• July 27, 2024

அப்படி என்ன இருக்கிறது இந்த சிதம்பர ரகசியத்தில்?

 அப்படி என்ன இருக்கிறது இந்த சிதம்பர ரகசியத்தில்?

பொதுவாக ரகசியம் என்றவுடன் நம் அனைவர் மனதிலும் நினைவுக்கு வருவது பெண்களே! ஏன் இவ்வாறு கூறுகின்றேன் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே? ஏன் சில நேரங்களில் யாரேனும் நம்மிடம் எதையாவது மறைத்தால், பெரிய சிதம்பரம் ரகசியம் என்றெல்லாம் நம் வினவியிருக்கின்றோம். அப்படி பலராலும் பேசப்பட்டு வந்த, ஏன் இன்றளவும் மறைக்கப்பட்டு வருகின்றதா அல்லது பாதுகாக்கப்பட்டு வருகின்றதா என்று நம்மில் பலருக்கும் இந்த கேள்வி உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலின் ரகசியத்தை பற்றி காண்போம்.

சங்க இலக்கியமான கலித்தொகையில் முதல் பாடல் சிதம்பரம் நடராஜர் பற்றிய பாடலாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் கோவில் புகழ் பெற்றிந்தது என்று தெரியவருகின்றது. சிதம்பரத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் 12’ம் மற்றும் 13’ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் தோராயமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு பதஞ்சலி முனிவர் என்பவரால் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் உருவாக்கப்பட்டு பின் வருங்காலங்களில் பல்லவர்கள், சோழ மன்னர்கள், விஜயநகர பேரரசுகள், பாண்டியர்கள் என வெவ்வேறு காலகட்டங்களில் புனரமைக்கப்பட்டது.

இக்கோவிலை பதஞ்சலி முனிவர் உருவாக்கும் போது எந்த ஆடம்பர எண்ணங்களும் அவர் மனதில் இல்லை. ஒரு மகத்துவமான புனித தலத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது. மேலும் அவர் ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோவிலை உருவாக்கி அதை பூஜை செய்தார். அவர் ஒரு யோக விஞ்ஞானியாக இருந்தமையால் கோவிலை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற சரியான வழி முறைகளையும் ஒழுங்குமுறைகளையும் பராமரிக்கும் முறைகளையும் பல குடும்பங்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

பஞ்சபூத சக்திகள்

மனிதர்களின் உடல் மற்றும் மனம் ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதில் பிரபஞ்ச சக்திகள் முக்கிய காரணங்களாக உள்ளன. ஆன்றோர்களில் சான்றுபடி பஞ்சபூத சக்திகள் தான் இந்த பூமியில் மனிதர்களை நேரடியாக பாதிக்கின்றன. ஏனென்றால் அந்த சக்திகளோடு நம் அனைவருக்கும் நேரடியான தொடர்பு இருப்பதை நம் அன்றாட வாழ்வில் உணர்கின்றோம். பாதிப்பது மட்டுமின்றி மனிதனது மகிழ்ச்சியான வாழ்வுக்கு துணை புரியவும் செய்கின்றது. அப்படிப்பட்ட பஞ்சபூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகாயத் தலமாகும். மேலும் காற்றுக்காக காளஹஸ்தியும், நிலத்திற்காக காஞ்சி ஏகாம்பரேஸ்வர கோவிலும் மற்றும் இக்கோவிலும் ஒரே நேர்கோட்டில் அதாவது தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. இவ்வாறு மிக துல்லியமாக அன்றைய காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பதே பொறியியல், புவியியல் மற்றும் வானவியலில் தனித்து உயர்ந்து விளங்கும் அதிசயமே!

பொன்னம்பலம்

இக்கோவிலில் 9 நுழைவு வாயில்கள் உள்ளன. இவை மனித உடலில் இருக்கும் நவ துவாரங்களை குறிக்கின்றது. கோபுரங்களில் மேல் இருக்கும் பொற்கூரை 21600 தங்கத்தகடுகளில் கொண்டு வேயப்பட்டு 72000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளையும், ஒருநாளைக்கு மனிதன் சராசரியாக 21600 முறை சுவாசிக்கின்றான் என்பதையும் குறிக்கும்.

‘பொன்னம்பலம்’ (சிவன்) சுற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிக்கின்றது. குறிப்பாக தமிழ்நாடடில் எந்த ஒரு சிவன் கோவிலிலும் காண முடியாத அளவுக்கு மிகவும் வித்தியாசமான வடிவங்களை கொண்ட சில உருவங்கள் இங்கு உள்ளன. இந்த கோவில் வீற்றிருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதி என்று கூறப்படுகின்றது.

இக்கோவிலின் முதல் சுற்றுப்பிரேதேசத்தை விக்கரம சோழ திருமாளிகை என்றும், 2’ம் சுற்றுப்பிரேதேசத்தை குலோத்துங்க சோழ திருமாளிகை என்றும் மற்றும் புறவாயில், 3’ம் சுற்றுப்பிரேதேசத்தை தம்பிரான் திருவீதி என்றும் அழைக்கப்படுகின்றது. இவை வெவ்வேறு காலகட்டங்களில் மேற்க்கூறிய சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்று தென் இந்தியக் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.


ஆதித்தசோழன்

முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில் சிறந்த சேனைத் தலைவராக இருந்தவர் ‘நரரோக வீரன்’ இவர் சிதம்பரம் கோவிலுக்கு “சித்தலிங்கமடத்தில் சிவனுறையும் கற்றளி (கற்கோவில்) ஒன்று கட்டினான் அதைச் சுற்றிப் பிரகாரமும் ஒரு மண்டபமும் அமைத்தான்” இவை மட்டும் அல்லாது மக்களுக்காவும் பல திருப்பணிகள் செய்துள்ளார். தெருக்களில் விளக்குகள், ஒரு லட்சம் பாக்கு மரங்களை கொண்ட நந்தவனம், தில்லைக்கும் கடலுக்கும் இடையில் பெரிய சாலை, தூயநண்ணிற்குளம், கரையில் பெரிய ஆலமரம், குளத்தில் 4 பக்கவாட்டிலும் படிகள் என பல செயற்பாடுகளை அரங்கேற்றினார். சோழர்கால கல்வெட்டுகளில், சிதம்பரத்தை ‘பெரும்பற்றப்புலியூர்’ என்றே குறிப்பிட்டுள்ளனர். சிற்றம்பலத்தை சோழர்கள் கட்டி குலதெய்வமாக வழிபட்டு வந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆதித்தசோழன் ஆண்ட காலத்தில் தங்கத்தால் ஆன தகட்டினால் இக்கோவிலின் கோபுரங்களை அமைத்தான் என்று நூல்களில் கூறப்படுகின்றது.

தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் கோவிலுக்கு உண்டு. ஏனென்றால் 63 நாயன்மார்கள் வரலாறு மட்டும் பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருத்தால் அவர்களை பற்றி குறிப்புகள் இல்லாமலே போயிருக்கும். மேலும், இக்கோவிலில் உள்ள மணி உலகிலேயே மிக சிறந்த மணியாக கருதப்படுகின்றது. “சிகண்டி பூரண மணி” இந்த ஒலியானது எளிதாக ஒருவரை தியான நிலைக்கு ஆழ்த்தி விடுகின்றது. இக்கோவிலில் உள்ள மணி ஓசையை கேட்டால் ஒருவரின் ஆயுளில் 12 வினாடிகள் அதிகமாகும்.

ஆனந்த தாண்டவம்

நடனக்கலையின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் இது பிற்காலத்தில் மருவி நடராசன் என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நடராசன் நடனம் ஆடும் கலைக்கு “காஸ்மிக் நடனம்” “Cosmic Dance” என்று பல வல்லுநர்களால் கருதப்படுகிறது. இத்தலத்தில் ‘ஆனந்த தாண்டவம்’ வருடத்திற்கு ஒரு முறை நிகழ்கின்றது. நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழாவில் உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்தும் கூட பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். இவ்வாறு பல கலைஞர்கள் இக்கோவிலுக்கு வந்து நாட்டியர்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர்.

CERN (Concil Europeen Pour la Recherche Nucleaire)என்ற பௌதீக ஆராய்ச்சிக் கூடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் அணுக்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய்வது பிளப்பது என அணுவை பற்றிய எல்லாவிதமான ஆராய்ச்சிகளும் இந்த ஆய்வுக் கூடத்தில்தான் நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட பரிசோதனைச் சாலையில் நுழைவுவாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப்பட்டு இருக்கிறது. இது நம் தென்னிந்தியாவின், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றுகின்றது.

சிவ ரகசியம்

இக்கோவிலில் சபாநாயகர் (நடராஜர்) வலது பக்கத்தில் இருப்பார். அங்குள்ள ஒரு சிறிய வாயிலில் திரை அகற்றப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அங்கு திருவுருவம் இருக்காது. தங்கத்தால் ஆன வில்வ மாலை ஒன்று தொங்கவிடபட்டிருக்கும் இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றான் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் முடிவும் கிடையாது அதை உணர்த்துவது தான் இக்கோவிலின் சிறப்பு.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அதன் படித்தான் சிவனை அழிக்கவோ ஆக்கவோ முடியாது.

இதில் சிவன் என்பது வேறுயாரும் இல்லை, ஆற்றல் தான் என்பதற்கு சான்றாகத் தான் இந்த கோவில் கட்டப்பட்டதாக இன்றளவும் நம்பப்படுகின்றது.

மேலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்பே மக்கள் இப்படிப்பட்ட கலைநூணுக்கமான கோவில்களை உருவாக்கி இருகின்றார்கள். அந்த காலகட்டங்களில் அரசனை தவிர அனைவருமே குடிசையில் வாழ்ந்தவர்கள் தான். எந்த விதமான எந்திரங்களோ, வாகனங்களோ, பளுதூக்கும் சாதனங்களோ இல்லாதபோதும், மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரே நோக்கத்தோடு இக்கோவிலுக்குக்காகவே உழைத்திருக்கின்றார்கள். இக்கோவிலை உருவாக்குவதற்காகவே வாழ்ந்து மறைந்த அவர்கள் தங்கள் வாழ்க்கையை விட மதிப்பானதாக இந்த கோவில்களை எழுப்புவதில் முழு ஈடுபாடு காட்டியுள்ளார்கள். அவர்கள் சுயநலம் மற்றவர்கள் தனக்கு என்று எதையும் எடுத்து வைக்க தெரியாதவர்கள் தாங்கள் அறிந்த நல்லது கெட்டதை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர்களிடம் இருந்தது.

இந்த மகத்துவமான கோவில்களை பேணி பாதுகாப்பது மட்டும் நம் கடமையல்ல அதை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை தலையாய கடமையாக கொள்ள வேண்டும்.

S. Aravindhan Subramaniyan

Mahalakshmi Parthasarathy