“வெற்றி வேண்டுமா? அப்ப போட்டுப் பாரு எதிர்நீச்சல்..!
ஒருவன் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்காக பலவித வழிகளை கையாண்டு முயற்சியோடும், ஊக்கத்தோடும், தன்னம்பிக்கையோடும் வெற்றி இலக்கை அடைய போராடுகிறான்.
அத்தகைய போராட்டத்தில் சில நேரங்களில் அவனுக்கு தோல்வி ஏற்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகும். அத்தகைய சமயத்தில் அவன் நம்பிக்கை இழக்காமல் தான் கொண்ட இலக்கை அடைய, எதிர்நீச்சல் அடிப்பதின் மூலம் கட்டாயம் இலக்கினை அடைய கூடிய வழி பிறக்கும்.
அதை விடுத்து விட்டு மனக் கவலையோடு எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் வளர்த்துக் கொள்வதால் எந்த ஒரு பயனும் இல்லை.நீ இலக்கினை அடைய வழி என்ன என்பதை சிந்திப்பதோடு அதை சரியாக செய்ய களம் இறங்குவது தான் அவசியம்.
வாழ்க்கை என்பது ஒரு முறை தான். எனவே முயன்று, முயன்று நாம் வெற்றி இலக்கை பிடிக்க பாடு பட வேண்டும். எப்போதும் சோம்பி இருக்கக் கூடாது. ஒரு சின்ன தேனீ கூட பல பூக்களுக்குச் சென்று தான் தேனை தினமும் உழைத்து சேமிக்கிறது என்ற உண்மை புரிந்து கொண்டால் நீ சுணங்காமல் உழைப்பாய்.
உன்னை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கின்ற சாவி வேறு எவரிடமும் இல்லை. உன்னிடம் மட்டுமே அது உள்ளது என்று உணர்ந்து கொண்டாலே போதும் வெற்றி இலக்குகளை சுலபமாக நீ சென்று அடையலாம்.
நித்தம், நித்தம் நீ எதிர்நீச்சல் போடுவதால் உனக்கு நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும், என்ற தன்னம்பிக்கை உனக்குள் இருக்கும் வரை உன்னை எவராலும் அசைக்க முடியாது. உன் வெற்றிகளையும் தடுக்க முடியாது.
எனவே உன்னை நம்பி, நம்பிக்கையோடு குறித்த நேரத்தில் அனைத்தையும் செய்வதற்கு முயற்சி செய். முயற்சியோடு நின்று விடாமல் மேலும், மேலும் நீ அதை நோக்கிச் செல்லும் போது தான் வெற்றிகள் அனைத்தும் உன் பாதையில் வந்து சேரும்.
அதை விடுத்து நீ உன்னால் முடியாது என்ற ஒரு எண்ணத்தை உனக்குள் விதைத்துக் கொண்டால், அது நிச்சயம் உன்னை வெற்றி இலக்கு நோக்கி அழைத்துச் செல்லாது. மாறாக உனக்கு மன சங்கடத்தையும், தோல்வியையும் ஏற்படுத்தித் தரும். எனவே எதிர்மறை எண்ணங்களை உனக்குள் இருந்து தூர எறிந்து விடு, நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.
ஓடி, ஓடி உழைக்கத்தான் நீ பிறந்து இருக்கிறாய் என்பதை மனதில் கொண்டாலே, உனக்கு ஓய்வே தேவையில்லை என்பதை உணர்வாய். எனவே எடுத்து இருக்கின்ற இந்த பிறப்பை நீ சிறப்பான முறையில் கையாள, இது உனக்கு ஒரு சிறப்பான சந்தர்ப்பம் என்பதை நீ உறுதியாகக் கொண்டால் கட்டாயம் வெற்றியை அடைவாய்.