காதலித்து கெட்டு போ…
அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட,திகட்ட காதலி…
~ முனைவர் டாக்டர் நா.முத்துக்குமார்