“மன்னர்கள் குளித்த நீச்சல் குளம்..!” – வரலாற்றைச் சொல்லும் ரஞ்சன்குடி கோட்டை..
இன்றிருக்கும் பெரம்பலூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் வடக்கே அமைந்துள்ளது தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டை. சென்னையிலிருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோட்டை கர்நாடக நவாபினால் கட்டப்பட்டது.
இந்தக் கோட்டையின் கட்டமைப்பை பார்க்கும் போது நீள் வட்டமாகவும், அரைக்கோள வடிவ கோட்டைகளுடன் வலுவான வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்ட 3 அரண்களால் சூட்டப்பட்ட கோட்டையாக உள்ளது.
இந்த கோட்டைக்குள் அரசர்கள் இருக்கக்கூடிய மாளிகை, கட்டிடங்கள், சுரங்க அறை, பேட்டை, மேல் பகுதி, கோட்டைமேடு கீழ் பகுதியை இணைக்கும் பாதை என பல்வேறு வகைகளில் மிகச் சிறப்பான முறையில் அன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோட்டையில் மன்னர்கள் குளிப்பதற்கு என நீச்சல் குளம் ஒன்றை கோட்டையின் மேல் பகுதியில் அமைத்து இருப்பதை பார்க்கும் போது ஆச்சரியம் ஏற்படக்கூடிய வகையில் உள்ளது.
இது போல ஒரு நீச்சல் குளத்தை எந்த ஒரு கோட்டை பகுதிகளும் நீங்கள் பார்த்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவ்வளவு பெரிய நீச்சல் குளத்தை நேர்த்தியான முறையில் கட்டமைத்து அவர்களின் கட்டிட திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஏறக்குறைய 17 ஆவது நூற்றாண்டை சேர்ந்த இந்த கோட்டை நஞ்சங்குடி கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோட்டையானது 1751 ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிக்கொண்டா போரின் பிரதிபலிப்பு காட்சியாக அமைந்துள்ளது என்று கூட வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பிரஞ்சுப் படையானது சந்தா சாகிப் என்பவருக்கும் பிரிட்டிஷ் படையானது முகமது அலி என்பவருக்கும் ஆதரவு அளித்து.மேலும் அருகருகே அமைந்துள்ள கிராமமான வாலி கொண்டாவிற்கு போருக்கு அழைத்திருந்தாலும், அவர்கள் இந்த கோட்டையில் போரிட்டார்கள். தொடக்கத்தில் பிரஞ்சு படை வெற்றியடைய முடிவில் உள்ளூர் முஸ்லிம்களின் ஆதரவோடு பிரிட்டிஷ் படையானது இந்த கோட்டையை வெற்றி கொண்டது.
இந்த கோட்டையின் மையப் பகுதியில் ஒரு குழியானது காணப்படுகிறது. இங்கு ஆண் கைதிகளுக்காக சிறைச்சாலையும், கோட்டைக்கு உள்ளே சிறிய அறைகளை கொண்ட பகுதியில் பெண்களுக்கான சிறைச்சாலையும் இருந்துள்ளது.
தற்போது இந்த கோட்டையானது இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக காணக்கூடிய எந்த கோட்டையை நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் சென்று போய் பார்க்கலாம்.