• June 4, 2023

பிறப்பொன்றே எம்தமிழ்

 பிறப்பொன்றே எம்தமிழ்

தனிப் பெருமையோடெம் தமிழ்
தரணியாளும் தங்கத்தமிழ்
உயர்வினும் உயர்த் தமிழ்
உடலல்ல எம்முயிர்த் தமிழ்

ஊமையும் உரக்கப் பேச
சிறக்கச் செய்ததெம் தமிழ்
மொழியையும் விழிகளாய்
உற்றுப் பார்க்கச் செய்ததெம் தமிழ்

பூமித்தாயையே சேயாய்
பெற்றெடுத்ததெம் தமிழ்
பூமிக்கே ஓர் உணர்வடிவம்
முதலாய் தந்ததெம் தமிழ்

கற்காலம் கடந்து வந்தே
பொற்காலம் செய்ததெம் தமிழ்
கர்ப்பினை பொற்கொடை என்றே
போற்றி பறைசாற்றியதெம் தமிழ்

நரம்பினில் இரும்புக் குழம்பென
கொதித் தோடியதெம் தமிழ்
புறம் கூறி புலம்பு வார்க்கெல்லாம்
செம்மையை உரைத்ததெம் தமிழ்

தெய்வமே திருவருளியதெம் தமிழ்
அசரீரியாய் ஒலியெழுந்ததெம் தமிழ்
அன்பின் ஆழமதில் அடையாளமாய்
அர்த்தம் தந்ததெம் தமிழ்

பிறக்கும் குழந்தையாய்
பிறந்தோங்குவதும் எம்தமிழ்
யாதழிந்த போதும் அழியாததெம் தமிழ்
வானளந்து வாழ்வாங்கு வாழ்வதுவும் எம்தமிழ்

கவிஞர் சென்

கவிஞர் சென்

Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator