• October 12, 2024

ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை? இதற்கான தீர்வு என்ன?

 ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை? இதற்கான தீர்வு என்ன?

‘ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை’ என்று யோசித்துப் பார்த்தால், சில நொடிகளிலேயே நமக்கு இரண்டு விஷயங்கள் புலப்படும்.

  • ஆண்களின் வளர்ப்பு முறை
  • ஆண்களின் சுயநலம்

ஆண்களின் வளர்ப்பு முறை

ஆண்களின் வளர்ப்பு முறை என்று எடுத்துக்கொண்டால் ஒரு வீட்டில் ஆண், பெண் இரண்டு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் பெண் குழந்தைக்களுக்கே தன்னுடைய தாய், வீட்டு வேலைகளை சொல்லித் தருகிறாள்.

மகனை ஒரு இளவரசனை போன்று வளர்க்கிறார்கள். நாளை படித்து வேலைக்கு போய் ஒரு குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு அவனிடம் மட்டுமே இருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை அவனிடம் ஏற்படுத்தி இருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது ஒரு ஆண் குழந்தையின் மனதில், ‘பெண் என்பவள் வீட்டு வேலை செய்வதற்காக மட்டுமே படைக்கப்பட்டவள்’ என்கிற எண்ணம் சிறுவயது முதலே தன் மனதில் பதிய வைத்துக் கொள்கிறான். அது அவனை வழி நடத்தும் அவன் தாய் மீது பெரும் தவறாக அமைகிறது.

இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் வேலைக்கு செல்லும் போதும் கூட, வீட்டு வேலைகளை முடித்த பிறகு தான் பணிக்கு செல்கிறாள். குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய காலகட்டத்தில் கூட, ‘பெண்கள் மட்டுமே வீட்டு வேலை செய்ய படைக்கப்பட்டவர்கள்’ போல் கருதப்படுகிறார்கள்.

ஒரு வீடு முழுமை பெற ஒரு பெண்ணின் தியாகம் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் பெண்களின் உழைப்புக்கான மரியாதை இன்று வரையில் பெரும்பாலான இடங்களில் வழங்கப்படுவதில்லை.

ஒரு பெண் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க, திருமணத்திற்கு பின் அமையும் புதிய குடும்ப முறையும், குழந்தைகளை பராமரிக்க வேண்டிய வேலைகளும் முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. ஆனால் அதை புரிந்து கொண்டு அதற்கான சிறு சிறு உதவிகளை கூட ஆண் செய்ய மறுக்கிறான்.

தான் ஒரு ஆண்‘ என்ற சுயநலமும், பெண் தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்ற ஆதிக்கமும் சமூகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஒரு தாயின் வளர்ப்பின் மூலமே இதை சரி செய்ய முடியும். ஒரு தாய் தன் பிள்ளைகளிடம் ‘ஆண் – பெண் இருவரும் ஒரே மாதிரியாக படைக்கப்பட்டவர்கள். “குடும்பத்திற்கான வேலைகளை ஆண் – பெண் இருவரும் இணைந்தே தங்களால் முடிந்ததை செய்ய வேண்டும்” என்று சொல்லி வளர்ப்பதன் மூலம், அடிப்படை விஷயங்களில் இருந்து ஒரு ஆணின் குணங்களை சிறிதுசிறிதாக மாற்றலாம்.

ஆண்களின் சுயநலம்

ஆண்களின் சுயநலம் என்று குறிப்பிடுவதற்கு முன்பு, எல்லா ஆண்களையும் இதில் சொல்லிவிடமுடியாது. ஏதோ சில இடங்களில் மனைவிக்கு மரியாதை அளித்து, தனக்கு நிகராக பார்க்கக்கூடிய ஆண்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக மிகக் குறைவு. வீட்டில் உள்ள பெண்களிடம் “வீட்டு வேளைகளில் உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்கும் ஆண்களும் குறைவே! அலுவலகத்திற்குச் சென்று வரும் ஆண்களை விட, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ‘வீட்டு வேலைகளும் மன உளைச்சலும் அதிகம்’ என்பதை பெரும்பாலான ஆண்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

அப்படி என்ன பெரிய வேலை செஞ்சிட்டே, சும்மாதான இருக்கே” என்ற வார்த்தை பல ஆண்களின் வாய்களில் சாதாரணமாக வரும் வார்த்தை. உண்மையில் எடுத்துக்கொண்டால் ‘அலுவலக வேலைகளை விட, வீட்டில் இருக்கும் வேலைகள் அதிகம்’. அதை செய்யும் பெண்களுக்கான மரியாதை, இங்கு கணவன்களிடம் இருந்து மனைவிகளுக்கு கிடைப்பதில்லை.

“என்ன பெரிய வீட்டு வேலை! அலுவலக வேலை விடவா இது பெருசு?” என்று கேட்கும் பல ஆண்களே இங்கு அதிகம் இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பது கூட தெரியாமல், பல ஆண்கள் இருக்கிறார்கள். மாதம் ஒரு தொகையை, குடும்ப செலவிற்கு கொடுத்துவிட்டு, “அவ்வளவுதான் என் வேலை” என்று ஒதுங்கி கொள்பவர்களே இங்கு பலர்.

ஒரு தாய், சகோதரி, மனைவி, தோழி, மகள் என அனைத்து பெண்களும், ஆணிடம் எதிர்ப்பார்ப்பது சிறிய பாராட்டையும், மிகச்சிறிய உதவியையும் மட்டும் தான். ஆனால் இங்கு பலருக்கு பெண்களை பாராட்டும் மனம் வருவதில்லை. பிறகு எங்கு உதவி செய்வது! ஒவ்வொரு வேலையிலும் ‘ஒரு பொறுப்பும், பெருமையும் உண்டு.’ அது அலுவலக வேலையில் மட்டுமே இருக்கிறது என்று ஆண்கள் நினைப்பது மாறும் வரை, இங்கு எதுவுமே மாறி விடப் போவதில்லை.

வீட்டு வேலைகளை ஆண் செய்தால் அது ஏதோ தியாகமாக பார்க்கப்படுகிறது. இதையே ஒரு பெண் செய்தால் அது ஒரு கடமையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலை முதலில் மாற வேண்டும். “யாருக்காக செய்கிறேன்! என் மனைவி, என் தாய், என் மகள் இவர்களுக்காக தானே வீட்டு வேலை செய்கிறேன்” என்ற எண்ணம் ஒவ்வொரு ஆணின் மனதில் தோன்றாத வரை இங்கு எதுவுமே மாறாது.

வீட்டுவேலைகளை ஆண்கள் செய்ய முன்வரவேண்டும். வீட்டு வேலைகளை பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற மனநிலையும் மாற வேண்டும்.



1 Comment

  • அம்மா ஆண்கள் வீட்டுவேலைகளைச் செய்யாமல் இருப்பதற்கான மன நிலை யாரால் உருவாகிறது என்பதைப்
    பகிர்ந்த நீங்களே தவறு எங்கே என கோடிட்டு காட்டிவிட்டு, மேலும்
    ஆண்கள் தன் நலவாதிகள் எனவும் மாத சம்பளத்தைக் கொடுத்துவிட்டால் தன் கடமை முடிந்ததாக உணர்ந்தும் காசுகொடுக்கும் முதலாளியாகவும்
    குடும்பத்திற்கான தலைவன் எனவும் ஒரு தோற்றுருவை ஏற்படுத்திக்கொண்டு வீட்டுவேலை செய்யாது மனைவி குழந்தைகளை அடிமையாக நடத்துவது போன்றும் குற்றப் பார்வை வீசுகிறீர்கள்.
    முதலில் ஒரு ஆண் மாதசம்பளத்தை மாதாமாதம் பெற எத்துனை உழைப்பை சகிப்புத்தன்மை தன் மரியாதை எல்லாம் பொறுத்துக்கொண்டு கால அளவீடுகள் இன்றி தனியார் நிறுவனமாயினும் மளிகைக்கடையாயினும் அரசுவேலையாயினும் ஆட்சிப்பணியாளர் வேலையாயினும் ஏன் தற்போதுள்ள கணினி பொறியாளர் பணியாயினும்
    தனக்கு மேலுள்ள முதலாளிக்கு அலுவலருக்கு மட்டும் பதில்சொல்லியோ அல்லது இவர்களில் ஒரே ஒருவரைமட்டும்
    நிறைசெய்து முடிந்து நிம்மதியாக பணிமுடிந்து ஒவ்வொருநாளும் வீட்டிற்குத் திரும்ப முடியாது.
    பல பல பணிகளிலும் சொல்லிமாளா துயரமும் உண்டு.
    எனவே ஆண் மகனையோ பெண்ணையோ குறிப்பாக குற்றம் சாட்டுவதை விடுத்து கள ஆய்வு செய்து பாருங்கள் பணிபுரியும் ஆண்களும் பெண்களும் எவ்வளவு சிக்கல்களின் ஊடே குடும்பம் எனும் கொட்டகையை எப்படி அக்கரையுடனும் தியாகத்துடனும் நடத்துகின்றார்கள் எனும் உண்மை புரியும்.

Comments are closed.