“பாண்டியர்களின் சிங்கம் கோச்சடையான் ரணதீரன்.!”. – உலகம் போற்றும் பாண்டியன் மன்னன்..!
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றி அதிக அளவு கூற வேண்டாம். இதில் குறிப்பாக சேர மன்னர்களும், சோழ மன்னர்களில் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தவர்கள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும் என நம்புகிறேன்.
அந்த வகையில் பாண்டிய மன்னர்களில் மிகச்சிறந்த உலகம் போற்றும் உத்தம பாண்டியனாக திகழ்ந்த கோச்சடையான் ரணதீரன் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பாண்டிய மன்னனாக ஹரிகேசரியின் மகனாக பிறந்தவன் தான் இந்த கோச்சடையான் ரணதீரன்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு பாண்டிய நாட்டின் மன்னனாக முடிசூட்டப்பட்ட ரணதீரன் கிபி 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். இவனது ஆட்சி காலத்தை பொற்காலம் என்று மக்கள் அனைவரும் வரவேற்று இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் களப்பினர்களின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் கொடுமைகளிலிருந்து தப்பிக்க மக்கள் விரும்பிய ஆட்சி மாற்றம் ரணதீரன் வருகையால் வந்ததால் மக்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை தந்தது.
எனவே மாற்றத்தை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இவனது ஆட்சியில் மகிழ்ச்சியோடு, பொருளாதாரம் உயர்ந்தது என்று கூறலாம்.
மிகச் சிறப்பான படைபலத்தைக் கொண்டிருந்த கோச்சடையான் ரணதீரன் கடல் அளவு சேனையைக் கொண்டவன் என்று கூறுகிறார்கள். அது மட்டுமா அதீத போர் திறனோடு விளங்கிய இந்த பாண்டிய மன்னர் சேர, சோழ மன்னர்கள் மட்டுமல்லாமல் கொங்கர், கர்நாடர், ஆய் மன்னர் என அனைவரையும் போரில் வென்று வெற்றி வாகை சூடியவன்.
கோச்சடையான் ரணதீரனுக்கு பல பட்டப் பெயர்கள் உள்ளது. அந்த வகையில் கோச்சடையான், செங்கோல் தென்னன், வானவன், செம்பியன், மதுர கரு நாடகன், கொங்கர், கோமான், மன்னர் மன்னன் என்று பல பெயர்களை நாம் உதாரணமாக கூறலாம்.
முதலில் கோச்சடையான் ரணதீரன் சேர நாட்டை வென்று பிறகு சோழ நாட்டையும், கொங்கு நாட்டையும் அதற்கு அடுத்தார் போல் கர்நாடகம் என வரிசையாக பல நாடுகளின் மீது போர் தொடுத்து வெற்றி கொண்டு பாண்டிய நாட்டிற்கு கப்பம் கட்டுமாறு செய்தவன்.
இதனை அடுத்து கேந்தரூர் கல்வெட்டில் மன்னன் கோச்சடையான் ரணதீரன் மருதூரில் பெற்ற வெற்றியைப் பற்றி மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சாளுக்கிய மன்னரான விக்ரமாதித்யனுடன் நடந்த மற்றொரு போரில் வெற்றி பெற்றான் ரணதீரன்.
இந்த கோச்சடையான் ரணதீரன் பற்றிய செய்திகள் செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குடிமக்களின் மீது அதிக அளவு அக்கறை கொண்ட மன்னராக இவர் திகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் அடுத்தவர்களுக்கு உதவுவதை மிகச் சிறப்பாக செய்தவன் தான் இந்த கோச்சடையான் ரணதீரன்.