• October 5, 2024

மூத்த தேவி, இன்று நாம் திட்டும் மூதேவி ஆனது எப்படி?

 மூத்த தேவி, இன்று நாம் திட்டும் மூதேவி ஆனது எப்படி?

தவ்வை என்பவள் யார் என்பதை பாகம் 1-ல் பதிவில் பார்த்தோம். சங்ககாலத்தின் மூத்த தெய்வம், இன்று அமங்கலத்தின், அழுக்கின் உருவமாக பார்க்கப்படுகிறது. வரலாற்றில் தெய்வமாக வணக்கப்பட்டவள், இன்று எப்படி ஒரு திட்டும் வார்த்தையாக மாறிப்போனால் என்பது இன்றுவரை பதில் கிடைக்காத ஒரு கேள்வி. இருப்பினும் இந்த கேள்விக்குள் இருக்கும் ஒரு சூழ்ச்சியை இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்.

தமிழர்களின் தாய் தெய்வமான தவ்வையின் சிலையை சுற்றி, கழுதை, தொடப்பம், காக்கை ஆகிய மூன்றும் எப்பொழுதும் இருக்கும். இவை உணர்த்தும் அர்த்தங்கள் என்ன என்பதை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். ஒரு சிலையில் ஓராயிரம் அர்த்தங்களை புதைத்து வைத்திருக்கிறான் தமிழன். ஒவ்வொன்றிற்கும் இருக்கும் அர்த்தங்களை சொல்கிறேன் கேளுங்கள்.

தவ்வையை சுற்றி இருப்பது என்னென்ன?

பயிர்களும், உயிர்களுமாகிய செல்வங்களின் மூல வடிவம் உரமாகும். உரத்தின் மூலவடிவம் அழுக்காகும். மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றின் கழிவுகளே அழுக்கு என்ற பெயரால் அன்று சூடப்பட்டது. அழுக்கு என்ற சொல் அழுகச் செய்யப்படுவது என்ற பொருளையே உணர்த்துவதாகும். இயற்கை விவசாயத்திற்கு என்றும் உதவுவது இயற்கை உரம் தான். இயற்கை உரம் என்றாலே அழுக்கு தான்.
அந்த அழுக்கை ஒன்று சேர்த்து, அதை விவசாயத்திற்கு ஆதாரமாக மாற்றியவள் பெண். அதனாலேயே அவள் முதன்மை தெய்வமாக சமூகத்தில் முன் நின்றாள். இவ்வாறு அழுக்கு எனப்படும் உரத்தின் மூத்த தெய்வம் தான் தவ்வை என அழைக்கப்பட்ட மூதேவி. இதுதான் மூதேவியின் மூத்த வரலாறு. இன்று கூட கார்த்திகைத் திருவிழாவின் போது உரக்குழி/ சேர்குழி எனப்படும் குப்பைக் கிடங்குகளில் அகல்விளக்குகளை ஏற்றி, அதனைக் குப்பைநாச்சியார் என்ற பெயரில் வழிபட இதுதான் காரணம். இந்த மூத்த தேவியை சுற்றி அழுக்கு, சுத்தம், செல்வம் என்ற மூன்று வார்த்தை இருந்துகொண்டே இருக்கும்.

Thavvai தவ்வை

பல விலங்குகள், கால்நடைகள் இருக்கும் பட்சத்தில் கழுதையை ஏன் செல்வத்தின் அடையாளமாக, அதிஷ்டத்தின் அம்சமாக ஏன் தமிழன் பார்த்தான். அழுக்கை சுமக்கும் கழுதையை எப்படி சுவற்றில் மாற்றி, ‘என்னை பார் யோகம் வரும்’ என்று சொல்ல வைத்தான். சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது கழுதை. அதேசமயத்தில் கழுதைகளின் பாரத்தை தாக்குப்பிடிக்கும் திறன் மிக அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்டது. இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. அதேசமயத்தில் கழுதையின் பால் பல மருத்துவ குணங்களை கொண்டது. இன்றும் பல விலையுர்ந்த அழகு சாதன பொருட்களில் கழுதையின் பால் முக்கியத்துவம் பெற்ற ஒன்று. வண்ணார்கள் எனப்படும் சலவை தொழிலாளிகள் ‘ஏகவேணி’ என்ற பெயரில் தவ்வையை அதிக அளவில் வணங்கினார்கள். ஒருவேளை அவர்களின் வழியாக கூட தவ்வைக்கு கழுதை வாகனம் அமைய பெற்றிருக்கலாம் என்கிற கூற்றும் உண்டு.

‘அழுக்கு துணிகளை சுமந்து சென்று, அதை துவைத்து அழுக்கை நீக்குவது போல, நம் மன அழுக்குகளை நீக்கி, நம்மை ஆரோக்கியமாக தவ்வை வைத்திருப்பாள்’ என்பதின் அடையாளமாக கழுத்தை வாகனமா இருக்கிறது. அன்று முதல் இன்று வரை கழுத்தை நற்சகுனங்களில் ஒன்றாவே பார்க்கப்படுகிறது. அதனால் தான் ‘என்னைப் பார் யோகம் வரும்’ என்று ஒவ்வொரு வீடுகளிலும் போட்டோ அட்டைகளை கழுதையை நாம் காண்கிறோம். கழுதையின் குரலைக் கேட்பது கூட நற்சகுணமாகத்தான் பலரால் நம்பப்படுகிறது.

thavvai god

அதேபோல் தவ்வையின் கொடியில் காக்கை இருக்கும். உலகின் மிக புத்திசாலியான பறவைகளில் காக்கையும் ஒன்று. பண்டையகாலத்தில், ஒவ்வொரு நாளும் தமிழர்களின் வீடுகளில் சமைக்கப்படும் சாதத்தில் முதல் பங்கு வீட்டுக் காகத்திற்கு வைக்கப்பட்டு அதன் பின்பு வீட்டிலிருப்பவர்கள் சாப்பிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். ஆகா காகமும் ஆரோக்கியத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்து, தவ்வையின் சிலைகளில், அவள் கையில் துடைப்பம் இருக்கும். வீட்டில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்த அன்றும் இன்றும் பயன்படுத்தப்படும் ஒன்று. தற்போது கூட வீட்டைச் சுத்தப்படுத்தும் துடைப்பத்தை மிதிக்கக் கூடாது என்று வீடுகளில் சொல்வது வழக்கம்.
ஆக கழுதை, காகம், துடைப்பம் என இது மூன்றிலும் தொடர்புடையது அழுக்கு, அன்னம், ஆரோக்கியம். நான் முன்பே சொன்னதுபோல, உரத்தின் அடையாளம் தவ்வை. உரத்தின் மூலவடிவம் அழுக்கு.

தமிழகத்தின் இன்றும் தவ்வையின் அடையாளங்கள், தொன்மங்கள் எங்கெங்கே இருக்கின்றன?

https://www.tagavalaatruppadai.in/ என்கிற வலைத்தளத்தில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தவ்வையின் சிலைகளை பற்றி குறிப்புகள் இருக்கின்றன. அவை அனைத்தும் தமிழகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் கண்டறியப்பட்ட சிலைகள் ஆகும். ஆண்டிச்சிப்பாறை, ஆனூர், சேலம், காஞ்சிபுரம், பேளுர், கடலூர், விழுப்புரம், இரும்பநாடு, செங்கல்பட்டு, காட்டுப்புதூர், அரியலூர், புதுக்கோட்டை, கொளத்தூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ஆனையூர் என பல ஊர்களில் கண்டெடுக்கப்பட்ட தவ்வையின் சிலைகளை தான் நீங்கள் இப்பொது பார்த்துக்கொண்டிருக்கீர்கள். இது மட்டுமில்லாமல், சென்னை அரசு அருங்காட்சியகம் கூட சில சிலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இவை இன்றும் நம் பார்வைக்கு இருக்கும் சிலைகள் தான்.

தவ்வையை இன்று யார்யாரெல்லாம் வணங்குகிறார்கள்?

இது கொஞ்சம் சுவாரசியமானது தான். தமிழகத்தில் தவ்வை என்ற பெயரிலும், மூதேவி என்ற பெயரிலும் இவளுக்கு வழிபடு இல்லை. அதற்கு பதிலாக ஜேஸ்டா தேவி என்ற பெயரில் தவ்வை வழிபடப்படுகிறாள். தமிழர்களின் மூத்த தெய்வம் தமிழகத்தை விட, வடஇந்தியாவில் தான் அதிக அளவில் வணங்குகிறார்கள் என்றால் இது கொஞ்சம் ஆச்சரியம் தரக்கூடிய செய்தி தான்.

moodevi tamil thavvai
jyeshta devi


ஆம்… வடஇந்தியாவில் பல கோவில்களில் ஜேஸ்டா தேவி என்ற பெயரில் தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை, சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள்.. கிழிந்த ஆடை, அசிங்கமான தோற்றம், காக்கைக் கொடி இவையே தூமாதேவியின் அடையாளங்களாக உள்ளன. தவ்வைக்கும் இவையே அடையாளங்களாக உள்ளன. தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது.
தமிழகத்தில் காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் தவ்வை எனப்படும் ஜேஸ்டாதேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள், கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும், கோயில்களும் உள்ளன.

மூத்த தேவி, இன்று நாம் திட்டும் மூதேவி ஆனது எப்படி?

பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவுசார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால், நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து ‘தவ்வை’யை அமங்கலத்தின் அடையாளமாகவும், இழிவாகவும் ஆக்கிவிட்டனர் சில மூடர்கள்.

Thavvai moothevi



ஆதிகாலத்தில் உயிர்வாழ உணவு அவசியம் என்று மனிதன் உணர்ந்த அந்த நொடியில், உணவுக்காக வேட்டையாடினான். ஆனால் இன்று நாம் வேட்டையான தேவையில்லை, வேலை செய்தால் போதும். ஆதிகாலத்தில் ஒரு பொருளை வாங்க பண்டமாற்று முறையை பின்பற்றினான். ஆனால் இன்று பண்டம் தேவையில்லை. பணம் இருந்தால் போதும். ஆதிகாலத்தில் உழைப்பவன் இடத்தில் மட்டுமே செல்வம் இருந்தது. ஆனால் இன்று உழைப்பவன் இடத்தை காட்டிலும், அந்த உழைப்பை வாங்குபவன் இடத்தில தான் செல்வம் அதிகமா இருக்கிறது. உணவிற்காக வாழ்ந்த மனிதன், என்று பணத்திற்காக வாழ ஆரம்பித்தானோ, அப்பொழுதே மனிதன் தெய்வம் ஆனான். தெய்வம் திட்டும் வார்த்தை ஆனது.

உழைப்பவன் அன்று முதலாளியாக இருந்தான். ஆனால் இன்று உழைப்பவன் வேறு, முதலாளி வேறு. உழைப்பவன் என்றால் அழுக்கு, முதலாளி என்றால் சுத்தம். இங்கு தான் தவ்வை என்பவள் மூதேவி எனும் திட்டும் வார்த்தையாக மாறுகிறாள்.

தவ்வை என்பவள் உரத்தின் அடையாளம் என்பது வரலாறு சொல்லும் உண்மை. உரம் என்பது அழுக்கின் கலவை. அந்த அழுக்கை ஒன்று சேர்த்து, அதை விவசாயத்திற்கு ஆதாரமாக மாற்றியவள் பெண். அதனாலேயே அவள் முதன்மை தெய்வமாக சமூகத்தில் முன் நின்றாள்.
அழுக்கு நேர்மறையானது சுத்தம். சுத்தம் என்பது செல்வமான திருமகளை குறிக்கிறது என்றார்கள். எப்போது தமிழ் சமயத்தில் இந்து மதத்தின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்ததோ, அப்பொழுது இருந்து மெல்ல மெல்ல மூத்த தேவி மூதேவி ஆகிறாள். எதற்கும் உதவாதவள் ஆகிறாள். ஸ்ரீதேவி, திருமகள், மகாலக்மி எனும் செல்வ தெய்வத்தை தமிழ் சமூகத்தில் விதைப்பதற்காக, இங்கு முன்னவே இருந்த தவ்வையை செல்வத்திற்கு எதிரானது என்றது ஒரு கும்பல். ஸ்ரீதேவியை அன்றிலிருதே வணங்கியவர்கள் ஆரியர்கள். ஒருவேளை அவர்களால் கூட தழர்களின் மூத்த தேவியை, செல்வத்திற்கு எதிரானவள் என்று மாற்றியிருக்கலாம். ஆனால் இதற்கு ஆதாரங்கள் இல்லை. ஒருவேளை இருக்கலாம் என்பது சில ஆராய்ச்சியாளர்கள் வாதம்.

தவ்வையை தமிழர்கள் பலர் வணங்கினாலும், பெரும்பாலும் சிறு குறு, தொழில்கள் செய்பவர்கள் தான் அதிகம் வணங்கினார்கள். என்று மக்கள் இடத்தில சிறு தெய்வங்கள், பெரு தெய்வங்கள் என்கிற கூற்று வந்தததோ, அன்றே இந்த சிறு தொழில் செய்பவர்களின் தெய்வம், பெரு தெய்வங்கள் வணங்குபவர்கள் முன்னே குன்றி போனது. அது காலப்போக்கில் நம் காதுகளுக்கு வரும்போது, பல கதைகளை சேர்த்து, வரலாற்றை கொன்று புதைத்து, தமிழர்களின் தெய்வத்தை தொலையவைத்து விட்டது.

ஐந்து கோபுரங்களின் மத்தியில், கருவறையில் இருப்பவனும் இறைவன் தான். வயல்வெளிகளின் மத்தியில் வேப்பமரத்தின் கீழ் இருப்பவளும் தெய்வம் தான். நம்பிக்கை ஒன்றுதான். உருவங்களும், எண்ணங்கமே இங்கு வேறுபடுகிறது. காலங்கள் மாறினாலும் அதன் கால சுவடிகள் மாறவில்லை.

– Deepan

இனி ஜேஸ்டா தேவி என்ற வடமொழியை பயன்படுத்தாமல், தவ்வை என்ற அழகான தமிழ் பெயரில் இனி வணங்குவோம் நம் மூத்த தேவியை!

என் பள்ளிப்பருவத்தில் என் தமிழாசிரியர் எங்களுக்கு சொன்ன ஒரு தகவல் ஒன்று போதும். இதை தெளிவாக புரியவைக்க!
“போடா அறிவில்லாதவனே!” என்பது ஒரு திட்டும் வார்த்தை இல்லை. அதன் பொருள் “அறிவு + ஆதவன்”. அதாவது “அறிவில் நீ ஆதவன் என்னும் சூரியன் போன்றவன்” என்பது பொருள். இனி பெண்களை ‘மூதேவி’ என்று அமங்கலத்தின் அம்சமாய் திட்டாமல், விவசாயத்தில் மூத்தவள், செல்வத்தில் மூத்தவள், அனைத்திலும் மூத்தவளே.. எங்கள் மூத்த தேவியே என்று புகழுங்கள்!