வெங்காயத்தை விளைய வைத்து அதற்கான பொருட்செலவு கூட லாபமாக கிடைக்காததால் ஆந்திர மாநிலம் கர்னூல் வேளாண் சந்தையில் ஒரு வெங்காய விவசாயி விளைந்த வெங்காயங்களை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இச்சம்பவம் கேள்விப்படுவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
சமீபத்தில் பெய்த கன மழையால் ஆந்திர மாநிலத்தில் வெங்காயம் ஒழுங்கான முறையில் விளையவில்லை. குறைவான தரத்தில் அதிக வெங்காயங்கள் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் அதன் விலை மிகவும் சரிந்துள்ளது. கர்னூல் வேளாண்மை சந்தையில் வெங்காயத்தின் விலை குவிண்டால் ரூபாய் 400 ஆக சரிவடைந்துள்ளது.
ஒரு குவிண்டால் என்பது நூறு கிலோவாகும். ஒரு கிலோ வெங்காயம் வெறும் 4 ரூபாய்க்கு விற்கப்படும் நிலை வந்ததால் அங்குள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விளை பொருட்களின் மொத்த வரத்து மற்றும் தரம் குறைந்ததே இந்த விலை சரிவுக்கு முக்கிய காரணம்.
இந்நிலையில் இந்த விலை சரிவை தாங்க முடியாமல் கர்னூல் விவசாய சந்தையில் ஒரு வெங்காய விவசாயி தான் விளைவித்த வெங்காயங்களை மொத்தமாக பெட்ரோல் ஊற்றி கொளுத்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கர்னூல் சந்தையில் கடந்த இரண்டு ஆண்டுகள் விளைச்சலும் வர்த்தகமும் நல்ல முறையில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இடைவிடாத மழை காரணமாக பெரும்பாலான விளை பொருட்கள் தரம் குறைந்ததால் மொத்த விலை குறைந்ததாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெங்கடேஸ்வரலூ எனும் விவசாயி 25 வெங்காய மூட்டைகளை எரித்துள்ளார். ஒரு குவிண்டாலுக்கு வியாபாரிகள் கொடுக்கும் பணமானது போக்குவரத்து செலவு மற்றும் சந்தை செலவுக்குக் கூட கட்டுபடி ஆகாது என வெங்கடேஸ்வரலூ கூறுகிறார்.
வெங்கடேஸ்வரலூ இந்த சம்பவத்தை அரங்கேற்றிய போது, அவரைச் சுற்றியிருந்த விவசாயிகள் மற்றும் மார்க்கெட் ஊழியர்கள் அவரை தடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் எவரும் பார்ப்பதற்கு முன்னரே பெட்ரோலை வெங்காயத்தின் மீது ஊற்றிய வெங்கடேஸ்வரலூ, தான் நினைத்தபடியே அத்தனை வெங்காயத்தையும் எரித்து சாம்பலாக்கி உள்ளார்.
இந்நிலையில் வெங்காயத்திற்கான ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 2000 ரூபாயாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பிரம்மாண்ட வாசுகி பாம்பு: 4.7 கோடி ஆண்டுகள் பழமையான மகா பாம்பின் கதை
- காலரா நோயை விரட்டிய ஜல்லிக்கட்டு: நம்ப முடியாத உண்மை கதை!
- இணையத்தில் இலங்கை எப்படி இணைந்துள்ளது? கடலுக்கடியில் மறைந்திருக்கும் ரகசியம்!
- அம்பேத்கரின் மறைந்திருக்கும் பொருளாதார சிந்தனைகள் – நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் வகுத்த பாதை என்ன?
- முளைப்பாரி எடுப்பதன் பின்னணியில் மறைந்திருக்கும் விஞ்ஞான உண்மை தெரியுமா?
கர்னூல் மார்க்கெட்டின் செயலாளர் இச்சம்பவம் குறித்து கூறிய போது, ஒரு சில விவசாயிகள் நல்ல தரமான வெங்காயத்தை உள்ளூர் சந்தைகளில் அதிக விலைக்கு விற்றுவிட்டு தரம் குறைந்த விலை பொருட்களை மொத்த சந்தைக்கு கொண்டு வருவதாக கூறினார். வெங்காயத்தின் தரத்தை பொருத்து ஒரு குவிண்டால் ரூபாய் 400 முதல் ரூபாய் 1800 வரை சந்தையில் விற்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் வெங்காய விலை ஏறிய போது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது ஆந்திர மாநிலத்தில் வெங்காயத்தின் விலை அளவுக்குமீறி குறைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். தொடர்ந்து ஆந்திராவில் வெங்காயத்தின் வரத்து குறையும் பட்சத்தில் கிலோ ரூபாய் இரண்டு ரூபாய்க்கு விற்கப்படும் அவல நிலை கூட ஏற்படலாம் என மார்க்கெட் அதிகாரிகளும் வியாபாரிகளும் கணிக்கின்றனர்.
இந்த கன மழைக்காலம் முடிந்த பின்னர் வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை இயல்பு நிலைக்கு திரும்பும் என விவசாயிகளும் வியாபாரிகளும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.