• September 21, 2024

“ண”, “ன” மற்றும் “ந” எங்கெல்லாம் வரும்?

 “ண”, “ன” மற்றும் “ந” எங்கெல்லாம் வரும்?

ஒரு எளிய விளக்கம்

தமிழ் எழுத்துகளில் இரண்டு சுழி “ன” என்பதும், மூன்று சுழி “ண” என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.
“ண” இதன் பெயர் டண்ணகரம்,
“ன” இதன் பெயர் றன்னகரம்,
“ந” இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

டண்ணகரம்

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி “ணகர” ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து ‘‘ வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு “டண்ணகரம்” என்று பெயர்.

றன்னகரம்

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த இரண்டு சுழி “னகர” ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து ‘ற’ வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு “றன்னகரம்” என்று பெயர்.

இது இரண்டும் என்றுமே மாறி வராது. எனவே இதை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தால், பக்கத்தில் ‘ட’ வருவதால், அங்கே இந்த மூன்று சுழி ‘ண்’ தான் வரும். ஏனென்றால் அது “டண்ணகரம்”.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தால், பக்கத்தில் ‘ற’ இருப்பதால் அங்கே இந்த இரண்டு சுழி ‘ன்’ தான் வரும். ஏனென்றால் அது “றன்னகரம்”.

தந்நகரம்

‘ந’ கரம் என்பதை, “தந்நகரம்” என்று சொல்லவேண்டும். ஏனென்றால் இந்த ‘ந்’ எழுத்திற்கு அடுத்து வரக்கூடிய உயிர்மெய் ‘த’ மட்டுமே. உதாரணம் : பந்து, வெந்தயம், மந்தை.

இந்த “ண”, “ன” மற்றும் “ந” விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!