• October 7, 2024

பாண்டியர்களின் குலதெய்வம் மதுராபதி திருநங்கையா? – திருநங்கை பற்றி ஆச்சரியம் அளிக்கும் சங்க கால குறிப்புகள்..

 பாண்டியர்களின் குலதெய்வம் மதுராபதி திருநங்கையா? – திருநங்கை பற்றி ஆச்சரியம் அளிக்கும் சங்க கால குறிப்புகள்..

Aravan

உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்குகின்ற நம் தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கிய நூல்களை நமது முன்னோர்கள் எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

இதில் ஐம்பெரும் காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

அந்த வரிசையில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் திருநங்கைகள் பற்றிய குறிப்புக்களை இளங்கோவடிகள் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

 

இந்தத் திருநங்கைகள் அன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழ கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும் இவர்களை ஆண்மை திரிந்த பேடி என்ற சொல்லால் அழைத்திருக்கிறார்கள்.

Aravan
Aravan

அது மட்டுமா பால் திரிந்த மக்களுக்கு அவர்களை குறிக்கக்கூடிய சொற்களை சிலப்பதிகாரம் மிகச் சிறப்பாக கையாண்டுள்ளது என்று கூறலாம் அந்த வகையில் ஆண்மை திரிந்த பெண்மையை கொண்டவர்களை பேடி என்று அழைத்திருக்கிறார்கள்.

 

அது போலவே பெண்மை திரிந்த பெண்களை அதாவது ஆண் தன்மை கொண்டவளை பேடன் என்று அழைத்தார்கள். திருநங்கைகளை பொதுவாக ஒரு பொதுப்பெயர் கொடுத்து பேடு என குறிப்பிட்டிருந்தார்கள்.

 

மேலும் இதனை பலர்பால் பெயர் முறையை பேடியர், பேடர், பேடுக்கள் என கொடுத்து இருக்கிறார்கள். இதனை புணர்ச்சி, உணர்ச்சி இல்லாததும் பால் காட்டும் உறுப்பு இல்லாத ஆணும் பெண்ணும் ஆதலால் அலி, பேடி, பேடிமார் என்ற பெயர்களை கொடுத்திருந்தார்கள்.

 

1997-இல்  திருநங்கைகளை அரவாணி என்ற சொல் கொடுத்து அழைத்தார்கள். அதற்கு காரணம் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருநங்கை நர்த்தகி நடராஜ். 2006-ம் ஆண்டுக்குப் பிறகு இவர்களை திருநங்கை என்ற சொல் கொடுத்து அழைத்தார்கள்.

 

இதிலும் திருநங்கை, திருநம்பி என்ற இரண்டு சொற்கள் உள்ளது. இதை பொதுவாக திருநர் என்ற சொல்லைக் கொண்டு குறிக்கிறார்கள். இந்த சொல்லானது 2010 முதல் புழக்கத்தில் உள்ளது.

Aravan
Aravan

தொல்காப்பியத்தில் திருநங்கைகளை குறிக்கக்கூடிய பாடல்கள் உள்ளதாக கூறி இருக்கிறார்கள். மேலும் சிலப்பதிகாரத்தில் புகார் காண்டத்தில் எமன் தன் கொலை தொழிலை மாற்றிக் கொள்ளாத குணங்களோடு, பெண் உருவம் தாங்கி இருப்பதாக சில பாடல் வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

அந்தப் பாடல் வரிகள்

“பல்லுயிர் பருகும் பகுவாய் கூற்றம் 

ஆண்மையில் திரிந்து தன் அருந் தொழில் திரியாது

 நாணுடைக் கோலத்து நகை முகங் கோட்டிப்

 பண்மொழி நரம்பின் திவவியாழ் மிழற்றிப் பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டென..”

 

பல உயிர்களை எடுக்கின்ற எமன் தன்னுடைய ஆண் இயல்புகளை விடுத்து விட்டு கொலை தொழிலை மாற்றிக் கொள்ளாமல் நாணத்தோடும், நகையுடைய முகத்தோடும் பெண் உருவம் தாங்கி புகார் நகரில் திரிகிறான் என்று கூறப்பட்டுள்ளது.

 

இதனை ஒப்பு நோக்கும் போது எமன் ஆணுக்குரிய குணங்களோடும், பெண் உருவில் இருந்ததை நாம் திருநங்கை வடிவம் என்று புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா.

 

கூத்து வகைகளில் ஒன்றான பேடி, ஆடல் பற்றி சிலப்பதிகாரம் மிகச் சிறப்பான பாடல்வரிகளை தந்துள்ளது. அதில் 

 

“ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்து காமன் ஆடிய 

பேடியாடலும்”

 

பாடல் வரிகள் ஆண் தன்மையை இழந்து பெண் தன்மை உடைய மன்மதன் ஆடிய ஆட்டத்தை தேடி கூத்தை மாதவி நிகழ்த்திக் காட்டுவதாக அறியப்படுகிறது.

Aravan
Aravan

இது போலவே வஞ்சிக்கண்டத்தில் நீர் படை காதையில் சேரன் செங்குட்டுவன், கண்ணகித்தாக வடக்கு திசையில் இருந்து கல் எடுத்து வந்த செய்தியை பற்றி கூறியிருக்கிறார்கள். மேலும் வீரம் மிகுந்த தமிழ் மன்னர்கள் வடக்கே ஆண்ட கனக விசய மன்னர்களை வென்று இமயத்தில் இருந்து பத்தினி தெய்வத்திற்கு கல் எடுத்து கங்கை ஆற்றில் நீர் படை செய்து தென் திசை நோக்கி திரும்புவதாகவும், அந்த இடத்தில் திருநங்கைகளின் உருவ அமைப்பை விரிவாக பாடல்களில் குறிப்பிட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

“சுருளிடு தாடி மருள் படு பூங்குழல் 

அரி பரந்து ஒழுகிய செழுங் கயல் நெடுங்கண்

விரி வெண் தோட்டு வெண்ணகை துவர்வாய்ச்

சூடாக வரிவளை ஆடமைப் பணைத்தோள்

வளரிள வனமுலை தளரியல் மின்னிடைப் பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு”

 

இந்த பாடல் ஆனது போர்க்களத்தில் சன்னியாசியை போல் வேடம் போட்டு தப்பி ஓடிய அரசர்கள் மற்றும் கருப்பான கூந்தலோடு மிகப்பெரிய கண்டை மீன் போன்ற கண்களைக் கொண்டும் வெண் சங்கு போன்ற பற்களை உடைய சிவந்த வாய் மற்றும் கைகளில் வளையல் போட்ட அழகிய இடையும் கொண்டு காலணி அணிந்த ஆரிய திருநங்கைகளை கைது செய்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் சேர மன்னனின் வீரம் குறித்து பாண்டியர்களுக்கு செய்தி அனுப்புவது போல் உள்ளது.

 

இந்த திருநங்கைகளை பற்றி சிலப்பதிகாரத்தில் நடுகல் காதையில் கூறப்பட்டுள்ளது. இந்த திருநங்கைகள் அந்தப்புரத்தில் காவலாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சேரன் செங்குட்டுவனின் மனைவி அந்தப்புரத்தில் இருக்கும் போது அவளுக்கு உரிய சேவைகளை  திருநங்கைகள் செய்திருக்கிறார்கள்.

 

அதுமட்டுமல்ல பாண்டியர்களின் குல தெய்வமான மதுராபதி தெய்வம் இருப்பால் தன்மை கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த தெய்வத்தின் உருவ அமைப்பானது ஆணும், பெண்ணும் இல்லாத திருநங்கை வடிவை ஒத்து இருப்பதாக சிலப்பதிகாரத்தில் கட்டுரை காலையில் இளங்கோ அடிகள் பதிவு செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

“வலமருங்கு பொன்னிறம் புறையு மேனியாள்

இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும் வலக்கை

அம் சுடர்க் கொடுவாள் பிடித்தோள் வழக்கால் புனைகழல்

கட்டினும் இடக்கால் தனி சிலம்பு அரற்றும்

தகைமையள் பனித்துறைக் கொற்கைக் கொண்கன்

குமரி துறைவன் பொற்கோட்டு வரம்பன்

பொடதியில் பொருப்பன் குல முதல் கிழத்தி”

 

கண்ணகி கோபத்தால் மதுரையை எரித்த பின் அவள் பின்புறம் தோன்றி அவளுக்கு முன் நடந்த முற்பிறவி கதையை சொல்லும் தெய்வமான மதுராபதி பாண்டியர்களின் குல தெய்வமாகும்.

Aravan
Aravan

இந்த  தெய்வமானது இருவரின் தன்மையை கொண்டது. இடது கையில் தாமரை மலரும் வலது கையில் கொடு வாளும் கொண்டிருக்கும். அது மட்டுமல்லாமல் இந்த தெய்வத்தின் வலது காலில் வீர கலர் ஒன்று இருக்கும் இடது காலில் ஒளியை ஏற்படுத்தக்கூடிய ஒற்றைக் சிலம்பு ஒன்றை அணிந்து இருப்பதாக இந்த பாடல் வரிகள் கூறுகிறது.

 

வேந்தர்களில் ஒருவராக திகழும் பாண்டியர்களின் குலதெய்வம் மதுராவதி இருபால் தன்மையை கொண்டு அமைந்த திருநங்கையின் வடிவமாக இருந்தது என்பதை தெள்ளத் தெளிவாக இளங்கோவடிகள் குறிப்பிட்டிருக்கிறார். இதனை அடுத்து திருநங்கைகளுக்கு தெய்வ அந்தஸ்தை தந்து போற்றும் தன்மை நமது முன்னோர்களுக்கு இருந்துள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

 

இலக்கியங்கள் மட்டுமல்லாமல் இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்திலும் திருநங்கை பற்றிய விஷயம் உள்ளது. இதில் பாண்டவர் இளவரசன் அர்ஜுனன் மற்றும் நாக இளவரசி உலுப்பியின் மகனாக அரவான் பிறந்திருக்கிறார். இந்த அரவான் தான் கூத்தாண்டவர் திருவிழா மரபின் முக்கிய கடவுளாக திகழ்கிறார்.

 

இன்று விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பௌர்ணமியை ஒட்டி 18 நாள் மிக பிரம்மாண்டமான திருவிழா நடைபெறும். இதில் இந்த திருநங்கைகள் கலந்து கொண்டு இந்த தெய்வத்தை தங்களது குல தெய்வமாக ஏற்று வணங்கி வழிபடுகிறார்கள்.

 

உலகம் எங்கிலும் இருந்து இந்த தெய்வத்தை வழிபடுவதற்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த கோவிலில் திருநங்கைகள் கோவில் பூசாரி கையால் இரவு தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

 

இதனை அடுத்து மறுநாள் காலை தேரோட்டம் நடைபெற்ற பின் அரவான் களவழியும் தாலி அறுத்தல் நிகழ்வும் நடைபெறும். இதனை அடுத்து ஆற்றில் குளித்துவிட்டு விதவை கோலம் போட்டு ஒப்பாரி வைத்துவிட்டு இந்த அரவாணிகள் தங்களது ஊருக்கு திரும்புவார்கள்.

Aravan
Aravan

தமிழகத்தில் சுமார் 48 இடங்களில் அரவான் வழிபாடு நடைபெற்று வருகிறது. அது இந்தியாவில் மட்டும் தான் நடக்கிறதா? என்றால் இந்தோனேசியாவிலும் இந்த மரபு உள்ளது. அங்கு அரவாணியை இரவன் என்ற பெயரால் அழைக்கிறார்கள்.

 

இன்றும் ஜாவா தீவுகளில் அரவாணிக்கு என்று தனிப்பட்ட மரபுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவர்களைப் பற்றி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழில் பெரும் தேவனாரால் இயற்றப்பட்ட பாரத வெண்பாவில் குறிப்புகள் உள்ளது.

 

மகாபாரத போர் வெற்றி அடைவதற்கு காரணமே இந்த அரவான் தான். இவரை மட்டும் களபலி கொடுக்காமல் இருந்திருந்தால் மகாபாரதப்போரின் போக்கே மாறி இருக்கும் என்று கூறலாம்.

 

இந்த அரவாணிகளை நாம் வெறுத்து ஒதுக்காமல் அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்து சகோதர, சகோதரிகளை போல பழகுவதினால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.