சிவனுக்கு நடந்த உறுப்பு மாற்று சிகிச்சை..! கண் தானம் செய்த கண்ணப்ப நாயனார்..!
அறிவியல் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் ஒரு உறுப்புக்கு ஏதேனும் பழுது ஏற்பட்டால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.
ஆனால் மருத்துவத் துறையில் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில், உறுப்பு மாற்று சிகிச்சை பற்றி தெரியாத நேரத்தில் கடவுள் சிவபெருமானுக்கே தன் கண்களை தானமாக வழங்கிய கண்ணப்ப நாயனார் தான் உலகில் முதல் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணரா என்று கேட்கத் தோன்றுகிறது.
சைவ சமயத்தவர்களால் பெரிதாக மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவராக திகழக்கூடிய இந்த கண்ணப்பன் நாயனார் வேடர் குலத்தில் பிறந்து வேட்டையாடுவதில் வல்லவராக திகழ்ந்திருக்கிறார்.
இந்த கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் திண்ணன் என்பதாகும். ஒவ்வொரு நாளும் தான் வேட்டையாடி வந்த பொருளை சிவபெருமானுக்கு படைத்து விட்டு தான் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த, இவர் சிவபக்தியில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு அதீத பக்தியில் சிவன் மீது பற்றுடன் இருந்திருக்கிறார்.
தினமும் சிவன் மீது இவ்வளவு பற்று கொண்டு இருப்பதை சிவன் புரிந்து கொள்ளவில்லையோ என்பதை பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்த திண்ணன், எப்போதும் போல் கொண்டு வந்திருந்த மாமிசத்தை சிவனுக்கு படைக்க, சிவனின் கண்ணில் இருந்து ரத்தம் வழிவதை பார்த்து பதட்டம் அடைந்தான்.
இதனை அடுத்து பச்சிலைகளைக் கொண்டு கண்ணினை கட்டிப்பார்த்தான். ரத்தம் வழிவது நிற்கவில்லை. இதை அடுத்து தன் கண்களை கடவுளுக்கு கொடுப்பது என்று முடிவு செய்து கையில் இருந்த கத்தியால் தன் கண்ணை அப்படியே பெயர்த்து எடுத்து லிங்கத்தில் பொருத்தினான். அப்போது அந்த கண்ணில் இருந்து வழிந்து வந்த ரத்தம் அப்படியே நின்று விட்டதின் காரணத்தால் மகிழ்ச்சியடைந்தான்.
அடுத்த நொடியே மறு கண்ணில் இருந்து ரத்தம் வந்தது. இதைப் பார்த்து சற்றும் தளராத திண்ணன், தன்னுடைய இன்னொரு கண்ணையும் தோண்டி லிங்கத்தின் கண்களில் பொருத்தினான். இதை அடுத்து திண்ணனின் பக்தியை பார்த்த சிவபெருமான் அவர் முன் காட்சி அளித்து மீண்டும் அந்த கண்களை திருப்பித் தந்தார்.இதன் மூலம் கண்ணை எடுத்து சிவனுக்கு அப்பியதால் கண், அப்ப, நாயனார் = கண்ணப்ப நாயனார் என்ற பெயரை பெற்றார்.
இப்போது சொல்லுங்கள் உலகிற்கு முதல் முதலில் அதுவும் சிவபெருமானுக்கு தன்னுடைய கண்களை தானமாக கொடுத்த கண்ணப்ப நாயனார் தானே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி.