• November 5, 2024

முத்துராமலிங்கத் தேவர் வரலாறும் – சிறந்த மேடைப் பேச்சும் 

 முத்துராமலிங்கத் தேவர் வரலாறும் – சிறந்த மேடைப் பேச்சும் 

Muthuramalinga Thevar

‘ஒருவன் இருந்தாலும், மறைந்தாலும், அவன் பெயரை ஊர் சொல்ல வேண்டும்’ என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க, வாழ்ந்து மடிந்த மகான்கள்  எண்ணற்றோர். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் அற்புத குழந்தை பெரும் தாக்கத்தை இந்த உலகத்தில் ஏற்படுத்தும் என்பார்கள். அப்படி பிறந்த ஒரு ஒப்பற்ற பிள்ளை, பிற்காலத்தில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவுக்கே ஒரு கலங்கரை கோபுரமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

‘நினைக்கும்போதே வணங்கத் தூண்டும் மகா உத்தமத் தலைவர்! ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, அவர் மாதிரி நிறைவான தலைவரை நாடு உண்டாக்கியதுமில்லை. உண்டாக்கப் போவதுமில்லை! என்று முன்னாள் முதலமைச்சர் திரு. எம்.ஜி . ராமச்சந்திரன் வியந்து குறிப்பிட்ட, ஒரு உன்னத தலைவரைக் குறித்து தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். 

Muthuramalinga Thevar
Muthuramalinga Thevar

“சாதி என்பது பச்சை அநாகரிகம். சாதியையும் நிறத்தையும் பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை. சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமில்லை. சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால், அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமில்லை ஆன்மீகத்துக்குமில்லை” என மனிதனுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் பூஜை” என்று கூறியவர்…..

தாழ்த்தப்பட்டவர்களும், ஆதிதிராவிடர்களும், பொருளாதார முன்னேற்றமடைய, கல்வி மி்க முக்கியம்”, “ஒரு சாதி ஆதிக்கத்திலுள்ள பள்ளியில், மற்றொரு சாதி மாணவருக்கு இடம் கிடைக்காத நிலையா?” என்றும் பொங்கியவர்…. “தன்னுடைய மரண சாசனத்திலேயே, ஆதிதிராவிட மக்களுக்கு, தனது நிலத்தில் பெரும்பகுதியை எழுதி வைத்ததோடு, தனது கண்காணிப்பில் தனது இல்லத்திலேயே தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு, கல்வி அளித்தவர்” என்ற சமூக நீதிக்கு சொந்தக்காரர் இவர்.

சில ஊர்கள் பெரிய தலைவர்களையோ அல்லது நல்ல கலைஞர்களையோ கொடுத்து, தனக்கு பெருமை தேடிக் கொள்கின்றன. அந்த வகையில் பசும்பொன் என்ற அந்த சிறிய கிராமம், தேவர் என்ற உயர்ந்த மனிதரை இந்த உலகுக்கு கொடுத்து, தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டது என்றால் மிகையாகாது. 

உங்கள் கண்களை மூடுங்கள்! பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த காலகாலத்திற்கு செல்வோம்!

Muthuramalinga Thevar
Muthuramalinga Thevar

1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு பசும்பொன் கிராமத்தைச் சேர்ந்த உக்கிரப்பாண்டித் தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும், முத்துராமலிங்கம் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைதான் பின்னாளில் இந்திய சுதந்திர போராட்ட களத்தில் வெள்ளையர்களை எதிர்க்க உருவான இந்திய தேசிய ராணுவத்திற்கு, தமிழகத்தில் இருந்து தகுதி வாய்ந்த வீரர்களை அனுப்பி வைத்து, பரங்கிப் படைக்கு பேரச்சத்தை உருவாக்கியது. 

பெரும் குடும்பங்களில் இரண்டு மூன்று முறை பெண்கள் இருந்தால், யார் மகளை திருமணம் செய்வது என்பதில் பெரும் சண்டை வருவது அந்த காலத்தில் இயல்பாகவே இருந்த ஒன்று.  உக்கிர பாண்டி தேவருக்கு இரண்டு அத்தைமார்கள். அவர்களிடையே சண்டை வரக்கூடாது என்பதற்காக இந்திராணி என்பவரையும் காசி லட்சுமி என்பவரையும் உக்கிரபாண்டித் தேவர் திருமணம் செய்து கொண்டார். முத்துராமலிங்கம் பிறந்து வெகு சில மாதங்களில் அதாவது ஆறு மாதங்களில் இந்திராணி அம்மையார் இறந்து விடுகிறார். காசி லட்சுமி, முத்துராமலிங்கத்தை பேணி வளர்த்து வந்தார் என்றாலும், அவரும் விரைவாகவே இந்த உலக பயணத்தை முடித்துக் கொண்டார். உக்கிரபாண்டித்தேவருக்கு குழந்தையாக இருந்த முத்துராமலிங்கத்தின் மீது, கடுமையான வெறுப்பு தோன்றுகிறது. தனது இரு மனைவிகளை இழப்பதற்கு முத்துராமலிங்கம் தான் காரணம் என்று நினைத்தார்.

ஆகவே முத்துராமலிங்கத்தை, பசும்பொன்னுக்கு அடுத்திருக்கும் கல்லுப்பட்டிக்கு அழைத்துச் சென்று, அவரது தாய் வழி பாட்டியான பார்வதியம்மாள் வளர்க்க ஆரம்பித்தார். சிறுவயதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முத்துராமலிங்க தேவருக்கு, தாய் பால் கொடுக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தவே, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஊரெங்கும் தாய்மார்களைத் தேடினார் பார்வதியம்மாள். யாரும் குழந்தைக்குத் தாய்ப்பால் தர முன்வரவில்லை. அப்போது அந்த ஊரில் வசித்த இஸ்லாமிய பெண்ணாண சாந்த் பீவி, முத்துராமலிங்கருக்கு பால் புகட்ட முன்வந்தார். 

இளமைப் பருவத்தில் குழந்தைச்சாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பர்தான், தேவர் கல்வி பயில பெறும் உதவி புரிந்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை பின்னர் மதுரை என பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகளில் பள்ளிப்படிப்பை தொடர்ந்தார் என்றாலும், 1924ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவரால் முழுமையாக பள்ளிப்படிப்பை முடிக்க இயலவில்லை.

முத்துராமலிங்கம் வளர்ந்து வாலிபனாகும் நேரத்தில், அவர் தந்தை தன்னிடமிருந்த சொத்துக்களை எல்லாம் எடுத்துக் கொண்டு மதுரைக்கு சென்றார். தன் தந்தை செய்த தவறுகளை தடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு  ஏற்பட்டது. அதன் பின் அவர் தன்னுடைய பாட்டனாரின் வழியே, பசும்பொன் கிராமத்தில் கிழக்கு வீடு என்ற அவர்கள் பரம்பரை வீட்டின் பெருமையை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றார். 

Muthuramalinga Thevar
Muthuramalinga Thevar

இளம் வயதிலேயே தாயைப் பறிகொடுத்த சோகம், தந்தையாரின் அரவணைப்புக் கிடைக்காத விரக்தி எல்லாம் ஒன்று சேர்ந்துகொண்டது தேவருக்கு. யாரும் எடுக்கத் துணியாத ஒரு முடிவை எடுத்தார் தேவர். அது, ‘கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல், பிரம்மச்சாரியாகவே வாழ்வது’ என்கிற முடிவு. இந்த முடிவில் அவர் இறுதி வரை உறுதியாக நின்று வாழ்ந்து காட்டினார். அதோடு, வாழ்நாள் முழுக்கப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற எண்ணமும் அவர் மனத்தில் வேரூன்றியிருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தைத் ஏற்படுத்திக் கொண்டார்.

மிஷினரி பள்ளிகளில் படித்த போது கிடைத்த ஆங்கில அறிவை அவர் அற்புதமாக பயன்படுத்தினார். தமிழ் மொழி மீது தீராத காதலையும் முத்துராமலிங்கம் கொண்டிருந்தார். தமிழ், ஆங்கில ஆகிய மொழிகளில் சரளமாகவும், சமரசமின்றியும், பயமின்றியும் பேசும் ஆற்றலை அவர்  இயற்கையாகவே பெற்றிருந்தார். இவருடைய உடல் தோற்றம், கம்பீரமான வெண்கலக் குரல், சந்தன நிறம், தொடக்கத்தில் சிங்க மீசை ஆகியவற்றோடு மேடைகளில் தோன்றி, வாய் திறந்து செந்தமிழில் முழங்கி, முடிக்கிறபோது, கோழையும் வீரனாகித் திரும்புவான். அப்படியொரு பேச்சாற்றலை தேவர் கொண்டிருந்தார். 

குடும்ப சொத்துக்களை மீட்டு பாதுகாக்கும் பொருட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டி வழக்கறிஞரை சந்திக்க சென்ற இடத்தில் தான், தேவரின் அரசியல் வாழ்வு ஆரம்பித்தது. வழக்கறிஞராக இருந்த ஸ்ரீனிவாச ஐயங்கார்தான் அவரை காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்துவிட்டார். சுதந்திர போராட்டம் தீவிரமாக நாடெங்கும் நடந்து கொண்டிருந்த நேரமது. 

ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆங்கில ஆட்சியில் நிகழும் அத்தனை துன்பத்தையும் தேவருக்கு எடுத்துக் கூறியபோது, தேவர் உணர்ச்சிவயப்பட்டு துடித்தார். தாய்நாட்டின் விடுதலைக்காக என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று முழங்கினார் தேவர். 

தான் எப்போதும் விரும்பி அணியும் சைனா சில்க் ஜிப்பா, வேட்டியை துறந்தார். கதர் ஜிப்பா, வேட்டிக்கு மாறினார். இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பார்வையாளராகக் கலந்து சென்ற தேவரை, ஆப்ப நாட்டு பிரதிநிதியாக, மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சீனிவாச ஐயங்கார். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட இன்னொரு முக்கியமான தலைவர் சுபாஷ் சந்திரபோஸ். அவரைப் பார்த்ததுமே, ஒரு பிணைப்பும் நெருக்கமும் ஏற்பட்டு விட்டது தேவருக்கு. அவருடன் உரையாடினார். பேசப் பேச, நேதாஜியின் கம்பீரமும் வீரமும் அவரைக் காந்தம் போலக் கவர்ந்து இழுத்தன. ‘இவர்தான் என் தலைவர்!’ என்று மனதுக்குள் உரக்கச் சொல்லிக் கொண்டார் முத்துராமலிங்க தேவர். அந்த பிணைப்பும் நெருக்கமும் இறுதிவரை இருந்தது. 

முதுகுளத்தூர் தாலுகாவில் இருக்கும் சாயல்குடியில், விவேகானந்தர் வாசக சாலை என்ற அமைப்பை சேதுராமன் செட்டியார் என்பவர் நடத்தி வந்தார். அந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழா ஏற்பாடுகளை வெகு சிறப்பாக அவர் செய்து கொண்டிருந்தார். விழாவிற்கு காங்கிரஸ் பேரியக்கத்தை சார்ந்த பலரையும் அவர் அழைத்திருந்தார். அந்த விழாவில் கலந்துகொண்ட மிக முக்கியமான நபர்களில் ஒருவர் பெருந்தலைவர் காமராஜர். அனைவரும் விழாவுக்காக வந்திருந்த நேரத்தில், சிறப்புரை ஆற்றுவதற்காக அழைத்திருந்த பேச்சாளர் என்ன காரணத்தாலோ விழாவிற்கு வர இயலாமல் போனது.  சேதுராமன் செட்டியார் மிகுந்த கவலையில் ஆழ்ந்தார். அவர் தன்னுடைய நண்பர்களிடம், விழாவில் பேசுவதற்கு தகுதியான நபரை அடையாளம் கண்டறியும் படி கேட்டுக்கொண்டார். 

அதன்படி அவருடைய நண்பர்கள் பசும்பொன்னை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர்,  நல்ல ஞானம் உள்ள பேச்சாளர் என்றும்,  பல உள்ளூர் பிரச்சனைகளில் அவர் திறமையாக பேசி தீர்வுகளை சொல்லக்கூடியவர் என்றும் அவரை விழாவிற்கு பேச வருமாறு அழைக்கலாம் என்றும் சேதுராமனுக்கு அறிவுரை கூறினார்கள். முதலில் அவர் மிகவும் தயங்கினார். ஏனென்றால், புதிதாக ஒருவரை அதுவும், மேடைகளில் பேசி அனுபவம் இல்லாதவரை, இந்த விழாவிற்கு அழைத்து பேச சொல்லுவது, சரியாக வருமா என்ற குழப்பம் அவருக்கு இருந்தது. இறுதியில் வேறு வழியின்றி அவர் முத்துராமலிங்க தேவரை அழைத்து வரும்படி ஆட்களை அனுப்பினார். 

இலந்தைகுளம் என்னும் இடத்தில், ஒரு உள்ளூர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தேவர் அங்கு வந்திருந்தார். அவர் அங்கிருக்கும் தகவலை அறிந்து கொண்ட சேதுராமனின் ஆட்கள், அவரை அணுகி சாயல்குடியில் இருக்கும் சுவாமி விவேகானந்தர் வாசக சாலை  முதலாம் ஆண்டு விழாவில், விவேகானந்தரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்ற வேண்டும் என்றும், அதற்காக அவரை அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும் அவர்கள் தேவரிடம் கூறினார்கள். உண்மையில் தேவருக்கு ஸ்வாமி விவேகானந்தர் மீது அளவற்ற பக்தியும் பற்றும் இருந்தது. சுவாமி விவேகானந்தரை அவர் ஆன்மீக குருவாக உள்ளத்தில் ஏற்றிருந்தார். வந்தவர்கள் அவரது திருவுருவப்படத்தை திறந்து வைத்து அவரை குறித்து சிறப்புரையாற்ற வேண்டும் என்று கேட்டதும், சிறிது கூட யோசிக்காமல் உடனே வருவதாக கூறி, அவர்களுடன் சாயல்குடிக்கு கிளம்பிச் சென்றார் தேவர். 

Muthuramalinga Thevar
Muthuramalinga Thevar

சாயல்குடியில் இருந்த மைதானம், மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது. மதுரை கிருஷ்ணசுவாமியின்  பேச்சை கேட்பதற்காக, மக்கள் ஆர்வத்தோடு வந்து ஏமாற்றம் அடைந்திருந்தாலும்,  ‘முத்துராமலிங்க தேவரின் பேச்சு எப்படி இருக்கிறது என்பதை கேட்டுத்தான் பார்ப்போமே?’ என்ற எண்ணத்தில் கலையாமல் காத்திருந்தார்கள். 

“விவேகானந்தர் பெருமை” என்ற தலைப்பில், தேவர் பேச ஆரம்பித்தார். ஒரு ஆண் சிங்கம், காடு அதிரும்படி செல்வது போல, அவருடைய பேச்சு அமைந்திருந்தது. விவேகானந்தர் நிற்கிறார் என்றால் அந்த காட்சி கேட்பவர்களின் மனதிற்குள் விரியும் படியும், சுவாமி விவேகானந்தர் பேசினார் என்றால், அவரது பேச்சு ஒவ்வொருவர் காதுக்குள்ளும் எவ்வாறு எதிரொலிக்குமோ? அது மக்களின் கண்களில் விரிவது போலவும், முத்துராமலிங்க தேவருடைய பேச்சு அமைந்திருந்தது. கேட்பவர்கள் இதயம் பரவசத்தில் நிறைந்தது. அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு வார்த்தையையும் அவர் உச்சரித்து பேசியதை கேட்ட மக்கள், ஆனந்தத்தில் திளைத்தார்கள். தேவருடைய பேச்சில் ஆன்மீகமும் அரசியலும் கலந்து இருந்தது.

 2 மணி நேரத்திற்கு மேலாக விவேகானந்தரை பற்றி முத்துராமலிங்க தேவர் ஆற்றிய அந்த உரை தான், தேவருடைய முதல் மேடைப் பேச்சாகவும், கன்னி பேச்சாகவும் அமைந்தது. சாயல்குடி சுவாமி விவேகானந்தர் வாசகசாலை, கொடுத்த அந்த மேடையை, முத்துராமலிங்க தேவர் அற்புதமாக பயன்படுத்திக் கொண்டார். அவரது பேச்சாற்றல் சுற்று வட்டாரம் எங்கும் பிரபலமானது.  விழா முடிந்த பிறகு தேவரின் அருகில் வந்து, அவரது கரங்களை பற்றிக் கொண்ட சேதுராமன் செட்டியார், ‘என் வாழ்வில் இது போன்றதொரு பேச்சை நான் இதுவரை கேட்டதே இல்லை’, என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார். விழாவிற்கு வந்திருந்த காமராஜர், தேவரிடம், ‘இது போன்ற வீரமிக்க பிரசங்கம் விடுதலைப் போருக்கு மிகவும் உதவியாக இருக்கும்’ என்று தான் நம்புவதாக கூறினார். 

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியின் போது, குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act)  என்ற, குறிப்பிட்ட சமூகத்தினர்களுக்கு எதிரான ஒரு சட்டம் இருந்தது. 1927ம் ஆண்டு மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்து வந்தது. அக்காலத்தில் முத்துராமலிங்கத் தேவர் இந்தச் சட்டத்தை நீக்குவதற்காக ஆதரவு திரட்டத் தொடங்கினார். இந்த நிலையில், 1929 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, மேலும் 19 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினரை, இந்தச் சட்டத்தின் கீழ் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தனர். முத்துராமலிங்கதேவர் இதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார்.  “இந்தச் சட்டத்திற்கு யாரும் அடிபணிய வேண்டாம்” என மேடைகள் தோறும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அதிர்ந்து போன ஆங்கில அரசாங்கம் அந்தச் சட்டத்தைப் பகுதியாக விலக்கிக் கொண்டது. 

அதே போல கைரேகை சட்டத்தை கடுமையாக எதிர்த்த தேவர், அதை ஒழிப்பதற்காக அரும்பாடுபட்டார். ஊர் ஊராக, சென்று பிரச்சாரம் செய்தார். ‘கட்டைவிரலை வெட்டிக் கொள். கைரேகை வைக்காதே’ என்று மேடைகளில் முழங்கினார். கைரேகைச் சட்டத்தை எதிர்த்து, தேவர் மக்களைத் திரட்டி வருவதை  கண்ட ஆங்கிலேய அரசாங்கம், அவரை  சிவகாசி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்தது. டி.எஸ்.பி. இன்ஸ்பெக்டர் போன்ற போலீஸ் அதிகாரிகள் தேவரிடம் தன்மையாகவும் கடுமையாகவும் பேசி மிரட்டிப் பார்த்தார்கள். கைரேகைச் சட்டத்தை உடைக்க தேவர் எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருந்ததைக் கண்ட போலீஸ் அதிகாரிகள், அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.  அதற்குள் அவரை விசாரித்த காவல் நிலையத்தை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிடவே,  காவல்துறை அதிகாரிகள் பயந்து அவரை விடுவித்து அனுப்பி வைத்தார்கள். 

அதன் பிறகு முத்துராமலிங்க தேவர், பசும்பொன் வந்து ‘கைரேகைச் சட்டத்தை பூண்டோடு ஒழிக்க என்ன செய்ய வேண்டும்’ என்று ஆலோசனை நடத்தினார். இறுதியில் ஆப்பநாட்டு மறவர்கள் மாநாட்டை, பசும்பொன்னுக்கு அருகில் உள்ள அபிராமம் என்னும் ஊரில் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், குழு ஒன்று கவர்னரை சந்தித்து, கைரேகைச் சட்டத்தை ரத்து செய்ய மனு கொடுத்து வலியுறுத்தியது. இவரின் தொடர் முயற்சிகளால் காவல்துறை தயாரித்திருந்த குற்றபரம்பரை பதிவேட்டில்  இருந்த 2000 பேரின் எண்ணிக்கை, ஆயிரமாக மாறி பின்  341 ஆகக் குறைந்தது. இறுதியில் அந்த சட்டமே இல்லாமல் ஆனது. 

“ஏழை விவசாயிகளை நசுக்கும் ஜமீன்தாரி முறை ஒழிய வேண்டும்” என்று தேவர் எழுச்சி போராட்டங்களை நடத்தி இருக்கிறார். அவரின் பேச்சை கேட்டு விவசாய பெருமக்கள் சுதந்திர இயக்கத்தில் கலந்துக் கொண்டனர். தேவரின் பேச்சால் ஜமீன்தார்கள் அவர் மீது கோபப்பட்டனர். அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஆங்கில அரசை கடுமையாக தாக்கி பேசி வருவதைக் கண்ட அரசு, அவருக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தது. அரசை எதிர்த்து பேசுவதை நிறுத்தாவிட்டால் கைது செய்யப்பட நேரும் என்றது. அரசின் எச்சரிக்கையை, தேவர்  கண்டு கலங்கவில்லை. கிராமம் கிராமமாய் சென்று, ‘விடுதலைக்கு கை கொடுங்கள். அடிமை முறையை ஒழித்து, நம்மை நாம் ஆள தோள் கொடுங்கள்’ என்று ஓயாமல் சுதந்திரப் பிரச்சாரம் செய்தார். 

இவரை எப்படியாவது கட்டுப்படுத்தவேண்டும் என்று ஆங்கிலேய அரசு நினைத்தது. தேவருக்காக ஒரு சட்டத்தையும் போட்டது. ‘தேவர் அரசியல் பேசக்கூடாது. மீறிப் பேசினால், பேசிய இடத்திலேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.’ இருவருக்கு மட்டுமே ஆங்கிலேய அரசு இந்த வாய்ப்பூட்டுச் சட்டத்தைப் போட்டிருந்தது. ஒருவர், பால கங்காதர திலகர். இன்னொருவர், முத்துராமலிங்க தேவர்.

ஆனால் தேவர் இதற்கெல்லாம் அஞ்சி, அடங்கி இருக்கவில்லை. ‘என்னை பேசாதே! என்று சொல்ல, ஆங்கிலேயனுக்கு என்ன துணிச்சல்? நான் பேசுவேன்! பேசிக்கொண்டே இருப்பேன்! இது என் நாடு! இவர்கள் எல்லோரும் என்னுடைய மக்கள்.! என் மக்களிடம்  பேசாமல், நான் வேறு யாரிடம் பேசுவேன்”’ என்று பொங்கி எழுந்த அவர், கிராமம் கிராமமாய், ஊர் ஊராய் சென்று ஆங்கில அரசை எதிர்த்து பேசிக் கொண்டே இருந்தார். தேவருடைய அந்த வசீகர குரலுக்கு மக்கள் கட்டுப்பட்டு அவரோடு நின்றார்கள்.  

Muthuramalinga Thevar
Muthuramalinga Thevar

1936-ம் ஆண்டில் ஜில்லா போர்டு தேர்தலிலும், 1937-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் தேவர்  வெற்றி பெற்றார். தேவருடைய மேடைப் பேச்சுகள் பலவற்றிலிருந்தும் பெறப்பட்ட முக்கியமான சில புகழ் மிக்க பொன்மொழிகளை நாம் அறிந்து கொள்வது அவசியம். 

☼ தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்.  

☼ உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.

☼ பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை, தன் உடலெல்லாம் விழுங்கப்பட்டு மரண அவஸ்தையிலிருக்கும் போதும், தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே, மனிதனுக்கு ஆசை, அவன் ஒழியும் வரை  இருந்து கொண்டே இருக்கிறது.

☼ தாழ்த்தப்பட்ட மக்கள் பணக்காரர்களாக இருந்தால், அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் எல்லாரும்  தயாராக இருக்கிறார்கள்.

☼ வீரம் என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை  ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது.

☼   அதிகாரம் மக்களுடையது, அது நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருகிறது. நாம்  ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டும் என்ற தூய மனோபாவம் மந்திரிகளுக்கு இருக்க வேண்டும்.

☼ பக்குவப்பட்ட ஒருவன் இந்து கோவிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும், கிருத்தவ வளாகத்தில் வைக்கின்ற மெழுகுவர்த்தி ஒளியையும், முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும்,, தன் சரீரத்தின் இருட்டை போக்க எழுப்பவேண்டிய ஞானவிளக்கின் சொருபமாக காண்பான்.

இது போன்ற காலத்தால் அழியாத பொன் மொழிகளை, தேவர் இந்த உலகத்திற்க்கு விட்டுச் சென்றுள்ளார். 

தேவர் மேடைகளில் பேசுவதை தடைசெய்வதிலேயே ஆங்கில அரசு தீவிரமாக இருந்தது. பல வழக்குகளை அவர் மீது போட்டு அவரை சிறையிலேயே முடக்கிவிட அரசு தீவிரம் காட்டியது. மதுரை, திருச்சி, வேலூர், அலிப்புரம், ராஜமுந்திரி, அமராவதி என்று தேவரை பந்தாடிய ஆங்கில அரசு, இறுதியாக அவரை மத்திய மாகாணத்தில் இருந்த, டெமோ சிறையில் அடைத்தது. 1945-ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தான், தேவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்த மறுநாள், அவர்  சிறையில் இருந்து வெளியே வந்தார். 

இதனிடையே காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி விவகாரங்களால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரசிலிருந்து வெளியேறி, பார்வர்ட் பிளாக் கட்சியை ஆரம்பித்தார். நேதாஜியோடு சேர்ந்து காங்கிரசிலிருந்து வெளியேறிய தேவர், பார்வர்டு பிளாக் கட்சியில் தமிழக தலைமையை ஏற்றார். 

பின்னர் நேதாஜியின் சுற்றுப் பயணத்தில் தேவரும் கலந்து கொண்டார். சென்னையில் திலகர் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தேவரை தென்னாட்டு போஸ் என்று நேதாஜியே தனது வாயால் புகழ்ந்தார். தேவரின் அழைப்பை ஏற்று மதுரைக் கூட்டத்திலும் நேதாஜி கலந்து கொண்டார். பின்னர் இரண்டாம் உலகப் போர் சூழ்நிலையில், நேதாஜி தப்பித்து மலேசியா சென்று, இந்திய தேசிய இராணுவத்தை ஸ்தாபித்தார்.

‘நேதாஜி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அவர் இறந்தார்’ என்று அரசு அறிவித்த போதும் கூட, தேவர் அதை “பொய் தகவல்” என்று மறுத்து நேதாஜி உயிரோடு இருப்பதாக கூறினார். 

1949-ம் ஆண்டு தமுக்கம் மைதானத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் மேடையேறிய தேவர், நேதாஜியை நேரில் பார்த்ததாகவும், அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

 நேதாஜி குறித்த எண்ணங்கள் சதா அலை மோத, கொஞ்சம் சோர்வடைந்திருந்தார் தேவர். திடீரென்று கிளம்பி வடநாட்டுக்குச் சென்றவர் ஓராண்டுக்கும் மேலாக திரும்பி வரவில்லை. நேதாஜியின் சகோதரருடன் அவர் எல்லையைக் கடந்து, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த திபெத் சென்று, சிக்காங் என்ற இடத்திற்கு சென்றார். அதன் பிறகு அவர் இரண்டாண்டுகள் தமிழகத்திற்குத் திரும்பவே இல்லை. மீண்டும் அவர் திரும்பி வந்தபோது, ஆளே அடையாளம் மாறியிருந்தார். அவரது முகத்தில் இருந்த மீசை இல்லை. பாகவதர் போல தோள்களைத் தொடுமளவுக்கு முடி வளர்த்திருந்தார். 

கிட்டத்தட்ட ஆறாண்டு காலம், ஆங்கிலேய அரசால் குற்றவாளியாக சிறையில் அடைபட்டிருந்த தேவர், சிறையில் இருந்து விடுதலையான பின், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டார். ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிறையச் செய்தார். பாமரர்களும் கேட்டுப் புரிந்துகொள்ளும் வகையில் வெகு எளிமையாக இருந்தது அவருடைய சொற்பொழிவு. 

யோகம், கருமயோகம், ஞானம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம், திருமூலர் திருமந்திரம், திருப்புகழ், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றின் துணையோடு விரிவாகச் சொற்பொழிவு செய்தார். பேசும்போது, தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள் அத்தனைபேரின் கருத்துகளையும் வெகு அழகாகச் சொல்வார் தேவர். அதே போல, ஒரு நாள் பேசியதை அடுத்த நாள் பேசமாட்டார். புதிது புதிதாக அவருடைய பேச்சில் விஷயங்கள் வந்துகொண்டே இருக்கும். இந்த விவரங்களை அவர் எங்கிருந்து, எப்படிச் சேகரிக்கிறார் என்பது அவருக்கு மிக நெருக்கமானவர்களுக்கே புரியாத புதிர்.

Muthuramalinga Thevar
Muthuramalinga Thevar

1947, ஆகஸ்ட் 15. தேசமே சுதந்தரத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. ஃபார்வர்ட் பிளாக் கட்சி கொண்டாடவில்லை. அது, உண்மையான சுதந்தரமில்லை என்று நினைத்தார் தேவர். அன்று மட்டுமல்ல; இன்றைக்கு வரைக்கும் ஃபார்வர்ட் பிளாக் சுதந்தரத்தைக் கொண்டாடுவதில்லை. மதுரையில் தங்காமல், புளிச்சிகுளத்துக்கு வந்த அவர், கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம், அதாவது 1946 முதல்  1948 வரை அங்கேயே தங்கியிருந்தார். கிட்டத்தட்ட வனவாசம் போல. அவர் எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. அரசியல்வாதிகளைச் சந்திக்கவில்லை. அரசியல் கூடப் பேசவில்லை. இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கிய தேவர், காங்கிரசுக்கு எதிராக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலிலும் நின்றார். 

ஒரு முறை, ‘நவ இந்தியா’ பத்திரிக்கையில், தேவருக்கு ஆங்கிலத்தில் பேச வராது என்ற பொருள்பட ஒரு செய்தி வந்தது. அன்றைய கூட்டத்தில் உலக அரசியலைப் பேசத் தொடங்கிய தேவர். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்துக்கு ஆங்கிலத்திலேயே உரையாற்றினார். அதுவும் சுத்தமான, பேராசிரியர்கள்கூடப் பேசத் திணறும் ஆங்கிலம். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றிய இன்னொரு சம்பவமும் உண்டு. 

1954ஆம் ஆண்டு. காசி இந்து சர்வ கலா சாலையில் தேவர் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். சர். சி.பி. ராமசாமி அய்யர் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். தேவர் ஆற்றவேண்டிய சொற்பொழிவின் தலைப்பு ‘இந்து மதம்.’ மாணவர்களிடையே பேசவேண்டிய சொற்பொழிவு. தேவர் மூன்று மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அமைதியோடும் ஆர்வத்தோடும் கேட்டார்கள் மாணவர்கள். சர். சி.பி. ராமசாமி அய்யர் முடிவுரை ஆற்றும் போது…. 

‘என் போன்ற சிலரால் தான் ஆங்கிலேயர்களுக்குச் சமமாக ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும் என்று நினைத்திருந்தேன். தேவர் பேச்சைக் கேட்டபிறகு, என் கருத்து தவறு என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். ஆங்கிலேயர்களே திகைத்துப் போகும் அளவுக்கு ஆங்கிலத்தில் உரையாற்றிய தேவரைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன், பொறாமைப்படுகிறேன். இப்பேர்ப்பட்ட ஆங்கிலப் புலமை படைத்தவரை, இவ்வளவு காலம் தெரிந்து கொள்ளாததற்காக வருத்தப்படுகிறேன். ஆங்கிலம், உலகத்தை ஆண்டது. ஆனால், தேவர் ஆங்கிலத்தை மூன்று மணி நேரம் அடக்கி ஆண்டார்.’ என்று சர்.சி.பி ராமசாமி ஐயர் குறிப்பிட்டார். மாணவர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டார்கள். அதில், கையெழுத்துப் போடுவதற்கு முன் தேவர் ‘அரசியலில் நேதாஜியையும் ஆன்மிகத்தில் விவேகானந்தரையும் பின்பற்றுங்கள்!’ என்று எழுதினார். 

இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் ‘அரிஜன ஆலயப் பிரவேச உரிமை’ சட்டமாக்கப்பட்டது.  அதாவது அனைத்து சமூகத்தினரும் ஆலயத்திற்குள் செல்லலாம் என்கிற சட்டம். ஆங்காங்கே ஆலயப் பிரவேசம் நடந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் ஆலயப் பிரவேசம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.  உயர்சாதியினர் இதை கடுமையாக எதிர்த்தனர். அரிவாள், வேல்கம்பு என ஆயுதம் கொண்டு, இதை தடுக்க முயன்றனர். ஒரு சில அதிகாரிகள், தேவரிடம் கூறி அசம்பாவிதம் நடக்காமல் இருக்க உதவி கேட்டனர். 

அப்போது தேவருக்கும் ராஜாஜி அரசுக்கும் நல்ல உறவு இல்லை. ஆனால் தேவர் இந்த நல்ல விசயத்தில் அரசியலை கலக்க நினைக்கவில்லை. அன்று ஒரு அறிக்கை வெளியானது. இது வெளியானது பத்திரிக்கையில் அல்ல, ஒரு சாதாரண துண்டு பேப்பரில்..

“பல சமூகத்தினர்  ஆலயப் பிரவேசம் செய்ய முற்படும் போது, உயர் சாதியினரால்,  ஏற்பாடு செய்யப்பட ரௌடிகள் அவர்களை தாக்கி ரத்தக்கறை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக கேள்விப்படுகிறேன். அந்த ரௌடி கும்பலை எச்சரிக்கிறேன். நானும் அவர்களோடு வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், உங்களை உரிய முறையில் சந்திப்பேன்” என்று தேவரின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை அது. 

இந்த விஷயம் வேகமாக மதுரை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. சுதாரித்துக் கொண்ட அரசாங்கம், கலவரம் எதுவும் நடக்காமல் தடுக்க போலீசை குவித்ததுடன், தேவர் அரிசன மக்களுடன் ஆலயத்துக்குள் பிரவேசித்து திரும்பும் வரை, பாதுகாப்பும் கொடுத்தது. தேவர் அவர்கள் அரிசன மக்களுடன் கோவிலுக்குள் சென்று வரலாறு படைத்தார்.

இதன் காரணமாக காங்கிரஸ்- பார்வர்ட் ப்ளாக் கட்சிகளுக்கு இடையே பல்வேறு வேறுபாடுகள் உருவானது.

1957-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் முத்துராமலிங்கத்தேவர் பெரும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் மீது அப்போது பல்வேறு வழக்குகள் இருந்தன. இமானுவேல் கொலை… கீழத்தூவல் படுகொலை… 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது… தொடர் சிறை வாழ்க்கை… என்று தேவர் அப்போது சந்தித்த இன்னல்கள் ஏராளம். 

1959 ஜனவரி 7ம் தேதியன்று தான், தேவர் விடுதலை அடைந்தார். அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம் மேற்கொண்டார். அதனால் நாடாளுமன்ற உறப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும், இரண்டாண்டுகள் கழித்துத்தான் நாடாளுமன்றத்தில் பேசும் வாய்ப்பை தேவர் பெற்றார்.  

1959 பிப்ரவரி 17ஆம் தேதி தேவர் பேச நேரம் கொடுக்கப்பட்டது. அதுவும் மாலை 4.45 மணி முதல் மாலை 5 மணி வரைதான் அவருக்கு நேரம் தரப்பட்டிருந்தது. அதற்குப் பின் நாடாளுமன்ற அலுவல் முடிந்துவிடும். இந்த இடைப்பட்ட கால் மணி நேரத்தில், தமது கருத்து முழுவதையும் பசும்பொன் தேவர் வெளியிட வேண்டும். தேவர்… ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அதுவரை அப்படியொரு பேச்சை கேட்டறியாத வடமாநிலத் தலைவர்கள், பலரது விழிகளும் கண்ணிமைக்க கூட மறந்தன. பாராளுமன்றத்தில் தேவர் அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய சாராம்சம் என்ன தெரியுமா?…

Muthuramalinga Thevar
Muthuramalinga Thevar
  • பேச்சிலும், கொள்கையிலும் அகிம்சை, அகிம்சை என்று சொல்லிக்கொண்டு, போராடும் மக்கள் மீதும், அரசியல் எதிர்ப்பாளர்களையும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும், சாய்க்க ராணுவத்தையும், துப்பாக்கிகளையும் அனுமதிப்பது எந்த வகை அகிம்சாவாதம் என்பதை அரசாங்கம் விளக்கிக் கூறுமா? என்றும்,
  • இராணுவத்திற்கு ஆண்டு தோறும் செலவிடும் தொகையைக் குறைத்துக் கொண்டு, மக்கள் நலத்திட்டங்களை செயற்படுத்தினால் இந்த தேசம் வேகமாக முன்னேற்றம் காணும் என்றும்,
  • நாம் மேற்கத்திய நாடுகளுடன்  நேசம் கொண்டிருக்கிறோம். அதன் பலனாக நாம் பாதுகாப்பாக இருப்பதாகவும் நம்புகிறோம். அதே சமயம் நாம் மேற்கத்தியரோடு கொண்டுள்ள உறவுக்கும், அவர்களின் கொள்கைக்கும் தொடர்பில்லை என்றும் கூறிக் கொள்ளுகிறோம். இது முரண்களின் மொத்த உருவமாக இருக்கிறது. என்றும்,
  • ராமநாதபுரம் ஜில்லாவில் அகிம்சையைக் குப்புறத் தள்ளிவிட்டுத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தீர்கள் – பல அப்பாவிகள் இறந்துபோனார்கள். மறக்க முடியாத அந்த சம்பவத்துக்கு நீதி விசாரணை வேண்டுமென்று கேட்ட  போது, அதை முழுமையாக அரசு நிராகரித்து விட்டது. அகிம்சை பற்றி மார்தட்டிக் கொள்ளும் இந்த அரசு தான், இந்த கொடூரம் நடக்கவும் காரணமாக இருந்தது. என்றும்,
  • காஷ்மீர் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தை சரியாக கையாளுவதில் இந்த அரசு தவறி விட்டது என்றும்,
  • தேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லுவது என்பதில் அரசோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதே நேரம் அரசு, மற்றவர்கள் கருத்துக்கும் மதிப்பளித்து, அதில் இருக்கும் நல்ல விஷயங்களை தங்கள் திட்டங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும். என்றும்,
  • சர்வாதிகாரம் செய்யாமல், வெளிப்படையான ஆட்சி நிறைந்த, ஜனநாயக முறையை, ஆளும் அரசு பின்பற்றினால்தான், மக்களின் ஆதரவை பெற முடியும். மாநில சுயாட்சி விஷயத்தில் மௌனம் சாதிப்பது பல்வேறு விதமான பிளவுகளுக்கு வழிவகை ஏற்படுத்தும். அதை களைவதே தலையாய கடமை. என்றும், 

இவ்வாறு நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நிகழ்த்திய இந்த முதல் முழக்கம், தேசமெங்கும் எதிரொலித்தது. மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லிப் பதிப்பில்,

“Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory” என்று தேவரின் நாடாளுமன்ற முழக்கம் பற்றி குறிப்பிட்டது.

தேவர் அவர்கள் தனது இறுதி நாட்களில் சிறுநீரக கோளாறால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். ஆங்கில மருத்துவத்தை தவிர்த்துவிட்டு சித்த மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த தேவர், உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மதுரை மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவர் ஓரளவு குணமானதும் மதுரைக்குத் திரும்பினார். ஆனால் சில நாட்களில் மேலும் அவரது உடல்நிலை மோசமானது. 

உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று, தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன அந்த சிங்கத்தின் கண்கள் 55 வயதில் மூடியது. 

Muthuramalinga Thevar
Muthuramalinga Thevar

குருபூசை என்பது இந்து மத ஆன்மீகத் துறவிகளுக்கு தான் . குருபூசை செய்யப்படும் துறவிகளை, இறந்த பின் அதற்குறிய ஆகம விதிப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும். இந்த விதிகளுக்கு உட்பட்டே பசும்பொன்னில், வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. பல சித்தர் துறவிகளுக்கு ஆண்டு முழுவதும் குருபூசை நடந்தாலும் அதிகமான பத்தர்கள் கலந்துகொள்ளும் குருபூசை தேவர் குருபூசையே.

தலைசிறந்தப் பேச்சாளராகவும், சிறந்த அரசியல்வாதியாகும், மக்கள் தலைவராகவும், விடுதலைப் போராட்ட தியாகியாகவும், தொழிலாளர் தலைவர்கவும், சாதி ஒழிப்பு போராளியாகும் மேலும் சிறந்த ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை, அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. 

பிறந்த நாளும், மறைந்த நாளும் ஒரே தேதியில் வருவது வெகு சிலருக்கு தான். பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை இன்றும் வணங்கி வருகிறார்கள்.

ஒரு நிறைவான வாழ்க்கைக்கு  வீரமும்  இருக்க வேண்டும்.விவேகமும் இருக்க வேண்டும், அதேசமயத்தில் வீரமற்ற விவேகம் கோழைத்தனம். விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் என்று ஆழமான கருத்தை சொன்னவர் தேவர். 

32 கிராமங்களில் இருந்த சொத்துக்களை, அனைத்து சமுதாய மக்களுக்கும் தானமாக வழங்கிய கொடை வள்ளல் தேவர்.

சாதி தலைவர் அல்ல இவர், தேசிய தலைவர் தேவர்.

நான் எந்த ஜாதியோ அல்லது மதமோ கிடையாது, நான் வெறும் ஆன்மா மட்டுமே என்று சொன்னவர் தேவர்.

பணம் கொடுத்து ஓட்டு கேட்பவன் பாவி.. பணம் பெற்று ஓட்டு போடுபவன் நாட்டுத் துரோகி என்று சொன்னவர் தேவர்.

எவன் ஒருவன் தன் சாதி பெயரை முன்னிலைப்படுத்தி, அரசியல் செய்கின்றானோ,  அவனே சமுதாயத்தின் முதல் எதிரி என்று சொன்னவர் தேவர்.

தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடான வாழ்க்கை, பிரம்மச்சர்யம், தாராளகுணம், பெருந்தன்மை, மற்றவர்களுக்கு கொடுத்து மகிழும் எண்ணம் போன்ற குணங்களால் இன்று பல மனித மனங்களில் வாழ்த்து வருகிறார் தேவர்.