மன்னர்கள் கொற்றவையைத் தங்களது குலத்தெய்வமாக கருதி வழிபாடு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல், தற்போதைய கேரள மாநிலம் மறையூரில் காணப்படும் கொற்றவை ஓவியமானது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
துர்க்கை
தமிழர்களின் தாய் வழிபாடான கொற்றவை வழிபாடு, துர்க்கை வழிபாடாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தொல்குடி தாய்த் தெய்வத்தின் அடையாளம் இன்று ஆரியர்களால் முழுவதும் சமஸ்கிருத மயமாக்கப்பட்டுவிட்டது. மாமன்னர் இராசராச சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராசராசேசுவரம் திருக்கோயில் கூட பிரகதீஸ்வரர் கோவில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இவையெல்லாம் வெறும் பெயர் மாற்றம் தானே என்று எளிதில் கடந்துவிட முடியாது. பெயர் மாற்றம் கூட ஒருவித அடையாள அழிப்புதான் என்பதை நாம் எப்போது புரிந்துகொள்ள போகிறோமோ? இதுபோன்ற இன்னும் பல அடையாள அழிப்பும், வரலாற்றுத் திரிபும் இன்றும் ஏதோவொரு வடிவில் நம் பண்பாட்டின் மீதும், கலாச்சாரத்தின் மீதும், மரபுகளின் மீதும் மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ தொடுக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. இவற்றையெல்லாம் நாம் கண்டும் காணமால் கடந்துவிடுகிறோம்.

ஒரு இனத்தின் தனித்துவமாக விளங்கக்கூடிய அடையாளத்தையும், வரலாற்றையும், மரபுகளையும் அழித்துவிட்டால் போதும். அந்த இனமே காலவோட்டத்தில் அழிந்துபோவது திண்ணம். அடையாளங்களையும், வரலாறுகளையும், பண்பாட்டு மரபுகளையும் பாதுகாப்போம் அதுவொன்றுதான் நாம் யாரென்று இவ்வுலகிற்கு உறக்கச் சொல்வதற்கான பேராயுதம்.
பிற மதங்களின் தாக்கத்தால் நாம் இழந்து போன கொற்றவை வழிபாட்டை மீட்போம்.
Super Article