• December 5, 2024

இறை தேடல்

 இறை தேடல்

பொருளைத் தேடி
புகழைத் தேடி
உறவைத் தேடி
உரிமை தேடி
இளமை தேடி
இனிமை தேடி
சுகத்தைத் தேடி
சிரிப்பைத் தேடி
பொன்னைத் தேடி
மண்ணைத் தேடி
விண்ணைத் தொட்டும்…
மண்ணில் விழுந்து
கண்ணை விற்றும்
ஓவியம் வாங்கி
முற்றுப் பெறாத
தேடலில் மூழ்கி
முத்தான வாழ்வைத்
தொலைத்து மருகி
சத்தம் நிறைந்த
அலை மனமாகி
பித்தன் என்றே
பிழையுற்று நின்றேன்!

தேடல் முடிவில்…
அடைவொன்றும் இல்லை
நிறைவென்ற நிம்மதி
நிகழவும் இல்லை!
குழம்பி நிற்கையில்
குரலொன்று கேட்டேன்…
நகைப்பின் ஊடே அது
நலம் சொலக் கேட்டேன்!

“முடிவுறும் தேடலில்
நிறை தனைக் கண்டிடும்
இடமது மறைபொருள்
இறையது தானே!
அதை…
அடைந்திடும் வழியெனும்
விடுகதை விளங்கிட
சிரம் கொடு செவி மடு
அலையுறு மனமே!
மறைபொருள் இறை தனைக்
காட்டிடும் நிறைமதி
தடுத்திடும் தளை தனைக்
களைந்திடு மனமே!

உடலொடு உயிர் தனைப்
பிணைந்திடும் இறை தனை
இடையினில் கண்டிட்டு
நிறை கொள் மனமே!
மூடிய விழிகளின்
பார்வையில் அகம் செலும்
வழி தனைத் தேடி
அடைந்திடு மனமே!
அகம் தனைத் தெளிவுற
நோக்கிடும் விதம் தனைப்
பழகிடும் பயிற்சியில்
முயன்றிடு மனமே!

உள்ளம் என்னும்
பள்ளம் வாழும்
கள்ளம் ஒழித்து
தூய்மை நிரப்பி
அன்பு வாச மலர்கள்
தெளித்து…
அறிவொளி தீபம்
ஏற்றி வைத்திடு!
கருணை என்னும்
நறுமணம் கமழ
ஞானம் என்னும்
ஒளி நிறை விழியால்
அகந்தை எரித்த
விளக்கின் ஒளியில்
விந்தை புரியும்
இறையைப் பார்த்திடு!

அந்த தரிசன ஒளியில்
இரண்டறக் கலந்திட்ட
ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
பேதமின்றி சரிசமமாகும்
ஆனந்த நிலை தனை
அடைந்திடு அடைந்திடு
மனமே!
அந்த நிறை தனை
மனம் தனில்
நிரந்தரக் குடிபுகச்
செய்திடு செய்திடு மனமே!
சிலையில்லை விலையில்லை
சடங்கினில் பிழையில்லை
நிலை கொண்ட ஞானத்தில்
நின்றிடு மனமே!”

என்றெனைச் சொல்லிட்டு
மனம் தனை வென்றிட்டுச்
சென்றது உடனே…
மதி கொள் மனமே!
விதி கொல் மனமே!

S. Aravindhan Subramaniyan

கவிப்பார்வை

Writer