• September 22, 2023

வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரன் பூலித்தேவன்

சிப்பாய் கலகம் என்ற சிந்தனையே இல்லாத நாளில், அறப்போர் என்ற வார்த்தையை பிறவாத காலத்தில், பாரத நாட்டின் சொத்தையல்ல, சுதந்திரத்தை, சுயமரியாதையை சூறையாட நினைத்து, சூழ்ச்சி வலை விரித்த வஞ்சகர்களை எதிர்த்து முதல் குரல் ஒலித்தது நம் தென்னிந்தியாவில், அதுவும் நம் வீரம் விளைந்த தமிழ்நாட்டில்… இந்திய சுதந்திரப் போரின் முதல் முழக்கத்தை ஒருவன் எழுப்பினான். அவனின் குரல் தமிழ்நாட்டு கோட்டைகளிலும், கொத்தளங்களிலும், மலைகளிலும் காடுகளிலும் பலமாக எதிரொலித்தது. இவன் துவக்கிவைத்த சுதந்திரப்போர், இவன் பலியான பின்னும், மானம் படைத்த இவன் வழிவந்தவர்கள் வழியாக, இவன் மரபினர் வழியாக, வீரத்தமிழர்களின் உள்ளங்களின் இயற்கையாகவே சுதந்திர போரின் நெருப்பை எரியவிட்டு சென்றது. இந்திய விடுதலை வரலாற்றில், வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கமிட்டவன்.. இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருத்தப்பட்டவன்… தமிழ்நாட்டின் திருநெல்வேலிச்சீமைப் பகுதியில் உள்ள நெற்கட்டான் செவ்வல் என்ற இடத்தை ஆண்ட இவன், ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கு எதிராக, தம் வீர வாளை உயர்த்திய முதல்தமிழன்… பூலித்தேவன்…