• June 14, 2024

உங்களை யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள் படைப்பின் நோக்கம் வேறாக இருக்கலாம்!

 உங்களை யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள் படைப்பின் நோக்கம் வேறாக இருக்கலாம்!

பெரும்பாலான நேரங்களில் நம்மை பற்றி நாம் நினைக்கும்போது, தாழ்வு மனப்பான்மை பலருடைய மனதில் குடியேறிவிடுகிறது.

இந்த உடலினுள் காற்று உள்ள வரை தான் மரியாதை.
அதன் பின் இந்த உடல் மண்ணுக்கான உணவு.

இந்த ஒரு பண்பு தான், உங்களை வையத்திற்கே தலைமை ஏற்க அழைத்துச் செல்லும்.
இதைத்தான் பாரதி சொன்னான் வையத் தலைமை கொள் என்று!


உங்களுக்கு நீங்கள் அளிக்கும் பாராட்டே, உலகில் மிகச்சிறந்த அங்கீகாரம். ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணிநேரமும் “நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள்” என்பதைப் பற்றியே ஆர்வம் காட்டுகிறோம். அந்த ஆர்வத்தில் சிறு பகுதியை நம்முடைய வளர்ச்சியிலும், நம்முடைய சுயத்திலும் காட்ட ஆரம்பித்தாலே உலகம் நம்மிடம் வர ஆரம்பித்துவிடும். இந்த உலகினை தன்வசம் படுத்திய வரலாற்று நாயகர்கள் அனைவருமே, தன்னை நம்பியவர்களாக இருந்தார்கள். என்று நாம் மனநிறைவோடும், மனநிம்மதியுடனும், ஒரு செயலை செய்கிறோமோ அன்று இந்த உலகம், உள்ளளவும் நம்மை நினைத்துக் கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். நம்மீதான நம்பிக்கையையும், முயற்சியையும் அதிகப்படுத்த வேண்டும்.

உங்களுக்கு விமர்சனங்கள் அதிகமாக வந்தால்,
நீங்கள் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

இந்த ஒரு வாசகத்தை உங்கள் மனதில் பதியம் போட்டுக்கொள்ளுங்கள். “இந்த உலகில் தோல்விகளை சந்திக்காத மனிதர்கள் யாருமே இல்லை” என்பது ஆணித்தரமான உண்மை. என்று ஒரு தோல்வியை கொண்டு நான் கலங்குகிறோமோ அன்று தான் அது தோல்வி என்று உறுதி செய்யப்படுகிறது. அதற்கு மாறாக அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு, வெற்றிக்கான பயணமாக தொடர ஆரம்பிக்கும் போதுதான், வெற்றியும் நம் விலாசத்தை விசாரிக்க ஆரம்பிக்கும்.


வெற்றியும் தோல்வியும் ஒரு வகை மனநிலைதான். அதை நாம் எவ்வாறு நினைத்துக்கொள்கிறோமோ, அவ்வாறே நம் வாழ்க்கையும் அமைந்து விடுகிறது. அதிகமான தோல்விகளும் இழப்புகளும் நம்மை துரத்தும் தருணங்களில் தான், நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களை யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.
உங்கள் படைப்பின் நோக்கம் வேறாக இருக்கலாம்!

இந்த வரியை ஒவ்வொரு முறையும் உங்கள் மனதில் பதியம் போட்டுக் கொள்ளுங்கள். மனிதனை தவிர உலகில் வேறு எந்த ஜீவராசியும், மற்ற ஜீவராசிகளை போல் காப்பி அடித்துக் கொள்வதில்லை. ‘உங்களை விட மதிப்பு வாய்ந்தவர்கள் இந்த உலகத்தில் இல்லை’ என்று நினைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவரை காப்பியடித்து நம்மால் அரைநிமிடம் கூட நிம்மதியாய் வாழ முடியாது. எனவே மாற்றங்களை உங்களிடம் இருந்து தொடங்குங்கள். ‘உங்களை விட யாராலும் உங்களைப்போல் வாழ்ந்துவிட முடியாது’ என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு குழந்தை எவ்வளவு மகிழ்ச்சியாக வளர்ந்தது அன்று. ஆனால் இன்று அதன் மேல் பல சாயங்களை பூசி, வண்ணங்களாக மாற்றியது நாம்தான்.உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் செய்ய ஆசைப்பட்டு நடக்காத காரியத்தை திணிக்காதீர்கள். ஏனென்றால்,

உங்கள் குழந்தைகள் உங்களுக்காக வந்தவர்கள் இல்லை.
உங்கள் வழியாக வந்தவர்கள்.

குப்பைகளைக் கொட்டி வைக்கும் குப்பைத் தொட்டி அல்ல மனம். அதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள். நம்பிக்கை உடையவர்களையே இந்த உலகம் தேடுகிறது. அதைத்தான் விரும்புகிறது. உங்கள் மனதினை நீங்களே அவ்வபோது உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். ‘உங்களால் அடைய முடியாத இலக்கு’ என்று எதுவும் கிடையாது. அதற்குத் தகுந்த பயிற்சியும் இடைவிடாத முயற்சியும் இருந்தால், எட்டமுடியாத வெற்றியையும் எளிதில் அடைந்துவிடலாம்.

உங்களால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும்,
இறைவன் உங்களிடம் ஒப்படைக்கவில்லை!

என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் படைப்பின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளும் தருணத்திலேயே, பெற்று உங்களை தேட ஆரம்பித்துவிடும். ஆயிரம் கணினிகளை விட அற்புதமானது மனித மனம். உலகில் உள்ள பல அறிஞர்களால் இன்றுவரை அறியப்படாத பல ரகசியங்களை கொண்டது மனம். மிகப்பெரிய சாதனையாளர்களை பார்க்கையில் ஒரே ஒரு விஷயம் மட்டும் நமக்கு தெரியவரும். அனைவரின் வெற்றியும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்துள்ளது. என்றும் உங்கள் மனதை நம்பிக்கையால் நிரப்பிக்கொள்ளுங்கள். அவ்வாறு இருந்தால் உலகில் மிகப் பெரிய செல்வந்தர் நீங்கள் தான். என்று நாம் ரசனையோடு வாழ ஆரம்பிக்கிறோம், அன்று மனதில் ஒரு அமைதி குடி கொள்கிறது. சின்ன சின்ன விஷயங்களாக இருந்தாலும் மனதிற்குப் பிடித்த செயல்களை செய்யுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் செய்ய ஆரம்பிக்கும்போது இந்த உலகம் என நினைக்கும் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள். ஏனென்றால்,


தயங்கி நின்ற யாரும், இந்த சரித்திரத்தில் இடம் பிடித்ததாக வரலாறு இல்லை.

திறமைகளின் மொத்த வடிவம் தான் மனிதன். மனிதனுக்குள் இருக்கும் திறமைகளை புரிந்து கொள்ளாத வரை, அங்கு சத்தத்திற்கு அஞ்சும் யானைகளாகவே இருந்து விடுகிறார்கள். இறந்தும் விடுகிறார்கள். உங்கள் திறமைகளை உணர்ந்து கொள்ளுங்கள். சராசரி வாழ்க்கையோடு மட்டும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.

உங்களுடைய அடுத்த அடியில் கூட வெற்றி இருக்கலாம். சலிப்போடு திரும்பி விடாதீர்கள். ஏனென்றால், உங்கள் வெற்றி ஏமாந்து விடும்.


இந்த பதிவை வீடியோவாக பார்க்க…