“விநாயகர் சதுர்த்தி” – வளம் பெற இப்படி வணங்கலாமே..

Ganesh Chaturthi
இந்தியா முழுவதும் படு விமர்சனமாக கொண்டாடப்படக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி விழா உள்ளது. இந்த விழாவானது விநாயகப் பெருமானின் அவதார தினமான சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது.
வடநாட்டில் சுமார் பத்து நாட்களுக்கு மேல் இந்த விழாவை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தென்னிந்தியாவில் ஒருநாள் விமர்சையாக கொண்டாடுவார்கள்.

இந்த நாளில் வீடுகளில் பல வண்ணங்களால் செய்யப்பட்ட களிமண் விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து விநாயகருக்கு பிடித்த உணவு பண்டங்களான காரக்குழக்கட்டை, மோதகம், அவுல், பொறி, கடலை, பழங்கள் வைத்து வழிபடுவதோடு அவருக்கு பிடித்த அருகம்புல் மாலை மற்றும் வெள்ளை எருக்கு மாலையை அணிவித்து விநாயகரை மகிழ்விப்பார்கள்.
விழா முடிந்த பிறகு வீட்டில் உள்ள விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து பூஜை செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகின்ற இந்த விழாவின் மூலம் விநாயகப் பெருமானை வணங்கினால் நமக்கு தேவையான அறிவு, ஞானம், செல்வம், அதிர்ஷ்டம் போன்றவை கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்று வரை உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாம் செய்கின்ற காரியங்கள் தங்கு தடை இல்லாமல் நடக்கவும், எந்த ஒரு காரியத்திலும் விக்னம் ஏற்படாமல் இருக்கவும், விக்ன விநாயகரை தொழுவது மிகவும் அவசியம். மேலும் எந்த ஒரு நிகழ்விலும் முதல் பூஜை விநாயகருக்கு நடந்து வருகிறது.
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமாள் அவதரித்ததாக புராணங்கள் சொல்கிறது. எனவே அந்த தினத்தில் விநாயகனை வழிபடுவதோடு மட்டுமல்லாமல், விநாயகப் பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு துன்பங்கள் நீங்கும் நன்மைகள் பெருகும்.
இந்த நாளில் விநாயகரை வணங்குவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நவகிரக தோஷம், சர்ப தோஷம், சனிபகவானால் ஏற்பட்டும் தொல்லைகள் திருமணத்தடை, காரியத்தடை உட்பட்ட பல்வேறு தடைகளை தகர்த்தெறியக்கூடிய தன்மை விநாயகருக்கு உண்டு.

ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி ஏற்படுவது வழக்கம், எனினும் ஆவணி மாதம் ஏற்படுகின்ற சதுர்த்திக்கு தனி சிறப்பு உண்டு. அதுவும் வளர்பிறையில் வரும் சதுர்த்தி அன்று விநாயகரை வணங்குவதின் மூலம் எண்ணற்ற பலன்களை நீங்கள் அடையலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தான் சதுர்த்தி வரும். எனினும் இந்த ஆண்டு புரட்டாசியில் சதுர்த்தி தினம் வந்துள்ளது. எனவே இந்த விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த நாளில் நீங்களும் உங்கள் வீட்டில் பிள்ளையாருக்கு உங்களால் முடிந்த நெய்வேத்தியத்தை படைத்து வணங்கி உங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள்.