“ஆசானை சிறப்பிக்கும் ஆசிரியர் தினம்..! – வணங்கி, வாழ்த்தும் Deep Talk Tamil..

teachers day
மாதா, பிதா, குரு,தெய்வம் என்ற சொற்றொடர்கள் உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த சொற்றொடர்களில் கடவுளுக்கு முன்னால் நமக்கு கற்றுத் தரும் ஆசானை வைத்து அழகு பார்த்து அந்தஸ்தை தந்திருக்கும் ஆசிரியர் தினம் இன்று.
இந்த தினத்தில் ஆசிரியர்கள் அனைவருக்கும் Deep Talk Tamil சார்பில் வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியராக பணி புரிவது என்பது கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பதல்ல. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் நல்ல ஒழுக்கத்தையும், ஆன்மீகத்தையும், பொது அறிவையும் கற்றுக் கொடுத்து வீட்டிற்கும், நாட்டிற்கும் உரிய வகையில் ஒவ்வொருவரையும் உருவாக்கக்கூடிய அறப்பணியை ஆசிரியர்கள் செய்து வருகிறார்கள்.
உலக அளவில் ஆசிரியர் தினமானது அக்டோபர் ஐந்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை செப்டம்பர் 5ஆம் தேதி படு விமர்சையாக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் சிறந்த கல்வியாளர்களையும், கல்வி சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களையும், அரசு மட்டுமில்லாமல் அனைவரும் அவர்களை பாராட்டி பரிசுகளை வழங்குவார்கள்.
மேலும் நம் நாட்டில் டாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் பிறந்தநாளைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். இவர் இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவராக இருந்து, பிறகு குடியரசு தலைவராக உயர்ந்தவர்.

இந்த நாட்டின் எதிர்காலம் வருங்கால குழந்தைகளின் கையில் உள்ளது. அந்த குழந்தைகளை மிகச் சிறந்த குழந்தைகளாக மாற்ற ஆசிரியர்களே மூல காரணமாக இருக்கிறார்கள்.
ஒரு மனிதனை சிறந்த மனிதனாக அடையாளப்படுத்தும் ஆசிரியர்களே, நல்ல மனிதர்கள் உருவாகவும் சமுதாயம் சிறப்பாக மாறுவதற்கும் உதவி செய்கிறார்கள்.
ஒன்றும் அறியாத களி மண்ணாக இருக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தைகளையும், மிக சிறப்பான முறையில் சிற்பங்களாக மாற்றக்கூடிய தன்மை ஆசிரியர்களின் கைகளில் தான் உள்ளது. அறிவு திறத்தாலும், அனுபவ ஆற்றலாலும் நல்ல திறமைசாலிகளை உருவாக்க ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் முயற்சி செய்கிறார்கள். மேலும் பெற்றோர்களை விட குழந்தைகளோடு அதிக அளவு நேரத்தை செலவிடுகிறார்கள்.
அந்த வகையில் ஆசிரியர் தினம் என்பது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு அன்னியோன்யத்தை உறுதி செய்யக்கூடிய விழாவாக கூறலாம்.

இதனை அடுத்து தான் ஆசிரியர்களை மதித்து கௌரவிக்க இந்தியாவில் இருக்கும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரிய விருதுகளை வழங்கி இந்திய அரசு கௌரவம் செய்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துப்படி “கற்பித்தல் ஒரு தொழில் அல்ல.. வாழ்க்கை முறை.. மேலும் கற்பித்தல் ஒரு தொழில் அல்ல.. ஜீவன் தர்மம்” என்று உலகெங்கிலும் அனைவரும் உணர்ந்து கொள்ளும்படி ஆசிரியர்களைப் பற்றி சிறப்பான செய்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
“எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று ஆத்திச்சூடியில் அவ்வை நமக்கு கற்றுக் கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கும் என்பதால் தான் தெய்வத்திற்கு முன்பு குருவை வைத்து நாம் வணங்கினோம்.
ஒரு குழந்தை ஆன்றோனாகவும், சான்றோனாகவும் வருவதற்கு பெற்றோர்களுக்கு அடுத்த இடத்தில் குரு இருக்கிறார்கள். மனித வரலாற்றில் பிரிக்க முடியாத பந்தமாக குரு சிஷ்ய பந்தம் உள்ளது என கூறலாம்.

இத்தகைய சீரும் சிறப்புமிக்க ஆசிரியர் தினத்தை கொண்டாட கூடிய இந்த நாளில் எல்லா ஆசிரியர்களுக்கும் DEEP TALK TAMIL சார்பில் வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இருளில் இருக்கும் குழந்தைகளுக்கு அறிவு ஒளியை கொடுக்கும் ஆசிரியர்கள் இன்று மட்டுமல்ல என்றுமே சூப்பர் ஸ்டார் தான்.