• October 12, 2024

தமிழ்த்தாய் வாழ்த்து

 தமிழ்த்தாய் வாழ்த்து

செம்மொழி போற்றுதும்!
எம்மொழி போற்றுதும்!
நம் விழி போற்றுதுமே!
தலைமகள் இவளென
தரணியில் துலங்கிட்ட
தமிழ் மொழி போற்றுதுமே!

மண்மலர் காணும் முன்
செம்மொழி கண்டிட்ட
மண்புகழ் வாழியவே!
விசும்பென விழுந்திடும்
வியப்பென வெளிப்படும்
தண்மொழி வாழியவே!

நாவினில் இனித்திடும்
ஊனிலும் உறைந்திடும்
தேன்மொழி வாழியவே!
செந்நீரென உயிர் தரும்
வெரெனத் திகழ்ந்திடும்
முதன்மொழி இவளல்லவா?

மொழிகளுக்கெல்லாம்
தாய்மொழி இவளெனப்
போற்றிடும் புவியல்லவா?
முக்கனியென சுவை தரும்
இயல் இசை நாடக
முத்தமிழ் இவளல்லவா?

இலக்கிய இலக்கணச்
செம்மையில் சிறந்திட்ட
தனித்துவ மொழியல்லவா?
வானையும் விஞ்சிய
வையக மறை தந்த
வள்ளுவத் தாயல்லவா?

பண்பாடிடும் பாவலர்
பல்லக்கு சுமந்திட
பைந்தமிழ் வாழியவே!
அரும் கலைகளின் வடிவினில்
அறநெறி காட்டிடும்
அகத்தியம் வாழியவே!

செம்மொழி போற்றுதும்!
எம்மொழி போற்றுதும்!
நம் விழி போற்றுதுமே!
தலைமகள் இவளென
தரணியில் துலங்கிட்ட
தமிழ் மொழி போற்றுதுமே!

S. Aravindhan Subramaniyan

கவிப்பார்வை

Writer