எங்கள் தாயாகவே தாங்குவதால் இது எங்கள் தாய்நாடு
அழகிய அந்தாதி தமிழ் நாடு
முதன் முதலாய் மனித
உயிரை உடலில் ஊட்டிய
பிரம்மம் எங்கள் தமிழ்நாடு
தாய் மொழியின் பெயரிலே
தாய் தமிழ் நாடு எங்கள்
தாயாகவே தாங்குவதால்
அது எங்கள் தாய்நாடு
உலகின் மூத்த குடியாய்
புவி பிளந்து பிற உயிர் வாழ
வழி தந்து உயர்ந்து நிற்கும்
வழித்தோன்றல் எங்கள் தமிழ்நாடு
கட்டிடக்கலை,சிற்பக்கலை,
ஓவியக்கலைகளெல்லாம்
குகைகளுக்குள்ளும் சீர்மிகு
குடைந்தது எங்கள் தமிழ்நாடு
இயல், இசை, நாடகமென
முத்தமிழாய் மொழியிலும்
முக்கனிச் சுவையை கூட்டி
சுவைப்பது எங்கள் தமிழ்நாடு
வீர தீரங்களில் விளையாடியே
வித்தைகளை உடைத்து
உலகிற்கே கற்றுக் கொடுத்த
வித்தகம் எங்கள் தமிழ்நாடு
நாடறிந்த அறிஞர்கள் மேதைகள்
என விண்ணகம், மண்ணகம்
ஆய்ந்தறிந்த ஓலைச்சுவடி
புத்தகம் எங்கள் தமிழ்நாடு
சங்கத் தமிழ் வளர்த்தே
புராண,இதிகாசங்களில்
வரலாறு படைத்து வான்புகழ்
உயர்ந்தது எங்கள் தமிழ்நாடு
யாதும்ஊரே யாவரும்கேளீர்
என்றும் வந்தாரை வாழவைத்து
விதவிதமாய் விருந்தோம்பல்
உபசரிப்பது எங்கள் தமிழ்நாடு
பூமி மறைத்து புதைத்துகொண்ட
இலக்கியத் தொன்மைகளை
தோண்டிப் புரட்டி அகழ்ந்தறியும்
ஆதிப்புதையல் எங்கள் தமிழ்நாடு
காடுகள், கடல்களைக் கடைந்து
மலைகளை செதுக்கி
முகஉருவ தமிழக வரைபடமாய்
இயற்கை தந்தது எங்கள் தமிழ்நாடு
அது மண்ணில் பிறந்த
முதல்மனிதன் தமிழ்நாட்டில்
தோன்றிய காட்சியின் சாட்சிய
வரைபடம் எங்கள் தமிழ்நாடு
உலகமே இங்கே தோன்றியதை
அகம் முகமென அழகிய முகமாய்
இரண்டிலும் உணர்த்திடும்
உண்மை எங்கள் தமிழ்நாடு
இயற்கை எழுதிய இலக்கியமாய்
அந்தமும் ஆதியும் இல்லாத
பேரெழில் பிரம்மாண்டக் கருவூலப்
பெட்டகம் எங்கள் தமிழ்நாடு
1 Comment
Hu
Comments are closed.