தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் உலக அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இன்று நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் தனது 419-வது டெஸ்ட் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.
இந்த விக்கெட் மூலம் 417 விக்கெட்டுகள் எடுத்து இருந்த ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு அஸ்வின் முன்னேறினார். உலகெங்கும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அஸ்வினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நியூசிலாந்தின் ஓபனிங் பேட்ஸ்மேன் டாம் லாத்தம்-ன் விக்கெட்டை எடுத்தபோது அஸ்வின் இந்த மைல்கல்லை அடைந்தார். தற்போதைய நிலவரப்படி கபில்தேவ் மற்றும் அனில் கும்ப்ளே ஆகிய இருவர் மட்டுமே அஸ்வினை விட டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள இந்திய பந்துவீச்சாளர்கள் ஆவர்.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த சாதனை குறித்து அவரிடம் கேட்டபோது, “எனக்கு இந்த சாதனைகள் பெரிதாக தெரியவில்லை. எங்களது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியது போல விக்கெட்டுகளையும் ரன்களையும் நாங்கள் பெரிய அளவில் கருத்தில் கொள்ள மாட்டோம்.” என கூறியுள்ளார்.
இந்தியாவுக்காக 80 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின் 24.48 பௌலிங் ஆவரேஜ் உடன் 419 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 7 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் அஸ்வின் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை தன் வசப்படுத்திய தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு தீப் டாக்ஸ் தமிழ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.